Get Adobe Flash player

மறை உரை : எல்லாருக்கும் இரங்கும் இறைவன்
-
அருட்பணி மரிய அந்தோணிராஜ் பாளையங்கோட்டை
பொதுக்காலம் இருபத்து மூன்றாம் ஞாயிறு 

நன்றி : அருள்வாக்கு இணையதளம்

ஒரு கற்பனைக் கதை. ஒருநாள் இரவு கலிலேயாக் கடலில் மூன்று மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு கடல்மீது நடந்து சென்று, அவர்களுடைய படகருகே நின்றார். இயேசுதான் கடல்மீது நடந்து வருகின்றார் என்பதை அறிந்த அந்த மூன்று மீனவர்களும் இயேசுவைத் தங்களுடைய படகில் ஏற்றிக்கொண்டார்கள். அவர்கள் மீன்பிடித்துக்கொண்டே போகும்போது அவர்கள் இயேசுவோடு பலவற்றைக் குறித்து பேசிக்கொண்டே போனார்கள். 


ஓரிடத்தில் அந்த மூன்று பேரில் ஒருவர், “இயேசுவே! நான் நீண்ட நாட்களாக முதுகு வலியினால் அவதிப்படுகின்றேன். என்னுடைய முதுகு வலியைக் குணப்படுத்த உம்மால் முடியுமா?” என்று கேட்டார். அதற்கு இயேசு அவருடைய முதுகினைத் தொட, உடனே அவருடைய முதுகுவலி நீங்கியது. அவர் மிகவும் மகிழ்ந்துபோய் இயேசுவை வாயாரப் போற்றிப் புகழ்ந்தார். 

சிறுதுநேரம் கழித்து இரண்டாமவர் இயேசுவிடம், “இயேசுவே! நான் நீண்ட நாட்களாக பார்வைக் கோளாறினால் பெரிதும் அவதிப்படுகின்றேன். என்னுடைய பார்வைக் கோளாறை மாற்றி, எனக்கு நலம் தரமுடியுமா?” என்று கேட்டார். உடனே இயேசு அவருடைய கண்களைத் தொட, அவர் அந்த இரவினால் எல்லாவற்றையும் தெளிவாய் பார்க்கத் தொடங்கினார். அவர்கள் கடலில் மெதுவாகப் போய்கொண்டிருந்தார்கள். 

மூன்றாம் ஆள் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தார். அவருக்கு ஒரு கால் ஊனமாக இருந்தது. இரண்டு பேருக்கு நலம் தந்துவிட்டு, ஒருத்தருக்கு மட்டும் ஒன்றுமே செய்யாமல் விட்டுவிட்டால் நல்லதல்ல என்று நினைத்த இயேசு, மூன்றாவது மனிதனைத் தொட்டு குணப்படுத்த நினைத்தார். ஆனால் இயேசு அந்த மனிதரை நோக்கித் தம் கையை நீட்டி, குணப்படுத்த முயன்றபோது அந்த மனிதர், “ஐயா இயேசுவே! தயவு செய்து என்னைத் தொட்டுக் குணப்படுத்திவிடாதீர்கள். ஏனென்றால், நான் உடல் ஊனமுற்றவருக்கான பென்சன் தொகையைப் பெற்று வருகின்றேன். ஒருவேளை, நீங்கள் என்னைத் தொட்டுக் குணப்படுத்திவிட்டால் என்னுடைய கால் சரியாகிவிடும். அப்புறம் எனக்குக் கிடைக்கக் கூடிய பென்சன் தொகையும் கிடைக்காமல் போய்விடும்” என்றார். இயேசு அந்த மனிதருக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போனார். 

இயேசு எல்லார்மீதும் இரங்கி, அவர்களைத் தொட்டு நலம்தர இருக்கின்றார். நாம்தான் அதற்குத் தயாராக இல்லை என்பதை இக்கதையானது வேதனையோடு பதிவு செய்கின்றது. பொதுக்காலத்தின் இருபத்து மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் ‘எல்லாருக்கும் இரங்கும் இறைவன்’ என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம். 

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தீர், சீதோன், தெக்கப்பொலி வழியாக கலிலேயக் கடலை  வந்தடைகின்றார். அப்போது காதுகேளாத வரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைக் குணப்படுத்துமாறு கேட்கின்றார்கள். இயேசு அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய் குணப்படுத்துகின்றார். இயேசு செய்த இந்தப் புதுமை நமக்கு ஒருசில செய்திகளைச் சொல்கின்றன. அவை என்ன வென்று இப்போது பார்ப்போம்.

முதலாவதாக, இயேசு கடந்து வந்த தீர், சீதோன், தெகக்ப்பொலி போன்ற இடங்கள் எல்லாம் யூதரல்லாத புறவினத்தார் வாழ்ந்து வந்த பகுதி களாகும். அப்படியானால், இயேசு குணப்படுத்திய காதுகேளாதவரும், திக்கிப் பேசுபவருமானவர் ஒரு புறவினத்தார் என்பதுதான் உண்மை. இயேசு யூதருக்குத்தான் குணம்தருவேன், புறவினத்தாருக்கு குணம் தரமாட்டேன் என்று இருக்கவில்லை. அவர் எல்லாரையும் குணப்படுத்தினார், எல்லார்மீதும் இரங்கி, அவர்களுடைய துன்பத்தை இன்பமாக மாற்றினார்; அழுகையை ஆனந்தமாக மாற்றினார். இவ்வாறு அவர் எல்லாருக்கும் இரங்கும் இறைவனாக விளங்குகின்றார். 

தூய யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம், “மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்து செயல்படாதீர்கள்” என்று. ஆம், இயேசு எல்லாரையும் தன்னுடைய உயிரெனப் பார்த்து, சமமாக நடத்தினார். ஆனால், அவருடைய வழியில் நடக்கும் நாம்தான் உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழை, படிக்காதவன், படிக்காதவன் என்று பேதம் பார்த்து, மனிதர்களைப் பிரிக்கின்றோம். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இன்னும் ஒருசில நேரங்கில் நாம் மனிதர்களுடைய வெளி அடையாளங்களைப் பார்த்து, அவர்களை மதிப்பிடுகின்றோம். ஆடம்பரமாக உடை அணிந்திருந் தால் அவர்களை ஒருவிதமாகவும், சாதாரணமாக உடை அணிதிருந்தால் அவர்களை ஒருவிதமாகவும் நடத்துகின்றோம். இதுவும் கிறிஸ்துவின் கொள்கைக்கு எதிரானது என்பதுதான் நிதர்சனம். 

ஒருசமயம் அமெரிக்கத் துணை அதிபர் தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) அவர்கள் பணியின் பொருட்டு, பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்துவிட்டு இரவு தங்குவதற்காக பால்டிமோர் என்னும் இடத்தில் இருந்த ஒரு விடுதியில் தங்குவதற்கு இடம் கேட்டார். அவர் அன்று முழுவதும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்ததால், அவருடைய ஆடைகள் எல்லாம் அழுக்குப் படிந்துபோய் இருந்தன. இதனால் விடுதியில் இருந்த விடுதிப் பொறுப்பாளர் அவரிடம் தங்குவதற்கு இடம் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஜெபர்சனும் அவரிடம் எதுவும் பேசாமல், அந்த விடுதிக்கு சற்றுத் தொலைவில் இருந்த ஒரு விடுதிக்குச் சென்று, தங்கினார். 

சிறுது நேரம் கழித்துத்தான் விடுதிப் பொறுப்பாளருக்குத் தெரிந்தது சற்று முன்பு அங்கு வந்தது அமெரிக்கத் துணை அதிபர் தாமஸ் ஜெபர்சன் என்று. உடனே அவர் தன்னுடைய உதவியாளரை ஜெபர்சனிடம் அனுப்பி, “விடுதியில் எந்தவிதமான அறையும் எடுத்துக்கொள்ளலாம்’ என்று சொல்லச் சொன்னார். உதவியாளர் ஜெபர்சனிடம் சென்று விடுதிப் பொறுப்பாளர் சொன்ன செய்தியைச் சொன்னபோது, “சாதாரண மனிதர்களை மதிக்கத் தெரியாதவர்களுடைய விடுதியில் தங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார். 

மனிதர்களாகிய நாம் எப்படி புறத்தோற்றத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடுகின்றோம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆனால், ஆண்டவர் இயேசு அப்படி இல்லை, அவர் ஆள்பார்த்து செயல்படவும் இல்லை, அவர் எல்லார்மீதும் இரங்கினார், எனவே, அவருடைய வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் சக மனிதர்களிடம் எந்தவொரு வேறுபாடும் பார்க்காமல், மனிதர்களை மனிதர்களாக, கடவுளின் அன்புப் பிள்ளைகளாகப் பார்க்கப் பழகுவோம். 

இயேசு எல்லார் மீதும் இரங்கும் அன்பு இறைவன் என்று மேலே பார்த்தோம். இயேசு காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான மனிதரைக் குணப்படுத்திய நிகழ்வு நமக்குச் சொல்லும் இரண்டாவது செய்தி, இயேசு எல்லார்மீதும் இரங்கி, அவர்கள்மீது அன்பு கொண்டாலும் ஏழைகள், உடல் ஊனமுற்றோர், வறியவர்கள் இவர்கள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கின்றார் என்பதாகும். இயேசு நற்செய்தியில் வரும் மனிதரைக் குணப்படுத்திய விதமே வித்தியாசமாக இருக்கின்றது. இயேசு அம்மனிதரை எல்லாருக்கும் முன்பாகக் குணப்படுத்தவில்லை, மாறாக தனியாக அழைத்துக்கொண்டு போய்க் குணப்படுத்துகின்றார். குணப்படுத்தும்போது இயேசு தன்னுடைய விரலை அவருடைய காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவருடைய நாவினைத் தொட்டு, வானத்தை அண்ணார்ந்து பார்த்து ‘எப்பத்தா’ என்கிறார். உடனே அவருடைய நாவுகள் கட்டவிழ்கின்றன, காதுகள் திறக்கப்படுகின்றன. இயேசு எளியவர், வறியவர், உடல் ஊனமுற்றவர் இவர்கள்பால் எந்தளவுக்கு தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார் என்பதை இந்த நிகழ்வினை நாம் படிப்படியாக சிந்தித்துப் பார்த்தாலே புரிந்துவிடும். 

இயேசுவின் வழியில் நடக்கும் நாம், சமுதாயத்தில் புறந்தள்ளப்பட்ட இத்தகைய மக்கள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் உடல் ஊனமுற்ற, உடல் குறைபாடு உள்ள மனிதர்களைக் கண்டால், எள்ளி நகையாடுகின் றோம், அவர்களை ஏளனமாகப் பார்க்கின்றோம். இத்தகைய செயல்பாடுகள் எல்லாம் இயேசுவை அவமானப்படுத்துவதற்குச் சமமாகும். ஏனென்றால் அவர் எளியோரில் இருக்கின்றார் (மத் 25:40). ஆகவே, நாம் இயேசுவைப் போன்று எளியவர் மட்டில் தனிப்பட்ட அன்பு கொண்டு வாழக் கற்றுக்கொள்வோம்.  

நிறைவாக இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் செய்தி, இயேசு கிறிஸ்துவில் இறைவார்த்தை நிறைவு பெறுகின்றது என்பதாகும். இறைவாக்கினர் எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல்  வாசகத்தில், “அந்நாளில் பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளா தோரின் செவிகள் கேட்கும்; காலூனமுற்றோர்  மான்போல் துள்ளிக் குதிப்பர்” என்று வாசிக்கின்றோம். மேற்சொன்ன இறைவார்த்தை எல்லாம் இயேசுவில் நிறைவு பெறுகின்றன. இயேசு பார்வையற்றோருக்கு பார்வை தந்தார். காதுகேளாதோர் கேட்கச் செய்தார். இவ்வாறு அவர் இறை வார்த்தை எல்லாம் தன்னிலே நிறைவுறச் செய்து, இறையாட்சி இவ்வுலகில் வந்துவிட்டது என்று அறிக்கையிடுகின்றார். 

ஆண்டவர் இயேசு காதுகேளாத, திக்கிப்பேசும் அந்த மனிதரைக் குணப்படுத்திய பிறகு மக்கள் அனைவரும், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்! என்று கூறுவதாக மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். தொடக்க நூலில் ஆண்டவராகிய கடவுள் உலகைப் படைத்து முடித்தபிறகு எல்லாவற்றையும் நல்லதெனக் கண்டார் என்பதைப் போன்று இருக்கின்றது மாற்கு நற்செய்தியாளர் இயேசு எத்துணை நன்றாக யாற்றையும் செய்து வருகின்றார் என்று குறிப்பிடுவது. ஆம், இயேசு இருக்கும் இடத்தில் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்.  

ஆகவே, இயேசு எந்தவொரு வேறுபாடு காட்டாமல், எல்லார்மீதும் இரக்கம்கொண்டது போன்று, நாமும் நம்மோடு வாழக்கூடிய மனிதர்கள்மீது உண்மையான அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org