Get Adobe Flash player

ஏன் இந்த அமளி?
01.07.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

தருபவர் :அருட்பணி இயேசு கருணாநிதி திருச்சி

இயேசு தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் வீட்டிற்கு வெளியே அவரின் இறந்த மகளுக்காக அழுது புலம்பிய மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கேட்ட இந்தக் கேள்வியோடு இன்றைய சிந்தனையை நாம் தொடங்குவோம்.

'அமளி' என்றால் கூச்சல் அல்லது குழப்பம் அல்லது புலம்பல். கூச்சல் மற்றும் குழப்பத்தைவிட புலம்பல் என்ற பொருளே இந்த வார்த்தைக்குச் சரியாகப் பொருந்தும். அதாவது, நடக்கக்கூடாத ஒன்று அல்லது நம் மனதிற்கு ஏற்பில்லாத ஒன்று நடந்துவிடும்போது நம் மனமும், நம் வாயும் உச்சரிக்கும் வார்த்தைகள்தாம் அமளி. ஆக, அமளியில் ஒரு வகையான சோகம், விரக்தி, ஏமாற்றம், சோர்வு இருக்கும். ஆனால் இந்த அமளியி னால் ஒரு நன்மையும் இல்லை. இந்த மாதிரியான அமளி என்னும் புலம்பல் நிலை நம்மில் உருவாகப் பல காரணிகள் இருக்கலாம். அவற்றில் மூன்று காரணிகளை முன்வைக்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு:

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 1:13-15,2:23-24) ஆசிரியர், 'இறப்பு' எழுப்பும் அமளி பற்றியும்,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 8:7,9,13-15) தூய பவுல், 'குறைவு' எழுப்பும் அமளி பற்றியும்,
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 5:21-43) மாற்கு, 'நலமின்மை' எழுப்பும் அமளி பற்றியும் குறிப்பிடுகின்றார்.

'இறப்பு,' 'குறைவு,' 'நலமின்மை' - இந்த மூன்று காரணிகளால் நாமும்கூட நம் வாழ்வில் இன்று புலம்பிக்கொண்டிருக்கலாம். இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் நம்முன் இயேசு வந்து நம்மிடம் கேட்பதெல்லாம் இந்த ஒற்றைக் கேள்விதான்: 'ஏன் இந்த அமளி?' 'ஏன் இந்தப் புலம்பல்?' அமளி மற்றும் புலம்பல் வரக் காரணம் நாம் கடவுளின் இருப்பை மறந்துவிடுவதுதான் என்பது இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கின்ற பாடமாகவும் இருக்கிறது.

அ. இறப்பும் கடவுளின் இருப்பும் - 'இந்த உலகில் இறப்பு ஏன்?' 'வாழ்வோர் ஏன் இறக்கின்றனர்?' என்று கேள்விகள் எழுப்பும் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், 'அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது' என்றும், 'கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்றே படைத்தார்' என்றும் எழுதுகின்றார். ஆக, இன்று சாவு நம்மைத் தழுவினாலும் கடவுள் நம்மை அழியாமைக்கென்று படைத்திருப்பவர். அவருடைய சாயலில் படைக்கப்பட்டுள்ள நாம் ஒருபோதும் அழிவதில்லை. நாம் பிறந்தது முதல் ஒவ்வொரு நொடியும் இறப்பை நோக்கியே அடியெடுத்து வைக்கின் றோம். இறப்பை நோக்கித்தான் நாம் நகர்கிறோம் என நினைக்கத் தொடங்கினால் நாம் ஒருபோதும் வாழ மாட்டோம். எல்லாம் இறக்கத்தானே போகிறோம் என நினைத்து ஒன்றும் செய்யாமல் ஓய்ந்திருப்போம். ஆனால், இறவாமைக்கான ஆவல்தான் நம்மை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி நோக்கி உந்தித் தள்ளுகிறது. 'இல்லை, உனக்கு எல்லாம் முடிந்துவிட்டது, நீ ஒன்றும் செய்யாதே' என்று நம் உள்ளம் நம்மிடம் பேச ஆரம்பித்தால் அது நமது குரல் அல்ல. மாறாக, பேயின் அல்லது அலகையின் குரல். நம் உள்ளத்தில் ஒலிக்கும் கடவுளின் குரல், 'பரவாயில்லை. தொடர்ந்து செல். போராடு' என்று மட்டும் சொல்லி நம்மை முன்நோக்கித் தள்ளும். ஆக, நாம் உடல் அளவில் இறப்பதற்கு முன் சில நேரங்களில் மனதளவில் இறந்துவிடுகிறோம். நாம் கடவுளின் உடனிருப்பை நம்மில் உணரும்போது இறப்பு என்ற அமளி அடங்கிவிடுகிறது.

ஆ. குறைவும் கடவுளின் இருப்பும் - மாசிதோனிய திருச்சபைக்காக கொரிந்து மக்களிடம் பொருள்கள் சேகரிக்கும் தூய பவுல், அவர்கள் 'நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகியவற்றில் வளர்வதோடு அன்பிலும், அறப்பணியிலும் வளர வேண்டும்' என அறிவுறுத்துகின்றார். இதை வலியுறுத்த பவுல் இரண்டு மேற்கோள்களைக் காட்டுகின்றார்: (1) இயேசுவின் பிறப்பு - 'அவர் செல்வராயிருந்தும் (கடவுளாயிருந்தும்) உங்களுக்காக ஏழையானார் (மனிதரானார்), (2) 'மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை. குறைவாகச் சேகரித்தவருக்கு எதுவும் குறைவுபடவில்லை' (விப 16:18). ஆக, கடவுளின் இருப்பு குறைவானவர்களை நிறைவாக்குகிறது. பசி என்னும் குறையால் வாடி இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் மன்னா வழங்கியபோது, சிலர் அடுத்த நாளைக்குரிய கவலையினால் மன்னாவைச் சேகரித்து வைத்தபோது, அப்படி வைக்கப்பட்ட மன்னா புழுவாகிவிடுகிறது. மிகுதியாகச் சேர்த்ததால் அவர்களுக்கு எதுவும் மிஞ்சவில்லை. அதேபோல ஒன்றும் சேர்த்து வைக்காதவர்களுக்கு எந்தவொரு குறையும் இல்லை. இவ்வாறாக, நம்மிடம் உள்ள குறைவை நிறைவு செய்வது கடவுளின் இருப்பாகவும், அவரின் அரும்செயலாகவும் இருக்கிறது.

இ. நலமின்மையும் கடவுளின் இருப்பும் - இன்றைய நற்செய்தியில் நலமற்றிருக்கும் இரண்டு மகள்களைப் பற்றி வாசிக்கின்றோம். முதல் மகள் 12 வயதான யாயிரின் மகள். இவள் நலமற்றிருப்பதாகவும், இயேசு வந்து அவள் மீது கைகளை வைக்க வேண்டி அவளுடைய தந்தை இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றார். இரண்டாம் மகள் 12 ஆண்டுகள் இரத்தப்போக்கினால் நலமற்று இருப்பவள். இவள் தானே வந்து இயேசுவின் மேலாடை யைத் தொடுகிறாள். இருவருமே இறப்பு நோக்கிய பயணத்தில் இருக்கின்றனர். சிறுமி சீக்கிரம் இறந்துவிடுகிறாள். பெண்மணி கொஞ்சம் கொஞ்ச மாக இறந்துகொண்டிருக்கிறாள். இந்த இருவரும் இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வை மாற்கு மிக அழகாக பதிவு செய்கின்றார்

'இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்' என்னும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் (மத் 9:18-26, மாற் 5:21-43, லூக் 8:40-56) பதிவு செய்கின்றனர். ஆனால், இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்த யோவான் (காண். மாற் 5:37) இதை பதிவு செய்யவில்லை. மத்தேயு நற்செய்தியாளர் யாயிரின் மகள் முதலிலேயே இறந்துவிடுவதாக எழுதுகின்றார் (மத் 9:18-19). சிறுமிக்கு பன்னிரண்டு வயது என்பது மாற்கு இறுதியில் சொல்கின்றார் (5:42). ஆனால், லூக்கா அதை முதலில் சொல்கின்றார் (8:42). மாற்கு நற்செய்தியில் இயேசு உயிர்பெற்ற குழந்தைக்கு கடைசியாக சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:43). ஆனால் லூக்காவில் அவள் உயிர்பெற்றவுடன் சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:55). ஆக, ஒத்தமவு நற்செய்தியாளர்களின் பதிவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.

இந்த நற்செய்திப் பகுதியை வெறும் இலக்கியப் பகுதியாக வாசித்தாலும் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. என்ன பிரச்சினை? இயேசுவின் இரண்டு புதுமைகள் (பெண் நலம் பெறுதல், சிறுமி உயிர்பெறுதல்) வெவ்வேறு இடத்தில் சொல்லப்பட்டவை, பிற்காலத்தில் பிரதி எடுப்பவர்களின் தவற்றால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டதா? அல்லது வேறு வேறு வாய்மொழியாக வந்த கதைகளை நற்செய்தியாளர்கள் ஒன்றாக இணைத்து விட்டனரா? இயேசுவோடு பயணம் செய்த பெரிய கூட்டம், யாயிரின் வீடு வரவர குறைந்து போவதன் காரணம் என்ன? கதைத்தளமும், அந்தத் தளத்தில் பிரசன்னமாகியிருக்கும் நபர்களும்கூட மாறுபடுகின்றனர். சாலை, கூட்டம், நெரிசல் என இருந்த கதைதளம், திடீரென வீடு, மூன்று சீடர்கள், சிறுமி என மாறிவிடுவதன் பொருள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

அ. மாற்கு நற்செய்தியாளரின் இலக்கிய உத்தி. என்ன இலக்கிய உத்தி? ஒப்புமை. அதாவது, ஒற்றுமை-வேற்றுமையின் வழியாக ஒரு பொருளை உணர்த்துவது. இந்த நற்செய்திப் பகுதியில் இரண்டு அறிகுறிகள் அல்லது புதுமைகள் நடக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை - ஒருவர் நலம் பெறுகிறார். மற்றவர் உயிர் பெறுகிறார். இரண்டு பேரும் பெண்கள். ஒருவர் வறுமையில் வாடியவர். மற்றவர் செல்வச் செழிப்பில் திளைத்தவர். இருவருக்குமே பொதுவாக இருப்பவை 12 ஆண்டுகள் - முதல் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் துன்பம், இரண்டாம் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் மகிழ்ச்சி. முதல் பெண்ணுக்கு பரிந்து பேச எவரும் இல்லை. ஆனால் இரண்டாம் பெண்ணுக்கு பரிந்து பேச தந்தை, இறந்த நிலையில் அழ வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள். இருவரையும் குணமாக்குவது இயேசுவின் தொடுதல்: முதல் நிகழ்வில் பெண் இயேசுவைத் தொடுகின் றார். இரண்டாம் நிகழ்வில் இயேசு சிறுமியைத் தொடுகின்றார். முதல் நிகழ்வில் கூட்டம் மௌனம் காக்கிறது. இரண்டாம் நிகழ்வில் கூட்டம் மலைத்துப் போகிறது.

ஆ. இரண்டாம் நிகழ்வு நடப்பதற்கு முதல் நிகழ்வு தளத்தைத் தயாரிக்கிறது. அல்லது முதல் நிகழ்வின் தாமதம்தான் இரண்டாம் நிகழ்வு நடக்க காரணமாக அமைகிறது. முதல் நிகழ்வு நடப்பதற்கு முன் சிறுமி உடல்நலம் இல்லாமல் இருக்கிறாள். ஆனால், அந்தச் சிறுமி இறக்கவும், இறப்பு செய்தி அவளின் அப்பாவைத் தேடி வருவதற்கும், இறந்தவுடன் அழுவதுற்கு அவளின் குடும்பத்தார் கூடி வருவதற்கும் நேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தை உருவாக்கிக்கொடுக்கிறது முதல் நிகழ்வு. ஆக, முதல் நிகழ்வில் வரும் இரத்தப்போக்குடைய பெண், கூட்டம், நெரிசல் அனைத்தும் கதையின் கரு வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன.

இ. பயணநடை இலக்கிய உத்தி. நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் மற்றொரு உத்தி 'பயணநடை'. அதாவது, இயேசுவின் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அவரின் பயணத்தில் நடப்பதாக எழுதுவது. மிக நல்ல உதாரணம், இயேசுவின் எம்மாவு பயணம். இந்த நடையின் உட்கூறுகள் என்ன? பயணத்தின் தொடக்கம், பயணம், மற்றும் பயணத்தின் முடிவு. இன்றைய நற்செய்தியில் இயேசு மறுகரையிலி ருந்து யாயிரின் இல்லத்திற்குப் பயணம் செய்கிறார். பயணத்தின் தொடக்கத்தில் சீடர்கள் அல்லது கூட்டம் இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது. பயணத்தின் இறுதியில் கூட்டம் இயேசுவைக்கண்டு மலைத்துப்போய் அவரில் மேல் நம்பிக்கை கொள்கிறது. ஆக, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு இயேசு மக்களை பயணம் செய்ய வைக்கின்றார். இந்தப் பயணத்தின் மையமாக இருப்பது நம்பிக்கை பற்றிய இயேசுவின் வார்த்தைகள்: குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு, 'மகளே, உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று!' என்கிறார் (5:34). உயிர்பெற வேண்டிய மகளின் தந்தையிடம், 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று கூறுகிறார் (5:36). ஆக, இந்த மையம் தெளிவானால், பயணநடை தெளிவாக விளங்குகிறது.

ஆக, இலக்கிய அடிப்படையில் அல்லது கதையியல் அடிப்படையில் பார்த்தால் ஒரே நிகழ்வுதான் இரண்டு தளங்களில் வளர்ச்சி பெறுகின்றது. ஆக, இவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

முதல் புதுமை: இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதல் (5:24-34).

யாயிரின் வேண்டுதலுக்கு இணங்கிய இயேசு அவரின் இல்லம் நோக்கிப் புறப்படுகிறார். வாசகரின் மனம் யாயிரின் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், புதிய கதாபாத்திரத்தை உள்நுழைக்கின்றார் மாற்கு. இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கூட்டத்தில் ஒருவராக அவர் நிற்கிறார். கூட்டத்தில் நிற்கும்போது நமக்கு பெயர் தேவைப்படுவதில்லைதானே. அவரைப் பற்றி மூன்று விடயங்களைக் குறிப்பிடுகிறார் மாற்கு: அவள் பன்னிரண்டு ஆண்டுகளாய் அவதிப்படுகிறாள், மருத்துவரிடம் தன் பணத்தையெல்லாம் இழந்துவிட்டாள், இப்போது இன்னும் கேடுற்ற நிலையில் இருக்கிறாள். இப்படிப்பட்ட ஒரு பெண் மற்றவர்களைத் தொடுவது தீட்டு என்று சொன்னது லேவியர்நூல் 15:19-33. 'இயேசுவைத் தொட்டால் நலம் பெறுவேன்!' என அவள் சொல்லிக்கொள்கிறாள். ஒருவரின் தொடுதல்கூட குணமாக்க முடியும் என அக்காலத்தவர் நம்பினர். ஏன் ஒருவரின் நிழல் பட்டால்கூட நலம் பெற முடியும் என அவர்கள் நம்பியதால் தான் பேதுருவும், யோவானும் சாலையில் செல்லும்போது நோயுற்றவர்களை கட்டிலில் கொண்டுவந்து கிடத்துகின்றனர் (காண். திப 5:15). கூட்டத்தின் நடுவே வந்து தொடும் அவளின் துணிச்சல் அவள் எந்தவிதத் தடைகளையும் தாண்டத் தயாராக இருந்தாள் என்பதையும், எந்த அளவிற்கு தன் நோயினால் கஷ்டம் அனுபவித்திருப்பாள் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. இயேசு தன் உடலிலிருந்து ஆற்றல் வெளியேறுவதை உணர்கிறார். வழக்கமாக, மற்றவர்களின் மனதில் இருப்பவற்றை இயேசு உணர்வார் என்று சொல்லும் மாற்கு, இங்கு இயேசு தன்னில் நடப்பதை தான் உணர்வதாகச் சொல்கின்றார். 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்விக்கு, சீடர்கள், 'இவ்வளவு கூட்டம் நெரிசலாக இருக்கிறது! இங்க போய் யார் தொட்டது? யார் இடிச்சதுன்னு? கேட்குறீங்களே?' என்று பதில் சொல்கின்றனர் சீடர்கள். இயேசுவின் சீடர்கள் அமளி கொள்கின்றனர். புலம்புகின்றனர்.இது ஒரு 'முரண்பாடு' - என்ன முரண்பாடு? இயேசுவுக்கு அருகில் இருக்கும் சீடர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், தூரத்தில் இருக்கும் ஒரு பெண் அவரைக் கண்டுகொள்கின்றார். பயம் தொற்றிக்கொள்கிறது அந்தப் பெண்ணை. இரண்டு வகை பயம்: ஒன்று, தான் 'திருடியது' கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது. மற்றொன்று, தான் இயேசுவைத் தீட்டாக்கிவிட்டோம் என்பது. ஆனால், இயேசு தூய்மை-தீட்டு பற்றி கவலைப்படுபவர் அல்லர். இயேசு அந்தப் பெண்ணை இப்போது அடுத்தநிலை குணமாக்குதலுக்கு அழைத்துச் செல்கின்றார். அவரின் நம்பிக்கையைப் பாராட்டுகின்றார். 'மகளே' என்று அவரை அழைப்பதன் வழியாக தன் இறையரசுக் குடும்பத்தில் உறுப்பின ராக்குகின்றார் இயேசு. 

முதல் புதுமையில் இந்தப் பெண்மணி இரண்டு தடைகளைக் கடக்கின்றார்: (அ) முதலில் கூட்டம் என்னும் தடை. (ஆ) இரண்டாவது, அச்சம் என்னும் தடை.

இரண்டாம் புதுமை. யாயிரின் மகள் உயிர் பெறுதல். தன் மகளுக்கு சுகம் வேண்டி வந்தவர், தன் மகளின் உயிர் பெறுகிறார். இரத்தப்போக்குடைய பெண்ணின் எதிர்ப்பதமாக நிற்கிறார் யாயிர். தொழுகைக்கூடத் தலைவர். ஆக, கடவுளை யார் பார்க்கலாம், பார்க்கக்கூடாது என்று சொல்லக் கூடியவர் இவர். நிறைய பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர். தனக்கென வேலையாட்களையும் வைத்திருக்கின்றார். ஆனாலும், எல்லாவற்றை யும் ஒதுக்கிவிட்டு தன் மகளுக்கு நலம் கேட்டு இயேசுவின் காலடியில் கிடக்கின்றார். தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவின் காலில் விழுகிறார் - இயேசு உயிர்த்த சில ஆண்டுகள் கழித்து, புதிய நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் யூதர்களின் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாற்கு நற்செய்தியாளரின் திருச்சபையும் இப்படி வெளியேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தொழுகைக்கூட தலைவரையே இயேசுவின் காலில் விழ வைப்பதன் வழியாக இயேசுவை தொழுகைக்கூடத்தை விட மேலானவர் என்றும், இயேசுவைச் சந்திக்கு தொழுகைக் கூடம் தேவையில்லை, சாலையோரம் கூட அவரைச் சந்திக்கலாம் என்ற மாற்று சிந்தனையை விதைக்கின்றார் மாற்கு. முதல் புதுமை இரண்டாம் புதுமையின் இடையில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் யாயிரின் மகள் இறந்து, அந்த இறப்பு செய்தி யாயிரின் காதுகளையும், இயேசு வின் காதுகளையும் எட்டுகிறது. 'துணிவோடிரும்! நம்பிக்கை கொள்ளும்!' என தைரியம் தருகிறார் இயேசு. யாயிரின் வீடு வருகிறது. தன் நெருக்க மான மூன்று சீடர்களுடன் (காண். 9:2, 14:33) உள் நுழைகிறார். இடையில் கூட்டத்தினரின் தடை - அதாவது, அவர்களின் கிண்டல். சிறுமியைத் தொட்டு எழுப்புகிறார். மக்கள் வியக்கின்றனர்.

இரண்டாம் புதுமையில் யாயிர் தன் உள்ளே அச்சம் கொண்டிருந்தாலும் அவருக்கு வெளியேயும் இரண்டு தடைகள் இருக்கின்றன: (அ) முதலில், வேலையாள்கள். 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர்?' இவர்களின் வேலை மகளின் இறப்பு செய்தியை சொல்வது மட்டும்தான். ஆனால், 'போதகரை தொந்தரவு செய்யாதீர்' என தம் தலைவருக்கே அறிவுறுத்துகின்றனர். மேலும், இவர்கள் இயேசுவை நலம் தரும் கடவுளாகப் பார்க்காமல் வெறும் போதகராக மட்டுமே பார்க்கின்றனர். (ஆ) யாயிரின் வீட்டு வாசலில் இருந்த கூட்டம். இந்தக் கூட்டத் தினர் அழுது ஓலமிட்டுப் புலம்புகின்றனர். ஓலம் என்பது உச்சதொனியின் குரல். இறந்தவுடன் நம்மை விட்டுத் தூரப் போகும் ஒருவரிடம் மெதுவாக பேசினால் அவருக்குக் கேட்காது. ஆகையால்தான் நாம் ஓலமிட்டு, கூக்குரலிட்டு அவர்களை அழைக்கிறோம். இந்த ஓலத்தைக் கடிந்து கொள்கின்ற இயேசு, 'சிறுமி தூங்குகிறாள்' என்கிறார். கூட்டம் நகைக்கிறது. 'என்னப்பா இவ்வளவு சத்தத்திலா ஒருவர் தூங்க முடியும்!' என்று கேட்பதுபோல இருக்கிறது அவர்களின் நகைப்பு. இந்த இரண்டு தடைகளும் கடவுளின் இருப்பை உணர்ந்துகொள்ள யாயிருக்கு தடையாக இருக்கின்றன.

இவ்வாறாக, 'இறப்பு,' 'குறைவு,' 'நலமின்மை' என்ற மூன்று காரணிகளால் எழும் அமளி மற்றும் புலம்பலுக்கு கடவுளின் இருப்பு விடையாக இருக்கிறது.  கொஞ்ச நேரம் மௌனமாக அமர்ந்து நான் என்னையே ஆராய்ந்து பார்த்தால், எனக்குள்ளும் அந்த அமளி இருப்பது தெரியும். நூலகம்போல அமைதியாக இருக்க வேண்டிய நம் மனம் மீன் மார்க்கெட் போல கூச்சல் குழப்பமாக இருக்கிறது. நம் மூளை சில நேரங்களில், 'இது இப்படித்தான். போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர்?' என்று கடவுளிடமிருந்து நம்மை அந்நியமாக்கிவிடத் தூண்டும். ஆனால், இந்தப் போதகரை நாம் தொந்தரவு செய்வோம். அவர் கூட்டத்தின் நடுவே இருந்தாலும். அல்லது தனியே இருந்தாலும். நாம் அவரைத் தேடிச் செல்லும் நாம் அவரின் இருப்பை நம்மில் உணர்ந்தோம் என்றால் அந்த இருப்பை இறப்பு, குறைவு, நலமின்மை கொண்டிருக்கும் மற்றவர்களை நாடிச் சென்று அவரின் இருப்பை அவர்களுக்கு நம் இருப்பால் உறுதி செய்யவேண்டும். சின்னச் சின்ன சீண்டல்கள் என்னுள்ளும், வெளியிலிருந்தும் வந்தால், நான் இன்று கேட்பது, 'ஏன் இந்த அமளி?'

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org