Get Adobe Flash player

 மதிப்பிற்குரிய மறுபாதி 07.10.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி

7 அக்டோபர் 2018: ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

I. தொடக்கநூல் 2:18-24 II. எபிரேயர் 2:9-11 III. மாற்கு 10:2-16

 

'தெ சிம்போசியம்' (The Symposium) என்ற தனது உரையாடலில், அரிஸ்டோஃபேனஸ் என்ற கதைமாந்தர் வழியாக, பிளேட்டோ 'உயிர்த்துணை' (soulmate) பற்றிய ஒரு கதையைப் பதிவுசெய்கின்றார். தொடக்கத்தில் மனிதர்களுக்கு நான்கு கைகள், நான்கு கால்கள், இருபக்கம் பார்க்கின்ற ஒரே தலை, மற்றும் ஆண், பெண், ஆண்-பெண் என்ற மூன்று பாலினம் இருந்ததாம்.

'ஆண்,' சூரியனிடமிருந்தும், 'பெண்,' பூமியிடமிருந்தும், 'ஆண்-பெண்' நிலவிலிருந்தும் வந்தவர்களாம். மனிதர்கள் நிறைய ஆற்றலைக் கொண்டிருந்ததால் கடவுளர்கள் அவர்களைத் தங்களின் எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினர். இவர்களை அழிக்க விரும்பிய கடவுளர்களுக்கு 'சேயுசு' ஒரு அறிவுரை கூறுகின்றார்: 'மனிதர்களை அழிக்க வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டாக வெட்டி விடுவோம். தங்களின் மறுபாதியைத் தேடிக்கொண்டிருப்பதிலேயே அவர்கள் வாழ்க்கை கழிந்துவிடும். அவர்கள் அதிலேயே தங்கள் ஆற்றலை இழந்துவிடுவார்கள். நமக்கு எதிராக கிளர்ச்சி செய்ய மாட்டார்கள்.

' கடவுளர்களுக்கு இந்த சேயுசின் இந்த அறிவுரை பிடித்திருக்க, மனிதர்களை இரண்டாக வெட்டிவிடுகின்றனர். அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொருவரும் தன் உயிர்த்துணையை தேடிக்கொண்டிருக்கிறார்கள். நிற்க. மனிதர்கள் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டே இருக்கும் மறுபாதியே உயிர்த்துணை. இந்த உயிர்த்துணையின் மதிப்பையும், அதன் இன்றியமையாத நிலையையும் நமக்கு முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

ஒவ்வொருவரையும் அவரவர் மறுபாதியை மதிப்பிற்குரியதாக நடத்த உதவுவது நிரப்புதன்மை. உயிர்த்துணை (soulmate), மறுபாதி (the other half), நிரப்புதன்மை (complementarity) என்ற மூன்று சொல்லாடல்களை முதலில் வரையறை செய்துகொள்வோம்.

1. உயிர்த்துணை நம் தமிழ்மொழியில், திருமணத்தால் இணைக்கப்பெற்ற மனைவியை கணவரும், கணவரை மனைவியும், 'வாழ்க்கைத்துணை' என அழைக்கிறோம். 'உயிர்' மற்றும் 'வாழ்க்கை' என்னும் இரண்டு சொற்களுமே ஓரளவு மாற்றி பயன்படுத்தப்படக்கூடியவையே. 'துணை' ('help' or 'helper') எப்போது நமக்குத் தேவைப்படுகிறது? நம்மால் ஒன்றை நாமே செய்ய முடியாதபோது, அல்லது பயணம் செய்ய முடியாதபோது துணைக்கு ஒருவரை அழைக்கிறோம். ஆக, வாழ்வில் சேர்ந்து சுமக்கவும், சோர்ந்து விழாமல் பயணம் செய்யவும் உடன் வருபவர் வாழ்க்கைத் துணை. இவரை நாம், 'நுகத்தடித்துணை' என்றும் அழைக்கலாம்.

அதாவது, ஒரு கலப்பையை அல்லது வண்டிய இழுக்க இரண்டு மாடுகள் நுகத்தில் பூட்டப்பட வேண்டும். நுகத்தில் பூட்டப்படும் இரண்டு மாடுகளுமே ஒரே அளவு, வலிமை, நகர்வு கொண்டிருக்க வேண்டும். ஆக, வாழ்க்கை என்ற வண்டியை இழுக்க, நுகத்தோடு இணையும் துணையே உயிர்த்துணை.

2. மறுபாதி 'பகுதி' என்பதுதான் 'பாதி' என மருவி வந்திருக்கிறது என்கிறது தமிழ் இலக்கணம். 'மறுபாதி' அல்லது 'மறு பகுதி' என்று சொல்லும்போது, அதில் 'ஒருபாதி' அல்லது 'ஒரு பகுதி' மறைந்திருக்கிறது. 'ஒரு பகுதியின்' மீதியே 'மறு பகுதி.' ஆக, கணவர் 'ஒருபாதி' என்றால், மனைவி 'மறுபாதி.'

3. நிரப்புதன்மை பகல்-இரவு, ஒளி-இருள் என்ற இருதுருவங்களை எடுத்துக்கொள்வோம். இத்துருவங்கள் ஒன்றோடொன்று எதிர்த்து நிற்பவை அல்ல. மாறாக, ஒன்றோடொன்று பொருந்தக்கூடியவை. அல்லது ஒன்றையொன்று நிரப்பக்கூடியவை. பகல் இரவையும், ஒளி இருளையும் நிரப்புவதுபோல, ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் நிரப்புகின்றனர். இன்றைய இறைவாக்கு வழிபாடு, மேற்காணும் மூன்று சொல்லாடல்களைக்கொண்ட ஒரு முக்கோணமாக நகர்கிறது.

முதல் வாசகத்திலிருந்து (காண். தொநூ 2:18-24) நம் சிந்தனையைத் தொடங்குவோம். இன்றைய முதல் வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. ஆதாமை வாட்டும் தனிமை

2. இந்த தனிமைக்கு இறைவனே தன் படைப்புப் பொருளில் ஆள் தேடுகின்றார்

3. தனிமை போக்க பெண்ணைப் படைக்கின்றார்

4. ஆண்-பெண் இணைந்திருத்தலின் நோக்கம் கற்பிக்கப்படுகின்றது

கடவுள் தான் படைத்த அனைத்தையும் பெயரிடுமாறு ஆதாமிடம் கொண்டு வருகின்றார். பெயரிடுதல் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, பெயரிடுதல் ஒருவர் மற்றவர்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தைக் குறிக்கின்றது. இரண்டு, பெயரிடுதல் ஒருவர் மற்றவருக்கு மேல் உள்ள உரிமையை அல்லது உறவைக் குறிக்கின்றது. இதில் என்ன விந்தை என்றால், எல்லாவற்றிற்கும் பெயரிடும் ஆதாமால் தான் உறவுகொள்ள தனக்கேற்ற துணை எதுவும் இல்லை என்பதுதான். ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வரச்செய்த இறைவன் அவனது உடலிலுள்ள விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணாகப் படைக்கின்றார். பெண்ணைக் கண்டவுடன், 'இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். 'ஈஷ்'இடமிருந்து எடுக்கப்பட்டதால் 'ஈஷா' என்றழைக்கப்படுவாள் என்று பெண்ணுக்கு பெயர் கொடுக்கின்றான் ஆதாம்.

இறுதியாக, ஆண்-பெண் இணைந்திருப்பதின் நோக்கம் என்ன என்பது கற்பிக்கப்படுகின்றது. தனிமை என்பது 'துணையின்மை' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தனிமை என்பது ஒரு உணர்வு. தனித்திருப்பது என்பது ஒரு எதார்த்தம். உதாரணத்திற்கு, நான் வேலையினிமித்தம் சென்னை செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். மதுரையில் என் வீட்டோடு தங்கியிருக்கும் நான் சென்னைக்குச் சென்று ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறேன். ஆக, சென்னையில் நான் தனித்திருக்கிறேன். ஆனால், நான் தனிமையாய் உணரத் தேவையில்லை. என் வீட்டில் இருப்பவர்களோடு ஃபோனில் பேசலாம். டிவி பார்க்கலாம். தூங்கலாம். புத்தகம் வாசிக்கலாம். புதிய மனிதர்களோடு அறிமுகம் செய்து கொள்ளலாம். தனிமையில்லாமலும் தனித்திருக்கலாம். தனித்திருக்காமலும் தனிமை இருக்கலாம். சில நேரங்களில் என் வீட்டில் எல்லாரும் சூழ்ந்திருந்தாலும் தனிமை என்ற உணர்வு என்னை வாட்டி எடுக்கலாம்.

இதுவரை தான் படைத்த அனைத்தும் 'நன்று', 'நன்று' என்ற கடவுள், முதன் முறையாக 'மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று!' என்று வருத்தப்படுகின்றார். ஆக, தனிமை என்ற உணர்விற்கு மருந்தாக முன்வைக்கப்படுபவர் பெண். அடுத்ததாக, 'தனக்கு தகுந்த துணையை மனிதன் காணவில்லை' என்கிறது பாடம். ஆக, ஆதாம் இதுவரை பெயரிட்ட மரங்கள், விலங்குகள் அனைத்தும் அவனுக்கு கீழே இருப்பவை. அவனுக்கு நிகராக இருக்கும் 'துணை' அங்கு இல்லை. இந்தத் துணையை ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்குகிறார் கடவுள். மேலும், எடுத்த இடத்தை சதையால் அடைக்கிறார். என்ன ஒரு விந்தை? 'எலும்பு சதையால் அடைக்கப்படுகிறது. எலும்பு ஒரு சதையாக உருப்பெறுகிறது.' அதாவது, 'கடினம்' என்னும் இயல்பு, 'மென்மை' என்ற இயல்பாக மாறுகிறது. மேலும், 'கடினம்' என்ற இயல்பை, 'மென்மை' என்ற இயல்பு நிரப்புகிறது. ஆணின் தலையிலிருந்து பெண் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணை ஆட்சி செலுத்த முடியாது. ஆணின் காலிலிருந்து அவள் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணுக்கு அடங்கி இருக்க முடியாது. மாறாக, அவள் விலா எலும்பிலிருந்து, இதயத்திற்கு அருகில் இருந்து எடுக்கப்படுகிறாள். ஆகவே, அவள் ஆணுக்குச் சமமாக இருக்கிறாள். ஆண் அவளை இதயத்திற்கு அருகில் வைக்க வேண்டும். பெண் அந்த இதயத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இறுதியாக, திருமணத்தின் நோக்கம். 'கணவன் தன் தாய் தந்தையை விட்டு' (தொநூ 2:24) என்ற இந்த வசனம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இங்கே ஆதாம்-ஏவாள்தான் முதற்பெற்றோர். இவர்களுக்குத் தாய் தந்தையர் யாருமில்லை. திருமணத்தில் ஆண் தன் பெற்றோரை விட்டு பெண்ணோடு சேரும் பழக்கம் நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் பெண்தான் தாய் தந்தையைவிட்டு தன் கணவனோடு கூடி வருகின்றார்.

திருமண உறவில் நிகழும் பெரிய மாற்றம் என்னவென்றால் ஆணும், பெண்ணும் புதிதாய்ப் பிறக்கின்றனர். இனி பழைய உறவுகளை அவர்கள் பிடித்துக் கொண்டிருத்தல் கூடாது. ஆக, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தங்களையே அவர்கள் முழுவதுமாக ஒருவர் மற்றவருக்குக் கையளித்தல் வேண்டும். முதல் வாசகத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது, 'ஆணுக்கு' ஏற்ற உயிர்த்துணையாக 'பெண்' இருக்கிறாள். ஒரே உடலிலிருந்து எடுக்கப்பட்டதால், 'ஆண்' என்ற ஒருபாதியின் மறுபாதியாக இருக்கிறார் 'பெண்.' மேலும், இங்கே ஒருவர் மற்றவரின் தனிமையை நிரப்புவதால், ஆண்மையும், பெண்மையும் நிரப்புதன்மை கொண்டிருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 2:9-11) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு இத்திருமடலிலிருந்துதான் வாசகங்கள் தொடரும். 'வானதூதர்கள்,' 'மனிதர்கள்' என்ற இரண்டு பரந்த வகையினத்தைப் பற்றிப் பேசுகின்ற திருமடலின் ஆசிரியர், 'வானதூதர்களுக்கு மேலாக' இருந்த இயேசு, தான் மனித உரு ஏற்றபோது, அந்த நிலையிலிருந்து 'தாழ்ந்தவராக' இருக்கிறார் என்று முன்வைக்கின்றார். இவரின் இந்த இறங்கிவருதலே, அவர் மனிதர்களை, 'சகோதரர், சகோதரிகள்' என்று அவர் அழைக்கக் காரணமாக இருக்கிறது. அதாவது, 'இயேசு இவர்களைச் சகோதரர், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை' என பதிவு செய்கிறார் ஆசிரியர்.

'கடவுளாக' இருந்த இயேசு, 'மனித' உரு ஏற்றதால், மனிதர்களை அவர் தம் 'உயிர்த்துணையாக' ஏற்றுக்கொள்கின்றார். மனிதராக அவர் மாறியது எதற்காக? மனிதர்களைத் தூய்மையாக்கவதற்காக. அதாவது, மனிதத்தின் மறுபாதியான தூய்மையை அவர்கள் கண்டுகொள்வதற்காக. இறுதியாக, இயேசுவின் மனித உரு ஏற்ற நிலை அவரை - கடவுளை - மனிதர்களோடு நிரப்புகிறது. இவ்வாறாக, கடவுளும் மனிதர்களும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்பவர்களாக அல்லாமல், நிரப்புபவர்களாக மாறுகின்றனர். இன்றைய நற்செய்தி வாசகத்தை (காண். மாற் 10:2-16) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

1. மணவிலக்கு பற்றிய இயேசுவின் போதனை (10:2-12)

2. இயேசு சிறுபிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் (10:13-16) 1. மணவிலக்கு அல்லது மணமுறிவு இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மணமுறிவு பற்றி கட்டளை அல்லது விதிமுறை ஆணைக் காப்பாற்றும் முகமாகவும், பெண்ணை இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது. இயேசு அந்த விதிமுறை கொண்டிருந்த அவலத்தை தோலுரிக்கின்றார். மணவிலக்கு என்பது பற்றிய இயேசுவின் போதனை படைப்புத் திட்டத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. படைப்புத் திட்டத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிய இடம் இருக்கிறது என்றும், இதில் தடுமாற்றம் நிகழும்போது மனிதர்கள் கடவுளின் படைப்புத் திட்டத்தோடே விளையாடுகிறார்கள் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றார் இயேசு. மேலும், மணமுறிவு விபச்சாரத்திற்கு வழிவகுக்கிறது என்பதும் இயேசுவின் போதனை. விபச்சாரத்தில் பெண் விலை பேசப்படுகின்றார். விபச்சாரத்தில் பெண் வெறும் மோகப்பொருளாகப் பயன்படுத்துகின்றார். அன்பு செய்யப்படுவதற்காக படைக்கப்பட்ட ஒன்றை பொருள் போல பயன்படுத்தத் துவங்குவது படைத்தவரையே இழிவு செய்வதாகும். ஆண் மற்றும் பெண் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் உயிர்த்துணையாக இருப்பதற்குத்தானே தவிர, ஒருவர் மற்றவரின் 'உடல்துணையாக' இருப்பதற்கு அல்ல. வெறும் உடல்துணையாக தன் மறுபாதியை கருதும்போதுதான், மணமுறிவு, விபச்சாரம், திருமணத்திற்குப் புறம்பே உறவு போன்றவை தோன்றுகின்றன.மேலும், இப்படிப்பட்ட பிறழ்வுகளில் மனிதர்கள் தங்களுக்கான மறுபாதியை பல மறுபாதிகளில் தேடி அங்கலாய்க்கின்றனர். இறுதியில், ஒருவருக்கொருவர் உள்ள நிரப்புதன்மை மறைந்து, எதிர்தன்மை வளர ஆரம்பிக்கிறது.

2. குழந்தைகள் ஆசீர் பெறுதல் இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வையும் மாற்கு நற்செய்தியாளர் தொடர்ந்து பதிவு செய்வது, திருமணத்தின் நிறைவு குழந்தைப்பேறு என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. 'குழந்தைகள்' திருமண உறவின் நீட்சிகள். 'பெற்றோர்' என்பவர்களின் 'வாழ்க்கைத்துணை' 'குழந்தைகள்.' 'பெற்றோர் நிலையின்' மறுபாதிதான் 'பிள்ளைநிலை'. மேலும், பெற்றோர் பிள்ளைகளை, பிள்ளைகள் பெற்றோரை நிரப்புகின்றனர். இவ்வாறாக, இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், இரண்டாம் வாசகம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், நற்செய்தி வாசகம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இன்றைய நம் வாழ்க்கைச் சூழலில், இம் மறுபாதி நிலையும், நிரப்புதன்மையும் முன்வைக்கும் சவால்கள் எவை? ஒரே பாலின திருமணம், திருமணம் தவிர்த்த குழந்தைப்பேறு, தனக்குத்தானே திருமணம், தனிப்பெற்றோர், இணைந்து வாழ்தல், ஒப்பந்த திருமணம் என இன்று திருமணம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு 'பிரமாணிக்கமின்மையாக' பார்க்கப்பட்ட நிலை மாறி, 'விருப்பநிலை' என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது.

காலப்போக்கில், அறிவியில் மற்றும் விஞ்ஞான மாற்றத்தால் ஒருவேளை மனிதர்கள் இறவாநிலையை அடைந்தார்கள் என்றால் - அதாவது, இயற்கை மரணத்தை தள்ளிப்போடுவது - முதலில் உடையும் நிறுவனம் திருமணமாகத்தான் இருக்கும். ஏனெனில், 200 அல்லது 300 ஆண்டுகள் வரை வாழும் மனிதர் ஒரே வாழ்க்கைத் துணையோடு வாழும் நிலை எப்படி இருக்கும்? மேலும், இன்று ஆண்-பெண், கணவன்-மனைவி உறவு நிலையில் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருவதும் கண்கூடு. நாம் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் பேசும் 'உயிர்த்துணை,' 'மறுபாதி,' 'நிரப்புதன்மை' ஆகியவை சாத்தியமா?

முதலில், இந்த மூன்று சொற்களுக்கும் மையமாக இருக்க வேண்டிய வார்த்தை மதிப்பு. அது என்ன மதிப்பு? ஆண்-பெண் திருமண உறவில், நீதி மற்றும் அன்பைவிட முக்கியமானதாக இருக்க வேண்டிய ஒரு பண்பு என்னவென்றால் மதிப்பு. அதாவது, ஒருவர் மற்றவரை மதித்தல். மதித்தால்தான் நீதிக்கும் அன்புக்கும் அடித்தளமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் சாலையில் நடந்து செல்கிறேன். வழியில் ஒருவர் கேட்பாரின்றி படுத்திருக்கிறார். அவரை நான் மதித்தால்தான் அவருக்கு அருகில் சென்று அவரை நான் அன்பு செய்யவும், அவருக்கான நீதியை நான் பெறவும் முடியும். 'அவர் யாரே' என நான் வெறும் பிளாஸ்டிக் பேப்பர் போல அவரை நினைத்துக்கொண்டு கடந்து சென்றால், அவரை நான் மதிப்பதில்லைதானே. ஆக, 'மதிப்பு' இருக்கும் இடத்தில் பிரமாணிக்கமின்மை மறையும். 'மதிப்பு' இருக்கும் இடத்தில் புரிதல் இருக்கும். இன்று, திருமண உறவோ, அல்லது துறவற உறவோ, அல்லது நட்பு உறவோ, அங்கே நம்மோடு உறவில் இருப்பவர் நம் மறுபாதியாக, நம் உயிர்த்துணையாக, நம்மை நிரப்புபவராக இருக்கிறார். அவருக்கு நான் கொடுக்க வேண்டியதெல்லாம் மதிப்பு மட்டுமே. அவர் 'என் மதிப்பிற்குரிய மறுபாதி' என்ற நிலை வந்தால் பாதி பிரச்சினை முடிந்துவிடும். இரண்டாவதாக, கண்ணுக்குப் புலப்படாத இறைத்தன்மை. நம் சக பாதியை, சக உயிர்த்துணையை நாம் வெறும் புறக்கண்களால் பார்த்தால் அவருடைய மனிதத்தன்மையும், குறைவும்தான் நம் கண்களில் படும். மாறாக, மற்றவரில் இருக்கும் இறைத்தன்மையை, அல்லது இறைவனின் கண் கொண்டு மற்றவரைப் பார்க்கும்போது, நாமும் ஆதாம்போல, 'இதோ, இவர் என் எலும்பின் எலும்பு, சதையின் சதை' என்று நாமும் சொல்ல முடியும். மூன்றாவதாக, ஒருவர் மற்றவரின் கைப்பாவை என்ற நிலை மாற வேண்டும். எப்படி? கண்ணாடிப் பொருள்களை நாம் இடமாற்றம் செய்யும்போது, அவற்றை நாம் பொதியம் செய்து, அதன் மேல், 'உடையும் பொருள் - கவனம்' என எழுதுகிறோம். ஆனால், இப்படி எழுதப்படாத ஒட்டி ஒன்றை ஒவ்வொரு மனிதரும் தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.

மனிதர்கள் தங்களுக்குள்ளே உணர்ந்த முதல் எதிர்மறை உணர்வு 'தனிமை.' இந்தத் தனிமையே மனிதரின் 'வடுப்படும்நிலை' ('vulnerability') அல்லது 'நொறுங்குநிலை' (fragility) இந்த நொறுங்குநிலையில் இருக்கும் ஒரு ஆண், இதே நொறுங்குநிலையில் இருக்கும் பெண்ணின் துணையை நாடுகிறான். படைப்பின் தொடக்கத்தில் அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள், 'மனித தனிமையை மட்டும் நல்லதன்று' (முதல் வாசகம்) என அறிகிறார். இத்தனிமையைப் போக்க தக்க துணை ஒன்றை படைக்கின்றார். பெண் ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பில் உருவாக்கப்பட்டவள் என்று உருவகப்படுத்துவதன் வழியாக, உடைத்து எடுக்கப்பட்ட விலாவிலிருந்து எடுக்கப்பட்ட பெண் தானும் உடைந்திருப்பதால், உடைந்திருக்கும் ஆணை உறுதிப்படுத்துவது தொடர் போராட்டமாகவே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

'இதோ, இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள்' என ஆண் அவனை அரவணைத்துக்கொண்டாலும், 'இருவரும் ஒரே உடலாய் இருந்தாலும்,' 'எப்போது நாம் பிரிந்துவிடுவோமோ?' என்ற பயம் இருவரிடமும் இருந்துகொண்டே இருக்கும். மோசேயின் சட்டம் 'மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம்' (நற்செய்தி வாசகம்) என்று ஆணுக்கு அதிகாரம் கொடுத்திருந்ததால், பெண் ஆணின் இரக்கத்திலேயே இருக்க வேண்டிய பொம்மை ஆனாள். பாவை (பெண்) ஆணின் கைப்பாவை ஆனாள். தன் மனைவியை விலக்கிவிடும் ஆண் மீண்டும் தனிமை ஆகிறான். அந்தத் தனிமை என்னும் உடைந்த நிலைக்கு முட்டுக்கொடுக்க வேறொரு பெண்ணை நாடுகிறான். அங்கே வேறொரு பெண்ணும் பொருளாக பயன்படுத்தப்படுகிறாள்.

ஆண்-பெண் உறவு தனிமை போக்கும் இனிமையாக மாறுவது எப்படி? இருவர் உறவில் இருக்கும் பயன்பாட்டுநிலை மறைந்து அன்பு உருவாவது எப்படி? இரண்டு வழிகள்: (அ) ஒருவர் மற்றவரின் 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்வது. இறைமகன் இயேசுவே மனித 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்ள மனிதராக வருகின்றார். மனிதர்களை தன் 'சகோதர, சகோதரிகள் என அழைக்க அவர் வெட்கப்படவில்லை' (இரண்டாம் வாசகம்). (ஆ) கணவன் மனைவியை, மனைவி கணவனை தன் குழந்தைபோல ஏற்றுக்கொள்வது. குழந்தைகளின் நொறுங்குநிலையை நாம் எப்படி மதிக்கிறோமோ, அப்படி ஒருவர் மற்றவரின் நொறுங்குநிலையை மதிப்பது. இம்மேலான புரிதலில் இருப்பவர்களுக்கு ஆண்டவர் வாழ்நாளெல்லாம் ஆசி வழங்குவார் (திபா 128).

இறுதியாக, பாதியாக இருக்கும் நம்மை வாட்டுவது தனிமையும், சோர்வும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் மறுபாதிகள். இவர்களை மதிப்புற்குரியவர்கள் என நாம் எண்ணி செயலாற்றும்போதும், நாம் ஒருவர் மற்றவரை நிரப்ப முடியும். 'என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ தெரியும் நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்ற நிலையில் நான் மற்றவரோடு இணைந்திருக்கிறேன். இந்த இணைந்திருத்தலில் மதிப்பு இருந்தால் அங்கே நிரப்புதன்மை நிரம்பி வழியும்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org