Get Adobe Flash player

திருச்சிலுவை மகிமை விழா
அருள்பணி மரிய அந்தோணி ராசு
பாளையங்கோட்டை

 

புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த துறவி ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் இறந்து மேலுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். மேலுலகில் அவர் இறுதித் தீர்ப்புக்காக கடவுளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார். அவருக்குப் பக்கத்தில் சாத்தான் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதிலிருந்து துறவி செய்த தவறுககளை (?) அடுக்கிக்கொண்டே போனது.

 

தான் செய்யாத தவறுகளையெல்லாம்கூட சாத்தான் அடுக்கிக்கொண்டே போனதால், துறவி அதிர்ச்சியடைந்து நின்றார். சாத்தான் எல்லாவற்றையும் வாசித்து முடிக்கும்வரை துறவி பொறுமையாக இருந்தார். வாசித்து முடித்ததும் துறவி சாத்தானைப் பார்த்து, “நீ இன்னும் ஒன்றை வாசிக்க மறுத்துவிட்டாய்” என்றார். சாத்தான், “அது என்ன?” என்று கேட்டு நின்றது.

அதற்கு துறவி, “என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நான் செய்த பாவங்கள் அனைத்தையும் சிலுவையில் சிந்திய இரத்ததினால் கழுவிப் போக்கிவிட்டார். இதுதான் நீ உன்னுடைய புத்தகத்தில் எழுதாத ஒன்று” என்றார். இதைக் கேட்டதும் சாத்தான் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியானது. ஆம், நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் இயேசு, தான் சிலுவையில் சிந்திய இரத்ததினால் கழுவிப் போக்கிவிட்டார். இப்போது நாம் துயவர்களாக இருக்கின்றோம்.

இன்று நாம் திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். சிலுவை யூதர்களுக்கு தடைக்கல்லாகவும், புறவினத்தாருக்கு மடமையாகவும் இருந்தது ( 1 கொரி 1:23) ஆனால் ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகள் மற்றும் உயிர்ப்பின் வழியாக அதனை வெற்றியின் சின்னமாக மாற்றினார். எனவே சிலுவை என்பது அவமானத்தின் சின்னம் கிடையாது, அது வெற்றியின் சின்னமாகும்.

இந்த வேளையில் திருச்சிலுவை மகிமை விழா எப்படி வந்தது, இவ்விழா நமக்கு உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கிபி. 312 ஆம் ஆண்டில் உரோமைப் பேரரசை யார் ஆட்சி செய்வது என்ற குழப்பம் கான்ஸ்டாண்டிநோபுலுக்கும், மாக்ஜெஸ்டியுசுக்கும் இடையே ஏற்பட்டது. இந்த நேரத்தில் கான்ஸ்டாண்டிநோபுள் கிறிஸ்தவர்களின் ஜெப உதவியை நாடினான். கிறிஸ்தவர்களும் அவனுக்காக ஜெபித்தார்கள். அப்போது ஒருநாள் வானத்தில் சிலுவை அடையாளம் தோன்றி கான்ஸ்டாண்டிநோபுள் வெற்றிபெறுவான் என்று சொல்லியது. அதைபோன்றே கான்ஸ்டாண்டிநோபுள் வெற்றிபெற்று அரசனானான். அன்றே அவன் கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான். சிலுவை கான்ஸ்டாண்டிநோபுலுக்கு வெற்றியைக் கொணர்ந்தது.

அதன்பிறகு கி.பி. 326 ஆம் ஆண்டு ஹெலினா என்ற புனிதர் எருசலேம் நகர்  சென்றபோது அங்கே இயேசு அறையப்பட்ட சிலுவையை கண்டுபிடித்தார். அதைத் திருச்சிலுவையாக போற்றிப் பெருமைப்படுத்தினார். மக்களுக்கும் அதற்கு வணக்கமும், மரியாதையும் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால் கி.பி.614 ஆண்டு பெர்சிய மன்னனாகிய சொஸ்ரோஸ் என்பவன் இந்த திருச்சிலுவையை கைப்பற்றிக்கொண்டு சென்று ஈரானில் வைத்தான். இதனை ஹெராகிளியஸ் என்று மன்னன் 629 ஆம் ஆண்டு மீட்டு, கால்நடையாகவே அதனை எருசலேமில் கொண்டுவந்து சேர்த்தான். அவன் திருச்சிலுவையைக் கொண்டுவந்த நாள் செப்டம்பர் 14.  அதன் நினைவாகத் தான் திருச்சிலுவை மகிமை விழாவை உலகம் முழுவதும் செப்டம்பர் 14 ஆம் தேதி கொண்டாடுக்கின்றோம்.

இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். தொடக்கத்தில் சொன்னது போல சிலுவை அவமானத்தின் சின்னம் கிடையாது. வெற்றியின் சின்னம். உரோமையர்கள் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும், திருடர்களுக்கும் சிலுவை மரத்தைத் தந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ ஒரு தவறும் செய்யாதவர். அப்படியிருந்தும் அவருக்கு அந்த சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது. இயேசு தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை – சிலுவை மரணத்தை – வெற்றியாக மாற்றினார். ஆகவே இந்த உண்மையை நாம் உணர்ந்துகொண்டு வாழவேண்டும்.

அடுத்ததாக இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும், இறையாட்சிப் பணியாளர்களும் சிலுவையை துணிவோடு சுமக்க முன்வரவேண்டும். நற்செய்தியில் இயேசு கூறுவார், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்று. ( லூக் 9:23). ஆம், இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொரும் சிலுவையை சாபமாக அல்ல, மாறாக  வரமாகத் தூக்கிக்கொண்டு அவரைப் பின்பற்றவேண்டும். அப்போதுதான் அவருடைய உண்மையான சீடர்களாக இருக்க முடியும்.

நிறைவாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் சிலுவை அடையாளத்தை பொருள் உணர்ந்ந்து பயன்படுத்த வேண்டும். காரணம் சிலுவை வாழ்வைத் தரக்கூடியது. இஸ்ரேயல் மக்கள் பாம்பினால் கடிபட்டு, இறந்தபோது அவர்கள் வெண்கலத்தால் ஆனா பாம்பைப் பார்த்தார்கள். வாழ்வைப் பெற்றார்கள். அதுபோன்று நாமும் வாழ்வில் துன்பம், துயரம் இவற்றையெல்லாம் சந்திக்கின்றபோது சிலுவையப் பார்த்தோமென்றால் வாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி.

எனவே சிலுவை அடையாளத்தை பொருள் உணர்ந்து பயன்படுத்துவோம், சிலுவையின் உண்மைப் பொருளை உணர்வோம். சிலுவையின் பாதையில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org