Get Adobe Flash player

உங்கள் மனப்பாங்கு

ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி


5 ஆகஸ்ட் 2018 ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

 I. விடுதலைப் பயணம் 16:2-4,12-15

II. எபேசியர் 4:17,20-24

III. யோவான் 6:24-35

 விவிலியத்தில் இயேசு கையாளும் ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். விண்ணரசு பற்றிய பல உவமைகளைத் தன் சீடர்களுக்கு எடுத்துச் சொல்லும், விளக்கும் இயேசு, இறுதியாக, 'இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?' என்று கேட்க, அவர்களும், 'ஆம்,' என்கின்றனர். அந்நேரம் அவர், 'விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட அனைவரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்போல இருக்கின்றனர்' என்கிறார்.


'கருவூலத்திலிருந்து வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்' - இதுதான் நாம் இங்கே தேர்ந்துகொள்ளும் உருவகம். ஒரு பெரிய வீட்டைக் கற்பனை செய்துகொள்வோம். அந்த வீட்டில் என்னவெல்லாம் இருக்கும்? வெளியே தெருவிற்கு அருகில் சுற்றுச்சுவரோடு இணைந்த வாசல். அடுத்து கொஞ்சம் முற்றம். பின் வீட்டின் நுழைவாயில். நுழைந்தவுடன் வரவேற்பரை. வரவேற்பரையை ஒட்டிய அல்லது தாண்டிய செப அறை, சமையலறை, உணவறை. பின் படுக்கையறை. நம்மிடம் இருக்கின்ற மிக முக்கியமான ஆவணங்கள், பணம், நகை போன்றவற்றை நாம் எங்கே வைப்போம்? நாம் வாழ்கின்ற அறை அல்லது ஓய்வெடுக்கின்ற அறை அல்லது தனியாக ஒரு சேமிப்பு அறை என அங்கே அவற்றைப் பத்திரப்படுத்துகின்றோம். ஒவ்வொரு அறைக்குள்ளும் மனிதர்கள் வருவதற்கு ஒவ்வொரு வரையறை வைத்திருக்கின்றோம். பால்காரர் சுற்றுச்சுவர் வாசலோடு நிற்கிறார். வாகன ஓட்டுநர் முற்றத்தோடு நிற்கிறார். பணிப்பெண் வீட்டு வாசலோடு நிற்கிறார். வேலை அல்லது சந்திப்பு நிமித்தம் வருபவர்கள் வரவேற்பறையோடு நின்றுகொள்கின்றனர். விருந்தினர்கள் சாப்பாட்டு அறை மற்றும் விருந்தினர் அறையோடு நின்றுகொள்கின்றனர். ஆனால், வீட்டு உரிமையாளர் மட்டுமே வாழ்கின்ற அல்லது ஓய்வு அல்லது சேமிப்பு அறைக்குள் நுழைகின்றார். வெளியே வருகின்றார். தான் விரும்புபவற்றைச் செய்கிறார். மற்றவர்கள் அந்தச் செயலைச் செய்தால் அது அத்துமீறல் அல்லது திருட்டு எனக் கருதப்படுகின்றது. மேலும், ஒரு வீட்டில் விருந்தினராக இருப்பவர் தன் வீட்டில் உரிமையாளராக இருப்பார். அங்கே அவருக்கு முழு உரிமையும் கிடைக்கும். எல்லா அறைகளையும்விட மிக முக்கியமான அறை கருவூலம் என்று சொல்லப்படும் சேமிப்பு அறை. இந்த அறைதான் மற்ற எல்லா அறைகளையும் இயக்குகிறது. இந்த அறையில் பழையது, புதியது என எல்லா நல்ல மற்றும் முக்கியமாக (புதிய, பழைய) பொருள்களும் இருக்கும். கருவூலத்தை வளர்க்கிறவர் தன் வீட்டை வளர்க்கிறார். 

 

வீட்டு உரிமையாளர் என்பவர் நான் என்றால் என் உள்ளம்தான் கருவூலம். ஒரு வீட்டைபோலவே என்னிலும் பல அறைகள் இருக்கின்றன. நான் எந்த அறையிலிருந்து செயலாற்றுகிறேன் என்பது மிக முக்கியம். எல்லா அறைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. எல்லா அறைகளுக்கும் நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வெளிவாசலில் கரையான் அரித்தால் நான் கண்டுகொள்வதில்லை. ஆனால், கருவூலத்தில் கரையான் அரித்தால் நான் பதறிவிடுகிறேன்.

 

மற்றொரு உருவகத்தில் சொல்ல வேண்டுமானால், கடலில் மிதக்கும் பனிப்பாறை போல இருப்பவன் நான். பனிப்பாறை நகர்வது போல நான் நகர்கிறேன். நிற்கிறேன். வளர்கிறேன். தேய்கிறேன். பனிப்பாறை கடல்மட்டத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருப்பது வெறும் 10 சதவிகதம்தான். மற்ற 90 சதவிகிதம் கடலில் மூழ்கி யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. மேலே தெரியும் 10 சதவிகிதம்தான் நான் மற்றவருக்கு வெளிப்படுத்தும் என் செயல்கள், திறன்கள், ஆற்றல்கள், அடையாளங்கள். ஆனால் இந்த 10 சதவிகிதத்தை இயக்குவது மறைந்திருக்கும், பெரிய 90 சதவிகிதம்தான். மறைந்திருந்து இயக்கும் அந்தப் பனிப்பாறையே என் கருவூலம்.

 

இன்றைய இறைவாக்கு வழிபாடு உள்ளம் என்ற இந்தக் கருவூலத்தை, 90 சதவிகிதம் மறைந்திருக்கும் இந்தப் பனிப்பாறையை நாம் புதுப்பித்துக்கொள்ள அழைப்புவிடுகிறது. உள்ளம் என்ற கருவூலத்திற்கு இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் 'உள்ளப்பாங்கு' என மிக அழகான வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். 'கிறிஸ்துவில் புதுவாழ்வு' என்ற தலைப்பில் எபேசு நகரத் திருச்சபைக்கு தன் அறிவுரையை வழங்கும் பவுல், 'உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும்' என அறிவுறுத்துகின்றார். 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' என நான் என்னையே பகுப்பாய்வு செய்தால், என்னிலே உயர்ந்து நிற்பது 'உள்ளம்.' நான் என் உடலை புதுப்பிக்க நன்றாக உண்கிறேன், உடற்பயிற்சி செய்கிறேன். மூளையைப் புதுப்பிக்க நிறைய வாசிக்கிறேன், பல அறிவுரைகள் கேட்கிறேன். ஆனால், உள்ளத்தை எப்படி புதுப்பிப்பது? உள்ளம் புதுப்பிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்? என்ற கேள்விகளை நான் பல நேரங்களில் கேட்பது கிடையாது.

 

இன்றைய முதல் (காண். விப 16:2-4,12-15) மற்றும் நற்செய்தி (யோவா 6:24-35) வாசகங்களில் நாம் 'உடலுக்கும்,' 'மூளைக்கும்,' 'உள்ளத்திற்கும்' நடக்கும் போராட்டத்தையே பார்க்கிறோம்.

 

முதல் வாசகத்திலிருந்து தொடங்குவோம்.

எகிப்தில் 400 ஆண்டுகளாக பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாக இருக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இவர்கள் எழுப்பும் அவலக்குரலைக் கேட்டு, இவர்களை விடுவிக்க இறங்கி வருகின்ற கடவுள், மோசே மற்றும் ஆரோனை எகிப்திற்கு அனுப்புகின்றார். பாரவோனின் இதயம் கடினமாகிவிட இஸ்ரயேல் மக்களை அவன் விடுவிக்க மறுக்கின்றான். தொடர்ந்து ஆற்றில் இரத்தம் தொடங்கி தலைப்பேறு மரணம் என பத்துக் கொள்ளை நோய்கள் வழியாக எகிப்தியரைத் தண்டித்து, தானே அரசருக்கெல்லாம் அரசன் என எண்பித்து அவர்களை விடுதலை செய்கின்றார் இறைவன். அவர்களின் விடுதலைப் பயணத்தில் செங்கடல் தடையாக இருக்கிறது. அதையும் வியத்தகு முறையில் கடக்கச் செய்த இவர்களைப் பின்தொடர்ந்த பாரவோனின் படைகளையும் கடலில் மூழ்கடித்துக் காக்கின்றார் கடவுள். விடுதலை அடைந்த மக்கள், 'ஆண்டவரே, உம்மைப்போல உண்டா!' என்று பாட்டுப்பாடி (விப 15) கொண்டாடிவிட்டு, பாட்டுச் சத்தம் அடங்குவதற்குமுன் கடவுளை நோக்கி முணுமுணுக்கின்றனர்.

 

'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால், இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டுபோகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்' என்று மோசேயிடமும், ஆரோனிடமும் முணுமுணுக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

 

இந்த முணுமுணுத்தலில் அவர்களின் 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' என மூன்று அறைகளும் செயலாற்றுகின்றன. 

 

உடல்: 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து'

 

- இந்த மக்களுக்கு பாரவோனிடமிருந்து விடுதலை கிடைத்தது பெரிதாகத் தெரியவில்லை. மாறாக, இறைச்சிப் பாத்திரமும், அப்பமும்தான் பெரிதாகத் தெரிந்தது. என்ன ஒரு சின்ன மனிதர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்! அடிமைகளாக இருந்தாலும் வயிறு நிரம்பியதே என்ற ப்ராக்டிகல் மக்களாகவும் இருக்கிறார்கள். பசியால் இருக்கிறவனுக்கு விடுதலையினால் என்ன பயன்!

 

மூளை: 'இப்பாலைநிலத்தில் நாங்கள் மாண்டுபோகவா எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தீர்'

 

- நம்ம உடம்புல இருக்கிறதுல மிகவும் மோசமானது இந்த மூளை. அது 'பேனைப் பெருமாளிக்கிவிடும்' - சின்னதைப் பெரியதாகவும், பெரியதைச் சிறியதாகவும், இருப்பதை இல்லாததாகவம், இல்லாததை இருப்பதாகவும் ஆக்கி, 'இப்படியாக்கும்! அப்படியாக்கும்!' 'இப்படி ஆயிடும்! அப்படி ஆயிடும்!' என்று கூப்பாடு போடுவது இந்த மூளைதான். மூளையை ஒருபோதும் நாம் நம்பிவிடக்கூடாது. மூளை விரைவாக நம்மை ஏமாற்றிவிடும். கொஞ்சம்தான் இஸ்ரயேல் மக்களுக்குப் பசிக்கிறது. ஆனால், அதற்குள், 'நாங்க செத்துப்போயிடுவோம். எல்லாரும் இங்கேயே கல்லறை ஆகிடுவோம். இது பாலைவனம். இங்கே ஒண்ணும் கிடைக்காது' என கூப்பாடு போடுகிறது இவர்கள் மூளை.

 

உள்ளம்: 'ஆண்டவரின் கையால்'

 

- பசியால் உடலும், மூளையும் ஆளுக்கொருபக்கம் இழுத்தாலும், இவர்களின் உயர்ந்த நிலையான 'உள்ளம்' கொஞ்சம் வேலை செய்கிறது. பசி மற்றும் புலம்பல் நேரத்திலும்கூட இவர்கள் 'ஆண்டவரின் கையை' நினைக்கின்றனர். 

 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இதற்கு ஒப்புமையான ஒரு நிகழ்வையே வாசிக்கின்றோம். கடந்த வார நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு வழங்கி நிறைவளித்த நிகழ்வை வாசித்தோம். அதன் தொடர்ச்சிதான் இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு உணவு கொடுத்து எல்லாரையும் அனுப்பிவிடுகின்றார். அடுத்த நாள் இயேசுவையும் அவருடைய சீடர்களையும் தேடி ஒரு கூட்டம் வருகிறது. 'நேற்று நாம இங்கதான சாப்பிட்டோம். அங்கேயே போவோம்' என்று முதலில் அந்தக் கூட்டம் திபேரியக் கடற்கரைக்குச் செல்கிறது. அங்கே அப்பமும் இல்லை. இயேசுவும் இல்லை. சீ;டர்களும் இல்லை. 'எங்க போயிருப்பாங்க?' என்று கேட்டுக்கொண்டே தேடிய கூட்டம் இயேசுவையும், சீடர்களையும் கப்பர்நகூமில் கண்டுபிடிக்கிறது. தன்னைத் தேடி வந்திருப்பவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாத இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். தன்னை இவ்வளவுபேர் தேடுகிறார்களே என்று மகிழாமல், இவர்களை அப்படியே ஓட்டு வங்கியாக மாற்றாமல், குறுக்குவழியால் அரசன் ஆகாமல் அவர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. இயேசுவுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள உரையாடலில் அவர்களின் 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' போராட்டம் மிக அழகாக பதிவுசெய்யப்படுகிறது.

 

உடல்: 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?' ... 'நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல. மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்'

 

- நேற்றைக்கு உண்டு இன்றைக்குச் செரித்துக் கழிவாகிவிடும் உணவிற்காக அவர்கள் உழைப்பதாகவும், அந்த உணவிற்காக அவரைத் தேடுவதாகவும் கடிந்துகொள்கிறார் இயேசு. 

 

மூளை: 'எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'

 

- இவர்களின் மூளை 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறது. ஆனால், பல நேரங்களில் மூளை தான் கேட்கும் அனைத்தையும் அப்படியே செய்வதில்லை. எடுத்துக்காட்டாக, மதியம் 30 நிமிடம் இருக்கிறது. நூலகத்திற்குப் போகலாம் என நினைக்கிற மூளை, 'படிச்சு என்ன ஆகப்போகுது! தூங்கினால் நல்லது' என தூங்கச் சென்றுவிடுகிறது. ஆக, மூளை தான் நினைக்கிற அனைத்தையும் செய்துவிடுவதில்லை.

 

உள்ளம்: 'ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்!'

 

- உடலும், மூளையும் கேள்விகள் கேட்க, 'எங்களுக்குத் தாரும்' என்ற விண்ணப்பதோடு சரணடைகிறது இவர்களின் உள்ளம். 'வாழ்வுதரும் உணவாகிய இயேசுவே எங்களோடு இரும்!' என விண்ணப்பித்துப் பணிகின்றனர் மக்கள்.

 

மேற்காணும் முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' என்ற மூன்று நிலைகளுக்கும் உள்ள போராட்டத்தை நாம் பார்க்கிறோம். 'உடல்' ஒரு பக்கம், 'மூளை' ஒரு பக்கம், 'உள்ளம்' ஒரு பக்கம் என்ற மூன்று குதிரைகள் ஒவ்வொரு மனிதரையும் இங்குமங்கும் அலைக்கழிக்கின்றன. இந்தப் போராட்டத்தில்தான் தீமைகள் உருவாகின்றன. விவிலியத்தில் எடுத்துக்கொள்வோமே. சிறந்த உதாரணம் நீதித்தலைவர் சிம்சோன் (நீத 14-16). தன் வாழ்க்கை முழுவதும் தன் 'உடல்' சார்ந்த நாட்டங்களோடும், 'மூளையின்' சிந்தனைகளோடும், தன் 'உள்ளத்தில்' உள்ளிருக்கும் இறைப்பிரசன்னத்தோடும் போராடுகிறார் சிம்சோன். 'உடல்' சொல்வதைக் கேட்கவா? 'மூளை' சொல்வதைக் கேட்கவா? 'உள்ளம்' சொல்வதைக் கேட்கவா? என்று அங்கலாய்க்கிறார்.

 

இந்தப் போராட்டத்திற்கான தீர்வை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்குத் தருகிறது:

 

'உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும்'

 

'புதுப்பிக்கப்படுதல்' என்றால் என்ன?

 

அமேசான் போன்ற இணையதளங்களில் 'ரிஃபர்பிஷ்ட்' பொருள்கள் விற்கப்படுகின்றன. அதாவது, பயன்பாட்டு நிலையை இழந்த ஒரு ஐஃபோனைச் சரிசெய்து, மேலே புதிய கவர் போட்டு, இப்படி, அப்படி பேக்கிங் செய்து விற்கப்படும் ஐபோன், 'ரிஃபர்பிஷ்ட்' ஃபோன் என அழைக்கப்படுகிறது. இது புதுப்பிக்கப்பட்ட ஃபோன்தான். ஆனால், கவர் மட்டும்தான் புதுசு.மற்றதெல்லாம் பழசு. 

 

பவுல் சொல்லும் புதுப்பிக்கப்படுதல் இவ்வகை அல்ல.

 

மாறாக, இளையநிலைக்குத் திரும்புதல். கணிணியில் 'ரிஸ்டோர்' என்ற ஆப்ஷன் உண்டு. இன்று காலை என் கணிணியில் வைரஸ் வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். நான் சொல்லும் வேலைக்குப் பதிலாக வேறு வேலையைச் செய்கிறது கணிணி. நான் அதைச் சரி செய்ய நினைக்கிறேன். நான் செய்ய வேண்டியதெல்லாம் என்ன? கடந்த மாதத்திற்கு, அல்லது கடந்த வாரத்திற்கு, அல்லது கணிணியை நான் வாங்கியபோது இருந்த வைரஸ் அற்ற நிலைக்கு என் கணிணியை 'ரிஸ்டோர்' செய்துகொள்ளலாம். அப்படிச் செய்யும்போது வைரஸ்கள் நீங்கி, மீண்டும் புதிய நிலைக்கு - ஆனால் இளைய நிலைக்கு - என் கணிணி ட்யூன் ஆகிவிடும்.

 

பவுல் முன்வைக்கும் புதுப்பிக்கப்படுதல் இத்தகைய நிலையே. 36 வயதிற்கு வளர்ந்துவிட்ட நான் என் வாழ்வை சரி செய்ய நினைக்க, நான் நல்ல நிலையில் இருந்த 20 அல்லது 15 வயதிற்கு என்னையே ரிஸ்டோர் செய்துகொள்வதுதான் இளையநிலை. அல்லது புதுப்பித்தல் நிலை.

 

நாம் எந்த நிலைக்கு ரிஸ்டோர் ஆக விரும்புகிறார் பவுல்?

 

'கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பு' - இந்த இயல்பிற்கு நாம் ரிஸ்டோர் ஆக வேண்டும் என அழைக்கின்றார் பவுல். இந்த இயல்பு பற்றி நாம் தொநூ 1:27ல் வாசிக்கின்றோம்: 'கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். கடவுளின் சாயலிலேயே அவர்களைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.' 'ஆணும்,' 'பெண்ணும்' வேறு வேறு என்றாலும் இருவருக்குள்ளும் இங்கே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமத்துவம் வரக்காரணம் என்ன? அவர்களில் இருந்த கடவுளின் சாயல். ஆக, கடவுளின் சாயலுக்கு ஒருவர் ரிஸ்டோர் செய்யப்பட்டால் அவரிடம் போராட்டம், பிளவு, வேற்றுமை என எதுவும் இருக்காது. அமைதியான, சாந்தமான ஓர் ஒழுங்கு இருக்கும்.

 

'பழைய மனிதருக்குரிய இயல்பை' களைந்துவிட்டு, 'புதிய மனிதருக்குரிய இயல்பை' - முதல் மனிதரின் இயல்பை அணிந்துகொள்ள அழைக்கின்றார் பவுல். ஆக, மனப்பாங்கு அல்லது உள்ளம் புதுப்பிக்கப்படுதல் என்பது வெறும் வெளிப்படையான சட்டை மாற்றம் அல்ல. மாறாக, அது வலிநிறைந்த ஒரு பயணம். கணிணி புதுப்பிக்கப்படுவதும் ஒரு வலி நிறைந்த பயணமே. அது ஒவ்வொரு அடுக்காக தன்னையே களைந்துகொண்டு வரவேண்டும்.

 

என்னிடம் மேலடுக்கு உடல், அடுத்த அடுக்கு மூளை, அடுத்த அடுக்கு உள்ளம் என இருக்கிறது. என் மாற்றம் வெறும் மேல் அல்லது அடுத்த அடுக்கில் நின்றுவிடாமல், உள்ளம் என்னும் மையம் நோக்கிச் செல்ல வேண்டும். அந்த மையம்தான் இறைமையம். அந்த மையம்தான் பிறர்மையம். அந்த மையத்திலிருந்து நான் இயங்கும்போது என் இயக்கத்தில் மகிழ்ச்சியும், நிறைவும் இருக்கும். அந்த மையத்திற்கு நான் பயணிப்பதே என் மனப்பாங்கை புதுப்பித்துக்கொள்வதாகும்.

 

என் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதா அல்லது நான் உள்ளம் என்னும் மையத்திலிருந்து செயலாற்றுகிறேனா என்பதற்கு இரண்டு அளவுகோல்களைத் தருகின்றார் பவுல்:

 

அ. நீதி

 

ஆ. தூய்மை 

 

'நீதி' என்றால் 'ஒவ்வொன்றிற்கும் அதனதன் இடம், நேரம் கொடுப்பது.' 'தூய்மை' என்றால் 'என் இயல்பில் இருப்பது.' இந்த இரண்டும் உண்மை என்ற ஆணியில் மையம்கொண்டிருத்தல் வேண்டும். 'உண்மை' என்பது 'சித்.' இந்தச் 'சித்' என்பதுதான் நம் 'இயல்பு.' 'இது இல்லை,' 'அது இல்லை' என்ற நான் என்னையே ஒவ்வொரு அடுக்காக நீக்கிக்கொண்டே கடந்துபோகும்போது இறுதியில் வந்துநிற்கும் நிலைதான் இது. 

 

ஆக, இன்று என் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட நான் முயற்சி செய்ய வேண்டும்.

 

இறுதியாக, நாம் அடிக்கடி டிவியில் பார்க்கும் ஒரு விளம்பரத்தோடு நிறைவுசெய்கிறேன். பாண்ட்'ஸ் நிறுவனத்தின் 'ஒயிட் ப்யூட்டி' க்ரீமுக்கான விளம்பரம் அது. ஃபேஷன் ஷோ ஒன்றில் நிறைய இளவல்கள் கேட்வாக் செய்வார்கள். நான்காவதாக வரும் இளவல் ஒன்றின் ஹைஹீல்ஸ் ஸ்லிப் ஆகி, அவர் அப்படியே சரிந்துவிடுவார். எல்லாரும் வேகமாக இருக்கையை விட்டு எழுவார்கள். முன்னால் நடந்தவர்கள் பதற்றமாக திரும்புவார்கள். இவரைப் பயிற்றுவித்தவர் தான் தோற்றதாகப் பதறுவார். ஆனால், அந்த இளவல் மெதுவாக கையை ஊன்றி எழுந்து, இலேசாகப் புன்முறுவல் செய்துவிட்டு, தொடர்ந்து நடப்பார். அரங்கம் கரவொலியால் நிறையும்: 'ஆட்டிட்யூட் மேட்டர்ஸ்' ('மனப்பாங்கே முக்கியம்') என நிறைவடையும் விளம்பரம்.

 

அவரின் மனப்பாங்கின் வெளிப்பாடே அந்த எளிய புன்னகை. தான் செய்யும் செயலையும், தனக்கு வெளியில் தெரியும் தன் உடல் அழகையும் தாண்டி அவரிடம் மேலோங்கி இருந்தது அவரின் மனப்பாங்கு.

 

ஆக, மனப்பாங்கு என்பது கருவூலம். இந்தக் கருவூலத்திலிருந்து பழையது, புதியது என மதிப்புமிக்க அனைத்தும் புறப்படுகின்றன. 90 சதவிகிதம் மறைந்திருக்கும் இந்த உள்ளத்தை நான் உருமாற்றும்போது என் 10 சதவிகித மேற்புற செயல்களும், திறன்களும், வெளிப்பாடுகளும் மாற்றம்பெறும்.

 

'ஆண்டவரின் கையே' அனைத்திலும் செயலாற்றுகிறது என்றும், 'ஆண்டவரிடமே என் தேடுதலின் நிறைவு உண்டு' என்றும், 'அவரின் சாயலே என் சாயல்' என்றும் உணர்வதே, வாழ்வதே புதுப்பிக்கப்பட்ட மனப்பாங்கு.

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org