Get Adobe Flash player

மறையுரைச் சிந்தனை (நவம்பர் 01)
அனைத்துப் புனிதர்களின் விழா
அருள்பணி மரிய அந்தொனிராசு பாளையங்கோட்டை
All saints 02

புனிதர்கள் – தூயவர்கள் – வானதூதர்களைப் போன்று விண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள் அல்ல, மாறாக அவர்கள் நம்மைப் போன்று மண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள்; சாதாரண மனிதர்கள். அப்படியிருந்தாலும் தங்களுடைய வாழ்வால், பணியால் புனிதர்களாக உயர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இன்றைய நாளில் நாம் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம். ஆம், இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களுடைய விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது.இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்த புனிதர்களின் எண்ணிக்கை வெறும் 365 மட்டுமே, ஏராளமான புனிதர்கள் இருக்கிறார்கள். திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் படிப்பது போன்று, “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான புனிதர்கள் இருக்கிறார்கள் (திவெ 7: 9). எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து பார்ப்பதற்குத்தான் திருச்சபை ஒருநாளை ஒதுக்கி, அவர்களைச் சிறப்பு செய்கிறது.

முதலில் அனைத்துப் புனிதர்களின் விழா தோன்றியதன் வரலாற்றுப் பின்னணியை சிந்தித்துப் பார்த்து, அதன்பின் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இவ்விழா கொண்டாடப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்போது நான்காம் நூற்றாண்டில் ‘கிறிஸ்த மதத்தைப் பின்பற்றியதற்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாப்பட்டதற்கான ஒரு சில குறிப்புகள் இருக்கின்றன. ஆனாலும் அது சிறிய அளவில்தான் நடந்திருக்கின்றது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை நான்காம் போனிபெஸ்தான் (608 -615) ரோம் நகரில் இருந்த ‘பந்தேயோன்’ என்று அழைக்கப்படுகின்ற அனைத்துக் கடவுள்களின் கோவிலை இடித்துத் தள்ளி, அந்த இடத்தில் கிறிஸ்துவுக்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களின் நினைவாக ஆலயம் ஒன்று எழுப்பினார். அன்றிலிருந்துதான் அனைத்துப் புனிதர்களின் விழா படிப்படியாக வளர்ந்தது.

கி.பி 993 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. இப்படிதான் அனைத்துப் புனிதர்களின் விழா நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடும் நிலை ஏற்பட்டது.

இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக இவ்விழா புனிதர்கள் – தூயவர்கள் – ஆகியோரின் எடுத்துகாட்டான வாழ்வை நினைவுகூர்ந்து பார்க்க நமக்கு அழைப்புத் தருகின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 13:7 ல் வாசிக்கின்றோம், உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்” என்று. ஆம், இன்றைய நாளில் நாம் அவர்களை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்.

இரண்டாவதாக புனிதர்கள் – தூயவர்கள் – எப்போதும் இறைவனின் திருமுன் நின்றுகொண்டு எப்போதும் நமக்காக பரிந்துபேசுபவர்களாக இருக்கிறார்கள். எனவே அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.

மூன்றாவதாக புனிதர்களைப் போன்று நாமும் நல்வழியில் நடந்து புனித நிலையை அடையவேண்டும். அதனைத்தான் இவ்விழா நமக்கு சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. தூய அகுஸ்தினார் கூறுவார், “அவனும் அவளும் புனிதராக, புனிதையாக மாறும்போது, ஏன் உன்னால் முடியாது?” என்று. ஆம், நம்மாலும் புனித நிலையை அடையலாம். அதற்கான வழிமுறைகளைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எட்டு விதமான பேறுபெற்றவர்களைப் பற்றி பேசுகின்றார். நாம் ஏழையரின் உள்ளம் கொண்டவராக, இயேசுவுக்காக துயருறுவோராக, கனிவுடையோராக........ இருக்கின்றபோது நம்மாலும் புனித நிலையை அடையலாம் என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது. நாம் இயேசு குறிப்பிடுகின்ற வழிமுறைகளின்படி வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஆசிரியரிடம் பாடம் கற்ற முன்னாள் மாணவன் ஒருவன் அந்த ஆசிரியரை சந்திக்கச் சென்றான். அவர் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துவிட்டு ஒரு சாதாரண குடிசையில் வாழ்ந்துவந்தார். இதைப் பார்த்த மாணவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “எவ்வளவு பெரிய ஆசிரியர் நீங்கள், எத்தனையோ மனிதர்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றியவர்கள் நீங்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு சாதாரண குடிசையில் வாழ்வதா? என்று கேட்டார். அதற்கு அவர், “இந்த உலகத்தில் நான் ஒரு பயணிதான்” என்றார்.

பின்னர் அவர் மேலே சுட்டிக்காட்டி, “விண்ணகம் என்னுடைய (நம்முடைய) நிலையான வீடு. அங்கே வாழ்வதற்குத்தான் நான் என்னுடைய செல்வத்தை எல்லாம் அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

ஆம், இந்த மண்ணுலகில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நாம் செய்யும் உதவியாவும் விண்ணுலகில் சேர்க்கும் செல்வமாகும். அப்படிப்பட்ட வாழ்வு வாழும்போது நாமும் தூயவர்கள் ஆகின்றோம்.

ஆகவே அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி நாமும் தூயவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org