Get Adobe Flash player

19 ஆகஸ்ட் 2018 ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு
வாசகங்களின் விளக்கங்கள்

அளிப்பவர் ; அருட்பணி இயேசு கருருணாநிதி; திருச்சி

 I. நீதிமொழிகள் 9:1-6  II. எபேசியர் 5:15-20III. யோவான் 6:51-58

 இந்த ஆண்டு மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை அமேசான் இந்தியா இணையதளத்தின் பேனர்களை நினைவுகூர்ந்தோம் என்றால், 'ஸ்கூல் இயர் ஸேல்,' 'ரம்ஸான் ஸேல்,' 'ப்ரன்ஷிப் டே ஸேல்,' 'இன்டிபென்டஸ் டே ஸே;' என நான்கு பேனர்களுக்குள் அதன் விற்பனையை அடக்கிவிடலாம். இதற்கிடையில், 'அமேஸான் ப்ரைம் ஸேல்' என்று ஒருநாள். இது அமேசான் இணையதளத்திற்கு மட்டுமல்ல. நாம் திறக்கின்ற செய்தித்தாள்கள், பார்க்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.


எப்ப பார்த்தாலும் நம்மைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கின்ற ஒரு குரல், 'வாங்கிவிட்டீர்களா?' என்பதுதான். 'மொபைல் வாங்கிவிட்டீர்களா?' 'டிவி,' 'வாஷிங் மெஷின்,' தொடங்கி, 'டூத் பேஸ்ட்,' 'சோப்பு' வரை 'வாங்கிவிட்டீர்களா?' எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சப்தத்தோடு இணைந்து அவர்கள் அள்ளி எறியும் வாக்குறுதிகளும் நம் காதுகளில் வந்து விழும். 'அதிகமான பேட்டரி லைஃப்,' 'தெளிவான வண்ணத்திரை,' 'ஆறு நாள்களில் சிகப்பழகு,' 'மஞ்சள் கறைகள் நீங்கும்,' 'அதிகமான இணையதள வேகம்' என நிறைய வாக்குறுதிகள் வந்துவிழுகின்றன. நாம் வாங்கும் பொருள்கள் அவைகள் கொண்டுவரும் வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை என்பது நமக்குத் தெரியும். பின் ஏன் நாம் வாங்குகிறோம்? பின் ஏன் நாம் புதிய பொருள்களை வாங்குகிறோம்? 'பொருள்கள் வாங்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு நிறைவு உணர்வு வருகின்றன' - இதுதான் மார்க்கெட்டிங் உளவியல். பஸ்ல போகும்போது பாருங்களேன். போத்தீஸ், சென்னை சில்க்ஸ் போன்ற துணிக்கடைகள் முன் பேருந்து நிற்கும்போதெல்லாம், அந்த நிறுத்தத்தில் கைப்பைகள், கட்டப்பைகள் என ஏறும் பயணிகளின் முகத்தைக் கவனியுங்கள். அவர்களின் முகத்தில் இனம்புரியாத ஒரு பெருமிதம் அல்லது நிறைவு உணர்வு இருக்கும். இந்தக் குறுகிய பெருமித உணர்வே நாம் பொருள்களை வாங்க வைக்கின்றன.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டிலும் இரண்டு விளம்பரங்களைப் பார்க்கின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 9:1-6), 'அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் ... உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்' என விளம்பரம் செய்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'என்னை உண்போர் என்னால் வாழ்வர் ... இது மன்னா போல அல்ல ... வாருங்கள் ... உண்ணுங்கள் ... பருகுங்கள்' என விளம்பரம் செய்கின்றார் இயேசு. முதல் வாசகம் ஞானம் தயாரித்த உணவிற்கான விளம்பரம். நற்செய்தி வாசகம் இயேசுவே தன்னை உண்பதற்கு விடுக்கும் விளம்பரம். இரண்டு விளம்பரங்களுமே உணவிற்கானவைதாம். இரண்டு விளம்பரங்களையும் இணைத்தோம் என்றால், 'கடவுளின் ஞானமாய் விளங்கும் இயேசுவை நற்கருணை வடிவில், இறைவார்த்தை வடிவில் நாம் உட்கொள்கிறோம் என்றால் அவரோடு நாம் இணைந்திருக்கிறோம், வாழ்வு பெறுகிறோம். இந்த இரண்டும் நம் நல்ல நடத்தையில் (காண். இரண்டாம் வாசகம், எபே 5:15-20) வெளிப்படவேண்டும்!' ஆக, விளம்பரங்களும், விளம்பரங்களின் வாக்குறுதிகளும் இணைந்து செல்கின்றன இங்கே.

 

எப்படி?

 

இன்றைய முதல் வாசகத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். இரண்டு பெண்களைப் பற்றியதுதான் இன்றைய முதல் வாசகம். ஒரு பெண் நேரிடையாகச் சித்தரிக்கப்படுகிறாள். மற்றொரு பெண் மறைவாக அமர்ந்திருக்கிறாள். யார் இந்தப் பெண்கள்? ஒரு பெண்ணின் பெயர் ஞானம். மற்றொரு பெண்ணின் பெயர் மதிகேடு. ஆண்கள் மற்றும் ஆணாதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் ஞானத்தை பெண் (1:20-33, 3:13-20, 7:4, 8:1-36) என வருணித்தது எப்படி? எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் ஒவ்வொரு பெயர்ச்சொல் மற்றும் பெயரெச்சத்திற்கும் பாலினம் உண்டு. ஞானத்தைக் குறிக்கம் ஹோக்மா என்ற எபிரேயச் சொல்லும், சோஃபியா என்ற கிரேக்கச் சொல்லும் பெண்பால். ஆகையால், ஞானம் பெண் என உருவகிக்கப்படுகின்றது. மேலும், மென்மையான மதிப்பீடுகளும் (அழகு, கொஞ்சல்), மென்மையான இயற்கை சூழல்களும் (நிலா, அந்திமாலை, இரவு) பெண்பாலிலேயே வருணிக்கப்பட்டன. ஆகையால், ஞானமும் பெண் என வருணிக்கப்படுகிறது. ஞானம் மற்றும் மதிகேடு என்ற இந்த இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டிருப்பதாக நீதிமொழிகள் நூல் சொல்கிறது (காண்க. 2:16-19. 5:3-14, 19, 20. 6:24-35. 7:1-27). 

 

இன்றைய முதல் வாசகத்தைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் அதை இதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பகுதியோடு சேர்த்துப் பார்த்தல் வேண்டும். நீமொ 8 முழுவதும் ஞானத்திற்குப் புகழுரை பாடுகின்றார் ஆசிரியர். பாடிவிட்டு ஞானம் எப்படி மனிதர்களைத் தன்னிடம் அழைக்கிறது என்றும் (9:1-6), மதிகேடு எப்படி அழைக்கிறது என்றும் (9:13-18) எழுதுகின்றார்.

 

ஞானம் என்றால் என்ன? 'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்' (9:10அ) என்றும், 'மெய்யுணர்வே ஞானம்' என்றும் (9:10ஆ) சொல்கிறது நீதிமொழிகள். எபிரேய விவிலியத்தில் ஞானம் என்பது கைவேலையில் சிறந்து விளங்குவது என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஒருவர் நல்ல சிந்தனையாளராக இருந்தால் அவரை அறிவாளி என்கிறோம். இதையே ஒருவர் மர வேலை, சிற்பவேலை போன்றவற்றில் சிறந்தவராக இருந்தால் அவரை ஞானி என்கிறது முதல் ஏற்பாடு. ஏனெனில் அறிவாளியில் மூளை மட்டுமே வேலை செய்கிறது. ஆனால் ஞானியிடத்தில் மூளையும், உடலும் இணைந்து வேலை செய்கிறது. இணைச்சட்ட நூல் 4ஆம் பிரிவு ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தலே ஞானம் என்று சொல்கிறது. மேலும், ஞானம் கடவுளின் ஆற்றல் அல்லது சக்தி என்றும், படைப்பின் தொடக்கத்திலேயே அது இருந்தது என்றும் நீமொ நூல் (காண்க. நீமொ 8) சொல்கின்றது.

 

இன்றைய முதல் வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) ஞானமும் அதன் செயல்களும், (ஆ) ஞானம் விடுக்கும் அழைப்பு

 

(அ) ஞானத்தின் செயல்கள் மூன்று: வீடு கட்டுகிறது, உணவு சமைக்கிறது, உணவை உண்பதற்கு எல்லாரையும் அழைக்கிறது. வழக்கமாக வீடு கட்டும் வேலை ஆண்களுக்குரியது. ஆனால் இங்கே ஒரு பெண் வீடு கட்டுகிறாள். எப்படி? ஏழு தூண்களைக் கொண்டு. ஏழு என்பது ஒரு செயலின் நிறைவை (தொநூ 2:2-3. லேவி 25:2-7) குறிப்பது. மேலும் சாலமோன் கட்டிய எருசலேம் ஆலயத்தில் ஏழு தூண்கள் இருந்தன (1 அர 7:17). ஆக, ஞானம் கட்டும் வீடு கடவுளின் கோவிலையும் குறிக்கலாம். மேலும் தூண்கள் ஒரு வீட்டின் பலத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. ஆக, ஞானம் கட்டும் வீடு பாதுகாப்பானது, பலமானது. இந்த வீடு கட்டும் வேலை முடிந்தவுடன் உணவு தயாரிக்கிறது ஞானம் - இறைச்சியும், தேனும் கலந்த உணவு. உணவு தயாரனவுடன் தன் தோழிகளை அனுப்பி மாந்தரை விருந்துக்கு அழைக்கின்றது. ஆனால் மதிகேடு வீட்டில் வாசற்படி மட்டுமே இருக்கிறது (9:13). மேலும் அதன் திருடிய தண்ணீரும், வஞ்சித்துப் பெற்ற உணவுமே. அது தன் வேலையாய்ச் செல்வேரின் கவனத்தை திசைதிருப்புகிறது.

 

(ஆ) ஞானத்தின் அழைப்பும் மூன்று: வாருங்கள், உண்டு பருகுங்கள், பேதைமையை விட்டுவிடுங்கள். இந்த அழைப்பை ஏற்பவர்கள் பெறவது வாழ்வு (9:6).

 

இன்றைய முதல் வாசகத்திற்கும், நற்செய்திக்கும் என்ன தொடர்பு?

 

அ. ஞானமும் இயேசுவும். தொடக்கத் திருச்சபையில் இயேசுவுக்கு வழங்கப்பட்ட ஒரு பெயர் 'கடவுளின் ஞானம்' என்பது: '...கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்' (1 கொரி 1:24), 'கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம்' (1 கொரி 1:30). மேலும் யோவான் தன் நற்செய்தியின் தொடக்கத்தில் பயன்படுத்தும் 'தொடக்கத்தில் வாக்கு இருந்தது' (யோவா 1:1) என்ற பகுதியில் 'வாக்கு' என்பது 'ஞானம்' என்றும், 'ஞானம்' என்பது இயேசு என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. ஆக, இன்றைய முதல் வாசகத்தில் ஞானம் விருந்துண்ண மக்களை அழைப்பது போல, இயேசுவும் நற்செய்தியில் தன் உடலை உணவாக உண்பதற்கும், தன் இரத்தத்தை பானமாக அருந்துவதற்கும் அழைக்கிறார். தன் விருந்தை உண்டால் மனிதர்கள் வாழ்வு பெறுவார்கள் என்றும், தன்னை உண்பவர் வாழ்வும், நிலைவாழ்வும் பெறுவர் என்கிறார் இயேசு. ஆக, ஞானத்தையும், இயேசுவையும் தேடுபவர்கள் வாழ்வைத் தேடுகிறார்கள்.

 

ஆ. மன்னாவும், மதிகேடும். இயேசு யோவான் 6ல் அடிக்கடி 'மன்னா உண்டவர்கள் மடிந்து போயினர்' என்கிறார். ஆக, கடவுள் தரும் உணவை முதல் ஏற்பாட்டில் மக்கள் உண்டாலும், அவர்கள் இறந்து போயினர். ஆக, அந்த உணவில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. அல்லது அதை உண்ட மக்களிடத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. 'மதிகேடு' என்பதும் இப்படித்தான். 'கடவுளை நம்பாததே மதிகேடு' என்கிறது திபா 14:1. ஆக, கடவுள் தன் அருகில் இருக்கிறார் என்பதை மறுப்பதும், அவரின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளாததும் கூட மதிகேடுதான். இந்த மதிகேடு வாழ்வைத் தருவதற்குப் பதிலாக நமக்கு இறப்பைத் தருகிறது. 

 

ஞானம் தரும் விருந்து மற்றும் இயேசு தரும் உணவை உண்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற ப்ராக்டிக்கலான விளக்கத்தை இன்றைய இரண்டாம் வாசகம் தருகின்றது. 'ஒளி பெற்றவர்களாய் வாழுங்கள்' என்று தன் எபேசுநகர் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுலடியார் இறைமக்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். 'உன் நடத்தை சரியில்லை' என்று நாம் மற்றவரிடம் சொல்லும்போதும், அல்லது மற்றவர்கள் என்னிடம் சொல்லும்போது அது குறிப்பது நம் அறநெறி வாழ்வையே. ஆனால், நடத்தை என்பது வெறும் அறநெறி சார்ந்தது மட்டுமன்று. அது, தன்மையம், பிறர்மையம், இறைமையம் என்ற மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது:

 

அ. தன்மையம். என் தனிப்பட்ட வாழ்வில் நடத்தை என்பது ஞானத்தோடு வாழ்வது. 'ஞானமற்றவர்களாய் வாழாமல், ஞானத்தோடு வாழுங்கள்' (5:15) என்று சொல்லும் பவுலடியார் தொடர்ந்து, 'அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள்' (5:17) என்கிறார். இந்த இரண்டு வாக்கியங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால், 'ஆண்டவருடைய திருவுளம்' என்பதுதான் 'ஞானம்' என்று புரிந்து கொள்ளலாம். இதில் சிக்கல் என்னவென்றால் பல நேரங்களில் நாம் என்ன செய்ய நினைக்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை. இதில் 'கடவுளின் திருவுளத்தை' எங்கே போய் அறிந்து கொள்வது? சில நேரங்களில் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நாம் நடப்பது போலவே இருக்கும். ஆனால் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்கு மகிழ்ச்சி தராமல் இருக்கும். இந்தப் போராட்டத்தை எப்படி வெல்வது?

 

ஆ. பிறர்மையம். 'ரொம்ப குடிக்காதீங்க! ஏன்னா, அது தாறுமாறான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்' (5:18) என்கிறார் பவுல். இதுதான் அறநெறி சார்ந்த நடத்தை. அதாவது, நான் செய்யும் ஒரு செயல் எனக்கு அருகிலிருப்பவரை அல்லது என்னைச் சார்ந்திருப்பவரை பாதிக்கிறது. 'எனக்கு இன்பம் வேண்டும்' என்பதற்காக நான் இதையெல்லாம் செய்வேன் என்று 'இன்பத்தை உடனடியாக நிறைவேற்றிக்கொள்ள' நான் நினைக்கும்போதெல்லாம் என் நடத்தை சரியில்லாமலேயே இருக்கிறது. 'குடிவெறி' என்பது எபேசுநகரத்தில் இருந்த ஒரு பிரச்சினை. ஏன் நாம் தட்டிக்கொண்டிருக்கும் தொடுதிரைகள்கூட சில நேரங்களில் நம் 'குடிவெறி' என மாறிவிடலாம்.

 

இ. இறைமையம். 'உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள் இருக்கட்டும்!' - அதாவது, உங்கள் வாழ்வு முழுவதும் இறைப்பிரசன்னம் மட்டுமே நிறைந்திருக்கட்டும். 'காலத்தை நன்கு பயன்படுத்துங்கள்' (5:16) என்ற பவுல் சொல்லும்போது 'நேர மேலாண்மை' பற்றி எழுதவில்லை. மாறாக, மீட்பின் காலம் என்று சொல்லப்பட்ட உயிர்ப்புக்கும், இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தை இறைவனை மையமாக வைத்து வாழுங்கள் என்கிறார். இதை நாம் இன்று நேர மேலாண்மை எனவும் எடுத்துக்கொள்ளலாம். இன்று என் நேரத்தைத் திருடும் காரணிகள் எவை? அல்லது நானாக வீணடிக்கும் தருணங்கள் எவை? மேலும், நான் செய்யும் வேலைகளில் இறைவனின் பிரசன்னம் என் வர்த்தைகள் வழியாக வெளிப்படுகிறதா? இறுதியாக, 'எல்லாவற்றிற்கும் எப்போதும் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்' (5:20).

 

இதை இன்றைய நற்செய்தியோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

இன்றைய நற்செய்தியில் இயேசு 'வாழ்வு' என்று ஒன்பது முறை குறிப்பிடுகிறார். 'வாழ்வு' என்பதை கொஞ்சம் ப்ராக்டிகலா 'நடத்தை' என்று எடுத்துக்கொண்டு, 'இயேசுவை நான் உண்டால் என் நடத்தை தூய பவுலடியார் சொல்வது போல இருக்கிறதா' என்று சுயஆய்வு செய்து பார்க்க இன்றைய இரண்டாம் வாசகம் உதவுகிறது.

 

யோவான் நற்செய்தியின் 6ஆம் அதிகாரம் முழுவதும் 'வாழ்வுதரும் உணவு' என்பதை மையமாக வைத்துதான் இருந்தாலும், ஒவ்வொரு உட்பிரிவிலும் முன்வைக்கப்படும் கருத்துக்கள் இன்னும் ஆழமானவையாக இருக்கின்றன. கடந்த வாரம் இயேசுவின் உரையாடல் யூதர்களோடு இருந்தது. யூதர்கள் இயேசுவின் மனிதப் பிறப்பை மேற்கோள் காட்டி அவரை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர்.

 

இன்றைய நற்செய்திப்பகுதி கடந்த வாரங்களில் வாசித்த இறைவாக்குப் பகுதிகளைவிட மாறுபட்டு இருக்கின்றன:

 

அ. உரையாடல் யூதர்களுக்கும், இயேசுவுக்கும் என்று இருந்தது இன்று 'மக்களுக்கும், இயேசுவுக்கும்' என மாறுகின்றது.

 

ஆ. இதுவரை 'உணவு' என்றே சொல்லிவந்த இயேசு, இன்று 'என் சதை உணவு' என்றும் 'என் இரத்தம் பானம்' என்றும் சொல்ல 'பானம்' என்ற புதிய காரணியை கொண்டு வருகின்றார்.

 

இ. மேலும், இதுவரை 'உண்ணுங்கள்!' என்று கட்டளை வினைச்சொல்லாக சொல்லிவந்த இயேசு, இன்றைய நற்செய்தியில் தன்னை உண்பவர் பெறும் பலன்களை வாக்குறுதிகளாக முன்வைக்கின்றார். இயேசு முன்வைக்கும் வாக்குறுதிகள் இரண்டு: அவர்கள் 'இணைந்திருப்பர்', 'வாழ்வு பெறுவர்'.

 

இயேசுவின் உணவு என்றால் என்ன?

 

அ. கடந்த வார நற்செய்தியை நாம் சிந்தித்தபோது அதில் நற்கருணையை இணைத்துப் பார்த்தோம். ஆனால், கடந்தவார நற்செய்தியைவிட இந்த வாரம்தான் நற்கருணைக்கான கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. இன்றைய நற்செய்தியில்தான் 'பானம் அல்லது இரத்தம்' இடம்பெறுகிறது. மேலும், இந்த உணவும், இரத்தமும் மக்கள் வாழ்வு பெறுவதற்காக இயேசுவால் கையளிக்கப்படுகிறது. ஆக, என்னை உண்ணுங்கள் என்று சொல்லும்போது, அது நற்கருணையைக் குறிக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

 

ஆ. வார்த்தையும் உணவே. 'மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றினாலும் உயிர்வாழ்கிறார்' என்று இயேசுவின் சோதனையின்போது மற்ற நற்செய்தியாளர்கள் வெளிப்படையாக எழுதுவது யோவானின் நற்செய்தியில் மறைந்து கிடக்கிறது. ஆக, இயேசுவின் வார்த்தையும் உணவுதான்.

 

உணவு என்பது இறைவாக்கையும், நற்கருணைiயும் குறிக்கிறது என்று சொல்லி இந்த நற்செய்தியை ரொம்ப எளிதாக்கிவிடுவும் எனக்குப் பயமாக இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் வேறொன்றைக்கூட இயேசு சொல்லியிருக்கலாம். இன்னும் தேடுவோம்!

 

இப்போதைக்கு இறைவார்த்தையும், நற்கருணையும் இயேசு தரும் உணவு என்ற எடுத்துக்கொள்வோம்.

 

இந்த இரண்டும் அதை உண்பவருக்குத் தரும் வாக்குறுதிகளும் இரண்டு:

 

அ. அவர்கள் என்னோடு இணைந்திருப்பர் (6:56)

 

ஆ. அவர்கள் வாழ்வு பெறுவர் (6:57)

 

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் சாட்களில் இருக்கும் பச்சைப் புள்ளி நமக்குச் சொல்லும் கருத்து என்ன? நாமும், நம் நண்பர் ஒருவரும் இணைந்திருக்கிறோம் என்பதுதான். நாம் சாலையில் நடந்து செல்லும்போது எரியும் பாதசாரிகளின் பச்சைவிளக்கு சொல்வதும் இதுதான்: 'இப்போது சாலையின் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் இணைக்கப்படுகிறது. நீ பாதுகாப்பாக நடந்து செல்லலாம்!' 

 

இன்று நாம் நம்மையறிந்தோ, அறியாமலோ மற்றவரோடு இணைந்தே இருக்கிறோம்: இரத்த உறவு வழியாக, திருமண உறவு வழியாக, அருள்நிலை வாக்குறுதி வழியாக, மருத்துவமனையில், திரையரங்கில், பேருந்தில், சிற்றுண்டி சாலைகளில், உணவகங்களில், வழிபாடுகளில், பொதுக்கூட்டங்களில். இந்த இணைந்திருத்தல்கள் ஒரே வகையும் அல்ல. 'இணைந்திருத்தல்' என்னும் சொல்லாடலை யோவான் திராட்சைக்கொடி உருவகத்திலும் கையாளுகின்றார் (காண்க. 15:1-17). 'இணைந்திருத்தல்' என்பது தமிழ்ப்பதமாக இருந்தாலும், கிரேக்கத்தில் இது 'நிலைத்திருத்தல்' அல்லது 'குடியிருத்தல்' (மெனோ) என்றே இருக்கிறது. நாம் இணைந்திருத்தல் என்ற பதத்திலேயே சிந்திப்போம்.

 

இணைந்திருத்தல் என்று சொல்லும்போது நாம் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும்: ஒன்று, யாரோடு? இரண்டு, எதற்காக? இந்த இரண்டிற்கும் பதில் சரியானதாக இருந்தால்தான் இணைந்திருத்தல் நிறைவு பெறும். உதாரணத்திற்கு, ஒரு மாணவன் ஆசிரியரோடு இணைந்திருக்கிறான். இந்த இணைந்திருத்தலில் கற்றல் என்ற நோக்கம் இருக்கிறது.

 

'அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது!' (யோவான் 1:4) என நமக்கு வாழ்வாக வரும் இயேசு தன்னையே வாழ்வுதரும் வார்த்தையாக, தண்ணீராக, ஒளியாக, உணவாக வாக்களித்துக்கொண்டே இருக்கின்றார்.  எது குறைவாக இருக்கிறதோ அதுவே அதிகம் தேவையாக இருக்கிறது. ஆக, இயேசுவின் காலத்தில் இறப்பின் அல்லது இழப்பின் காரணிகள் மேலோங்கியிருந்திருக்க வேண்டும். ஆகையால்தான், அதற்கு மாற்றாக வாழ்வை முன்வைக்கிறார். இன்றைய நற்செய்தியின் எட்டு வசனங்களில் ஒன்பது முறை 'வாழ்வு' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இயேசுவில் முரண்பாடுகள் இருப்பதில்லை. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரை உண்பதற்கு, அவரை உணர்வதற்கு அவரை அணுகிச்சென்றவர்கள் எல்லாரும் நலம் பெறுகின்றனர். அவர் யாரை அணுகிச்சென்றாலும் அங்கே நலமும், மீட்பும், வாழ்வும் பிறக்கின்றது. 

 

இறுதியாக, 'ஞானமா, மதிகேடா?' 'இயேசுவா, மன்னாவா?' - எதைத் தேர்ந்துகொள்வது?இந்தத் தெரிவு நம் ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்ததே. ஞானத்தை அடைவது ஒரு வாழ்க்கைப் பயணம். அது கட்டியிருக்கும் வீடு மலைமேல் இருக்கிறது. அதற்குப் படிகள் கிடையாது. நாமாக முயற்சித்து மேலே ஏற வேண்டும். யாரும் செல்லாத வழி அது. நாமாகத்தான் பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும். மன்னா கிடைக்கும் பாலைநிலத்திற்கான வழி அகலமானது. பல வழிகளில் பாலைநிலம் செல்லலாம். ஆனால், இயேசுவை அடையும் ஒரே வழி இடுக்கமான வழி. இன்று அகல விரித்து விளம்பரங்களைக் காணும் நாம் அவற்றிற்குக் கீழே சின்ன எழுத்துக்களில் வரும் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் கண்டுகொள்வதில்லை. நிபந்தனைகள் இல்லாத அழைப்பு ஞானத்தின்-இயேசுவின் அழைப்பு. இவற்றை வாங்கும்போது ஏற்படும் நிறைவு நீடித்தது.

 

ஞானமும், இயேசுவும், 'என்னை வாங்கிவிட்டீர்களா?' எனக் கேட்கின்றனர். நம் பதில்?

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org