Get Adobe Flash player

தனக்கு எதிராக தானே

அருட்பணி இயேசு கருணாநிதி

10 ஜூன் 2018 ஆண்டின் பொதுக்காலம் 10ஆம் ஞாயிறு

I. தொடக்கநூல் 3:9-15 / II. 2 கொரிந்தியர் 4:13-5:1 / III. மாற்கு 3:20-35 
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 3:9-15)

நாம் வாசிக்கும் மனுக்குலத்தின் பிதாமகனாம் ஆதாமுக்கும், படைத்தவனுக்கும்
இடையே நடக்கும் உரையாடலோடு இன்றைய சிந்தனையை தொடங்குவோம்:

அவர்: 'நீ எங்கே இருக்கிறாய்?'
அவன்: 'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால் எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில் நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்.' 



அவர்: 'நீ ஆடையின்றி இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?'  அவன்: 'என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண் மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நானும் உண்டேன்.'

நிற்க. 'என்னுடன்' - 'நீர்' - 'அந்தப் பெண்'  ஆதாமின் இந்த மூன்று வார்த்தைகளைக் கவனித்தீர்களா? 'ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்' (தொநூ 2:8)

'ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது மனிதன், 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையும் சதையும் ஆனவள். ஈஷ் (ஆண்)-இடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் ஈஷா (பெண்) என்று அழைக்கப்படுவாள்' என்றான்.' (தொநூ 2:22-24)

கனியை உண்ணும் நிகழ்வு நடக்கும் முன்பாக ஆதாமும், கடவுளும் ரொம்ப நெருக்கமாக இருக்கின்றனர். எந்த அளவிற்கு என்றால், அவனின் நாசிகளில் அவர் உயிர்மூச்சை ஊதுகின்றார். அவனது விலாவைத் திறந்து அவனது எலும்பை எடுக்கின்றார். 

இந்த அளவிற்கு நெருக்கமான ஆண்டவராகிய கடவுளை ஆதாம் இப்போது எப்படி அழைக்கின்றார்? - 'நீர்'

'இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும்' என அழைத்தவளை கனியை உண்டபின் எப்படி அழைக்கின்றார்? 'அந்தப் பெண்'

நன்மை தீமை அறிவதற்காக ஆதாம் உண்ட கனி நன்மை, தீமையை அறியக்கற்றுக்கொடுத்த அதே நொடி, அவனை அவரிடமிருந்தும், அவளிடமிருந்தும் பிரித்துவிட்டது - தனக்கு எதிராக தானே என்று அவன் பிளந்து கிடக்கின்றான்.

'தனக்கு எதிராக தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.  தனக்கு எதிராக தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.' என்று இன்றைய நற்செய்திப் பகுதியில் (காண். மாற் 3:20-35) பிளவுபடுதல் கொண்டுவரும் அழிவை முன்னுரைக்கின்றார் இயேசு.

இதையே வேறு வார்த்தைகளில் - அதாவது, 'எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனம்தளருவதில்லை.' என்று 'அழிந்து கொண்டிருப்பதற்கும் புதுப்பிக்கப்பெற்றுக்கொண்டிருப்பதற்கும் இடையேயான போராட்டத்தைக் கொரிந்து நகரத் திருஅவையோடு இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 4:13-5:1) மனம் திறக்கிறார் பவுல்.

'தனக்கு எதிராக தானே பிளவுபடுதல்' என்றால் என்ன?  விலக்கப்பட்ட கனியை உண்பதற்கு முன் ஆதாம் மற்றும் ஏவாளைப் பற்றி விவிலிய ஆசிரியர் சொல்லும்போது, 'மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால், அவர்கள் வெட்கப்படவில்லை' (தொநூ 2:24) என்று மிகச் சுருக்கமாக எழுதுகின்றார்.

அங்கே வெட்கம் இல்லை.
அங்கே 'நான்-நீ' என்ற பேதம் இல்லை.
அங்கே ஒளிதல் இல்லை.
அங்கே எதிர்பேச்சு இல்லை.
அங்கே குற்றம் சுமத்துதல் இல்லை.
அங்கே எதிர்மறை உணர்வுகள் இல்லை.

ஆனால், கனியை உண்டவுடன், அவர்கள் வெட்கம் அடைகிறார்கள். வெட்கம் ஆதாமிற்கு அச்சத்தைக் கொண்டுவருகிறது. அவன் 'நான்-நீ-அவள்' என்று வேற்றுமை பாராட்டத் தொடங்குகிறான். அவனும் அவளும் ஒளிந்துகொள்கின்றனர். அவனும் அவளும் அவரிடம் எதிரெதிரே நின்று பேசுகின் றனர். அவன் அவளையும் அவள் பாம்பையும் குற்றம் சுமத்துகிறாள். அவள் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறாள்.  ஆணின் முதல் உணர்வாக விவிலிய ஆசிரியர் சொல்வது 'அச்சம்' - 'எனக்கு அச்சமாக இருந்தது' (தொநூ 3:10)  பெண்ணின் முதல் உணர்வாக விவிலிய ஆசிரியர் சொல்வது 'ஏமாற்றம்' - 'பாம்பு என்னை ஏமாற்றியது' (தொநூ 3:13) (இன்றும் ஆண் தன் உறவுநிலைகளில் பாதிக்கப்படும்போது அவன் வெளிப்படுத்தும் முதல் உணர்வு - 'எனக்கு பயமாயிருக்கு.' பெண் தன் உறவுநிலைகளில் பாதிக்கப்படும்போது அவள் வெளிப்படுத்தும் முதல் உணர்வு - 'நான் ஏமாந்துட்டேன்.')

தனக்குத் தானே ஒருவர் பிளவுபட்டிருக்கிறார் என்றால் அவர்

1. அச்சம் கொண்டிருப்பார்

2. மற்றவரிடமிருந்து தன்னையே வேறுபடுத்திக்கொண்டிருப்பார்

3. மற்றவரிடமிருந்து தன்னையே இழுத்துக்கொள்வார் - ஒளிந்து கொள்வார்

4. தனக்கு நிகழ்பவற்றின்மேல் எதிர்மறையாக செயல்பாடுவார்

5. தன் நிலைக்காக அடுத்தவரை குற்றம் சுமத்துவார்

6. தன்னை எல்லாரும் ஏமாற்றுவதாக நினைப்பார்

இந்த நிலைக்கு நம்மை ஆளாக்குவது எது? அல்லது யார் நம்மை 'தனக்கு எதிராக தானே பிளவுபட' செய்கிறார்?  மறுபடியும் முதல் வாசகத்திற்குச் செல்வோம்: ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், 'நீ இவ்வாறு செய்ததால் ...' என்கிறார். எவ்வாறு செய்ததால்? - இப்படி அவர்களை பழத்தை உண்ணும்படி செய்ததால்.  பழத்தை உண்ணுதல் என்பது என்றால் என்ன? என்பதை இன்று அருள்திரு. மரிய அந்தோணி இப்படி விளக்கினார்: 'பழத்தை உண்ணுதல் என்பது நம் மூளை-சிந்தனை சொல்வதை கேட்டு அதை அப்படியே நம்புவது.' ஆக, முதல் பாவம் அல்லது தொடக்கப் பாவம் அல்லது ஆதிப்பாவம் என்பது, 'நம் சிந்தனைகளுக்கு நாம் அடிமையாகிவிடுவது. அல்லது அவை சொல்வதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வது.'

நல்லா பாருங்களேன். நம்ம பிரச்சினைகளுக்குக் காரணம் நம்மை மூளைதான். எப்படி? 'அவன் என்னைவிட நல்ல ஆடை அணிந்திருக்கிறான்' என்று என் மூளை சொல்கிறது என வைத்துக்கொள்வோம். 'நான் உன்னைவிட நல்ல ஆடை அணிந்திருக்கிறேன்' என்று அவன் என்னிடம் சொன்னானா? - இல்லை. 'இவன் அணிந்திருப்பது உன் ஆடையைவிட விலையுயர்ந்தது' என கடைக்காரன் என்னிடம் சொன்னானா? - இல்லை.  பின் நான் எப்படி அப்படி சொல்ல முடியும்? நான் எப்படி அவனோடு என்னை ஒப்பிட முடியும்? நான் எப்படி அவன்மேல் பொறாமை பட முடியும்?  இவை எல்லாம் நடப்பது என் மூளைக்குள் - சிந்தனைக்குள். நான் என் மூளைக்கு அடிமையாகிவிட்டேன் என்றால் அது என்னை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடும். என்னையே என்னிடமிருந்து, என்னைக் கடவுளிடமிருந்து, என்னை மற்றவரிடமிருந்து பிரித்துவிடும்.

இந்த மூளையை இப்படி யோசிக்கச் செய்வது எது? - என்னிடமிருக்கின்ற பாம்பு - அதாவது, என்னிடமுள்ள தீய இயல்பு.  இன்றைய நற்செய்தியில் இயேசு சாத்தானைக் கொண்டு சாத்தானை ஓட்டுவதாக மறைநூல் அறிஞர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கு விடைகூறும் விதமாக இயேசு 'சாத்தான்' என்பதை உவமையாக மாற்றி 'தீய இயல்பு' பற்றி பேச ஆரம்பிக்கின்றார். 'தீய இயல்பை தீய இயல்பே அழிக்க முடியாது' 'அழிந்து கொண்டிருக்கும் உடலை பழைய இயல்பு மாற்ற முடியாது' மறைநூல் அறிஞர்கள் தங்கள் மூளையால் வழிநடத்தப்பட்டதால் இயேசுவின்மேல் குற்றம் சுமத்துகின்றனர். அதே போல இயேசுவின் தாயும் உறவினர்களும் இயேசு மதிமயங்கிவிட்டார் என்று மக்கள் பேசியதை தங்கள் மூளைக்கு அப்படியே கொண்டு சென்றதால் அவரைத் தேடி வருகின்றனர்.

ஆக, ஆதாம் தனக்கு எதிராகத் தானே பிளவுபடுகிறார்.
ஏவாள் தனக்கு எதிராக தானே பிளவுபடுகிறது.
பவுல் பிளவுபட்டுக் கிடக்கிறார்.
மறைநூல் அறிஞர்கள் பிளவுபட்டுக்கிடக்கின்றனர்.
இயேசுவின் உறவினர்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றனர்.
நானும் நீங்களும் பிளவுபட்டுக்கிடக்கிறோம் -
- நம் மூளையின் வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது.
இந்தப் பிளவுபட்ட நிலையை எப்படி சரி செய்வது? கனியை உண்பதற்கு முன் இருந்த ஒருங்குநிலையை நாம் மீண்டும் எப்படி அடைவது?

இன்றைய இறைவாக்கு வழிபாடு மூன்று வழிகளைப் பரிந்துரை செய்கிறது:

1. 'வலியவனைக் கட்டுதல்' -  இதை இயேசு உருவகமாகச் சொல்கிறார்: 'முதலில் வலியவரைக் கட்டினால் அன்றி அவ்வலியவருடைய வீட்டில் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது. அவரைக் கட்டி வைத்தபின் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.' நம் உடல்தான் நம்முடைய வீடு என்றால் நம்முடைய மூளை அல்லது சிந்தனைதான் அந்த வலியவன். இவன் அனுமதிக்காமல் யாரும் இந்த வீட்டிற்குள் நுழைய முடியாது. நம் உடலை நாம் வெற்றி கொள்ள வேண்டுமென்றால், நம் உடலில் இருக்கும் தூய ஆவியை நாம் கொள்ளை கொள்ள வேண்டுமென்றால் இந்த வலியவனை நாம் கட்ட வேண்டும். மூளையைக் கட்டிவிட்டு, நாம் ஆவியில் - மனிதில் இருந்து செயலாற்ற வேண்டும்.  அதாவது, 'அறிவுசார்ந்த அடுக்கில்' (intellectual layer) இருந்து 'அனுபவம்-அகம் சார்ந்த அடுக்கிற்கு' (affective layer) நாம் கடந்து செல்ல வேண்டும். இந்த இரண்டு அடுக்குகளுக்கும் எப்போதும் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும். இந்தப் போராட்டத்தை முதல் வாசகம், 'உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் உள்ள பகை' என்கிறது. இரண்டாம் வாசகம், 'காண்பவற்றிற்கும் காணாதவற்றிற்கும் உள்ள போராட்டம்' என்கிறது. நற்செய்தி வாசகம், 'தீய இயல்புக்கும் தூய ஆவிக்கும் உள்ள போராட்டம்' என்கிறது.  ஆக, எனக்கு நானே பிளவுபட்டுக் கிடக்கும் நிலையை நான் குணப்படுத்த முதலில் செய்ய வேண்டியது என்ன? என் மூளைக்கு அடிமையாக இருப்பதை நான் நிறுத்த வேண்டும். பவுல் அழகாக சொல்கிறார்: 'நாங்கள் காண்பவற்றை அல்ல. நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.' இவை எவ்வளவு உண்மை! மூளை காண்பவற்றை வைத்து வாழ்கிறது, முடிவெடுக்கிறது. மனம் காணாதவற்றை வைத்து வாழ்கிறது, முடிவெடுக்கிறது. நம் உறவுநிலைகளில் உள்ள பிளவுபட்ட நிலைகளை குணமாக்க எளிதான வழி 'மூளையிலிருந்து வாழ்வதை விடுத்து, மனத்திலிருந்து வாழ்வது' மட்டும்தான். இதற்கான வழி, மூளை என்னும் வலியவனைக் கட்டுவது.

2. 'கடவுளின் திருவுளம் நிறைவேற்றுதல்' - இதுதான் 'அகம்' என்னும் அடுக்கிற்கான அடுத்த அடுக்கு: 'அருள்வாழ்வு சார்ந்த அடுக்கு' (spiritual layer). 'என் திருவுளம் அல்ல. அவரின் திருவுளமே' என்று அவர் எனக்கென வைத்திருக்கும் வாழ்வின் நோக்கத்தை நான் நிறைவேற்ற முயற்சி செய்வது. நாம் இயல்பாகவே கடவுளின் சாயலைக் கொண்டிருக்கிறோம். அவரின் உறவினராக இருக்கிறோம். ஆனால் நான் என் உளம் (மூளை) சொல்வதை செய்வதில் மும்முரமாய் இருப்பதால், அவரின் உளத்தை என்னால் அறிய முடிவதில்லை. அறிந்தாலும் செயல்படுத்த முடிவதில்லை. நான் ஒருவரோடு சண்டையிட்டு அவரை மன்னிக்க முடியவில்லை என வைத்துக்கொள்வோம். 'அவர் உனக்கு அப்படிச் செய்தார். இப்படிச் செய்தார். உன் மனதை நோகடித்தார்' என 100 காரணங்களை - அதுவும் சரியான காரணங்களை - மூளை அடுக்கிக்கொண்டு போகும். இந்த உளத்தை நான் நிறை வேற்றினால் அவரை என்னால் இறுதிவரை மன்னிக்க முடியாது. ஆனால், 'அவரும் என் இறைவனின் ஒரு பகுதியே. ஏதோ ஒரு சூழலில் அப்படிச் செய்துவிட்டார். அவர் என் அன்புக்குரியவர்' என்று நான் அவரின் திருவுளத்தில் செயலாற்றும்போது மன்னிப்பது எளிதாகிறது. உறவும் புதுப்பிக்கப் படுகிறது. இந்த நிலையில்தான் நாம் அனைவரையும் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என உறவு கொண்டாட முடிகிறது. இந்த நிலையிதால்தான் நாம் இயேசுவின் தாயாக, சகோதரராக மாறுகின்றோம்.

3. 'உள்ளார்ந்த இயல்பு புதுப்பிக்கப்படுதல்' - தூய பவுல் தான் இன்னலுற்றாலும் மனம் தளருவதில்லை என்றும், நாம் அடையும் இன்னல்கள் தாங்கக்கூடியவை என்றும் சொல்கின்றார். இந்த மனம் தளராத நிலைக்குக் காரணம் இவரிடம் உள்ள எதிர்நோக்கு. இந்த எதிர்நோக்கால் இவரின் உள்ளார்ந்த இயல்பு - ஆவியின் இயல்பு - புதுப்பிக்கப்படுகிறது. இதை நாம் செய்வதற்கான ஒரு வழி தியானம். தியானம் என்றால் கண்களை மூடி நேராக அமர்ந்துகொள்வது அல்ல. மாறாக, அவருக்கும் எனக்கும் உள்ள தொப்புள்கொடி உறவை நாளுக்கு நாள் புதுப்பித்துக்கொண்டே இருப்பது. அந்தத் தொப்புள்கொடியோடு நான் இணைத்து அவரிடமிருந்து என் ஆற்றலை நான் பெறத் தொடங்கிவிட்டால் அன்றாடம் என் செல்கள் புத்துயிர்பெறும். அவரின் உணவே என் உணவாக, அவரின் சுவாசமே என் சுவாசமாக மாறுவதால் நான் ஆற்றலின் அணைக்கட்டாக மாறிவிடுவேன். அங்கே சோர்வும், மனத்தளர்ச்சியும், கலக்கமும், ஏமாற்றமும், அச்சமும் இருக்காது.

இறுதியாக, தனக்கு எதிராக தானே பிளவுபடுதல் அழிவு என்றால், தீய இயல்பை (மூளையின் செயல்பாட்டை) கட்டிவிடுவதும், அவரின் திருவுளம் நிறைவேற்றுவதும், உள்ளார்ந்த இயல்பு புதுப்பிக்கப்படுவதும் நமக்கு வாழ்வு. அந்த வாழ்வை நம்மை படைத்த ஆண்டவராகிய கடவுள் அன்றாடம் நமக்கு வழங்குவாராக! 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org