Get Adobe Flash player

பதுவை அந்தோனியார்
ஆதாரம் :OoSLO

பிள்ளைப் பருவம்:
1195 ம் ஆண்டு ஆகஸ்டு 15 ம் நாள் போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் அரச குடும்பத்தின் மகனாக பிறந்தார் புனித அந்தோனியார் . எனவே செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் குறைவில்லை. அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து என்று பெயரிட்டனர். 
இதற்கெல்லம் மேலாக, அவரது பெற்றோர்கள்  நல்ல கிறிஸ்தவர்களாக விளங்கினார்கள். அவர்களைப் பார்த்துத்தான் புனிதர் ஜெபிக்கவும் ஏழை எளியவர்கள்பால் அன்புசெலுத்தவும் கற்றுக்கொண்டார். இவரின் தந்தை மார்ட்டின் திபியோன் லிஸ்பன் நகரது ஆளுனர். இவர் வீரமும், நேர்மையும் உள்ளவர். இவரது தாயார் தேவரா தெரசம்மாள் அழகுள்ளவர், நற்குணங்கள் நிறைந்த உத்தமி. கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்டு திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார்.  இவர் தூய பிரான்சிஸ்கு அசிசி சபையில் சேரும்போது எடுத்த பெயர்தான் அந்தோணியார்.
 
சிறுவன் பெர்ணாண்தோ ஒரு நாள் மேற்றிராசன ஆலயத்தில் உருக்கமாக செபித்துக்கொண்டிருக்கம்போது திடிரென்று பயங்கர உருவத்தில் அலகை தோன்றியது. அலகை அவருடைய தியானத்தைக் கெடுக்க எண்ணியது. கரிய நிறத்தில், கோர உருவத்துடன் அவர் முன் தோன்றி, அவரை அலைக்கழித்தது. இருப்பினும், இறை நம்பிக்கை கொண்டவராக, தான் முழந்தாள்படியிட்டிருந்த சலவைக்கல்லில் தளரா விசுவாசத்துடன் வெற்றியின் சின்னமான சிலுவையை கையால் வரைந்தார். இந்த அடையாளம் அந்தக்கல்லில் உளியால் செதுக்கியதுபோல் பதிந்து காணப்பட்டது.  இதைக் கண்ட அந்த அலகை அலறியடித்துக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.  சிலுவையின் மேன்மையை அந்தோனியார்  நன்கு உணர்ந்திருந்தார். அந்த கல்லில் பதித்த திருச்சிலுவை அடையாளத்ததை இன்னும் காணலாம்.
 
புனித அகுஸ்தீன் சபையில்
 
கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்தோ திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார். ஆன்ம குருவைக் கலந்தாலேசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார்.  ஊர், உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டதோ தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின்படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.  ஒருநாள் தம்மை ஒரு வாயிற்காப்போனாக்க வேண்டுமெனத் தம் அதிபர்களிடம் கோரினார். ஏனென்றால், அக்காலத்தில் ஏழைகள்,  பாதை தப்பிய வழிபபோக்கர்கள் எல்லாம் அம்மடத்தின் கதவைத் தட்டுவார்கள். அவர்களையெல்லாம் இயேசு எவ்வாறு அன்பு செய்தாரோ அதுபோல அன்புடன் வரவேற்று உபசரிப்பார். 'பதுக்கினால் சாவு,  பகிர்ந்தால்தான் வாழ்வு' என்பதை உணா்ந்திருந்த அந்தோனியார்  தன் இல்லத்தை நாடிவருபவர்களுக்கு உணவும் தங்க இடமும் அளித்து எல்லா உதவிகளையும் ஆவலோடு செய்துவந்தார்.
இந்தப் பணியோடு,  இல்லத்திற்குள் இருந்த ஆலயத்திற்கு முன்பிருந்த தோட்டத்தையும் நன்கு பராமரித்து வந்தார். ஒருநாள் அந்தோனியார்  தோட்ட வேலை செய்துகொண்டிருக்கும்போது ஆலயத்தில் திருப்பலி நடந்துகொண்டிருந்தது.  நற்கருணை எழுந்தேற்றம் நடக்கும்போது நற்கருணை நாதரை வணங்கப்பீடத்தை நோக்கி முழந்தாள்படியிட்டார். அவரது பார்வையை மறைத்திருந்த ஆலயத்தின் சுவர் தானாக விலகி, நற்கருணை எழுந்தேற்றத்தைத் தோட்டத்திலிருந்தே நேரடியாக அவரால் பார்க்க முடிந்தது. தரையில் முகங்குப்புற விழுந்து இறைமகனை வணங்கிப் பேரானந்தம் அடைந்தார்.
 
 
பிரான்சிஸ்கன் சபையில்
தனது மடத்தின் செல்வங்களையும் சுகபோகங்களையும் நினைத்து வருந்தினார். மிகவும் விலையுயர்ந்த துணியால் நெய்யப்பட்ட அவரது அங்கி இப்போது அவருக்கு மிகவும் பாரமாக தோன்றியது. "கடவுள் கால்களைக் கொடுத்திருப்பது துன்பப்படுவோரைத் தேடி ஓட, கரங்களைக் கொடுத்திருப்பது பிறரைக் கைதூக்கிவிட" என்று எண்ணிய அவர் மனதில் 'ஏன் நான்கூட ஏழ்மைத்துறவி அசிசியாரின் சீடனாகக் கூடாது' என்று தனக்குள் எண்ணினார்.
 
இந்த எண்ண ஓட்டத்தில் இருக்கும்போதே,  1220 ஆம் ஆண்டில் அசிசியார் சபையைச் சேர்ந்த ஐந்து சகோதரா்கள் மரோக்காவாசிகளுக்குக் கிறிஸ்தவ விசுவாசத்தையும் போதிக்கச்சென்றபோது அந்நாட்டு மன்னன் அவர்களை கைது செய்து, தனது வாளால் அவர்களைச் சிரச்சேதம் செய்ததைக் கேள்வியுற்றார்.
 
மொரோக்கோவில் கிறிஸ்துவுக்காக குருதி சிந்தி உயிர் துறந்த பிரான்சிஸ்கன் துறவிகளின் உடல்களை டான்பேட்ரோ கொண்டு வந்ததை புனிதர் பார்த்தார்.  பார்த்தபிறகு அவருக்குள் தாமும் போய் இயேசுவுக்க்காக குருதி சிந்த வேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்படவே,  தற்செயலாக அவரது துறவு மடத்திற்கு வந்த கப்புச்சின் சபையாரிடம் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சினார். 
எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டுவிலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்தோ என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். 
பிறருக்காகவே வாழ முடிவெடுத்தார் அந்தோனியார். முள்ளுக்கு அஞ்சாதவன்தான் ரோஜாவை அனுபவிக்க முடியும்.  ஐந்து சகோதரா்கள் மரித்த மண்ணில் நற்செய்தியை அறிவிக்க மன உறுதியோடு கப்பல் ஏறினார். கப்பலில் பாடிக்கொண்டும் ஜெபித்துக் கொண்டுமிருந்த அந்தோணியாரைப் பார்த்து, "நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே, ஏதாவது புதிய நாட்டைக் கண்டுபிடிக்க போகிறீர்களா" என்று கிண்டல் செய்தவர்களிடம், "நான் கிறிஸ்துவுக்காக மரோக்காவை வெற்றிக்கொள்ளப்போகிறேன்" என்று உறுதியாக பதிலளித்தார்.
''என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் " 
( லூக்கா 9:23 ).
 
மொரோக்கோவுக்கு புறப்பட தம்மை தயாரித்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென்று புறப்படுமுன் கொடிய நோயினால் தாக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு திரும்பிவிட முயன்றார். ஆனால் அதற்கு மாறாக சிசிலியில் மெசினா நகருக்கு கப்பல் போய் சேர்ந்தது. நேரே அசிசி நகரை அடைந்தார். அப்போது போர்லி என்ற இடத்தில் ஒரு குருப்பட்டம் நிகழவிருந்தது. அப்போது விழாவில் மறையுரை ஆற்ற ஒப்புகொண்டிருந்த டொமினிக்கன் சபைத் துறவி வர இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் மறையுரை ஆற்றும்படி நம் புனிதரை கேட்டுக்கொண்டனர். ஆனால் தன்னம்பிக்கையில்லாமலே அதற்கு ஒப்புக்கொண்டார்,  அவர் பேசத்தொடங்கியதும் அவரது திறமை, ஆழமான மறை நூல் அறிவு, நாவன்மை, மக்களின் நெஞ்சங்களை மேலே எழுப்பும் ஆற்றல் இவை அனைத்தையும் கேட்டவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதை நேரில் பார்த்த சபைத் தலைவர்,  லாம்பர்டி பகுதி முழுவதிலும் மறையுரை ஆற்றும் பணிப் பொறுப்பை அவரிடம் அளித்தார். அப்போது மறைக்கல்வியும் துறவிகளுக்கு அவர் கற்றுக்கொடுக்க வேண்டியதாயிற்று. பாவிகள் நூற்றுக்கணக்கில் வந்து அவரிடம் அடைக்கலம் அடைந்தனர். பாறை மனம் கொண்ட பாவிகள், ஞான வாழ்வில் அக்கறை காட்டாதவர்கள்,  அவரை அணுகிய வண்ணம் இருந்தனர். இதனால் புனித அசிசியாரின் இறப்பிற்குப்பின் அந்தோணியார் இத்தாலிக்கு வரவழைக்கப்பட்டார். அதுமுதல் இறுதிநாள் வரை பதுவையிலேயே அவர் தங்கினார்.
அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.
Clipboard02
 
 
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார்.  இதனால் கோடி அற்புதர் புனித அந்தோனியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
அந்தோனியார்  செய்த  புதுமைகள்  
அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். 
 
 
இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.
 
 
மற்றுமொறு புதுமை,  இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் இவரை நாடிவருவோர் அதிகமாயிற்று. இதனால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டது. இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். 
ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் 'அந்தோனியாரே என்னை காப்பாற்றும்' என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிம் 14வது புதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கியதாகவும் கூறுவர். 
 
 
ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் வரலாறு உண்டு.  புனைவுகளை நீக்கிவிட்டு,  வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.
 
அந்தோனியார் குழந்தை இயேசுவை காட்சியில் கண்டு கையில் ஏந்தியதாகவும் கூறுவர். 
ஒரு நாள் புனிதர் லிமொஸ் நகரில் இருந்தபோது தன் நண்பனும் அரசனுமான டீசோ பிரபுவின் வீட்டில் தங்க வேண்டி இருந்தது.  அவருக்கு ஒரு தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு அந்தோனியாரின் வாழ்வில் மிக முக்கியமான அதிசயம் நடந்தது.
அந்தோணியார் எவ்வாறு செபிக்கிறார் என்று அறிய மன்னன் டீசோவுக்கு ஆவல். ஏனெனில், அவர் உண்மையிலேயே ஒரு புனிதர் என்று நம்பினான். ஆகவே, இரவில் அவர் தங்கி இருந்த அறைக் கதவை மெதுவாக திறந்து பார்த்தான்.  அங்கு அவன் கண்டது அவனுக்குப் பெரும் வியப்பை எற்படுத்தியது.
புனிதர் ஒளியின் மத்தியில் நின்றுக் கொண்டிருந்தார். அவரது கையில் விவிலியபுத்தகம்.  அதன் மீது குழந்தை இயேசு முழந்தாளிட்டு புனிதரை நோக்கி புன்முறுவலித்தது.  தன இரு கரங்களையும் அவரை நோக்கி விரித்தவாறு காணப்பட்டார். 
 
 
ஆகவேதான் படங்களில் அவரது கையில் குழந்தை இயேசுவும் மற்றொறு கையில் திருமறை நூலை கையில் வைத்திருப்பதாகவும் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. 
 
 
காணமல் போன பொருட்களை புனித அந்தோனியாரை நினைத்து மன்றாடினால் கிடைக்கிறது என்ற விசுவாசம் இன்றும் மக்களிடம் காணப்படுகிறது. "கோடி அற்புதர்" "பதுவை பதியர்" "பசாசுகளை நடுநடுங்கச் செய்பவர்" "காணாமல் போனவைகளை கண்டுபிடித்துக் கொடுப்பவர்" போன்ற அடைமொழிகளும் புனித அந்தோனியாருக்கே சொந்தம்.
அந்தோனியார் இயற்கையில் உறையும் இறைவனை இனம் கண்டுக்கொள்ளும் ஆற்றல் உள்ளவர். 
"கனி வேண்டுமா? மரத்தை நடு. இயேசு வேண்டுமா மரியாளை நாடு" என்று இயற்கையின்மீதும்,  அன்னை மரியாளிடம் மாறாத பக்தி கொண்டவா்.  எனவே, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது அந்தோனியாருக்குப் பிடித்தமான ஒன்று.  அவர் நட்டு வைத்த ஓர் ஆரஞ்சு மரம் இன்றும் பூத்துக் காய்த்துப் பலன் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
 
இறப்பு
1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய்ப்பட்டார். அப்போது அவர் முற்றிலும் உடல் வலிமையிழந்து,  சக்தியற்று காணப்பட்டார். இதனால் மருத்துவமனைக்கு பதுவை நகருக்கு எடுத்து செல்லப்படும் வழியில் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறைவனடி சேர்ந்தார்.  அப்போது அவருக்கு வயது 36.  தம் இறுதிநாட்களை இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் செலவழித்ததாலும், இவரின் கல்லறையானது இங்கே இருப்பதாலும், இவர் பதுவை அந்தோணியார் என்று அழைக்கப்படுகின்றார். இன்று திருச்சபையில் இவரை நினைவு கூறுவதற்கு முக்கிய காரணம்,  இவர் ஏழைகளின்மேல் அளவற்ற அன்பும், இரக்கமும் கொண்டிருந்தார். இவர் பெயரால் இன்றும் ஏழைகளுக்கு பதுவை நகரில் உதவி செய்யப்படுகின்றது. இவர் இயேசுவின்மேல் கொண்ட அன்பால், குழந்தை இயேசுவே இவர் கைகளில் வந்து விளையாடியதாக கூறப்படுகின்றது.  காணாமல் போன பொருட்களை கண்டுபிடிப்பதில் இவர் வல்லவர்.   இதனால் இன்றும் பல புதுமைகள் நடந்துக்கொண்டிருந்தது.
அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
 
  
இவர் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த ஒரு குரு.  இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார்.  இதற்குக் காரணம்இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார்.  அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான்.  ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.
அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.
1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.
செபம் :
ஏழைகளின் நண்பனே எம் இறைவா! 
மறைபரப்புப் பணியில் வல்லவராக திகழ்ந்து, ஏழைகளின் நண்பராக வாழ்ந்தார் புனித அந்தோனியார்.
நாங்களும் எம் சமுதாயத்தில் ஏழைகளை இனங்கண்டு,  அன்பு செய்து,  எங்களிடம் உள்ளதை பகிர்ந்து வாழ உம் அருள் தாரும்.  ஆமென்.
 
அர்ச் அந்தோனியாரின் புதுமைகள்:
அர்ச் அந்தோனியார் வாழும்போது மட்டும் அல்ல அவர் இறந்த போதும் பல புதுமைகளை செய்தார்.
அவருடைய புதுமைகளை பார்த்த திருச்சபை அவரை ஒரே ஆண்டில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தது.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org