Get Adobe Flash player

பரிவின் பரிமாணங்கள்

 

அருட்பணி. இயேசு கருணாநிதி
22 ஜூலை 2018 ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு
I. எரேமியா 23:1-6 / II. எபேசியர் 2:13-18 / III. மாற்கு 6:30-34 /

'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள்ஒளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே, சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன், எங்கு எழுந்தருளுவது இனியே?'

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் வாசகங்களைப் படிக்கும்போது மேற்காணும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்தான் (திருவாசகம், எட்டாம் திருமுறை, பாடல் எண் 9) நினைவிற்கு வருகிறது. இந்தப் பாடலின் பொருளறிந்து, பின் இதன் பொருத்தத்தை அறிவோம்.

குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய பாலை நினைவுகூர்ந்து ஊட்டும் தாயைவிட பரிந்து, இரக்கம் காட்டி, பாவி எனது உடலை உருக்கி, உள் ஒளியை பெருக்கி, அழிவில்லாத மகிழ்ச்சி என்னும் தேனைப் பொழிந்து, எனக்கு வெளியே நான் தேடிய என் செல்வமே உன்னைத் தொடர்ந்து வந்து இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன் - என்னுள்ளே உன்னைக் கண்டேன். இனி நீ எங்கே எழுந்தருள்வாய்?

இங்கே இது சைவத்திருமுறையின் பாடல் அல்லது சிவனை நோக்கிய பாடல் என்ற குறுகிய பார்வையை நாம் விலக்கி, நம் தமிழ் மண்ணில் எழுந்த ஓர் ஆன்மீகப்பாடல் என்று நம் பார்வையை விரித்தால்தான் இதன் பொருளை நாம் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.

எப்படி? இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:30-34) இயேசு பணிக்கு அனுப்பிய சீடர்கள் அவரிடம் திரும்பி வருகின்றனர். திரும்பி வந்து தாங்கள் சொன்னது, செய்தது அனைத்தையும் இயேசுவிடம் ஒப்புவித்தபோது, 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்கிறார். இது இயேசுகாட்டும் பரிவின் முதல் பகுதி. அதாவது, வேலை, மக்கள், பணி, ஓட்டம், பேய், நோய் என்று இருந்தவர்கள்மேல் பரிவுகாட்டும் இயேசு அவர்களை ஓய்விற்கு அழைக்கின்றார். 

இந்த ஓய்வு எதற்காக? 'இவ்வளவு நாள் உண்பதற்குக் கூட நேரமில்லை. இனி உண்ணுங்கள்' என்று சொல்வதற்காகவா? இல்லை. இயேசு ஓய்விற்கு அனுப்பும் இடம் பாலைவனம். அவர் அவர்களை பழமுதிர்ச்சோலைக்கு  அனுப்பினால் அவர்கள் உடல் பெருகும். ஊட்டம் கிடைக்கும். ஆனால் பாலைவனத்தில் ஒன்றும் கிடைக்காது. அங்கே ஊன் (உடல்) உருகும். உள்ஒளி பெருகும். ஆக, மாணிக்கவாசகரின் இறைவன் அவருடைய 'ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, அழிவில்லாத ஆனந்தம் அருள்வதாக' பாடுகிறார். பாலைநிலத்தில் திருத்தூதர்கள் இந்த மூன்றையும் தான் பெற்றுக்கொள்கிறார்கள்:
(அ) அவர்களின் உடல் உருகும் - ஆக, உடலையும் கடந்த ஒன்று இருப்பதாக அவர்கள் கண்டுணர்வார்கள்,
(ஆ) உள் ஒளி பெருகும் - நம் உள்ளத்தில் இருக்கும் இயல்பாகவே அங்கே இருக்கிறது. அது எப்போது பெருகுகிறது என்றால், நாம் தனியாக அமர்ந்து நம்மையே ஆய்ந்து, 'நான் இது அல்ல. அது அல்ல' என்று ஒவ்வொரு அடையாளத்தைக் களையும்போது.
(இ) அழிவில்லாத ஆனந்தம் - திருத்தூதர்கள் தங்கள் பணி அனுபவத்தில் கண்ட அல்லது பெற்ற அனுபவங்கள் எல்லாம் அழியக்கூடியவை. ஒரு இடத்தில் நேர்முக அனுபவம் கிடைத்து, வேறிடத்தில் எதிர்மறை அனுபவம் கிடைத்தால், அல்லது ஒரு இடத்தில் மக்கள் தங்களை ஏற்றுக்கொள்ள, மற்றோர் இடத்தில் வெறுத்து விலக்கினால் மகிழ்ச்சி சட்டென மறைந்துவிடுகிறது. ஆனால் பாலை நிலத்தில் தனிமையில் கிடைக்கும் மகிழ்ச்சி அழிவில்லாதது. அது இடத்தையும், நேரத்தையும், நபரையும் சாராதது. மேலும் சீடர்கள் இதுவரை தங்கள் இறையனுபவத்தைத் தங்களுக்கு வெளியே தேடினார்கள். ஆனால் அவர்கள் கண்டுகொண்டது பாலைவனத்தின் தனிமையில்தான். 'உணவு எப்படி உடலுக்கோ, அப்படியே தனிமை ஆன்மாவுக்கு' என்கிறார் அரிஸ்டாட்டில். இவ்வாறாக, தனிமையில்தான் ஆன்மா உண்மையான இறைமையைக் கண்டுகொள்கிறது.

பரிவின் இரண்டாம் பகுதியாக, தம்மையும் தம் திருத்தூதர்களையும் பின்பற்றி கால்நடையாகவே கூட்டமாக ஓடி தங்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்த கூட்டத்தினரைப் பார்த்து அவர்கள் மேல் பரிவு கொண்டு அவர்களுக்குக் கற்பிக்கின்றார் இயேசு. இந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தாலே நமக்கு ஆச்சர்யம் மேலோங்குகிறது. பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், குழந்தைகள், கண்பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் என எத்தனைபேர் ஓடியிருப்பர் அந்தப் பாலைவனத்தில்? சிகப்பு கலர் சேலை, மஞ்சள் கலர் பிளவுஸ் அணிந்து ஒரு பெண், ஒழுங்காக தலையைக் கூட சீவாமல், தலைக்கு எண்ணெய் வார்க்காமல், கால்களில் செருப்புகள் அணியாமல், ஒரு வாரமாக சளி பிடித்து, காய்ச்சல் அடித்து, மூக்கொழுகும் மேல்சட்டை அணியாத தன் இரண்டு வயது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு, அந்தக் கூட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இயேசுவைக் காண ஓடியிருப்பாள்? அன்றைக்கு அவள் வேலை செய்தால்தான் அவள் வீட்டில் அடுப்பெரியும். அந்த வேலையை விட்டுவிட்டு அவளால் எந்த நம்பிக்கையோடு ஓட முடிந்தது இயேசுவைத் தேடி? அவள்வரும் வரை அவள்வீட்டு நாய்க்குட்டிக்கு யார் சோறு வைப்பார்கள்? கோழிக்குஞ்சுளை யார் கூட்டில் அடைப்பார்கள்? அப்படி என்ன அவசரம் அவளுக்கு? எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓட அவளால் எப்படி முடிந்தது? - இவள் ஒருத்திபோல் எண்ணற்றோர் இயேசுவைத்தேடி அந்த மாலை வேளையில் சென்றனர். ஓய்வுக்காகச் சென்ற இயேசு இவர்களைப் பார்த்தவுடன் எரிச்சல்படவில்லை. 'என் தனிமையைக் கெடுக்கிறீர்களே!' என்று எரிந்துவிழவில்லை. அவர்களைத் தொந்தரவாகப் பார்க்கவில்லை. மாறாக, அவர்கள்மேல் பரிவு கொள்கின்றார். அதாவது, அவர்களைப் பார்த்தவுடன் மேற்காணும் அனைத்தையும் தன் மனதில் நொடியில் ஓடவிடும் இயேசுவாக இருந்தால்தான் பரிவு காட்ட முடியும். தான் தன் குழந்தையைத் தனக்குத் தொந்தரவாக நினைப்பதில்லை. குழந்தையின் இயலாமை தாய்க்கு எரிச்சல் மூட்டுவ தில்லை. அவளின் உள்ளத்தில் பரிவை மட்டுமே அது எழுப்புகிறது. ஆகையால்தான், இயேசு தாயினும் சாலப் பரிந்தவராக இருக்கிறார்.

இவ்வாறாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பரிவு இரண்டு பரிமாணங்களில் வெளிப்படுகிறது:
அ. தன் சீடர்களுக்கு ஓய்வு
ஆ. தன்னைத் தேடிவந்த மக்களுக்கு போதனை

பரிவின் இன்னும் இரண்டு பரிமாணங்களை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் சொல்கின்றன. இன்றைய முதல் வாசகத் தில் (காண். எரே 23:1-6) 'மேய்ப்பர்களுக்கு எதிராக' இறைவாக்குரைக்கின்றார் எரேமியா. இங்கே 'மேய்ப்பர்கள்' என்பவர்கள் இஸ்ரயேலின் 'இறைவாக்கினர்கள்' அல்லது 'அரசர்களை' குறிக்கிறது. இதுவரை இருந்த இஸ்ரயேலின் அரசர்கள்மேல் இறைவன் இரண்டு குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார்: (அ) அவர்கள் மந்தையைச் சிதறடித்தார்கள், (ஆ) அவர்கள் மந்தையின்மேல் அக்கறைகாட்டவில்லை. இவ்வாறாகச் சிதறடிக்கப்பட்ட மந்தை திகில் மற்றும் அச்சம் கொண்டு காணாமல் போயின. இதற்கு மாறாக, தாவீதின் தலைமுறையில் 'தளிர்' ஒன்றை உருவாக்குவேன் என்கிறார் ஆண்டவர். இந்தத் தளிர் உடனடியாக 'செதேக்கியா' ('யாவே நீதியானவர்') என்ற அரசனைக் குறித்தாலும், மெசியாவிற்கான முன்னறிவிப்பாக இந்த இறைவாக்கு திகழ்கிறது. இறுதியில், 'யாவே சித்கேணூ' ('ஆண்டவரே நம் நீதி') என்ற பெயரால் நகர் அழைக்கப்படும். இன்றைய முதல் வாசகம் சொல்லும் பரிவின் மூன்றாம் பரிமாணம் நீதி. அரசனுக்குரியதை மக்கள் அரசனுக்குக் கொடுக்கிறார்கள் என்றால், மக்களுக்குரியதை அரசன் கொடுக்க வேண்டும். தங்கள் ஊதியத்தை வரியாக அரசனுக்குக் கொடுக்கிறார்கள் என்றால், அந்த வரியை வைத்து அரசன் மக்களின் நல்வாழ்விற்கானதைச் செய்ய வேண்டும். அதைவிட்டு, அவர்களை அச்சுறுத்தவோ, அவர்களைச் சிதறடிக்கவோ அவன் செய்தால் அது நீதி அல்ல.

பரிவின் நான்காம் குணம் 'இணைப்பது.' பரிவு காட்டும் மனம் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபே 2:13-18) நமக்குச் சொல்கிறது. யூதர்கள்-புறவினத்தார்கள், கடவுளுக்கு நெருக்கமானவர்கள்-கடவுளைவிட்டு த் தூரமானவர்கள் என இரண்டு இனமாக சிதறுண்டு கிடந்தவர்கள் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்று கடவுளின் இரக்கத்தை அல்லது பரிவை 'இணைப்பாக' வெளிப்படுத்துகின்றார் பவுல்.

ஆக, இறைவனின் பரிவு
அ. திருத்தூதர்களுக்கு ஓய்வு
ஆ. மக்களுக்குப் போதனை
இ. சிதறடிக்கப்பட்ட மந்தைக்கு நீதி
ஈ. அந்நியப்படுத்தப்பட்ட புறவினத்தாருக்கு இணைப்பு

என்ற நான்கு பரிமாணங்களாக இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் வெளிப்படுகிறது. இந்த நான்கு பரிமாணங்களையும் நாம் நம் வாழ்க்கைக்கு எப்படி பொருத்திப் பார்ப்பது?

அ. ஓய்வு என்னும் பரிவு - ஓய்வு என்பது நான் எனக்குக் காட்டும் பரிவு.
(அ) திருத்தூதர்கள் இயேசுவிடம் திரும்பி வருகின்றனர், (ஆ) பாலைவனத்திற்குச் செல்கின்றனர், (இ) தனிமையை அனுபவிக்கின்றனர். ஆக, மக்களோடும் மக்கள் சார்ந்தவற்றோடும் இருந்தவர்கள் இறைவனை நோக்கித் திரும்புகின்றனர். இது ஓய்வின் முதற்படி. இரண்டு, இவர்கள் பாலைவனம் செல்கின்றனர். பாலைவனம் என்பது வெறுமையின், இல்லாமையின் அடையாளம். அதாவது, 'எங்களால் எல்லாம் முடியும்!' 'எங்களால் தீய ஆவிகளை விரட்ட முடியும்,' 'எங்களால் நோய்களைக் குணமாக்க முடியும்' என்று தங்கள் வெற்றிகளால் நிரம்பி வழிந்தவர்களை வெறுமையாக்க அனுப்புகின்றார் இயேசு. பாலைவனத்தில் அவர்களால் எதுவும் 'முடியாது' என்ற நிலையில் அவர்கள் தங்கள் இயலாமையை, இல்லாமையை உணர்வார்கள். மேலும், அந்தத் தனிமையில் அவர்கள் தங்களோடு உறவாடுவார்கள். இன்று நம்மிடம குறைந்துவருவது ஓய்வு. ஆகையால்தான், நாம் இறைவனிடம் திரும்பிவருவதில்லை. பாலைநிலத்தை உணர்வதில்லை. நம் தனிமையைக் கொண்டாடுவதில்லை. இது எப்போது சாத்தியம்? ஓய்வு என்ற ஒன்று இருக்கும்போது. இன்று நேரத்தை மிச்சமாக்க நாம் நிறைய கண்டுபிடித்துவிட்டோம். இருந்தாலும் நமக்கு நேரம் போதவில்லை. இன்றைய ஊடகமும், தகவல் தொழில்நுட்பமும் நம்மை நிறைத்துக்கொண்டு, 'அடுத்து இது,' 'அடுத்து அது' என்று பரபரப்பாக ஓடவைத்துக்கொண்டே இருக்கின்றன. ஓய்வு என்பது வேலையற்ற நிலை அல்ல. மாறாக, அது வேலைகள் ஒருங்கிணைக்கப்பட்ட, இறைவனிடம் ஒப்புவிக்கப்பட்ட நிலை. தூங்கும்வரை ஃபோன், தூங்கும்போதும் ஃபோன், தூங்கி எழுந்ததும் ஃபோன் என்று நம் தனிமையை ஃபோனுக்கும் அதன் செயலிகளுக்கும் விற்றுவிடுவதைத் தவிப்பது ஓய்விற்கான ஒரு வழி. பிறருக்கு நாம் பரிவு காட்டுவதை விட எனக்கு நானே முதலில் ஓய்வு என்னும் பரிவைக் காட்ட வேண்டும். இப்படிக் காட்டியதால்தான் நல்ல சமாரியனால் கள்வர் கையில் அகப்பட்டவனுக்கு உதவி செய்ய முடிந்தது. 'என் வேலை, என் பணம், என் முதலீடு, என் இலாபம்' என அவன் ஓடினால் அவனால் மற்றவருக்குப் பரிவுகாட்ட முடியாது. இந்த ஓய்வில்தான் நான் என்னுடைய ரம்பத்தைக் கூர்மையாக்க முடியும்.

ஆ. கற்பித்தல் என்னும் பரிவு - தன்னைத் தேடி ஓடி வந்தவர்களுக்கு அப்படியே உணவு கொடுத்து, உபசரித்து, நோய் நீக்கி திருப்பி அனுப்பி விடவில்லை இயேசு. மாறாக, அவர்களுக்குக் கற்பிக்கிறார். உணவு, நோய், உடல்நலம் ஆகியவற்றையும் கடந்து உள்ளத்திற்கு ஊட்டம் தருகின்றார். அன்றைய மக்களுக்கு உணவைவிட நல்ல போதனைதான் தேவைப்பட்டது. இன்று நான் மற்றவர்களுக்குக் கற்பிக்கின் றேனா? இன்று நாம் கற்றலைச் சுருக்கிவிட்டோம். 'எல்லாம் சரி. ஒவ்வொருவருக்கும் ஒரு அறநெறி' என்ற நிலைக்கு நாம் கடந்து போவதால் நாம் செய்யும் அனைத்திற்கும் காரணம் கண்டுபிடிக்கிறோம். இன்று ஒருவர் மற்றவருக்குக் கற்பிக்கத் தயங்குகிறோம். அல்லது தவறானவற்றைக் கற்பிக்கிறோம். இன்றைய சமூகம் 'பணம்' என்ற ஒற்றைச் சொல்லைத்தான் கற்பிக்கிறது. வசிக்க வீடு, பேச ஃபோன், போக கார், வங்கியில் சேமிப்பு, ஓட்டல், பெட்ரோல் என பணம் என்ற ஒன்றைச் சுற்றியே நம்மை ஓடவைக்கிறது. 'எப்படியாவது பணத்தைச் சேர்த்துக்கொள்' என்பதுதான் இன்றைய அரசும், ஆட்சியாளர்களும் நமக்குக் கற்பிக்கும் பாடமாக இருக்கிறது. தம்மைத் தேடி வந்த மக்களுக்கு இயேசு 'பலவற்றைக் கற்பித்தார்' எனப் பதிவுசெய்கிறார் மாற்கு. அவை எவை என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், தன்னிடம் எழுந்த பரிவு என்னும் உணர்வால் இயேசு உந்தப்பட்டதால், ஆயனில்லா அவர்கள் நிலையை அறிந்ததால் அழியா மகிழ்ச்சி பற்றியே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார். ஆக, இன்று நான் நல்லதைக் கற்க வேண்டும். கற்பிக்க வேண்டும்.

இ. நீதி என்னும் பரிவு - அவரவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுப்பது என்பது 'நீதி' என்னும் சொல்லாடலின் பொருள். இஸ்ரயேலின் மேய்ப்பர்கள் மந்தைக்கு உரியதை மந்தைக்குக் கொடுக்காமல் தங்களுக்கே கொடுத்துக்கொண்டனர். தங்களைப் பராமரித்துக்கொண்டு மந்தையைச் சிதறடித்தனர். தாங்கள் உண்டுகொழுத்து மந்தையைப் பட்டினிபோட்டனர். இவ்வாறாக, நீதிக்குப் பதிலாக அநீதியைத் தழுவிக்கொண்டார்கள். நீதி உள்ளம் கொண்டவரால்தான் பரிவு காட்ட முடியும். கள்வர் கையில் அகப்பட்டவன் குற்றுயிராய்க் கிடந்த போது, அவனுக்கு உரிய பொருளும், உயிரும் மறுக்கப்பட்டபோது அதை அவனுக்கே வழங்க முற்படுகின்றான் நல்ல சமாரியன். அவனிட மிருந்தே நீதி என்னும் உணர்வு அவனைப் பரிவிற்கு அழைக்கிறது. தன் சொத்தை தன்னிடமிருந்து பிரித்து, வெளியூர் சென்று ஊதாரித் தனமாக செலவழித்து, தன் இல்லத்திற்கு வெறுமையாக வந்தாலும், மகனுக்கு உரியதை மகனுக்கே வழங்க முற்படுகின்றார் தந்தை. இந்தப் பரிவின் பின்புலத்தில் இருப்பது நீதி. ஆக, நம் வீடுகளில் பிள்ளைகளுக்கு உரியதை பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கு உரியதை பெற்றோருக்கும் அவரவருக்கு உரியதை அவரவருக்கும் கொடுக்கும்போது நீதியும், பரிவும் கரம்கோர்க்கின்றன.

ஈ. இணைப்பு என்னும் பரிவு -  யூதர்கள் தேர்ந்துகொள்ளப்பட்ட இனம் என்றும், புறவினத்தார் ஒதுக்கப்பட்ட இனம் என்ற எண்ணத்தில் யூதர்களுக்கும் புறவினத்தாருக்கும், புறவினத்தாருக்கும், கடவுளுக்கும் இடையே இருந்த சுவற்றை உடைக்கின்றார் இயேசு. ஆக, பரிவில் இணைப்பு நிகழ்கிறது. நல்ல சமாரியன் நிகழ்விலும், ஊதாரி மகன் நிகழ்விலும், காயப்பட்டவரும், மகனும் முறையே தங்கள் சமூகத் தோடும், தங்கள் குடும்பத்தோடும் இணைக்கப்படுகின்றனர். பரிவு இல்லாத இடத்தில் பகைமையும், விரிசலும் இருக்கும். ஏனெனில் அங்கே ஒருவர் மற்றவருக்கான வேற்றுமை மட்டுமே பார்க்கப்படும், பாராட்டப்படும். ஆனால், பரிவில் ஒருவர் மற்றவர் தங்களுக்கிடையேயான ஒற்றுமைகளை மட்டுமே பார்ப்பர்.

இறுதியாக, 'தாயினும் சாலப் பரியும்' இறைவனின் பரிவுள்ளம் ஓய்வு, கற்பித்தல், நீதி, மற்றும் இணைப்பு என தன்னையே விரித்துக்காட்டுகிறது. இன்றைய நம் ஓட்டத்தையும், போட்டியையும், போராட்டங்களையும் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு நான் என்னோடும், நான் ஒருவர் மற்றவரோடும் பரிவு காட்டப் பழகினால் நலம். வேகம் குறைத்தலும், வேகமாய் ஓடிவருவோரை ஆற்றுப்படுத்துவதும், வேகமாய் சிதறடிக்கப்படுவோரைக் கூட்டிச் சேர்ப்பதும் பரிவு.

தொடர்புக்கு : பணி. இயேசு கருணாநிதி, தூய பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி - 620 001, 9489482121 மின்னஞ்சல் : Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser.

நினைவஞ்சலி : "நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்" நூல் வெளியீடு - 1918ம் ஆண்டு, ஜூலை 18ம் தேதி பிறந்த நெல்சன் மண்டேலா அவர்கள் பிறந்தநாளின் முதல் நூற்றாண்டு, ஜூலை 18 இப்புதனன்று சிறப்பிக்கப்படும் வேளையில், "நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்" என்று நூல் வெளியானது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் Liveright அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில், நெல்சன் மண்டேலா அவர்கள் சிறையில் எழுதி, இதுவரை வெளிவராத 255 கடிதங்கள் இடம்பெற்றுள்ளன என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. 1962ம் ஆண்டு தன் 44வது வயதில் தென் ஆப்ரிக்க அரசால் கைது செய்யப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள், அடுத்த 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையில் இருந்த 10,052 நாட்கள், சிறை அதிகாரிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கு, மற்றும், குறிப்பாக, தன் மனைவி, வின்னி மண்டேலா அவர்களுக்கும், தனது பிள்ளைகளுக்கும் எழுதிய கடிதங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. Sahm Venter என்பவரால் மிக கவனமாகத் தொகுக்கப்பட்டுள்ள இக்கடிதங்கள் அடங்கிய நூலுக்கு, நெல்சன் மண்டேலா அவர்களின் பேத்தி, Zamaswazi Dlamini-Mandela அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். தென் ஆப்ரிக்கா, நிறைவேறியிலிருந்து விடுதலை யாகி, ஒரு குடியரசாக உருவாக காரணமாகவும், பின்னர் அந்நாட்டின் அரசுத்தலைவராகவும் விளங்கிய நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டன.

விவிலியம் : புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 2 - யோவான் நற்செய்தி 9ம் பிரிவில், கூறப்பட்டுள்ள புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் அந்த புதுமை, ஒரு நிகழ்வாக மட்டும் அல்ல, மாறாக, ஓர் இறையியல் பாடமாகவே தரப்பட்டுள்ளது என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களின் துவக்கமாக, இன்றையத் தேடலில், துன்பத்தைப்பற்றி சிந்திக்க முயல்வோம்.

இயேசுவும் சீடர்களும் நடந்து செல்லும்போது, பார்வையற்ற ஒரு மனிதரைப் பார்க்கின்றனர். அவரைக் கண்டதும், சீடர்களின் உள்ளங்களில் "ஐயோ, பாவம்" என்ற பரிதாப உணர்வு எழுந்திருக்கலாம். அந்தப் பரிதாப உணர்வு மட்டும் அவர்களை வழிநடத்தியிருந் தால், அவர்கள் இயேசுவிடம் சென்று, "ரபி, பார்வையற்ற அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவர் நலமடைய ஏதாவது செய்யுங்கள்" என்ற விண்ணப்பம் அவர்களிடம் எழுந்திருக்கும். ஆனால், சீடர்களிடம் உருவான 'பாவம்' என்ற பரிதாப உணர்வு, யாரோ செய்த 'பாவம்' என்ற மற்றொரு எண்ணத்தையும் அவர்கள் உள்ளத்தில் விதைத்தது. எனவே, அவர்கள் இயேசுவிடம் விண்ணப்பம் எழுப்புவதற்குப் பதில் ஒரு கேள்வியை எழுப்புகின்றனர். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” - யோவான் 9:2 என்று சீடர்கள் எழுப்பும் இக்கேள்வி, மனிதர்களாகிய நம்மை வாட்டியெடுக்கும் சில முக்கிய மான ஐயங்களை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.

நாமோ, நம்மைச் சார்ந்தவர்களோ, உடலளவிலும், மனதளவிலும் துன்பங்களைச் சந்திக்கும் வேளையில், அத்துன்பங்களுக்குக் காரணங்கள் தேடுகிறோம். அதேபோல், இவ்வுலகில் நடைபெறும் பல கொடுமைகளும் நம்மை கேள்விகளால் நிறைக்கின்றன. துன்பம் ஏன்? அதிலும், மாசற்றவர்கள் துன்புறுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு, தெளிவான, முழுமையான பதில்கள் கிடைக்குமா என்று தெரிய வில்லை. ஆயினும், துன்பம் பற்றியத் தேடலில் ஈடுபடுவது, ஓரளவு உதவியாக இருக்கும்.

துன்பத்தை இரு வகையாகப் பார்க்கலாம். காரணம் உள்ள துன்பங்கள், காரணமற்ற துன்பங்கள். ஓர் எடுத்துக்காட்டின் வழியே இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முயல்வோம். ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி, ஒரு மரத்தின் மீது மோதி அடிபடுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த விபத்திற்கும், அதனால் அவருக்கு உண்டான துன்பத்திற்கும் அவரே காரணம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே விபத்தை, சற்று வித்தியாசமாக சிந்தித்துப் பார்ப்போம். குடிபோதையில் வாகனம் ஓட்டிய அம்மனிதர், மரத்தில் மோதுவதற்கு பதில், சாலையோரம், நடந்து கொண்டிருந்த ஒருவர் மீது மோதி, அவர் கீழே விழுந்து அடிபட்டால், அவர் அடைந்த துன்பத்துக்கு அவ்வளவு எளிதில் காரணம் கிடைக்காது. அவர் அந்த நேரத்தில், அந்த இடத்தில் இருந்தார் என்பது காரணமாகி விடுமா? ஆனால், "அவர் ஏன் அந்த நேரத்தில் அங்கே இருந்தார்?" என்று கேட்பவர்களும் உண்டு. அல்லது, ஏதோ பெரிய விளக்கம் சொல்வது போல், "அவருக்கு அந்த நேரத்தில் அப்படி நடக்கணும்னு இருந்தது" என்று சொல்பவர்களும் உண்டு.

தெளிவான காரணம் ஏதுமின்றி, நம்மை வந்தடையும் துன்பங்களுக்கு, இப்படி எதையாவது சொல்ல முற்படுகிறோம். முன்வினைப் பயன் என்று சொல்கிறோம். நம்மைச் சோதிக்கக் கடவுள் அனுப்பிய துன்பம் என்கிறோம். அல்லது இயேசுவின் சீடர்கள் சொன்னது போல், நம் முன்னோர் செய்த குற்றம் என்கிறோம். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று சீடர்கள் எழுப்பிய இக்கேள்வியில், இரு பகுதிகள் உள்ளன. 'இவர் பெற்றோர் செய்த பாவமா?' என்று சீடர்கள் கேட்கும் கேள்வியில் பொதிந்திருக்கும் கருத்தை, சற்று எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, பெற்றோர் அல்லது முன்னோர் செய்த தவறுகள், அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் என்பதை, அறிவியல் வழியாகவும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

எடுத்துக்காட்டாக, குழந்தை கருவில் வளரும் வேளையில், குழந்தையின் தாய், சிகரெட், மது, போதைப்பொருள் ஆகியவற்றைப் பயன் படுத்தி வந்தால், கருவில் வளரும் குழந்தை பல பாதிப்புக்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். உடலளவில் அல்லது அறிவுத்திறனில் பாதிக்கப்பட்ட குழந்தையாக பிறக்கக்கூடும்.

கருவுற்றிருக்கும் தாய், கணவனாலோ, மற்றவர்களாலோ, உடலளவில் கொடுமைப்படுத்தப்பட்டால், கருவில் உள்ள குழந்தை அந்த பாதிப்புக்களைத் தாங்கவேண்டியிருக்கும். கருவில் வளரும் குழந்தைக்கு, செவித்திறன் முதலில் உருவாவதால், கருவுற்றிருக்கும் தாய், கணவனாலும் மற்றவர்களாலும் வசைமொழிகளைக் கேட்கவேண்டியிருந்தால், அவை, அக்குழந்தையைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில், பார்வைக்குறைவுடன் பிறக்கும் குழந்தைகள் அதிகம். இதற்கு ஒரு முக்கிய காரணம், குழந்தைகளை கருவில் சுமந்திருக்கும் பல அன்னையர், தகுந்த உணவு உண்ண வழியின்றி இருப்பது. மேலும், இந்த அன்னையர், குழந்தையைப் பெற்றெடுக்கும் நாள் வரை உழைக்கும் கட்டாயத்தில் இருப்பது. இவ்வாறு உழைக்கவேண்டியுள்ள பெண்கள், வயல் வெளிகளில், தொழில்கூடங்களில், உழைத்துக்கொண்டிருக்கும் வேளையில், பிரசவ வலி உண்டாகி, பணியிடங்களிலேயே குழந்தையைப் பெற்றெடுப்ப தையும், அல்லது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பேருந்துகளில் குழந்தையைப் பெற்றெடுப்பதையும் செய்திகளாக அடிக்கடி கேட்கிறோம்.

ஊட்டச்சத்து குறைவு, இறுதி நேரம் வரை உழைக்கும் கட்டாயம் போன்ற கொடுமைகளுக்கு அன்னையர் உள்ளாகும்போது, கருவில் வளரும் குழந்தை பாதிக்கப்படுகின்றது. குழந்தையின் உறுப்புக்களிலேயே மிகவும் மென்மையான, வலுவற்ற உறுப்பு, அதன் கண்கள். எனவே, கருவுற்ற அன்னைக்கு ஏற்படும் எந்த ஒரு குறைவும், குழந்தையின் கண்களை முதலில் பாதிக்கின்றது. எனவே, வறுமைச் சூழலில் வாழும் அன்னையர், பார்வைக்குறைவுள்ள குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நிலை உருவாகிறது.

இவ்வாறு, பெற்றோரும், முன்னோரும், சமுதாயமும் செய்யும் தவறுகள், கருவில் வளரும் குழந்தையைப் பாதிக்கும் என்பதை அறிவியல் வழியாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சீடர்களின் கேள்வியில் இருந்த "பெற்றோர் செய்த பாவமா?" என்ற பகுதிக்கு, ஓரளவு தெளிவான பதில்களை நம்மால் தர முடிகிறது. ஆனால், சீடர்களின் கேள்வியில் இருந்த, "இவர் செய்த பாவமா?" என்ற மற்றொரு பகுதி, வேறு வகையான எண்ணங்களை முன்வைக்கின்றன.

பெற்றோரோ, முன்னோரோ தவறுகள் ஏதும் செய்யாதபோதும், குழந்தைகள் குறையுடன் பிறந்தால், அதற்கு, இந்தியா போன்ற நாடுகளில், முந்தைய பிறவியில் செய்த வினைகளின் விளைவு என்ற முடிவு எடுக்கப்படுகிறது. பிறவியிலேயே பார்வையற்று பிறந்த மனிதரைப் பார்க்கும் சீடர்கள், "இவர் செய்த பாவமா?" என்று கேட்கும்போது, அவர் முந்திய பிறவியில் செய்த பாவமா என்று அவர்கள் கேட்பதுபோல் தோன்றுகிறது.

யூதர்கள் நடுவே முந்தைய பிறவி அல்லது மறுபிறவி ஆகிய எண்ணங்கள் இல்லையெனினும், கிரேக்க கலாச்சாரத்தில், குறிப்பாக, சாக்ரடீஸ், பிளேட்டோ ஆகியோரின் கூற்றுகளில் இந்த எண்ணங்கள் கூறப்பட்டிருப்பதால், அவ்வெண்ணங்கள் யூதர்கள் நடுவிலும், சீடர்கள் மத்தியிலும் பேச்சுவழக்கில் வலம் வந்திருக்கக்கூடும் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

வாழ்வில் வரும் இன்பமும் துன்பமும் நம்மில் கேள்விகளாக மாறுவதை, கண்ணதாசன் அவர்கள், ஒரு திரைப்பட பாடலில் இவ்வாறு கூறியுள்ளார்: "ஏன் என்ற கேள்வி ஒன்று, என்றைக்கும் தங்கும். மனித இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்." இன்பம் வரும்போது, அதிகமான கேள்விகள் எழுவதில்லை. எதிர்பாராத மகிழ்ச்சி நம்மை திக்கு முக்காட வைக்கும்போது, ஒரு சில கேள்விகள் எழும். ஆனால், துன்பங்கள் வரும்போது, அவை, தம்முடன், கேள்விகளை, கூட்டமாய் சேர்த்துக் கொண்டுவரும். காரணத்தோடு வரும் துன்பம், அறிந்து வரும் துன்பம் இவற்றைத் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும். அறியாமல் வரும், காரணம் இல்லாமல் வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வது கடினம்.

வாழ்வில் வரும் துன்பங்களை, உடலில் படும் அடிகளோடு ஒப்புமைப்படுத்தி, சிந்தித்துப் பார்க்கலாம். உடலில் படும் அடிகளில் ஒரு சில, நாம் எதிர்பாக்கும் இடத்திலிருந்து, எதிர்பார்க்கும் நேரத்தில் வரும். இந்த அடிகளை நாம் எதிர்பார்ப்பதால், அந்த அடிகள் விழும் இடங்களில் உள்ள தசைகள் ஏற்கனவே அந்த அடியைத் தாங்கிக் கொள்ளும் வகையில் தயாராகிவிடும். குத்துச் சண்டை பயிற்சியில், சில நேரங்களில், உடலில் ஒரு சில பகுதிகளில், யாரையாவது குத்தச் சொல்லி, அவற்றைத் தாங்கிக்கொள்ள பழகிக்கொள்கிறோம், அல்லவா? எதிர்பார்க்கும் அடிகளுக்கு உடல் தயாராகி விடுகிறது.

எதிர்பாராமல் விழும் அடிகள், நம்மை நிலைகுலையச் செய்கின்றன. நாம் ஏதோ ஒரு நினைவில் நடந்து போய்கொண்டிருக்கும்போது, பின்னிருந்து ஒருவர் முற்றிலும் எதிபாராத நேரத்தில் முதுகில் அடித்தால், அந்த அடி, சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். காரணம், அந்த அடிக்கு உடல் தயாராக இல்லை. அதேபோல், எதிர்பார்க்கும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள மனம் தயாராகி விடுகிறது. தேர்வு சரியாக எழுதவில்லை என்று தெரிந்தால், அடுத்த வாரம் வரப்போகும் முடிவுகள் சரியாக இருக்காது என்று என் மனம் தயாராகி இருக்கும்.

எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத வடிவங்களில் வரும் துன்பங்கள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. கேள்விகளை எழுப்புகின்றன. துன்பங்களைக் குறித்து நாம் எழுப்பும் கேள்விகளுக்கு, ஓரளவு தெளிவைத் தருகிறார், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள். இவர், 1981ம் ஆண்டு எழுதிய புகழ்பெற்ற ஒரு நூல், When Bad Things Happen to Good People. “நல்லவர்களுக்கு பொல்லாதவை நடைபெறும்போது” என்ற இந்த நூல், வாழ்வில் நாம் சந்திக்கும் பல வகை துன்பங்களை ஆராய்கிறது. இந்நூலில் குஷ்னர் அவர்கள் கூறியிருக்கும் கருத்துக்களை நாம் அடுத்தத் தேடலில் அசைபோட முயல்வோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org