Get Adobe Flash player

எல்லார்க்குள்ளும், எல்லார் வழியாகவும் இறைவன்

ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி

29 ஜூலை 2018 ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

 I. 2 அரசர்கள் 4:42-44 II. எபேசியர் 4:1-6III. யோவான் 6:1-15

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து இப்போதுதான் சூடு ஆறியுள்ளது. போட்டிகள் நடந்து முடிந்த இரண்டு நாள்களில் தினமணி இணையதள வலைப்பூவில் கட்டுரை ஒன்று வந்தது. கட்டுரையின் தலைப்பு, 'வாய்ப்பு நம்மைத் தவறவிட்டால் அது துரதிர்ஷ்டம். வாய்ப்பை நாம் தவறவிட்டால் ... திமிர்.' கட்டுரை குரோஷிய அணியின் முன்னணி வீரர் நிக்கோலா காலிநிக் அவர்களைப் பற்றியது. இவர் குரோஷிய அணியின் மிகச் சிறந்த வீரர். குரோஷிய அணி தனது முதல் ஆட்டத்தில் நைஜீரிய அணியை சந்தித்தது. அந்த ஆட்டத்தில் நிக்கோலா காலிநிக் முதலில் களமிறக்கப்படவில்லை. ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களே இருக்கும்போது, குரோஷிய பயிற்சியாளர் நிக்கோலா காலிநிக்கை மாற்று வீரராக களமிறங்கும்படி கேட்டுக்கொண்டார். முதலிலிலேயே தன்னை களமிறக்காமல்போனது தனக்கு நேர்ந்த அவமானமாக நினைத்தார் காலிநிக். அதனால் களமிறங்க மறுத்துவிட்டார்.


அது ஒழுங்கீனமான செயல். பிரச்சினை அத்தோடு முடியவில்லை. காலிநிக் செய்த இந்த தவறுக்காக அவர் பயிற்சியாளரிடம் 'மன்னிப்பு கேட்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது. அதற்கும் காலிநிக் உடன்படவில்லை. தொடர்ந்து அவர்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கிருந்து புறப்பட்ட காலிநிக் விடுமுறையை அனுபவிக்க சென்றுவிட்டார். குரோஷியாவைப் பொறுத்தவரையில் இந்த உலகக் கோப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த நாடு இறுதிப்போட்டிவரை முன்னேறியது. இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை பதித்தது. இதில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் வரலாற்றில் தங்கள் பெயரைப் பதிவுசெய்துவிட்டனர். காலிநிக் அந்தப் பட்டியிலில் இல்லை. காலிநிக் இப்படி ஒரு முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருந்தது அவருடைய ஈகோ. அதனால் விளைந்த கோபம்.

நிற்க.

கால்பந்து விளையாட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்;த குரோஷிய அணியின் பயிற்சியாளர் தங்கள் அணியின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்ன ஒற்றை வார்த்தை இதுதான்: 'சினர்ஜி.' அதாவது, விளையாடிய 11 பேரும் சேர்ந்து விளையாடியதால், அந்த 11 பேருக்கு பக்கபலமாக 5 மாற்று வீரர்களும், அவர்களுக்கு உறுதுணையாக உடன் பயிற்சியாளர்களும், அவர்களுக்கு உறுதுணையாக நாட்டின் தலைவர்களும் இருந்ததால் இந்த வெற்றி உறுதியானது என்கிறார். ஆக, விளையாடிய நபர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், நாட்டுத்  தலைவர்கள் என தனித்தனியே பிரித்துப் பார்த்தால் யாருக்கும் ஆற்றல் இல்லை. ஆனால், இவர்கள் எல்லாரும் சேர்ந்து வரும்போது இவர்களின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகிறது. இதுதான் 'சினர்ஜி' ('ஒருங்கியக்கம்,' 'ஒழுங்கியக்கம்,' 'கூட்டாற்றல்') என்பதன் பொருள். இந்த 'சினர்ஜி' விளையாட்டின் வெற்றிக்கு மட்டுமல்ல. மாறாக, வாழ்வின் வெற்றிக்குமான ஒரு முக்கியமான ஃபார்முலா.

'சினர்ஜி' என்ற இந்த வார்த்தையை தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல் 8:28ல் நாம் வாசிக்கின்றோம்: 'மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் 'ஒருங்கியக்கம்' செய்கிறார் என்பது நமக்குத் தெரியும்.' அதாவது, ஒருவர் கடவுளிடம் அன்புகூர்ந்தால், அவர் கடவுளால் அழைக்கப்பட்டவராக இருந்தால் இந்த பிரபஞ்சமே அவர் நன்மைக்காக செயலாற்றுமாம். அதாவது, எல்லாமே அவருக்கு நன்மையாகவே மாறும். இப்படியாக எல்லாவற்றையும் அவருக்குச் சாதகமாக மாற்றுவது தூய ஆவியார் என்கிறார் பவுல்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையக்கருத்தும், இன்றைய நம் மறையுரைப் பொருளும் இதுவே:

'இறைவனே எல்லார் மூலமாகவும், எல்லாருடைய நன்மைக்காகவும் ஒருங்கியக்கம் செய்கிறார்.'

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:1-6) கிறிஸ்தவின் உடலில் உள்ள ஒற்றுமை என்ற மையக்கருத்தில் ஒற்றுமை பற்றி அறிவுறுத்தும் பவுல், 'எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே' என்றும், 'அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர், எல்லாருக்குள்ளும் இருப்பவர்' என்றும் சொல்கிறார்.

ஒரு சின்ன உருவகத்தை எடுத்துக்கொள்வோம். என் அலைபேசி அடிக்கிறது. ஒரு புதிய எண் திரையில் மின்னி மறைகிறது. நான் எடுத்து, 'ஹலோ' என்கிறேன். மறுபக்கம் இருப்பவர், 'என் பழைய காலத்து நண்பர்.' அவர் அவருடைய மொபைலில் எண்ணை அழுத்தி, அந்த எண்ணின் இணைப்பு அவருடைய நெட்வொர்க் சென்று, பின் அது என்னுடைய நெட்வொர்க்கில் சர்வர் வழியாக இணைப்பு பெற்று, என் சர்வர் என் சிம்மை தொடர்பு கொண்டு, என் சிம் தன் மொபைலால் சப்போர்ட் செய்யப்பட்டு, ஒலித்து, நான் அழைப்பை ஏற்றுப் பேசுகிறேன். இப்படி பேசும்போது அந்தப் பக்கத்திலிருக்கும் என் நண்பரையும், இந்தப் பக்கத்தில் இருக்கும் என்னையும் இணைப்பது கண்ணுக்கே புலப்படாத ஒரு சர்வர் அல்லது சர்வரின் மென்பொருள். இந்த மென்பொருள் போன்றவர்தான் இறைவன். நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் அவர், எல்லாரையும் இயக்கி, எல்லார் வழியாகவும் செயலாற்றுகிறார்.

இந்தச் செயல்பாட்டைத்தான் நாம் இன்றைய முதல் (காண். 2 அர 4:42-44) மற்றும் மூன்றாம் (காண். யோவா 6:1-5) வாசகங்களில் பார்க்கின்றோம். 

இன்றைய முதல் வாசகத்தில் எலிசாவின் அரும்செயல் ஒன்றைப் பற்றி வாசிக்கின்றோம். எலிசா வெறும் இருபது கோதுமை அப்பங்களையும், ஒரு கோணிப்பை தானியக் கதிர்களையும் கொண்டு ஏறக்குறைய 100 பேருக்கு உணவளிக்கும் நிகழ்வுதான் இது. நிகழ்வின் தொடக்கத்தில் பசி இருக்கிறது. நிகழ்வின் இறுதியில் நிறைவு இருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று?

முதலில், பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் இருபது அப்பங்களையும், கோணிப்பை நிறைய தானியக் கதிர்களையும் கொண்டுவருகிறார். கோணிப்பையில் தானியக்கதிர்களை கொஞ்சம்தான் வைக்க முடியும். ஆக, மிகக் குறைவான உணவை அவர் கொண்டுவருகிறார். அவர் கொண்டுவந்தது ஒருவேளை இறைவாக்கினர் எலிசாவுக்கு மட்டுமாக இருக்கலாம். ஆனால் எலிசா அதைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கச் சொல்கின்றார். அப்பங்களைக் கொண்டு வந்த அந்த நல்ல மனிதரின் பணியாளுக்கு ஒரு சந்தேகம் வருகிறது: 'இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படி பரிமாறுவேன்?' என தயக்கத்தோடு எலிசாவைக் கேட்கின்றார். 'இவற்றை இம்மக்களுக்கு உண்ணக்கொடு. ஏனெனில் உண்டபின்னும் மீதி இருக்கும் என்று ஆண்டவர் கூறுகிறார்' என்கிறார். பணியாளரும் பரிமாறுகின்றார். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது என நிறைவுபெறுகிறது வாசகம்.

மேற்காணும் நிகழ்வில், பசியால் இருந்தவர்கள் நிறைவு பெற காரணமாக இருந்தது யார்?

- அப்பங்கள் கொண்டு வந்த மனிதரா? அல்லது

- அதை மக்களுக்குக் கொடுக்கச் சொன்ன எலிசாவா? அல்லது

- தயக்கம் காட்டிய பணியாளரா? அல்லது

- 'கொடு, இன்னும் மீதி வரும்' என்று சொன்ன ஆண்டவரா?

அல்லது

- இவர்கள் எல்லாருமா?

இவர்கள் எல்லாரும்தான். இந்த எல்லார் வழியாகவும் செயலாற்றியவர் இறைவன். ஆக, 'அப்பம் கொண்டுவந்தவர்,' 'எலிசா,' 'பணியாளர்' என்ற மூன்று நபர்கள் தனித்தனியாக இருந்தாலும், அவர்கள் இணைந்து வரும்போது அவர்களின் ஆற்றலை பன்மடங்கு பெருக்கியவர் ஆண்டவர். ஆக, 'எல்லாருக்கும் மேலான' ஆண்டவர் 'எல்லாருக்குள்ளும்' செயலாற்றி, 'எல்லார் வழியாகவும் செயலாற்றி' எல்லாருடைய பசியையும் நீக்கி, எல்லாருக்கும் நிறைவு தருகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து வழங்கும் நிகழ்வின் யோவான் நற்செய்தியாளரின் பதிவை வாசிக்கின்றோம். இனி தொடர்ந்து வரும் நான்கு ஞாயிறு நற்செய்திகளும் 'வாழ்வுதரும் உணவு நானே' என்ற இதன் நீட்சியாகவே இருக்கும்.

இந்த நிகழ்வு எப்படி நடந்தேறுகிறது? மக்கள் பெருந்திரளாய் இயேசுவிடம் வருகின்றனர். 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து உணவு வாங்கலாம்?' எனத் தம் திருத்தூதர் பிலிப்பிடம் கேட்கிறார் இயேசு. தான் செய்யப்போவதை அறிந்திருந்தும் இயேசு அவ்வாறு கேட்டார் என இடையில் கமெண்ட் செய்கிறார் நற்செய்தியாளர். பிலிப்பு பெரிய கணித வாத்தியராக இருக்கிறார். 'இருநூறு தெனாரியத்திற்கு (அதாவது, 200 நாள் சம்பளத்திற்கு) அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே' என தயக்கம் காட்டுகிறார். அந்நேரம் இயேசுவின் மற்ற சீடர் அந்திரேயா, 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன' என்று கொஞ்சம் இருப்பதை முன்வைத்துவிட்டு, 'இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என பின்வாங்குகின்றார். ஆனால் இயேசு இதைக் கேட்டவுடன், 'மக்களை அமரச்செய்யுங்கள்' எனப் பணிக்கின்றார். தொடர்ந்து சிறுவன் கொண்டுவந்த அப்பங்களை எடுத்து, நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுக்க, மீன்களையும் அவ்வாறே கொடுக்க, அங்க அப்பம் பலுகத் தொடங்குகிறது. இந்தப் புதுமை எப்படி நடந்திருக்கும் என்ற யூகிக்கின்ற இறையியலாளர் ஒருவர் இதை பின்வருமாறு எழுதுகின்றார்: 'இயேசுவின் போதனை கேட்க வந்தவர்களில் சிலர் 'உடையவர்கள்,' பலர் 'இல்லாதவர்கள்.' 'ஒன்றுமில்லாத பலரை' பார்க்கின்ற அந்த சில 'உள்ளவர்கள்' தங்கள் உணவைத் தங்கள் பைகளில் இருந்து எடுக்க மனமில்லாது இருந்தனர். 'நான் உணவை வெளியே எடுத்தால் அதை இல்லாத இவனிடம் பகிர வேண்டுமே. நானும் பசியாகவே இருந்தவிட்டுப் போகிறேன்' என்ற மௌனம் காக்கின்றனர். இந்த மௌனம் இயேசுவின் கொடுத்தலால் உடைபடுகின்றது. சிறுவன் தன் கையில் உள்ளதைக் கொடுக்க, அதை இயேசு மற்றவர்களுக்குக் கொடுக்க, அதைத் தங்களிடம் வாங்கியவர்கள் தங்களோடு உள்ளதையும் இணைத்து மற்றவர்களிடம் கொடுக்க அரங்கேறுகிறது அந்த அற்புதம். பசியால் இருந்தவர்கள் நிறைவு பெறுகின்றனர். ஒன்றும் இல்லா இடத்தில் 12 கூடைகள் அப்பங்களால் நிறைகின்றன. 

மேற்காணும் நிகழ்வில், பசி மறைந்து நிறைவு வர காரணமாக இருந்தவர் யார்?

- '200 தெனாரியத்திற்கு வாங்கினாலும் முடியாது' என்று சொன்ன பிலிப்பா? அல்லது

- தன் பிள்ளை பசியாற வேண்டும் என்று 5 அப்பங்களையும், 2 மீன்களையும் கொடுத்தனுப்பிய சிறுவனின் அம்மாவா? அல்லது

- அந்த சிறுவனை அடையாளம் கண்டு இயேசுவிடம் கொணர்ந்த அந்திரேயவா? அல்லது

- தன் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுக்க முன்வந்த அந்தச் சிறுவனா? அல்லது

- அவற்றை வாங்கி கடவுளுக்கு நன்றி செலுத்தி பகிர்ந்து கொடுத்த இயேசுவா? அல்லது

- இயேசுவிடமிருந்து வாங்கி திருத்தூதர்கள், திருத்தூதர்களிடமிருந்து சீடர்கள், சீடர்களிடமிருந்து வாங்கிய மற்றவர்களா?

அல்லது

- இவர்கள் எல்லாருமா?

இவர்கள் எல்லாரும்தான். இந்த எல்லார் வழியாகவும் செயலாற்றியவர் இறைவன். 'பிலிப்பு,' 'சிறுவனின் அம்மா,' 'அந்திரேயா,' 'சிறுவன்,' 'இயேசு,' 'பரிமாறியவர்கள்' என்று நபர்கள் தனித்தனியாக இருந்தாலும், அவர்கள் இணைந்து வரும்போது அவர்களின் ஆற்றலை பன்மடங்கு பெருக்கியவர் ஆண்டவர். ஆக, 'எல்லாருக்கும் மேலான' ஆண்டவர் 'எல்லாருக்குள்ளும்' செயலாற்றி, 'எல்லார் வழியாகவும் செயலாற்றி' எல்லாருடைய பசியையும் நீக்கி, எல்லாருக்கும் நிறைவு தருகின்றார்.

இவ்வாறாக, முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவராம் இறைவனே தன் செயலாற்றுதலால் அனைவரையும் இணைக்கின்றார். இந்த ஒருங்கியக்கம் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதோடல்லாமல், ஒருவர் மற்றவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காரணமாகிவிடுகிறது.

கடவுளின் இந்தச் செயல்பாடு திடீரென்று நடந்துவிடுமா? அல்லது இந்தச் செயல்பாட்டைத் தூண்ட நாம் முன்வர வேண்டுமா? கடவுளின் செயல்பாடு மாயாஜாலம் அல்ல. அவரின் ஒருங்கியக்கம் ஒரு மேஜிக் அல்ல. மாறாக, அது சின்னஞ்சிறியவர்களின், சின்னஞ்சிறு செயல்களின் தொகுப்பாக இருக்கிறது.

எப்படி?

அ. அனைவரும் தத்தம் அழைப்பிற்கேற்ப வாழ வேண்டும்.

ஆ. முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்க வேண்டும்.

இ. ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அ. அழைப்பிற்கேற்ப வாழ்தல்

தன் வாழ்க்கை நிலை தன்னிடம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை நிறைவு செய்வது. எ.கா. இப்போது என் வாழ்க்கை நிலையில் நான் ஒரு மாணவன் என்றால், அந்த மாணவனுக்குரிய நிலையை நான் சமரசம் செய்யாமல் முழுமையாக வாழ வேண்டும். ஆசிரியர், மருத்துவர், அருள்பணியாளர், துறவி, இல்லத்தரசி என எல்லாருமே. அழைப்பு என்பது நாம் செய்யும் வேலை மட்டுமல்ல. வேலை செய்ய முடியாத குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், உடல்நலமற்றவர்கள் என அனைவருமே தங்களின் இருப்பு நிலைகளில் தங்களின் முழு ஆளுமையை வெளிக்கொணர முடியும். 

ஆ. மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, அன்பு கொண்டிருத்தல்

கூட்டு வாழ்க்கைக்கு அல்லது கூட்டியக்கத்திற்குத் தேவையானவை இந்த நான்கு குணங்கள்தாம். குரோஷிய அணியின் வீரர் காலிநிக் விளையாட்டிற்குள் நுழைய முடியாமல் அல்லது மற்றவர்களின் கூட்டாற்றலோடு தன் ஆற்றலைச் சேர்க்க முடியாமல்போகக் காரணம் அவரிடம் மேற்காணும் பண்புகளில் ஏதாவது ஒன்று குறைவுபட்டதால்தான். தான் அணியின் எந்த நிலையில் விளையாட அனுமதிக்கப்பட்டாலும் தன் திறன் மேல் தனக்கு உள்ள நம்பிக்கையை மையமாக வைத்துத் தன் திறனை அவர் வெளிக்கொணர்ந்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, நம் நற்செய்தியில் வரும் பிலிப்பு. '200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஒரு சிறு துண்டு கூட கிடைக்காது' என்று இயேசுவிடம் தயக்கம் காட்டினாலும், தன் கருத்தைச் சொன்னாலும், அந்திரேயா மற்றதொரு கருத்தைச் சொல்லும்போது அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றார். தான் செய்ததுதான் சரி என்றும், தன் கருத்து மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் வாதாடவில்லை பிலிப்பு. இதற்குக் காரணம் அவரிடமிருந்த மனத்தாழ்மையும், கனிவும், பொறுமையும், அன்புமே.

இ. ஒருமைப்பாட்டைக் காத்தல்

நாம் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் இயக்கத்தைக் கவனித்தால் இது நமக்குப் புரியும். சிறிய கைக்கடிகாரத்தைப் பிரித்துப் பார்த்தால் அதனுள் சின்னச் சின்னக் கம்பிகளும், சுருள்கம்பிகளும் இருக்கும். சின்னக் கம்பிதானே. அதில் ஒன்று அறுந்தால் என்ன? என நாம் நினைக்கலாம். ஆனால், சின்னஞ்சிறிய கம்பிகளின் ஒருமைப்பாடுதான் ஒட்டுமொத்த கடிகார இயக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது. கடிகாரத்தின் பெரிய பகுதிகள் மட்டும்தான் கவனிக்கப்படவேண்டும், சிறிய பகுதிகள் கவனிக்கப்படத் தேவையில்லை என நினைப்பது தவறு. அந்திரேயா கொண்டு வந்த சிறுவனால் என்ன பயன்? அவனிடம் இருக்கும் கொஞ்ச அப்பங்களால் என்ன பயன்? என்று இயேசு சிறுவனை அனுப்பிவிடவில்லை. அந்தச் சிறுவனையே கிரியா ஊக்கியாக்கி பெரிய அரும் அடையாளத்தை நடத்துகிறார் இயேசு. ஏனெனில், இயேசுவுக்குத் தெரியும் - கூட்டத்தின் ஒரு பகுதியான இந்தச் சிறுவனும் முக்கியமானவனே என்று.

இறுதியாக,

இன்று எல்லாருக்கும் மேலான, எல்லார் மூலமாகவும் செயலாற்றுகின்ற, எல்லாருக்குள்ளும் இறைவன், நம் ஒவ்வொருவர் வழியாகவும் செயலாற்றுகின்றார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார் என்பதை மனத்தில் இருத்தி, நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அவருடைய செயல்களே என எண்ணி, அடுத்தவரின் பசி தீர்க்கும், அடுத்தவருக்கு நிறைவுதரும் செயல்களைச் செய்ய நம் ஆற்றலைக் கூட்டாற்றல் ஆக்கலாமே!

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org