Get Adobe Flash player
23 செப்டம்பர் 2018 ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு
 
I. சாலமோனின் ஞானம் 2:12, 17-20  II. யாக்கோபு 3:16-4:3  III. மாற்கு 9:30-37
 
யார் பெரியவர்?
 
'நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல நன்மை தீமை அறிவீர்கள்' (தொநூ 3:5) என்று அலகை 'உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயான' ஏவாளிடம் சொன்ன முதல் வார்த்தைகள், அவருடைய உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழப் பதிந்துவிட்டது. எப்படி? அலகையின் இவ்வார்த்தைகள் பெண்ணின் வயிற்றுப் பசியைத் தூண்டுவதாக இல்லை. மாறாக, அவரின் உள்ளத்து வேட்கையை, உள்ளத்து உந்துணர்வைத் தட்டி எழுப்புவதாக இருக்கிறது.
அது என்ன உந்துணர்வு? சிக்மண்ட் ஃப்ராய்ட் என்ற ஆஸ்திரிய உளவியல் அறிஞர், 'மனிதர்களின் அடிப்படையான உந்துணர்வாக வன்முறையையும், பாலியல் உணர்வையும்' முன்வைக்கிறார். இந்த இரண்டு அடிப்படை உந்துணர்வுகளையும் உந்தித் தள்ளுகிற ஓர் உணர்வு இருக்கிறது. அதுதான், 'தன்னை பெரியவர் அல்லது முக்கியமானவர் என்று நினைக்கும் உந்துணர்வு' (basic instinct to feel important).
 
'நீங்கள் கடவுளைவிட பெரியவராக அல்லது கடவுளைப் போல பெரியவராக இருப்பீர்கள்' என்பதுதான் விவிலியத்தில் மனுக்குலம் எதிர்கொள்ளும் முதல் சோதனை.
 
காயின் ஆபேலைத் தாக்கக் காரணமாக இருந்தது, 'யார் பெரியவர்?' என்ற உந்துணர்வே.
 
மக்கள் பாபேல் கோபுரம் கட்ட முனைந்ததும்,
 
யாக்கோபு ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமையைப் பெற்றுக்கொண்டதும்,
 
யோசேப்பின் சகோதரர்கள் அவரை மிதியானியர்கள் கையில் விற்றதும்,
 
பாரவோன் இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்தியதும்,
 
பாரவோன் இஸ்ரயேல் மக்களை மோசே தலைமையில் விடுவிக்க மறுத்ததும்,
 
... ... ...
 
சவுல் தாவீது மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்க விரும்பியதும்,
 
தாவீதின் மகன்களே ஒருவருக்கு ஒருவர் அரியணை சண்டை இட்டதும்,
 
சாலமோன் ஞானியாக இருந்தாலும் சிலைவழிபாட்டுக்கு தன்னையே கையளித்ததும்
 
என எல்லா நிகழ்வுகளிலும் கதைமாந்தர்கள் தங்களுக்குள் எழுப்பிய கேள்வி, 'யார் பெரியவர்?' என்பதுதான்.
 
இந்தக் கேள்விதான் இந்த உலகின் பெரிய நாடுகள் எடுக்கும் முடிவுகளிலிருந்து, நம் வீட்டிற்குள் நடக்கும் சின்னச் சண்டை வரை அனைத்தின் பின்புலத்தில் இருக்கிறது. 'பெரியவராக' அல்லது 'முக்கியத்துவம்' பெற்றவராக இருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். அதைவிட வெறிகொண்டு இருக்கிறோம்.
 
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குள் இருக்கும் இந்த 'சிற்றின்ப நாட்டத்தை' சுட்டிக்காட்டுவதோடு, 'பெரியவராக இருப்பது' எதில் அடங்கியிருக்கிறது என்பதையும் அறிவுறுத்துகிறது.
 
சாலமோனின் ஞானநூல் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்த யூத குழுமத்திற்கு எழுதப்பட்டது. அலெக்ஸாந்திரியா நகரம் கிரேக்க கலாச்சாரத்தை மிகவும் உள்வாங்கி செல்வச் செழிப்பிலும், கல்வி அறிவிலும் மேலோங்கி நின்றது. அந்நகரில் வாழ்ந்த யூதர்கள் கிரேக்க கலாச்சாரத்தினால் ஆச்சர்யப்பட்டு, தங்களின் 'திருச்சட்டம் பின்பற்றும் வாழ்வை' காலாவதியானதாக, உலகிற்கு ஒவ்வாத ஒன்றாகக் கருதினார்கள். காலப்போக்கில், அவர்கள் கிரேக்க கலாச்சாரத்தை ஒட்டி வாழவும் தொடங்கினார்கள். இதே நேரத்தில் மற்றொரு யூதக் குழுமம் கிரேக்க கலாச்சாரத்திற்கு உட்படாமல் தங்களின் சட்டங்களையும், மரபுகளையும் பின்பற்றுவதிலும், தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தினர் என்ற சிந்தனையிலும் வாழ்ந்தனர். இந்த இரு குழுமங்களுக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல்களும், சண்டைகளும் வந்தன. தங்களின் திருச்சட்டத்தை மட்டும் பிடித்துக்கொண்டவர்கள் மற்றவர்களை 'நம்பிக்கையை மறுதலித்தவர்கள்' என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால், இப்படி குற்றம் சாட்டப்பட்ட முதல் குழுவினர் - அதாவது, யூதர்களாக இருந்தாலும் கிரேக்க கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் - திருச்சட்டத்தைப் பின்பற்றியவர்களின் செய்கை தவறு என்றும், அவர்கள் வைத்திருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கை எனவும் நிரூபிக்க விரும்பினார்கள். எனவே, அவர்கள் கடவுளையும், கடவுளைப் பின்பற்றுபவர்களையும் சோதிக்க விரும்பினார்கள். இப்படி இவர்களைச் சோதிக்கும்போது கடவுள் வருவாரா என்று பார்த்து, கடவுளையும் பொய்யராக்க நினைத்தார்கள். இந்நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 2:17-20) வாசிக்கின்றோம்: 'நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம். முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால் அவர் அவர்களுக்கு உதவி செய்வார்.'
 
கிரேக்க கலாச்சாரத்தைப் பின்பற்றிய 'பொல்லாதவர்கள்' தங்கள் அடையாளத்தை வெளிப்புற கிரேக்க சின்னங்களில் தேடுகின்றனர். தாங்கள் கிரேக்கர்களைப் போல இருப்பதால் இவர்கள் தங்களை 'பெரியவர்கள்' என நினைத்தார்கள். மேலும், இதனால் தங்களைச் சாராத மற்றவர்களைப் பழிதீர்க்கவும் விரும்பினார்கள். ஆனால், கடவுளின் திருச்சட்டத்தையும், அவர் தந்த கடவுளின் பிள்ளைகள் என்னும் அடையாளத்தையும் பின்பற்றிய 'நீதிமான்கள்' தங்கள் அடையாளத்தை தங்களுக்கு உள்ளே கண்டனர். இந்த நீதிமான்கள் தங்கள் நீதியான வாழ்வின் வழியாக தாங்கள் 'பெரியவர்கள்' என நினைத்தார்கள்.
 
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 3:16-4:3) தன் திருச்சபையின் அடுத்த பிரச்சினையான 'பிளவு மற்றும் கட்சி மனப்பான்மையை' கையாளுகின்றார். யாக்கோபின் திருச்சபை பொறாமை மற்றும் தன்னல எண்ணங்களால் துன்பற்றது. பொறாமை மற்றும் தன்னல மையப்போக்கின் வழியாக தங்களையே 'பெரியவர்கள்' என நினைத்துக்கொண்டனர் அத்திருச்சபையில் உள்ள சிலர். ஆனால், இந்த இரண்டிற்கும் மாறாக, 'கடவுளின் ஞானத்தை' அவர்களுக்கு முன்வைக்கிறார் யாக்கோபு: 'ஞானத்தின் பண்பு தூய்மை. அது அமைதியை நாடும். பொறுமை கொள்ளும். இணங்கிப் போகும். இரக்கமும் நற்செயல்களும் கொண்டிருக்கும். நடுநிலை தவறாது. வெளிவேடம் கொண்டிராது.' எல்லாவற்றிற்கும் மேலாக, ஞானத்தின் கனி அமைதி.  யாக்கோபின் திருச்சபையின் பிரச்சினை நம்பிக்கையாளர்களுக்கு வெளியிலிருந்து வரவில்லை. மாறாக, அவர்கள் உள்ளத்தில் உதிக்கிறது. 'நாட்டம்' என்பதும், 'இன்பம்' என்பது ஒரே கிரேக்க வார்த்தையால் குறிக்கப்படுகிறது. ஆக, 'நாட்டம்' என்ற ஒன்று இருக்கக் காரணம் அந்த நாட்டம் கொண்டுவரும் இன்பமே. நாட்டம் கொண்டுள்ள மனிதர் தன்னுள்ளே பிளவுபட்டிருக்கிறார். அது அவருக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்தப் பிளவை நிரப்ப அவர் தன் அந்தஸ்து, அதிகாரம், புகழ், அறிமுகம் ஆகியவற்றை நாடுகிறார். இது தொடர் போராட்டத்திற்கும், சண்டை சச்சரவுகளுக்கும், கொலைக்கும் வழிவகுக்கிறது.
 
'யாரும் பயணம் செய்யாத பாதை' என்ற நூலின் ஆசிரியர் ஸ்காட் பெக் 'க்ராட்டிஃபிகேஷன்' என்ற வார்த்தையை அறிமுகம் செய்தார். இவர் யாக்கோபின் திருமடலில்தான் இந்த சிந்தனையைக் கண்டறிந்திருக்க முடியும். அதாவது, நீண்டகால மதிப்பீடுகள் தரும் மகிழ்ச்சிக்கு காத்திராத மனம், சின்னச் சின்ன சிற்றின்பங்களை நாடி, தன்னையே 'கிராட்டிஃபை' செய்து செய்துகொள்ள நினைக்கிறது. உதாரணத்திற்கு, குழுவாழ்வு என்பது ஒரு நல்ல மதிப்பீடு. எல்லாரும் சேர்ந்து வாழ்வது, சேர்ந்து உழைப்பது, சேர்ந்து சாப்பிடுவது என்பது. ஆனால், இந்த மதிப்பீடு ஒரே நாளில் நாம் அடையக்கூடியதா? இல்லை. இதற்கு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்தால் இத்தகைய வாழ்வை நாம் கண்டிப்பாக அடைந்துவிட முடியும். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமை காக்க மறுக்கும் மனம் என்ன செய்கிறது? சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து வாழ்வதில் சிற்றின்பம் தேடுகிறது. சாதி அடிப்படையில், மொழி அடிப்படையில், மதம் அடிப்படையில், இன அடிப்படையில், உறவு அடிப்படையில் என சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து இந்தக் குழு தரும் சின்னச் சின்ன பாதுகாப்பு உணர்வில் இன்பம் அடைகிறது. ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்நேரமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பதை அது மறந்துவிடுகிறது. சிற்றின்ப நாட்டம் (செக்ஸ் என்று மட்டும் இதை நினைக்க வேண்டாம்!) உடனடி தீர்வைத் தருகிறது. ஆனால், உடனடித் தீர்வுகள் எப்போதும் நல்ல தீர்ப்புகளாக இருப்பதில்லையே. மேலும், சிற்றின்ப எண்ணங்கள் கொண்டவர்கள் கடவுளிடமிருந்துகூட உதவி பெற முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் சோகத்தின் உச்சம்.
 
இப்படியான வாழ்வு ஒருவரின் ஆன்மீக வாழ்வையும் அழித்துவிடுகிறது. இப்படி பிளவுபட்டிருப்பவர்கள், தங்கள் நாட்டங்களால் அலைக்கழிக்கப்படுவதால், கடவுளைச் சார்ந்திருப்பதிலிருந்து முற்றிலும் விலகி விடுகிறார்கள். இவர்கள் கடவுளிடம் 'கேட்பதற்குப்' பதிலாக அவரிடமிருந்து 'பறித்துக்கொள்ள' விரும்புகிறார்கள். மற்றும் சிலர் கடவுளிடம் தவறானவற்றைக் கேட்கின்றனர். தன்மையம் கொண்ட விண்ணப்பங்களுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் தன் திருச்சபையினர் கடவுளின் ஞானத்தை மட்டும் கேட்கவும், அந்த ஞானத்தின் கனியாக அமைதியை அவர்கள் சுவைக்கவும் அழைப்பு விடுக்கிறார் யாக்கோபு.
 
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 9:30-37), 'யார் பெரியவர்?' என்ற கேள்வியை இரண்டு படிநிலைகளில் அணுகுகிறது. நற்செய்தி வாசகத்தில் முதல் பகுதியில் இயேசு தன் இறப்பை இரண்டாம் முறை முன்னறிவிக்கின்றார். ஆனால் அவர் சொன்னது அவரின் சீடர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. இரண்டாம் பகுதியில் அவர்கள் புரிந்துகொள்ளாததற்கான காரணம் நமக்குத் தெரிகிறது.
 
இயேசுவும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமிற்கு வருகிறார்கள். பல சீடர்களின் சொந்த ஊரும் அதுதான். ஆக, சீடர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். வரும் வழியில் தங்களுக்குள் 'யார் பெரியவர்?' என்று விவாதிக்கின்றனர். தங்கள் சொந்த ஊரில் தாங்கள் பெரியவர் என அவர்கள் காட்ட விரும்பினர். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த போதனைகள், புதுமைகள், இயேசுவுக்கும் தங்களுக்கும் உள்ள நெருக்கம், தங்களின் இன்றியமையாமை குறித்து தங்களின் அடையாளத்தை மற்றவர்களுக்கு உறுதி செய்ய விரும்பினார்கள். தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களிடம் தங்களைப் பற்றிச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள விரும்பினார்கள். இயேசு தன்னுடைய தற்கையளிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சீடர்கள் தங்களின் அடையாளத்தையும், தகுதியையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். தன் சீடர்களை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளாத இயேசு அவர்களுக்கு இந்த நேரத்தில் 'யார் பெரியவர்?' என்று கற்பிக்கிறார்.
 
முதலில், 'பெரியவராக' இருப்பது என்பது 'பணி ஆற்றுவது' அல்லது 'சேவை செய்வது.' இயேசுவின் இப்போதனை அவரின் சமகாலத்து சிந்தனையை தலைகீழாகப் புரட்டியது. ஏனெனில், சீடர்களைப் பொறுத்தவரையில் 'பெரியவராக' இருப்பது என்பது 'பணிவிடை பெறுவது' என்ற நிலையில்தான் இருந்தது. இரண்டாவதாக, சீடத்துவம் என்பது குழந்தைகளை ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. குழந்தைகள் அடிமைகளைப் போல அக்காலத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் இருந்தவர்கள். தங்களின் பெற்றோர்களின் விருப்பங்கள் மற்றும் தெரிவுகளைச் சார்ந்தே வாழ்ந்தனர். இன்றுதான் நாம் குழந்தை என்றால் 'இன்னசன்ஸ்', 'தாழ்ச்சி', 'இயல்பானவர்கள்' என்று ரொம்ப ரொமான்டிக்காக சொல்கிறோம். குழந்தைகள் என்பவர்கள் யூத மரபில் 'மனிதர்கள் நிலையை அடையாதவர்கள்'. அவர்கள் வெறும் 'பொருட்கள்'. அவர்கள் 'வலுக்குறைந்தவர்கள்'. ஆக, இப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள நிறைய தாழ்ச்சி தேவை. ஆக, குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்லும்போது, அவர் தாழ்ச்சியைக் கற்பிக்கின்றார் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம். ஆக, பெரியவர் என்பவர் யார்? கடைசியில் இருப்பவர். அல்லது தொண்டராக இருப்பவர். இவரால் மட்டும்தான் வலிமையற்ற குழந்தையையும் ஏற்று அரவணைத்துக் கொள்ள முடியும். ஆக, 'பெரியவர் நிலை' என்பது 'தனியே நிற்க முடியாதவர்களுக்கு உறுதுணையாக இருப்பதில்தான் இருக்கிறது' என்றும், சீடர்கள் தங்களுக்குள் படிநிலையை வகுத்து அதில் 'பெரியவர் நிலையை' அடைதலை விடுத்து, தற்கையளிப்பு, பணிவிடைபுரிதல், மற்றவர்கள்மேல் அக்கறை போன்றவற்றில் அதைக் கண்டுகொள்ளவும் அழைக்கின்றார் இயேசு.
 
இவ்வாறாக, 'முதன்மையாக இருப்பது' அல்லது 'பெரியவராக இருப்பது' என்பது நமக்குள் பரவலாக இருக்கும் ஒரு உந்துணர்வு. இந்த உந்துணர்வின் நேர்முகமான பகுதிதான் நம்மை முன்னேறத் தூண்டுகிறது. ஆனால், இதன் எதிர்மறையான பகுதி அடுத்தவர்களை அழிக்கவும், அடுத்தவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் செய்துவிடுகிறது. ஆகையால்தான், அலெக்ஸாந்திரியாவில் இருந்து யூதர்கள் தங்கள் இனத்தாருக்கு எதிராகவே பழிதீர்க்க முனைந்தார்கள். தங்கள் தெரிவுகளைச் சரி என்று காட்டும் முகத்தான் மற்றவர்கள்மேல் வன்முறையும், கோபமும் காட்டினார்கள். அடுத்ததாக, தனிநபரின் நாட்டம் மையப்படுத்தப்பட்டால் அது ஒட்டுமொத்த குழுமத்தின் நலனைப் பாதிக்கும் என அறிந்திருந்த யாக்கோபு ஒவ்வொருவரும் தங்கள் உள்மனப் போராட்டங்களை வெல்ல அழைக்கின்றார். தொடர்ந்து, சீடத்துவம் பற்றிய தவறான புரிதலைக் கொண்டிருந்த தன் சீடர்களுக்கு 'பெரியவர்நிலை' என்பது 'சிறிதினும் சிறிதில்' இருக்கிறது எனக் காட்டுகிறார் இயேசு. இயேசுவின் இப்புதிய புரிதலை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே, 'என் ஆண்டவரே என் உதவி. அவரே என் வாழ்வுக்கு ஆதாரம்' (காண். திபா 54) என்று பாட முடியும்.
 
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் சவால்கள் எவை?
 
1. பெரிதினும் பெரிது
 
நமக்கு இன்பம் தரும், நலம் பயக்கும் அனைத்தையும் நாம் நாடுகிறோம். 'வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே உனக்குத் தேவையானதை பெரிய கரண்டியில் எடுத்துக்கொள். ஏனெனில் திரும்ப உனக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது' என்று நமக்கு போதிக்கிறது இன்றைய உலகம். ஆக, நம் வேலை, பதவி, படிப்பு, சமூக நிலை என அனைத்தையும் நாம் பெரிய கரண்டியில் அள்ளிக்கொள்ளவே விரும்புகிறோம். பெரியவராக மாற நினைப்பது தவறா? நம் வாழ்வை நாம் முன்னேற்றிக் கொள்ள விரும்புவது தவறா? இல்லை. பெரியவராக மாற நினைக்காவிட்டால் மனிதன் குரங்காகவே இருந்திருப்பான். ஆக, பெரியவராக மாற நினைப்பதும், முக்கியத்துவம் அல்லது முதன்மைத்துவம் பெற விரும்புவதும் தவறல்ல. ஆனால், அது எப்போது தவறாகிறது என்றால், நான் என்னையே மையப்படுத்தி வாழும்போதும், என் நாட்டங்களுக்கு மற்றவரைப் பயன்படுத்தும்போதும்தான். அடுத்தவரைப் பயன்படுத்தி நான் முன்னேற நினைப்பது தவறு. எடுத்துக்காட்டாக, எனக்கு பணம் நிறையவும், வேகமாகவும் வேண்டும் என்பதற்காக நான் போதைப்பொருள் விற்றால், அது தவறு. நான் அப்படி விற்கும் போது, என் சகோதர, சகோதரிகளை என் தன்னல நோக்கத்திற்காக பயன்படுத்துகிறேன்.
 
ஆக, பாரதி சொல்வதுபோல, 'பெரிதினும் பெரிது கேள்' என நாம் பெரியவற்றை, மேன்மையானவற்றை விரும்பலாம். ஆனால், அந்த விருப்பம் தன்மையம் கொண்டதாகவும், என் உடன்வாழ்பவரைப் பயன்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது.
 
2. பொறாமையும் கட்சி மனப்பான்மையும்
 
நான் பெரியவர் ஆகும் முயற்சியில் எனக்கு எதிராக அல்லது என்னைவிட பெரிதாக இருப்பவரை நான் பொறாமையுடன் பார்ப்பதோடு, என்னைப் போல பார்ப்பவர்களை ஒரே குழுவாக இணைத்து கட்சி மனப்பான்மையை உருவாக்குகிறேன். என் குழுமத்தில், 'நாம் - அவர்கள்' என்ற பேதத்தை நான் உருவாக்கிவிடுகிறேன். இந்த நிலையில் நான் அவர்களை அழிக்கவும் துணிந்துவிடுகிறேன். ஒருபக்கம் நான் குழுமத்தைச் சார்ந்திருப்பது போலவும் இருந்துகொண்டு, மற்றொரு பக்கம் குழுமத்திற்கு எதிராக செயல்படுகிறேன். இந்தப் போக்கு தவறு என்பதை இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. 'நானும் பெரியவர்', 'அவரும் பெரியவர்' என அடுத்தவரின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள ஞானம் தேவை. இந்த ஞானம் ஒருவர் மற்றவரோடு நாம் வாழும் வாழ்வில் அமைதியை நமக்கு அளிக்கிறது.
 
3. கடிவாளம் இல்லா நாட்டம்
 
நம் நாட்டங்களை நாம் குறைக்க வேண்டும். நாட்டங்கள் இல்லாதவர்கள்தாம் குழந்தைகள். அவர்களுக்கென்று ஆசைகள் இருந்தாலும் அவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற அடுத்தவர்களை அழிக்க முனைவதில்லை. இயேசு தன் இறப்பை பற்றி சொல்லும்போது, அதைக் கண்டுகொள்ளாத சீடர்கள் தங்களின் நாட்டங்களை மட்டுமே மையப்படுத்தியவர்களாக இருக்கின்றனர். முதன்மைநிலை என்பது படிநிலையில் இல்லை என்றும், அது தாழ்ச்சியிலும், பிளவுபடாத அர்ப்பணத்திலும் இருக்கிறது என்கிறார் இயேசு. 'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற மனநிலையில் இருந்து, 'நான் எப்படி பணிவிடை புரியலாம்' என்று நினைப்பதே முதன்மைநிலை. 'கடலளவு கிடைத்தாலும் மகிழ்ந்துவிடாமல், அல்லது கையளவே கிடைத்தாலும் வாடிவிடாமல்' இருப்பதே மேன்மை. இயேசுவுக்கு தன் இலக்கும், இறைத்திட்டமும் தெளிவாக இருந்ததால், வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், இந்த இரண்டின் ஒரு அங்கமாக பார்க்கின்றார். இந்த மனநிலை நமக்கும் இருந்தால் எத்துணை நலம்!
 
ஆக,
 
நாம் நமக்குள் எழும் 'முதன்மைநிலை' என்ற உந்துணர்வை ஆய்வுசெய்து பார்ப்போம்.
 
என் முதன்மைநிலையால் நான் இழந்தவை எவை?
என் முதன்மைநிலைக்காக நான் பொறாமை மற்றும் கட்சி மனப்பான்மை கொண்ட நேரங்கள் எவை?
இயேசு சுட்டிக்காட்டும் முதன்மைநிலைக்கு என்னையே தாழ்த்த தடையாக உள்ள காரணிகள் எவை?
 
இறுதியாக,
 
'காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே' (புறநானூறு 192)
 
என்பது நம் இன்றைய செபமாக, செயலாக இருக்கட்டும்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org