Get Adobe Flash player
மேலுடையை எறிந்துவிட்டு ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
 அருள்பணி இயேசு கருணாநிதி  திருச்சி

28 அக்டோபர் 2018: ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு 
I. எரேமியா 31:7-9  II. எபிரேயர் 5:1-6   III. மாற்கு 10:46-52

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் வாசிக்கும் பதிலுரைப்பாடல் (திபா 126) மிக அழகான வரிகளைக் கொண்டுள்ளது. அவற்றிலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்' என்பது நம் பல்லவியாக இருக்கிறது.
 
'சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்' என்றும், 'கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்பவர்கள் அறுவடை செய்வார்கள்' என துள்ளிக்குதிக்கின்றார் பாடல்ஆசிரியர்.
 
ஆண்டவராகிய கடவுள் அடிமை நிலையை ஒரே இரவில், ஒரு கனவுபோல மாற்றிவிடுகின்றார். ஆனால், இந்த மாற்றத்தை நாம் உணர, நாம் அவரை (அ) கண்டுகொள்வதும், (ஆ) 'அவர் யாரென' அறிக்கையிடுவதும், மற்றும் (இ) அவரிடம் இடைவிடாது இறைஞ்சுவதும் அவசியமாகிறது.
 
இன்றைய முதல்வாசகம் (காண். எரே 31:7-9), எரேமியா நூலின், 'ஆறுதலின் புத்தகம்' (எரே 30-31) என்ற பகுதியிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ரயேல் மக்களுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய சோகம் அவர்கள் பாபிலோனி யாவுக்கு அடிமைப்பட்டிருந்ததுதான். பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் இஸ்ரயேல் மக்களை இறைவன் எப்படி வழிநடத்திச் செல்வார் என்று எரேமியா இறைவாக்குரைக்கிறார். இன்றைய முதல்வாசகத்தில் நிறைய உருவகங்கள் கையாளப் படுகின்றன: வடக்கு நாடு - பாபிலோன், எஞ்சியோர் - தப்பிப் பிழைத்தோர், பார்வையற்றோர் - நம்பிக்கை இழந்தோர், ஊனமுற்றோர் - வாழ்வில் முன்னேற்றம் காணாதோர், கருவுற்றோர் - நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கு கொண்டோர், பேறுகாலப் பெண்டிர் - மற்றவர் களின் கவனம் தேவைப்படுவோர், நீரோடை - வளமை. அழுகையோடு அவர்கள் வந்தாலும், ஆறுதலோடு அணைத்துக்கொள்வார் இறைவன் என இறைவனின் புதிய வாக்குறுதியை முன்வைக்கின்றார் எரேமியா.
 
'அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்' என்பது இந்த வாசகப் பகுதியின் பொருள்கோள் சாவியாக இருக்கிறது. இங்கே 'அழுகை' என்பது அவர்களின் மனமாற்றத்தின் அடையாளமாக இருக்கிறது. மேலும், மனம் பேசும் மௌனமொழியே அழுகை.
 
இவ்வாறாக, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் அருளும் விடுதலையைக் கண்டுகொள்ள, தங்களின் பாவம் என்னும் மேலாடையைத் தூக்கி எறிய முன்வர வேண்டும்.
 
இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படி தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார்.
 
இன்றைய இரண்டாம் வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
அ. தலைமைக்குரு - பணியும், தேர்வும்
ஆ. இயேசுவின் - பணியும், தேர்வும்
 
தலைமைக்குருவின் முக்கியப் பணி பாவம் போக்கும் பணி. 'யோம் கிப்பூர்' என்று சொல்லப்படும் நாளில் தலைமைக்குரு எருசலேம் ஆலயத்தின் திருத்தூயகத்திற்குள் நுழைவார். தன் கைகளில் இரண்டு ஆடுகளை எடுத்துச் செல்வார். அவரின் இடுப்பில் ஒரு நீண்ட கயிறு கட்டப்பட்டிருக்கும். எதற்காக? அவர் திருத்தூயகத்திற்குள் இருக்கும்போது ஒருவேளை இறந்து போனால் அவரை வெளியே இழுப்பதற்காகத்தான் இந்தக் கயிறு. திருத்தூயகத்திற்குள் தலைமைக்குரு தவிர வேறு யாரும் நுழைய முடியாது. நுழையக் கூடாது. அவர் எடுத்துச் செல்லும் இரண்டு ஆடுகளில் முதலாவதை தன் பாவங்களுக்காக அவர் பலியிடுவார். இரண்டாவது ஆட்டை எல்லா மக்களின் பாவங்களுக்காகவும் பலியிடுவார். பலியிடப்பட்ட ஆட்டின் ரத்தத்தை ஒரு வாளியில் எடுத்துக்கொண்டு அதில் ஈசோப் தண்டைத் தோய்த்து பீடத்தின் மேலும், பின் வெளியே வந்து மக்களின் மேலும் தெளிப்பார். இதுதான் பாவம் போக்கும் பலி நடக்கும் முறை. ஆக, தலைமைக்குரு வலுவில்லாதவர், அதாவது மனிதர் என்பதால் பாவ இயல்பு கொண்டவர். மேலும், தானே ஒரு பாவி என்பதால் பாவிகளாகிய மற்றவர்கள்மேல் பரிவிரக்கம் கொள்ள அவரால் முடிகிறது. இதுதான் 'எம்ப்பதி' ('சிம்ப்பதியை'விட ஒருபடி மேல்). வலுவில்லாத அவரைக் கடவுள் தேர்ந்து கொள்கிறார்.
 
இயேசுவுக்கு இந்த அழைப்பு கடவுளிடமிருந்துதான் வருகிறது. 'நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று கடவுள் அவரைத் தேர்ந்து கொள்கிறார். தான் தெரிந்துகொள்ளப்பட்ட பணியை இயேசுவும் இனிதே செய்துமுடிக்கின்றார்.
 
இயேசு மற்ற தலைமைக்குருக்களைப் போல லேவியர் குலத்தில் பிறந்தவரோ, அல்லது ஆரோனின் குடும்பத்தின் வழி வந்தவரோ அல்லர். மாறாக, அவர் நேரடியாக கடவுளின் குருத்துவத்தில் பங்கேற்பதாலும், மெல்கிசேதேக்கின் முறைமைப்படி இருப்பதாலும் அவர் என்றென்றும் குருவாக இருக்கின்றார்.
 
இந்த நிலையில் இருக்கும் இயேசு, தன் மேலாடையை அகற்றி தனக்குக் கீழ் இருக்கும் வலுவற்றவர்களுக்கும் கனிவிரக்கம் காட்டுகிறார்.
 
இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு 10:46-50) ஒரு அறிகுறி அல்லது அற்புதம் வகையாக இல்லாமல், ஒரு உவமை அல்லது உருவகம் வகையாக இருக்கிறது. எப்படி? முதலில் நற்செய்திப் பகுதியின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வோம்:
 
சொல்லின்பம்:
 
1. 'பர்த்திமேயு' என்றால் 'திமேயுவின் மகன்' என்றுதான் பொருள் - 'பர்' என்றால் அரமேயத்தில் 'மகன்' என்று பொருள். ஆனால் இன்றைய நற்செய்தியில் 'திமேயுவின் மகன்' 'பர்த்திமேயு' என்று அடுக்குத்தொடர் உள்ளது முதல் விநோதம்.
 
2. மாற்கு 8:22-26ல் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று, எச்சில் உமிழ்ந்து பார்வையற்றவருக்கு பார்வை தந்த இயேசு பொதுவிடத்தில் பர்த்திமேயுக்கு பார்வை தருவது இரண்டாவது விநோதம்.
 
3. 'தாவீதின் மகன்' - இதுவரை இயேசுவுக்கு பயன்படுத்தாத ஒரு டைட்டிலை இங்கு பயன்படுத்துகிறார் மாற்கு. இரண்டு காரணங்கள்: இயேசு எருசலேமை அல்லது சீயோனை நெருங்கிவிட்டார். எருசலேம் என்றால் அது தாவீதுடன் தொடர்புடையது (திபா 118:26, செக் 9:6). ஆக இயேசுவின் நெருக்கத்தை இந்த 'தாவீதின் மகன்' டைட்டில் உணர்த்துகிறது. இரண்டு, இன்னும் சில நாட்களில் இயேசுவை மக்கள் வெற்றி ஆரவாரத்தோடு நகருக்குள் வரவேற்பார்கள். 'ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!' (மாற் 11:10) என்ற மக்களின் களிப்போசையின் முன்னோடியாக இருக்கிறது பர்த்திமேயுவின் கூக்குரல். 'தாவீதின் மகன்' என்பதன் விளக்கத்தை 12:35-37ல் பதிவு செய்கின்றார் மாற்கு.
 
4. 'என்மேல் இரங்கும்' - நாம் திருப்பலியில் பயன்படுத்தும் 'ஆண்டவரே இரக்கமாயிரும்' ஃபார்முலா உருவானது இன்றைய நற்செய்திப்பகுதியிலிருந்துதான்.
 
5. இந்த நற்செய்திப் பகுதியின் முன்பகுதியில் சீடர்களின் புரிந்துகொள்ள இயலாத நிலை. இந்த நற்செய்தியின் தொடர்ச்சியாக இயேசுவின் எருசலேம் நுழைதல் என்று அமைத்திருக்கின்றார் மாற்கு. பர்த்திமேயுவின் கண்கள் மட்டும் பார்வையின்றி இல்லை. மாறாக, இயேசுவைப் புரிந்து கொள்ளாத சீடர்களின் கண்களும், பர்த்திமேயுவை அதட்டுகின்ற மக்கள் கூட்டமும், இயேசுவைக் கொல்லக் காத்திருக்கும் எருசலேமும்தான் பார்வையின்றி இருக்கின்றது. ஆகையால் இந்த அறிகுறி ஒரு உருவகமாகவே அமைந்திருக்கின்றது.
பொருளின்பம்:
1. 'அவரைக் கூப்பிடுங்கள்!' - இயேசுவின் இந்தக் கட்டளைதான் இன்றைய நற்செய்திப்பகுதியின் மையம். பர்த்திமேயு இயேசுவைக் கூப்பிட்டார். இயேசுவும் பர்த்திமேயுவைக் கூப்பிடுகின்றார். ஆக, கடவுளை நோக்கி நாம் எழுப்பும் கூக்குரல் ஒருபோதும் வீணாய்ப்போவதில்லை. கடவுள் கண்டிப்பாய் ஒருநாள் நின்று நம்மையும் கூப்பிடுவார்.
2. யார் தடைக்கல்லாக இருந்தாரோ, அவரைப் படிக்கல்லாக மாற்றுகிறார் இயேசு. 'அடேய்! சும்மாயிரு!' என்று அதட்டிய மக்கள் கூட்டம், 'தம்பி! துணிவோடிரு!' என்று நம்பிக்கை கொடுக்கிறது. இது நமக்கு இரண்டு வாழ்வியல் பாடங்களைத் தருகிறது:
 
அ. நமக்கு எதிராக இருப்பவர்களை கடவுள் நம் சார்பாக மாற்றுவார். நம் குடும்பம், நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர் எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார். இதைத்தான் இன்றைய பதிலுரைப் பாடலும் 'விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள். அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள்' (திபா 126:6) என்று சொல்கின்றது. நம்மை அழவைத்தவர்களே நம்மைச் சிரிக்கவும் வைப்பார்கள்.
ஆ. இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை. ஆம், நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் வேகமாக மாறக் கூடியவர்கள். அவர்கள் பேசும் வார்த்தைகள் சோப்பு நுரை போன்றவை. 'அடேய்!' என்று அதட்டியவர்கள் 'தைரியமாய் இரு!' என்று ஆறுதல் சொல்கிறார்கள். அதட்டினார்கள் என்பதற்காக நாம் சோர்ந்துவிடவும் கூடாது. ஆறுதல் தருகிறார்கள் என்பதற்காக துள்ளிக்குதிக்கவும் கூடாது.
 
3. 'இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' - இந்த வார்த்தைகளை மக்கள் பர்த்திமேயுவிடம் சொல்கின்றனர். நான் இன்று எத்தனை பேரை இந்த வார்த்தைகளால் இயேசுவிடம் அழைத்துவந்திருக்கிறேன். முதலில் நான் இயேசுவை அனுபவித்தால்தான் மற்றவர்களை அவரிடம் அழைத்துக் செல்ல முடியும். நான் அவரின் வார்த்தைகளைக் கண்டுகொண்டால்தான் அதை மற்றவர்களுக்கும் சொல்ல முடியும்.
 
4. பர்த்திமேயுவின் ரியாக்ஷன் - 'மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளிக் குதிக்கின்றார்' - பார்வை பெறுவதற்குமுன்னே தன் பிச்சை யெடுக்கும் தொழிலுக்கு ஆதாரமான மேலுடையைத் தூக்கி எறிகின்றார். ஆக, மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும். எனக்குப் பார்வையும் வேண்டும், மேலுடையும் வேண்டும் என்று சொல்ல முடியுமா? இன்று நான் ஒவ்வொரு பொழுதும் மேலானதை நோக்கிப் பயணம் செய்தாலும், கீழானது என்னைப் பின்னே இழுத்துக்கொண்டே இருக்கிறது. ஏன் என்னால் என் மேலுடையை எறிய முடியவில்லை. 'துள்ளிக் குதிக்கின்றார்' - மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பே இந்த பர்த்திமேயுக்கு இல்லை. உண்மையான மனச்சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு இவர்.
5. 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்' 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' - இன்று கடவுள் என்னிடம் 'உனக்கு நான் என்ன செய்யணும்?' என்று கேட்டால், பர்த்திமேயு போல என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியுமா? பர்த்திமேயுக்கு இருந்த இலக்கு தெளிவு என்னிடம் இருக்கிறதா?
 
6. 'நீர் போகலாம்' - இயேசு 'போ' என்று அனுப்பினாலும், இயேசுவைப் பின்தொடர்கின்றார். இயேசுவின் சீடர்கள் இயேசுவுக்கும், தங்களுக்கும் என்ன நேருமோ என்ற பயத்தில் அவரைப் பின்தொடர்கின்றனர். ஆனால் இவர் துணிச்சலோடு, துள்ளிக் குதித்துக் கொண்டு பின்தொடர்கின்றார். இயேசுவைப் பின்தொடர்தலில் என் மனப்பாங்கு எப்படி இருக்கிறது?
 
இன்றைய நற்செய்தியின் மையமாக இருப்பது அந்த நபர் மேலாடையைத் தூக்கி எறிந்தது. அவர் தன் வாழ்வின் பாதுகாப்ப என நினைத்ததை உதறித் தள்ளுகின்றார். 'உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்' என்று நற்செய்தி நிறைவு பெறுகிறது. பார்வையற்று இருந்தவர் சீடராக மாறுகின்றார். வாழ்க்கை எப்படி காலை தொடங்கி மாலைக்குள் ஒரு மாற்றத்தை நம்மில் விதைத்துவிடுகிறது?
 
பார்த்திமேயு மேற்கொண்ட நம்பிக்கைப் பயணம் ஐந்து படிநிலைகளைக் கொண்டிருக்கிறது:
 
அ. கண்டுகொள்ளுதல். பார்வையற்ற பர்த்திமேயு இயேசுதாம் போகிறார் என்று கேள்விப்படுகிறார் என்றால் அவரிடமிருந்து திறந்த மனப்பான்மையும், மெசியாவை எதிர்நோக்கிய காத்திருத்தலும் புலப்படுகிறது. இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை அடிப்படையாக இருக்கு வேண்டியது – அவரை இனங்கண்டுகொள்ளும் திறந்த மனநிலை. பல நேரங்களில் இயேசுவின் வருகை நமக்குத் தெரியாமலிருக்கலாம். அல்லது நம் வேலைப்பளு அவரிடமிருந்து நம்மை ஒதுக்கியிருக்கலாம். அல்லது நம்மைச் சுற்றி எழும் பல்வேறு சப்தங்கள் இயேசுவின் மெல்லிய வருகையை அமுக்கியிருக்கலாம். எந்தச் சூழலிலும் திறந்த மனத்தோடு கூடிய எதிர்நோக்கு மட்டுமே இறைவனை நமக்கு அடையாளம் காட்டும் என்பது பர்த்திமேயு கற்பிக்கின்ற முதல் பாடம்.
 
ஆ.அறிக்கையிடுதல். கூட்டத்தினர் அதட்டினாலும், தன் கூக்குரலைக் குறைக்கவில்லை பர்த்திமேயு. இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை அறிக்கையிடவும், எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவும் தடையாக இருக்கின்ற நம்மிடம் உள்ள ஒரு குறை என்ன வென்றால் 'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?' 'அடுத்தவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?' 'அடுத்தவர்கள் என்னை அதட்டுவார்களே?' இப்படியாக அடுத்தவர்களைக் குறித்த பயம் நம் நம்பிக்கை வாழ்வில் தயக்கத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்துகின்றது. எரிக்கோவின் மக்கள் கூட்டத்தின மனநிலையும் வித்தியாசமாக இருக்கின்றது. பேசாதிருக்குமாறு அவரை அதட்டியவர்களே, 'துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உன்னைக் கூப்பிடுகிறார்' என்ற அழைக்கின்றனர். இதுதான் 'கூட்டத்தின்' மனநிலை. இப்படியும் பேசுவார்கள், அப்படியும் பேசுவார்கள். தாங்கள் பேசுவதை அப்படியே மாற்றிப் பேசும் இரட்டை நாக்குதான் கூட்டம். பிறரின் அபிப்ராயத்தை மட்டும் மையப்படுத்தினால் நம் வாழ்விலும் பின்னடைவுதான் வரும்.
 
இ. மன்றாடுதல். நான் மீண்டும் பார்வை பெற வேண்டும். 'மீண்டும்' பார்வை பெற வேண்டுமென்றால், பர்த்திமேயு பிறவியேலேயே கண்பார்வையற்றவர் கிடையாது என்பது புலப்படுகிறது. ஏற்கனவே கண் தெரிபவராக இருந்து காலப்போக்கில் ஏதாவது ஒரு விபத்தினாலோ, நோயினாலோ, காயத்தினாலோ கண்பார்வையை இழந்திருக்கலாம். இதையே நம்பிக்கையின் உருவகமாகப் பார்த்தோமென்றால் பிறப்பின் போது நாம் அனைவரும் இறைச்சாயலும், இறைநம்பிக்கையும் ஒளிரக்கூடியவர்களாகத்தான் பிறக்கின்றோம். ஆனால் காலப்போக்கில் வாழ்க்கை அனுபவங்களில், காயங்களில், சோர்வுகளில், பலவீனங்களில் அதை இருளடையச் செய்து விடுகின்றோம். 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்பது பார்த்திமேயுவின் ஏக்கமாக மட்டுமல்ல, நம் ஏக்கமாகவும் கூட இருக்கின்றது.
 
ஈ. விட்டுவிடுதல். 'மேலுடையை எறிந்துவிட்டு இயேசுவிடம் வந்தார்'. மேலுடை என்பது பர்த்திமேயுவின் பழைய வாழ்க்கையைக் குறிக்கின்றது. இயேசுவின் பிரசன்னம் நிறைவு தரும் என்று நம்பிக்கை அவரின் இறந்தகாலத்தைத் தூக்கியெறிந்து விட்டு புதிதாய்ப் பிறக்க அவரை அழைத்தது. நம் வாழ்வில் இயேசுவை நம்பிக்கையோடு அணுகிச் சென்றாலும் ஏதோ ஒன்றை நாம் பற்றிக்கொண்டு, நம் மேலுடையை விட்டுவிடத் துணியாதவர்களாகத்தான் இருக்கின்றோம்.
 
உ. பின்பற்றுதல். பார்வை பெற்றவுடன் இயேசுவைப் பின்பற்றி அவருடன் வழிநடக்கின்றார். நம்பிக்கையின் இறுதிப் படி இயேசுவோடு வழி நடப்பது. அந்த வழி பாடுகள் என்னும் எருசலேமிற்கு அழைத்துச் சென்றாலும் துணிந்து நடக்கின்றார் பர்த்திமேயு. நம் வாழ்வின் நம்பிக்கையும் இயேசுவோடு வழிநடக்கத் தூண்டுகிறதா அல்லது துன்பங்களைக் கண்டு துவண்டுவிடச் செய்கின்றதா?
 
இறுதியாக, 'எல்லாம் முடிந்தாலும், இறைவன் அங்கே விடியச் செய்வார்' என்பது என் நம்பிக்கையாக இருந்தாலும், சில நேரங்களில் அது வெறும் நம்பிக்கையாக இருந்துவிடுகிறது. செயலாக உருவெடுக்க மறுக்கிறது. இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை அவர்களின் கண்ணீரில் வெளிப்படுகிறது. இயேசுவின் நம்பிக்கை அவரின் இரக்கக் குணத்தில் வெளிப்படுகிறது. பார்த்திமெயுவின் நம்பிக்கை அவர் மேலாடையைத் தூக்கி எறிந்ததில் வெளிப்படுகிறது.
 
'யூ கேன்னாட் ஹேவ் தெ புட்டிங் அன்ட் ஈட் இட்' "You cannot have the pudding and eat it too"  என்பார்கள் - அதாவது, ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற முடியும். இரண்டும் வேண்டும் என்று நினைப்பது இரண்டு இருசக்கர வாகனங்கள் மேல் அமர்ந்து பயணம் செய்வதுபோலாகும். அவற்றில் எது எந்த வழி செல்லும் என்பது நமக்குத் தெரியாது. நம்பிக்கை செயலாக மாறும்போது நானும் அவரின் சீடராவேன். அவருக்கு அருகில் நடந்தவர்கள் அவரைப் பின்பற்றவில்லை. ஆனால், அவருக்காக தன் பாதுகாப்பையும் இழந்தவர் அவரைக் கண்டுகொண்டு அவரைப் பின்தொடர்கிறார்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org