Get Adobe Flash player

உடலில் தைத்த முள்

08.07.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருட்பணி இயேசு கருணாநிதி

08 ஜூலை 2018 ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு
I. எசேக்கியேல் 2:2-5 / II. 2 கொரிந்தியர் 12;7-10 / III. மாற்கு 6:1-6

 

காலில் முள் குத்திய அனுபவம் உங்களுக்கு உண்டா? கிராமத்தில் பிறந்த எனக்கு நிறையவே உண்டு. உள்ளங்கால் என்றால் முள் குத்துவதும், முன்னங்கால் என்றால் கல் எத்துவதும், பின்னங்கால் என்றால் அம்மி உரசுவதும் சகஜம்தானே என்பது கிராமத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தெரியும். செருப்பு அணியாதவர்களுக்கு இந்தப் பிரச்சினை என்றால், செருப்பு அணிந்தவர்களுக்கு மற்றொரு பிரச்சினை உண்டு.


அதுதான், காலணிக்குள் கல். வேகமாக நடந்து செல்லும்போது நம் காலணிக்குள் நுழையும் கல் நம் வேகத்தைக் குறைப்பதுடன், நம் காலைiயும், காலணி யையும் பதம் பார்த்துவிடுகிறது. காலணிகள் ஷூ போன்று இருந்தால் நிலை இன்னும் ரொம்ப மோசம். நம் உடலுக்கு வெளியே உள்ள பொருள் உடலுக்குள் நுழைய முற்பட்டால், அல்லது உடலைக் கிழித்தால், தைத்தால் (தமிழில் பாருங்களேன்: முள் குத்தும்போது கால் கிழிபடுவதை அழகாக, 'முள் தைத்தது' என்று சொல்கிறார்கள். 'முள்' ஆக்சுவலா 'கிழிக்கத்தானே' செய்கிறது!) எவ்வளவு துன்பமாக இருக்கிறது!

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 12:7-10) தூய பவுல் தன் உடலில் தைத்த முள் போல் ஒன்று தன்னை வருத்திக்கொண்டிருப்ப தாகப் பதிவு செய்கின்றார். பவுல் சொல்வது உடலுக்குள்ளே சதையைத் தைத்துக்கொண்டிருக்கும் ஒரு முள். அதாவது, நாம் மீன் சாப்பிட முயற்சி செய்து ஒரு முள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு உள்ளேயும் போகாமல் வெளியேயும் வரமால் இருப்பது போல. இப்படி அனுபவப்பட்டவர்கள் வாழ்க்கையில் மீண்டும் மீனே சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள்.

பவுலின் வார்த்தைகளில் நிறைய சோகம் தெரிகின்றன. அதை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்:
அ. என்னிடம் பெருங்குறை ஒன்று - உடலில் தைத்த முள்போல - என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது.
ஆ. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு நான் மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.

ஆனால் அவர் அதை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்றார். (இந்தக் கடவுள் இப்படித்தான். பல நேரங்களில் நாம் கேட்பது எதையும் செய்யமாட்டார். அவரே தான் செய்வதற்கு ஒரு காரணமும் சொல்வார். ஆனால் பரவாயில்லை. பவுலின் செபத்தைக் கேட்கவாவது செய்தாரே!)

பவுல் இதை எழுதும்போது நிறைய கண்ணீரோடு எழுதியிருப்பார் என்றே என் கற்பனையில் தோன்றுகிறது. 'என் சதையில் தைத்த முள்போல' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. நம் காலில் குத்தும் முள் தரும் வலியும், கன்னத்தில் அல்லது உதட்டில் குத்தும் முள்ளும் ஒரே வலியையா தருகிறது. இல்லை. முள் குத்தும்போது அல்லது நம் உடலில் ஊசி போடும்போது நமக்கு ஏன் வலிக்கிறது? மென்மையான ஒன்றின் மேல், வன்மை யான ஒன்று பாயும் போது அங்கே வலி வருகிறது. இரண்டும் மென்மையாக இருந்தால் வலி இருப்பதில்லை. ஊசி போடுவதற்கு முன் உடலில் தேய்க்கப்படும் பஞ்சு நமக்கு வலி தருவதில்லை. இரண்டும் வன்மையாக இருந்தால் சத்தம் மட்டும்தான் வரும். வலி வராது. நம் உடலின் நகத்தின்மேல், இன்னொரு நகத்தைத் தேய்க்கும்போது அங்கே சத்தம்தான் வருகிறது. ஆக, எதிரெதிர் குணங்கள் கொண்டவை ஒன்றுக்கொன்று மோதும்போது வலி வருகிறது. நாம் இறுக்கமாக பேண்ட் அணியும்போது அதன் பொத்தான்கள் நம் இடுப்பு பகுதிக்கு கொடுக்கும் வலியையே நம்மால் தாங்க முடிவதில்லை. அப்படியிருக்க அதே இடுப்பு பகுதியில் ஒரு முள் அமர்ந்து நம்மை குத்திக்கொண்டிருந்தால் நம்மால் தாங்க முடியுமா?

பவுலடியாரின் சதையில் குத்திய முள்ளாக அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதற்கு பல யூகங்கள் இருக்கின்றன. இது அவரை வாட்டி வந்த உடல் நோயைக் குறிக்கிறது, அல்லது அவருடைய உள்ளத்தில் உள்ள ஏதோ ஒரு குற்ற உணர்வாக இருக்கலாம் அல்லது தன் எதிரியாக தான் நினைக்கும் ஒரு நபராக இருக்கலாம் அல்லது அவரின் திருச்சபையில் நிலவிய ஏதோ ஒரு பெரிய பிரச்சினையைக் குறிக்கிறது, அல்லது கொரிந்து மக்களால் ஒதுக்கப்பட்ட எதிர்மறை உணர்வைக் குறிக்கிறது என்று பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உடலில் உள்ள நோய், மனதில் உள்ள வருத்தம், வெளியில் உள்ள குறை என எதுவாக இருந்தாலும், வலி என்னவோ பவுலடியாருக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்தக் குறை அல்லது வலிக்கு ஒரு நோக்கம் இருப்பதாகவும் சொல்கிறார் அவர். என்ன நோக்கம்? 'நான் இறுமாப்பு அடையாதவாறு!' சின்னக் குழந்தைக்கு அல்லது திருமண மணப்பெண்ணுக்கு நன்றாக அலங்காரம் செய்துவிட்டு, கன்னத்திற்கும், நாடிக்கும் இடையே வைக்கப்படும் திருஷ்டி பொட்டு போல! ஆக, எல்லாம் நல்லாயிருக்கக் கூடாது என்பதற்காக தானாக ஏற்படுத்திக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட ஒரு குறை. மேலும் இந்தக் குறையை சாத்தான் அனுப்பியதாகவும் சொல்கிறார் பவுலடியார்.

தன் சதையில் குத்திய முள்ளை எடுக்க கடவுளிடம் பவுலடியார் முறையிட, கடவுளும் முள்ளை எடுப்பதற்குப் பதிலாக, 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையால்தான் வல்லமை வெளிப்படும்' என்கிறார். அதாவது, நிறைய மழை பெய்கிறது என வைத்துக்கொள்வோம். மேடுகளில் பெய்யும் மழை அப்படியே வழிந்து ஓடிவிடுகிறது. ஆனால் பள்ளங்களில், குண்டும், குழியுமான இடங்களில் பெய்யும் மழை அப்படியே ஆங்காங்கே தேங்குகிறது. ஆக, பள்ளங்களும், குண்டும் குழிகளும்தான் அருளைச் சேர்த்துவைக்கும் கலயங்கள். பவுலைப் பொறுத்தவரையில் இந்த வலுவின்மையில்தான் இறைவன் தன் அருளைத் தருவதாக உணர்கின்றார். மேலும், இந்த உணர்வினால் அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது. ஆகையால்தான், 'என் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும், இடரிலும், இன்னலிலும், நெருக்கடியிலும் நான் அகமகிழ்கிறேன்' என்கிறார் பவுல்.

இவ்வாறாக, ஒரு பக்கம் வலி, மறு பக்கம் அருள். ஒரு பக்கம் வலுவின்மை, மறு பக்கம் மகிழ்ச்சி என வாழ்வின் இருதுருவ அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்கிறார் பவுல். இரண்டாம் வாசகத்தில் நாம் காணும் இந்த இருதுருவ அனுபவமே இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களிலும் இருக்கின்றது.

இன்றைய முதல் வாசத்தில் (காண். எசே 2:2-5) இறைவாக்கினர் எசேக்கியேலை இறைவாக்குரைக்க கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பு கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:-16) இயேசு ஓர் இறைவாக்கினராக தன் பிறந்தகம் வருகின்றார். இருவரும் எதிர் கொள்ளும் அனுபவங்களை இன்றைய வாசகங்கள் பதிவு செய்கின்றன.

எசேக்கியேல் இறைவாக்கினர் இறைவாக்குரைக்க வேண்டிய மக்களை மூன்று அடைமொழிகளால் அழைக்கிறார் யாவே இறைவன்:
(அ) வன்கண்ணுடையோர் (2:4), (ஆ) கடின இதயம் கொண்டோர் (2:4), (இ) செவிசாய்க்காத செவிகள் கொண்டோர் (2:5).
(அ) வன்கண்ணுடையோர்: எபிரேயத்தில் கடினமான அல்லது இறுகிய முகம் கொண்டோர் எனத் தரப்பட்டிருக்கிறது. வன்கண் அல்லது கடுமை யான முகம் என்பது நம் முன் இருக்கும் நல்லவற்றை அல்லது நிறைவைப் பார்ப்பதற்குப் பதிலாக, நம் முன் உள்ள கெட்டவற்றையோ அல்லது குறையையோ மட்டும் பார்ப்பது.
(ஆ) கடின இதயம் கொண்டோர். இதயத்தின் இயல்பு மென்மையாக இருப்பது, அல்லது வலுவற்று இருப்பது. வலுவற்று இருந்தால்தான் அது இரத்தத்தை சீர் செய்ய விரிந்து, சுருங்க முடியும். வலுவாகிவிட்டால் விரிந்தது சுருங்க முடியாது, சுருங்கியது விரிய முடியாது. ஆக, இயக்கம் இல்லாமல் இருக்கும் இதயமே கடின இதயம்.
(இ) செவிசாய்க்காத செவிகள்.செவிகளைத் திருப்பி கொண்டவர்கள் என்று எபிரேயம் சொல்கின்றது. ஆக, செவியில் விழாதவாறு பார்த்துக் கொள்வது. அல்லது கீழ்ப்படிய மறுப்பது.

இவ்வாறாக, எசேக்கியேல் உடலில் தைத்த முள்ளாக இருப்பவர்கள் 'வன்கண்ணுடைய,' 'கடின இதயம் கொண்ட,' 'செவிசாய்க்காத செவிகள் கொண்ட' இஸ்ரயேல் மக்கள். இப்படி ஒரு பக்கம் முள் இருந்தாலும் அவரும் மறுபக்கம் கடவுளின் அருளை உணர்கின்றார். எப்படி? 'ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது' என்கிறார் எசேக்கியேல். இவ்வாறாக, தனக்குள் உள்ள ஆண்டவரின் ஆவியில் தன் இறைவனின், தன்னை அனுப்பியவரின் அருளைக் கண்டுகொள்கிறார் எசேக்கியேல். ஆக, 'முள்ளும் அருளும்,' 'வலுவின்மையும் மகிழ்ச்சியும்' இணைந்தே இருக்கின்றன எசேக்கியேலின் வாழ்வில்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சொந்த ஊருக்கு வருகின்றார். இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்தூரில் புறக்கணிக்கப்படுவதை மத்தேயு (13:53-58), மாற்கு (6:1-6) மற்றும் லூக்கா (4:16-30) என்ற மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர். யோவான் இந்த நிகழ்வை பதிவு செய்யவில்லை என்றாலும், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார், அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (1:11) என்று இயேசு நிராகரிக்கப்பட்டதை ஒரு இறையியலாகப் பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரின் பதிவையே இன்றைய நற்செய்தி வாசகமாக வாசிக்கின்றோம்.

நற்செய்தியாளர்களின் பதிவுகளில் மாற்கு நற்செய்தியாளரின் பதிவுதான் ரொம்ப கரடுமுரடாக இருக்கின்றது. மத்தேயு கொஞ்சம் மெருகூட்டி எழுதுகின்றார். லூக்கா இதையே ஒரு இறையியல் நிகழ்வாக்கி இயேசுவை எசாயா போல ஒரு இறைவாக்கினர் எனச் சொல்லிவிடுகின்றார். 'இவர் தச்சன்' என்று மாற்கு சொல்வதை, 'இவர் தச்சனின் மகன்' என்று மத்தேயு சொல்கின்றார். மேலும், 'இயேசுவால் அறிகுறி செய்ய முடியவில்லை!' என்று மாற்கு சொல்ல, மத்தேயுவோ, 'இயேசு அறிகுறி ஒன்றும் செய்யவில்லை!' என்று எழுதுகின்றார். மேலும், இயேசுவின் சகோதரர்கள் பற்றி குறிப்பிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த நிகழ்வு நாசரேத்தூரின் செபக்கூடத்தில் நடக்கின்றது. நாசரேத்தூரில் செபக்கூடம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இல்லை. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் முதல் கிறிஸ்தவர்கள் செபக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை ஒருவேளை பின்புலமாக மையப்படுத்தி, தலைவராம் இயேசுவே வெளியேற்றப்பட்டார் அல்லது ஒதுக்கப்பட்டார் என நற்செய்தியாளர்கள் பதிவு செய்திருக்கலாம்.

இயேசு தொழுகைக்கூடத்தில் கற்பித்ததைக் கேட்ட அவருடைய சித்தப்பா, பெரியப்பா, மாமா, சித்தி, பெரியம்மா, அத்தை வகையறாக்கள் ஒருசேர மூன்று உணர்வுகளை எழுப்புகின்றனர்: (அ) வியப்பு. (ஆ) தயக்கம். (இ) நம்பிக்கையின்மை.

முதலில் அவர்கள் கொள்ளும் வியப்பு கல்லின்மேல் விழுந்த விதைபோல இருக்கிறது. கல்லின் மேல் விழுந்த விதை சட்டென முளைக்கும். ஆனால் ஒரு நாளில் அது வாடி வதங்கிவிடும். இவர்களின் வியப்பு சட்டென்று தயக்கமாக மாறுகிறது. இந்தத் தயக்கத்தில் அவர்கள் மூன்று கேள்விகளை எழுப்புகின்றனர்: (அ) இவர் தச்சர் அல்லவா? (இயேசுவின் தொழில் - இங்கே 'டெக்னோன்' என்னும் கிரேக்க வார்த்தை 'கைவேலை செய்பவர்' என்ற பொருளையே தருகின்றது). ஆ. மரியாவின் மகன் தானே? (இயேசுவின் பிறப்பு - நாசரேத்தூர்காரர்கள் இயேசுவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பைப் பற்றி கேட்டிருக்கலாம். ஆகையால்தான், கணவன் துணையில்லாமல் மரியாளுக்குப் பிறந்த 'தவறான' குழந்தை என நையாண்டி செய்கின்றனர்). இ. இவரின் சகோதர, சகோதரிகள் நம்மோடு இல்லையா? (இயேசுவின் உறவினர்கள் - இங்கே சகோதர, சகோதரி என்பது உடன்பிறப்பைக் குறிக்கும் சொல்லாடல் அன்று. 'அதெல்ஃபோஸ்' என்ற கிரேக்கச் சொல்லாடல் நண்பர்கள், உறவினர்கள் என்ற பரந்த பொருளைக் கொண்டது. இதை வைத்து இயேசுவுக்கு நிறைய உடன்பிறந்தவர்கள் இருந்தார்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.)

இந்தத் தயக்கம் நம்பிக்கையின்மையாக உருவெடுக்கிறது. அவர்களின் நம்பிக்கையின்மையால் இயேசுவால் 'வல்ல செயல் எதையும் அங்கே செய்ய இயலவில்லை' எனப் பதிவு செய்கிறார் மாற்கு. ஆக, நம் நம்பிக்கையின்மை கடவுளின் கைகளையும் கட்டிப்போட்டுவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக இருக்கிறது.

இங்கே, நாசரேத்தூர் மக்களின் 'வியப்பு,' 'தயக்கம்,' மற்றும் 'நம்பிக்கையின்மை' தன் உடலில் தைத்த முள்ளாக இயேசுவுக்கு இருந்தாலும், அவர் தன் தந்தையின் அருள் தன்னோடு இருப்பதை உணர்ந்ததால் தொடர்ந்து சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பிக்கின்றார்.

'உடலில் தைத்த முள் போல' உணர்வு பவுலுக்கும், எசேக்கியேலுக்கும், இயேசுவுக்கும் இருந்ததுபோல நமக்கும் இன்று இருக்கிறது. ஆனால், இந்த உணர்வோடு சேர்ந்து கடவுளின் அருளும், அந்த அருள்தரும் மகிழ்வும் முன்னவர்களுக்கு இருந்தது என்பதை நாம் மறுக்க இயலாது.

இந்த இரட்டை உணர்வுகளோடு நம் வாழ்வை நாம் முன்நோக்கி நகர்த்துவது எப்படி? இன்றைய இறைவாக்கு வழிபாடே அதற்கான வழிமுறை களையும் நமக்குச் சொல்கிறது:

1. இருப்பை உறதி செய்வது - அதாவது, உடலில் தைத்த முள் ஒருபோதும் நம்மை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்வது. எப்படி? எசேக்கியேல் என்னதான் கிளர்ச்சி செய்யும், கலக வீட்டாருக்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் வன்கண்ணுடையோராய், கடின இதயத்தோடு, செவிசாய்க்காத வர்களாக இருந்தாலும், எசேக்கியேல் செய்ய வேண்டியதெல்லாம், 'தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளச் செய்வது.' அப்படியானால், அவர் ஓர் இறைவாக்கினர் போல வாழவும், பணி செய்யவும், இருப்பை உறுதி செய்யவும் வேண்டும். ஆக, எனக்கு உள்ளே இருக்கும் முள்ளோ, அல்லது எனக்கு வெளியே இருக்கும் தடையோ என் இருப்பை உறுதி செய்யுமாறு நான் அவற்றுக்கு என்னை விற்றுவிடக்கூடாது. ஆக, அவற்றைப் பொருட்படுத்தாமல் நான் என் பணியைச் செய்ய வேண்டும். என் வேலையை வாழ வேண்டும்.

2. அகமகிழ்வது - உள்ளுக்குள்ளே வலி இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எனக் கேட்கலாம். முள் உள்ளே இருப்பது போல அருள் உள்ளே இருப்பதும் நிச்சயம்தானே. அப்படியிருக்க, அந்த அருளை நினைத்து நாம் மகிழ்ச்சி அடையலாமே. தன் தந்தையின் சொத்துக்களை எல்லாம் அழித்த இளைய மகனுக்கு, தான் அந்நிய நாட்டில் பட்ட கஷ்டம் முள்போல குத்தியபோது, தன் தந்தையின் இருப்பை நினைத்துப்பார்த்து பிறந்தகம் புறப்படவில்லையா? முள் குத்திய அதே நேரத்தில்தானே அவன் தன் தந்தையின் பெருந்தன்மையையும் எண்ணிப்பார்த்தான். ஆக, அவன் முள்ளுக்காக வருந்தாமால், தந்தையின் பெருந்தன்மையில் மகிழ்ந்து இல்லம் விரைகிறான். ஆக, நம் மகிழ்வை நம்முள் இருக்கும் கடவுளின் அருளில் கண்டுகொள்வது.

3. முள்ளுக்கும் நன்மை செய்வது - தன் சொந்த ஊரார் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்தாக இயேசு யாரையும் சபிக்கவில்லை. அவர்கள் அப்படித்தான் என ஏற்றுக்கொள்கிறார். அங்கே உடல்நலமற்றிருந்தவர்களையும் குணமாக்குகிறார். ஆக, 'என்னைப் பார்த்து அவர்கள் வியக்கிறார்கள்! என் போதனையையும், என் அறிவையும் பாராட்டுகிறார்கள்' என்று அவர் குதிக்கவும் இல்லை. 'என்னைப் பற்றி தயக்கம் காட்டுகிறார்கள்' என்று அவர் வாடி வதங்கவும் இல்லை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல தன் இயல்பை மாற்றிக்கொள்ள மறுக்கின்றார் இயேசு.

முள்ளும் அருளும், வலுவின்மையும் அகமகிழ்வும் இணைந்தே இருக்கும் என்பதுதான் வாழ்வியல் எதார்த்தம். முள்ளோடும் அருளோடும், வலுவின்மையோடும் அகமகிழ்வோடும் இணைந்தே நகரட்டும் நம் நாள்கள். 'ஐயோ கால்ல முள் குத்திடுச்சு!' என்று யாரோ எங்கோ எழுப்பும் ஒலி இன்றும் நம் காதுகளில் விழத்தான் செய்கின்றன.


AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org