Get Adobe Flash player

தெரிவும் அர்ப்பணமும்
அருட்பணி. இயேசு கருணாநிதி

தெரிவும் அர்ப்பணமும் - 16.09.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
16 செப்டம்பர் 2018 ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு -
I. எசாயா 50:5-9  II. யாக்கோபு 2:14-18  III. மாற்கு 8:27-35

'இரு மான்களை விரட்டுகிறவன் ஒரு மானையும் பிடியான்' என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சரியானவற்றைத் தேர்வு செய்யவும், தேர்ந்து தெரிவு செய்ததற்கு முழுமையாக நம்மை அர்ப்பணம் செய்யவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது.

சரியானவற்றைத் தெரிவதும், தெரிந்து கொண்டபின் அதற்கு முழுமையாக அர்ப்பணிப்பதுமே ஒருவருக்கு வெற்றியைத் தரும். நாம் சரியான தெரிவுகளைச் செய்ய கிறிஸ்தவர்களாகிய நமக்கு துணைநிற்பவை நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையும், கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவு நெருக்கமுமே.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 50:5-9) 'துன்புறும் ஊழியன்' என்று தலைப்பிடப்படும் நான்கு பாடல்கள் வரிசையின் மூன்றாம் பாடல். 'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர் கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார். காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார். கற்போர் கேட்பதுபோல் நானும் செவிசாய்க்கச் செய்கின்றார்' (எசா 50:4) என்று தொடங்குகிறது. ஆண்டவரின் ஊழியன் யாரென்றால் இவருக்கு கடவுள்தாமே கற்றுத் தருகின்றார். மேலும், கடவுளின் கற்றுக்கொடுத்தலுக்கு தினமும் அவர் காதுகளைத் திறந்து காத்திருக்கின்றார். ஆனால், இப்படிப்பட்டவருக்கு என்ன நேருகிறது? 'முதுகில் அடிக்கப்படுகின்றார். இவருடைய தாடி பிடுங்கப்படுகிறது. பிடுங்குவதற்கு தாடையையும் இவர் ஒப்புவிக்கின்றார். இவர் நிந்தனை செய்யப்படுகின்றார். காறி உமிழப்படுகின்றார்.' இவ்வாறாக, ஒட்டுமொத்த அவமானத்திற்கும், நிந்தனைக்கும், வேதனைக்கும் ஆட்படுகின்றார். ஏன் இவருக்கு இந்த நிலை? இதற்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், ஒருவேளை இவர் எடுத்த தெரிவுக்காகவும், அந்த தெரிவு கொணர்ந்த அர்ப்பணத்திற்காகவும்தான் இவர் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கின்றார். இருந்தாலும், இவர் தன் தெரிவையும் அர்ப்பணத்தையும் விட்டுவிடவில்லை. தன் எதிரிகளைத் துணிவோடும் மனத்திடத்தோடும் எதிர்கொள்கின்றார். இவர் கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும், இவருடைய கடவுள்சார்நிலையும், கடவுளின் உடனிருப்பும் தொடர்ந்து போராட இவருக்கு ஆற்றல் தருகின்றது. 'ஆண்டவராகிய தலைவர் உடன் நிற்பதால்' இவருடைய எதிரிகள் ஆற்றல் இழக்கின்றனர். இறுதியாக, 'அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்.'
இங்கே 'துணியைப் போல இற்றுப்போதல்' என்ற ஒரு உருவகத்தைப் பார்க்கிறோம். நீண்ட காலமாக மண்ணில் கிடக்கும் ஒரு துணி பார்ப்பதற்கு துணிபோல இருந்தாலும், அந்தத் துணியின் நிறம், அந்தத் துணியின் அச்சு எல்லாம் அப்படியே இருந்தாலும், அதை நாம் கையில் எடுக்கத் தொடங்கினால், அது அப்படியே உதிர ஆரம்பிக்கும். அதுதான் இற்றுப்போதல். ஆக, ஒரு காலத்தில் கையால் வலு கொண்டு இழுத்தாலும் கிழியாத துணி, இப்போது பார்ப்பதற்கு முழுமையாக, வலுவானதாக இருந்தாலும் தொட்டவுடன் உதிர்ந்துபோகும் அளவிற்கு அது வலுவற்று இருக்கிறது.
துன்புறும் ஊழியன் பாடலின் பின்புலம் யூதர்களின் எருசலேம் வருகைதான். பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து பாரசீக மன்னன் சைரஸ் அவர்களால் விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர் யூத மக்கள். தங்களின் சொந்த நகரான எருசலேமுக்கு வந்தபோது எருசலேம் நிலைகுலைந்து கிடக்கிறது. இப்போது தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் அவர்கள் கட்ட வேண்டும். இப்போது இவர்கள் முன் இரண்டு தெரிவுகள்: ஒன்று, பாரசீக அரசோடு கைகோர்த்துக்கொள்வது. அவர்களின் துணையால் மீண்டும் நகரத்தையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இந்த எண்ணத்தைக் கொண்டவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தார்கள். ஏனெனில், கடவுள் தாமே தங்களை எதிரியிடம் ஒப்படைத்துவிட்டார் என்று கடவுளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். இரண்டு, பாரசீக தாக்கத்திலிருந்து விலகி இருப்பது. கடவுளின் உதவியோடு மீண்டும் தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இங்கே நாம் காணும் 'துன்புறும் ஊழியன்' இந்த இரண்டாம் குழுவின் தலைவராக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவரைப் பொறுத்தவரையில் கடவுளின் குரலைக் கேட்பதும், அவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதுமே நன்மையைப் பெற்றுத்தரும். ஆகையால்தான், இவர் 'நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவும் இல்லை' (50:5) என்கிறார். இவ்வாறாக, சரியான தெரிவும், சமரசம் செய்துகொள்ளாத இவரது அர்ப்பணமும் இவருக்குத் துன்பங்களைத் தந்தாலும், இறுதியில் இவர் கடவுளின் துணை கொண்டு அனைவர்மேலும் வெற்றிகொள்கிறார். தன் உயிரே போகும் நிலை வந்தாலும் இவர் தன் தெரிவிலும், அர்ப்பணத்திலும் உறுதியாக இருக்கிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 2:14-18) தொடக்ககால எருசலேம் திருச்சபையில் நிலவிய ஒரு குழப்பம் பற்றி வாசிக்கின்றோம். '... திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்' (கலா 2:16) என்ற பவுலின் போதனையைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர் சிலர். இவர்கள், 'நம்பிக்கை' என்பது 'வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வது' என்றும், 'வேறு எந்தச் செயல்களையும் இதற்குச் செய்யத் தேவையில்லை' என்றும் தங்களின் தவறான புரிதலை மற்றவர்களுக்குப் பரப்பினர். மேலும், விருத்தசேதனம், தூய்மைச் சடங்கு, ஓய்வுநாள் சட்டம் அனைத்தையும் வேண்டாம் எனப் புறந்தள்ளினர். அத்தோடு சேர்த்து இறைவனின் கட்டளைகளையும் ஓரங்கட்டினர். ஆக, 'நான் கடவுளை ஏற்றுக்கொண்டால் போதும்' என்று சொல்லிக்கொண்டு, கடவுளின் 'அன்புக் கட்டளையை' புறக்கணித்தனர். ஆனால், பவுல், 'அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கையே இன்றிமையாதது' (காண். கலா 5:6) என்று சொன்னதை அவர்கள் மறந்தார்கள். இத்தகைய தவறான புரிதல் யாக்கோபின் திருச்சபையை மிகவும் பாதித்தது. நம்பிக்கையாளர்கள் என்று தங்களையே கருதியவர்கள், தங்களின் நம்பிக்கை ஒன்றே தங்களுக்கு மீட்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில், செயல்களை - பிறரன்புச் செயல்களை - ஓரங்கட்டினர். இப்படிச் செய்வது இவர்களுக்கு மிக எளிதாகவும் இருந்தது. ஏனெனில், இப்படி இருக்கும்போது யாரும் யாரைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. 'நம்பிக்கை' என்ற அக உணர்வு 'நடத்தை' என்ற புறச் செயலில் வெளிப்படவேண்டும் எனச் சொல்கிறார் யாக்கோபு. அப்படி செயல்படாமல் இருக்கிற நம்பிக்கை வெறும் கானல்நீர்தான். கானல்நீர் ஒருபோதும் நம் தாகம் தீர்க்காது. மேலும், தன் திருச்சபையில் உள்ள ப்ராக்டிகலான எடுத்துக்காட்டையும் சொல்கின்றார்: 'உணவும், உடையும் இல்லாத ஒருவர் நம்மிடம் வர, அவரிடம் நாம், 'நலமே சென்று வாருங்கள். குளிர்காய்ந்துகொள்ளுங்கள். பசியாற்றிக்கொள்ளுங்கள்' என்று சொல்வதால் அவருக்குப் பயன் என்ன?' செயல் இல்லாத சொற்கள் வெற்றுச்சொற்களே.
ஆக, நம்பிக்கை என்பதை நாம் தெரிவு செய்கிறோம் என்றால், அந்தத் தெரிவிற்கான அர்ப்பணம் இயேசுவின் மனநிலையை நாமும் பெற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. அந்த மனநிலை நம்முடைய பிறரன்பிலும், பிறர்சேவையிலும் வெளிப்பட வேண்டும். அதைவிடுத்து, செயலற்ற நம்பிக்கையை தெரிவு செய்வதும், எந்தவொரு வலியையும் தராத அர்ப்பணத்தைக் கைக்கொள்வதும் சால்பன்று.
நற்செய்தி வாசகத்திற்கு (காண். மாற் 8:27-35) வருவோம். 'பேதுருவின் அறிக்கை' என்று சொல்லப்படும் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதிதான் மாற்கு நற்செய்தியின் மையமாக இருக்கிறது. இந்தப் பகுதிதான் மாற்கு நற்செய்திதான் திருப்புமுனை. இதுவரை 'இயேசு யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்த வாசகர், 'இயேசுவே மெசியா' என்ற புரிதலை இங்கேதான் பெறுகின்றார். இதற்கு முன்னால் உள்ள பகுதியில் இயேசு தீய ஆவிகளை விரட்டினார், நோயாளர்களுக்கு நலம் தந்தார், சீடர்களுக்குப் போதித்தார், தொழுகைக்கூடத்தில் போதித்தார். ஆனால், இவற்றிற்காக இயேசு இவ்வுலகிற்கு வரவில்லை. இயேசுவின் இச்செயல்களைக் கண்ட மக்கள் அவரை இறைவாக்கினரில் ஒருவராக, திருமுழுக்கு யோவானாக, எலியாவாக அல்லது அவர்களுக்கு இணையானவராகப் பார்த்தனர். ஆகையால்தான், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்ற கேள்வியிலிருந்து, 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்பதன் வழியாக, தன் அடையாளத்தையும், தன் பணியையும் தானே வெளிப்படுத்த தயாராகிறார் இயேசு. பேதுரு சரியாக, 'நீர் மெசியா' என்று சொன்னபோது, தான் வந்ததன் நோக்கத்தையும் வெளிப்படுத்த விளைகிறார் இயேசு.  தன் பணியின் உண்மையான இலக்கு - துன்பம், உதறித் தள்ளப்படுதல், கொலை, உயிர்ப்பு - பற்றி முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறார். தன் இறப்பு மிக அருகில் இருக்கிறது என்பதை மனித அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயேசுவுக்கே கடினமாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும், தான் தெரிவு செய்ய வேண்டிய பாதையும், தான் காட்ட வேண்டிய அர்ப்பணமும் அதுவே என்பதில் தெளிவாக இருந்தார் இயேசு. உயிர்ப்பின் மேல் உள்ள நம்பிக்கை அவருக்கு துணிவைக் கொடுத்தாலும், மனிதன் என்ற நிலையில் தான் கொடுக்க வேண்டிய அர்ப்பணத்தின் விலை அவருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கும்.
பேதுரு இயேசுவின் தெரிவையும், அர்ப்பணத்தையும் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுரு இயேசுவைப் பற்றி வேறு எண்ணங்கள் வைத்திருந்தார். மேலும், இயேசுவின் தெரிவு மற்றும் அர்ப்பணத்திலிருந்து அவரை விலக்கிவிடத் துடிக்கின்றார். ஆனால், இயேசு பேதுருவை 'சாத்தானே' என கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுருவின் வார்த்தை இயேசுவின் தெரிவை மாற்றுவதாகவும், அவரின் அர்ப்பணம் என்னும் பாதையில் குறுக்கே நிற்பதாகவும் இருக்கிறது.
இந்த நிலையில் இயேசு சீடத்துவத்தின் விலை என்ன என்பதைப் பற்றித் தன் சீடர்களோடு பகிர்ந்துகொள்கின்றார். தன் தெரிவும் அர்ப்பணமும் மட்டுமல்ல. மாறாக, தன் சீடர்களின் தெரிவும் அர்ப்பணமும் தான் தேர்ந்துகொண்டதை ஒட்டியதாகவே இருக்க வேண்டும் எனக் கற்பிக்கின்றார். இயேசு இறப்பைத் தேடிச் செல்லவில்லை. மாறாக, இறப்பை தழுவிக்கொள்வதால்தான் வாழ்வை அடைய முடியும் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே அவர் உலகிற்கு வந்தார். இப்பாதை துன்பத்தின் பாதை என்றாலும் இதைத் தெரிந்துகொண்டார்.
இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு நாம் சரியானவைகளைத் தெரிவு செய்யவும், சரியானவற்றிற்கு நம்மை அர்ப்பணம் செய்யவும் தூண்டுகிறது.
எசாயாவின் காலத்தில், கடவுளுக்கு எதிரான பாதையைத் தெரிவு செய்யப் பலர் நினைத்தனர். ஆனால், துன்புறும் ஊழியன், 'கடவுள்' என்னும் பாதையைத் தெரிவு செய்து, அதற்குத் தன்னை அர்ப்பணிக்கிறார்.
யாக்கோபின் திருச்சபையில், வெறும் கோட்பாடுகளை நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளும் எளிய பாதையைத் தெரிவு செய்த நம்பிக்கையாளர்கள், தம் சகோதர, சகோதரிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அவர்களை நற்செயல்களோடு கூடிய நம்பிக்கை என்னும் பாதையைத் தெரிவு செய்யவும், ஒவ்வொரு பொழுதும் தங்கள் நம்பிக்கையை நற்செயல்களால் வெளிப்படுத்தும் அர்ப்பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் அவர்கள் தூண்டுகிறார் யாக்கோபு.
பேதுருவுக்கு துன்பம் மற்றும் சிலுவையின் தெரிவும், அர்ப்பணமும் 'மெசியா' என்னும் இயேசுவுக்குத் தேவையற்றதாகத் தெரிந்தது. ஏனெனில், இயேசுவை ஓர் 'அரச' அல்லது 'அருள்பணியாளர் மெசியாவாக' அவர் கற்பனை செய்திருந்தார். ஆனால், இயேசு தன் தெரிவும், அர்ப்பணமும் சிலுவையே என்பதை பேதுருவுக்கும், சீடர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் தெளிவாகச் சொல்கின்றார்.
இப்படிப்பட்ட சரியான தெரிவுகளைச் செய்பவர்களும், சரியான தெரிவுகளுக்குத் தங்களையே அர்ப்பணம் செய்பவர்களுமே, இன்றைய பதிலுரைப் பாடல் சொல்வதுபோல, 'உயிர் வாழ்வோர் நாட்டில் ஆண்டவரின் திருமுன் வாழ முடியும்' (திபா 116).
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள் எவை?
நம் வாழ்வில் நமக்கு முன் பல தெரிவுகள் உள்ளன. எந்நேரமும் நம் கண் முன் நிறைய விருப்பங்கள், நம் காதுகளில் நிறைய ஒலிகள், நிறைய வசீகரங்கள், நிறைய மயக்கங்கள் நம்மை இங்கும் அங்கும் அலைக்கழிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், நம்பிக்கையாளர் உறுதியான தளத்தில் நிற்க வேண்டும். அந்த தளத்தில் இருந்து தன் தெரிவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் சரியான தெரிவை மேற்கொள்ளவும், சரியான அர்ப்பணத்தைக் கொண்டிருக்கவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது.
நாம் சரியான தெரிவை மேற்கொள்ளும்போது, அந்தத் தெரிவிற்கு ஏற்ற அர்ப்பணத்தைக் கொண்டிருக்கும்போது இறைவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை முதல் வாசகத்தின் துன்புறும் ஊழியன் நமக்குச் சொல்கிறார். ஊழியனின் விடாமுயற்சியும் அர்ப்பணமும் அவரை எதிரிகளின் நிலையிலிருந்து உயர்த்தியது. அவருக்கு கடவுளின் பாதுகாப்பு எப்போதும் உடனிருந்தது. அவர் தன் அர்ப்பணத்திற்கு கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருந்தாலும் அவர் பெற்ற பரிசு பெரிதாக இருந்தது. நாம் இங்குமங்கும் அலைக்கழிக்கப்படும்போது கடவுளை நோக்கி குரல் எழுப்பினால் அவர் அருகில் வருவார். நாம் சரியான தெரிவுகளை மேற்கொள்ள அவர் நமக்கு உள்ளொளி தருவார்.
இரண்டாவதாக, நம் நம்பிக்கை நம் நற்செயல்களில் வெளிப்பட வேண்டும். நம்பிக்கை என்பது வாழ்க்கை. இந்த வாழ்க்கை மற்றவரோடு உள்ள உறவில் வெளிப்பட வேண்டும். அன்றாடம் நம் கண்முன் நிறைய மக்களைப் பார்க்கிறோம் - பசித்தவர்கள், இருப்பிடம் இல்லாதவர்கள், தேவையில் இருப்பவர்கள். இவர்களைக் காணும்போதெல்லாம் நாம் தெரிவு எப்படி இருக்கிறது? நம்முடைய இயலாமையிலும் அவர்களுக்கு நம் உடனிருப்பைக் காட்ட முடிகிறதா? அவர்களோடு கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க முடிகிறதா நம்மால்?
மூன்றாவதாக, இயேசுவின் வாழ்வு மற்றும் பணியின் திருப்புமுனையில் அவர் எடுக்க வேண்டிய தெரிவு மற்றும் அர்ப்பணத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்டோம். அவரின் தெரிவையும் அர்ப்பணத்தையும் கண்ட நாம் அலைக்கழிக்கப்படும் நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் தெரிவும் அர்ப்பணமும் எப்படி இருக்கிறது?
இறுதியாக, நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் சரியான தெரிவை எடுக்கவும், அதற்கேற்ற அர்ப்பணத்தைக் கொடுக்கவும் வேண்டும். இதை நாம் எப்படிச் செய்வது? என் குருமட வாழ்வில் எனக்குப் பயிற்சியளித்த ஒரு வயதான அருள்தந்தை இப்படிச் சொன்னார்: 'ஏதாவது முடிவு எடுக்குமுன், கண்களை மூடி உனக்குப் பரிச்சயமான இயேசுவின் முகத்தை மனத்திரையில் கொண்டுவா. அந்த முடிவை எடுக்கும்போது அந்த முகம் சிரித்தால் அது சரியான முடிவு. அந்த முகம் மௌனம் காத்தால் அது தவறான முடிவு.' இந்தப் பயிற்சி எனக்குப் பல நிலைகளில் பலன் தந்திருக்கிறது. நான் என் வாழ்வில் சரியானவற்றைத் தெரிவு செய்யாமல், சரியானவற்றுக்கு என்னை அர்ப்பணம் செய்யாமல் இருக்கும்போது, நான் இரண்டு மான்கள் பின்னால் ஓடுகிறான். விளைவு, என்னால் ஒரு மானையும் பிடிக்க முடிவதில்லை.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org