Get Adobe Flash player
இறந்தவர்களுக்காகச் செபிப்பதில் இருக்கும் ஐந்து சவால்கள்:

அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி

1. இறந்தவர்கள் காலத்தையும், இடத்தையும் கடந்து விடுகிறார்கள். இனி அவர்கள் காலத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்டவர்கள் அல்லர். ஆனால் நாம் செய்யும் செபம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது. உதாரணத்திற்கு, இன்று நான் இறந்தவர்களுக்காக நிறைவேற்றும் திருப்பலி காலத்திற்கும் (மாலை 6:30 மணி), இடத்திற்கும் (தூய யூதா ததேயு ஆலயம்) உட்பட்டது. காலத்திற்கும், இடத்திற்கும் உட்படாத இறந்தவர்களுக்குக் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு நிறைவேற்றும் திருப்பலி எப்படி பலன் தர முடியும்?

2. இயேசுவின் பாடுகள், இறப்பு அனைத்துப் பாவங்களையும் அழித்து, அனைவருக்கும் மீட்பைக் கொண்டு வந்தது. தன் ஒரே பலியால் கல்வாரி மலையில், சிலுவையில் எக்காலத்திற்குமான பாவப்பரிகாரப் பலியை அவர் நிறைவேற்றிவிட்டார். அவர் வழியாக பாவிகள் அனைவரும் மற்றும் எல்லோரும் மீட்பு பெற்றுவிட்டனர். அப்படியிருக்க, எதற்காக உத்தரிக்கிற நிலையில் ஆன்மாக்கள் துன்புற வேண்டும்? இயேசுவின் பலி பரிகாரம் செய்ய முடியாத அளவிற்கு அவர்கள் பாவம் செய்துவிட்டார்களா? அல்லது இயேசுவின் பலி முழுமையான பலி இல்லையா? அல்லது நம் செபங்கள் இயேசுவின் பாடுகளையும், தியாகத்தையும், சிலுவைச்சாவையும் விட மேலானவையா?

3. உத்தரிக்கிற நிலை எப்படி இருக்கும்? ஒரு பெரிய அறை இருக்கும். அங்கே எந்நேரமும் நெருப்பு எரியும். பேய்கள் அல்லது வானதூதர்கள் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரே அழுகையும், அங்கலாய்ப்புமாய் இருக்கும் - என நாம் நம் மறைக்கல்வி வகுப்புகளில் படிக்கின்றோமே அந்த மாதிரி இருக்குமா? அது எப்படி இருக்கும் என யாரும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வந்து சொன்னது கிடையாது. பூமி என்ற கிரகத்தில் வாழும் திருச்சபை இருக்கிறது என்றால், வானக எருசலேமும், உத்திரிக்கிற நிலையும் வேறு கிரகங்களில் இருக்குமா? இறந்தவர்களின் உடல்களை நாம் அடக்கம் செய்து விடுகிறோம். வேற்று உலகில் அவர்கள் நெருப்பில் உழல்வார்கள் என்றால், உடம்பு இல்லாமல் வேறு எதைக்கொண்டு அவர்கள் துன்பத்தை உணர்வார்கள்?

4. எல்லாவற்றையும் இழந்து விட்டு வெறுங்கையராய்த் திரும்பி வந்த ஊதாரி மைந்தனை ஏற்றுக்கொண்டு புத்தாடையும், காலுக்கு மிதியடியும், கைக்கு மோதிரமும் அணிவித்த தந்தையைப் போல வானகத் தந்தை இருக்கிறார் என்றால் தங்கள் வாழ்வில் தங்கள் பாவத்தால் அனைத்தையும் இழந்து விட்டு வெறுங்கையராய் நம் முன்னோர்கள் (பின் நாமும்!) செல்லும்போது இரக்கம் காட்டாமல் துன்புறத்தத் துணிவாரா? இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட நல்ல கள்வன் இயேசுவைப் பார்த்து, 'நீர் அரசுரிமையோடு வரும்போது என்னையும் நினைவுகூறும்!' என்று சொல்லும்போது, 'இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய்!' என்று வாக்குறுதி கொடுக்கும் இயேசு, நம் முன்னோர்கள் (அல்லது நாமோ) செல்லும்போது 'இன்று நீ உத்தரிக்கிற நிலைக்குப் போ. நாளை என் வான்வீட்டிற்கு வரலாம்!' எனச் சொல்வாரா?

5. இந்த உலகில் எண்ணற்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்: இந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களிலேயே கத்தோலிக்கர்கள், லூத்தரன்கள், கால்வினிஸ்டுகள், மெத்தடிஸ்டுகள், பிராடஸ்டன்டுகள் (என இன்னும் பல), நாத்திகர்கள், கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா எனக் கவலைப்படாத நடுநிலையினர் எனப் பலர் இருக்கின்றார்கள். நாத்திகர்களுக்கும், கடவுளைக் கண்டுகொள்ளாதவர்களுக்கும் மோட்சம், நரகம் பற்றிய கவலை இல்லை - இருக்கிற ஒரு வாழ்க்கையை நன்றாக வாழ்வோம் என்பதே அவர்களின் மோட்சம். இப்படியிருக்க, கிறித்தவ மதம் என்ற ஒன்றில் இருப்பதால் மட்டும்தானே 'நரகம், உத்தரிக்கிற நிலை!' என்ற பயம் வருகிறது. கிறித்தவ மதத்தில் இல்லாத என் பக்கத்து வீட்டுக்காரருக்கு பயமில்லையே. அப்படியிருக்க, என் கடவுள் என்னைப் பயத்தோடு வாழ்வதற்காகவா படைத்தார். கிறித்தவனாக மாறியது ஒரு குற்றமா?

இறந்தவர்களுக்காகச் செபிப்பதின் ஐந்து வாக்குறுதிகள்:

1. இறந்தவர்களுக்காக செபிப்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 'பிரபஞ்சம்' பற்றிய நம் சிந்தனையை மாற்ற வேண்டும். இருப்பவர்கள் இவ்வுலகத்திலும், இறப்பவர்கள் மற்றொரு உலகத்திலும் இருக்கிறார்கள் என்று நினைப்பதை விடுத்து அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படி இணைத்துப் பார்க்க கிறித்தவ மதம் பயன்படுத்தும் வார்த்தை 'இறையரசு'. நாம் இருந்தாலும், இறந்தாலும் இறையரசின் மக்களே. ஆகையால் இந்த அரசின் எந்த இடத்தில் இருந்தாலும் நம் செபம் மற்றவர்களுக்குப் பயன்தரும்.

2. இறந்தவர்களுக்காக நாம் செபிக்கும்போது நம்மையறியாமலே நாம் அவர்களோடு இணைந்து விடுகிறோம். இறப்பு என்பது ஒரு மெல்லிய வேலி. நாம் நேற்று அன்பு செய்தவர்கள் இன்று வேலியின் அந்தப்புறம் இருக்கின்றனர். நாம் இன்று அன்பு செய்பவர்கள் வேலியின் இந்தப்புறம் இருக்கிறார்கள். இரண்டு பக்கத்தையும் பிரிக்கும் குறுக்குச் சுவர் அல்ல இறப்பு. இரண்டையும் இணைக்கும் பாலம். அன்பிலிருந்து அன்பிற்குக் கடந்து செல்கிறோம் இறப்பில். ஆகையால் இந்த அன்பு இறந்தவர்களுக்காக நாம் செய்யும் செபத்தை ஒன்றாக இணைக்கிறது.

3. இறப்பு ஒரு கொடிய எதார்த்தம். மோட்சத்திற்குப் போக விரும்புபவர்கள் கூட இறப்பை வேண்டாம் என்றே சொல்கின்றனர். இறப்பு எதற்காக நமக்குப் பயமாக இருக்கின்றது? நாம் தனியாய் இறக்கின்றோமே அதனால் தான் பயப்படுகின்றோம். 'நாம் இறந்து விடுவோம். ஆனால் மற்றவர்கள் எல்லாம் வாழ்வார்களே!' என்ற எண்ணம் நம் பயத்தை இன்னும் அதிகமாக்குகிறது. இறப்பு இந்த நிலையில் ஒரு தண்டனையாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு விபத்தில் அல்லது இயற்கைச் சீரழிவில் நூற்றுக்கணக்காக மக்கள் இறந்தாலும், இறப்பு என்னவோ ஒவ்வொருவரையும் தனித்தனியாகவே எதிர்கொள்கிறது. வேறுமாதிரி சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தனித்தனியாகவே இறப்பைச் சந்திக்க வேண்டும். இந்தத் தனிமையில் நமக்கு உதவுவது தான் செபம். நாம் தனியாய் இறந்து போனாலும் நம்மவர்கள் நம்மை நினைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை நம் தனிமை உணர்வைக் குறைக்கின்றது. நாம் இறந்தவர்களுக்காகச் செபிக்கும்போது, 'நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உடனிருக்கிறோம்' என்ற நம் உடனிருப்பை அவர்களுக்கு உறுதி செய்கிறோம்.

4. இறந்தவர்களுக்காகச் செபிப்பது இருப்பவர்களுக்கும் உடனிருப்பைக் காட்டுகின்றது. இறப்பு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பை உருவாக்குகிறது. ஒரு குடும்பத்தில் மட்டுமல்ல, ஒரு சமூகத்திலும் இறப்பு ஒரு வெற்றுக்கோட்டை விட்டுச்செல்கிறது. ஆகையால்தான் பிறப்பைப்போலவே இறப்பும் ஒரு சமூக நிகழ்வாகவே அணுகப்படுகின்றது. இறந்தவர்களுக்கு நாம் செய்யும் செபங்களைப் போல இருப்பவர்களுக்கும் நாம் ஆறுதலும், நம்பிக்கையும் தருகின்றோம். இறந்தோருக்காகச் செபிப்பது நம் குழும உணர்வை அதிகப்படுத்துகிறது. நான் தனிமரம் இல்லை. என்னை அன்பு செய்ய என் உறவுகளும், ஊராரும் இருக்கின்றனர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்தக் குழும உணர்வு வாழ்வின் கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் துணிச்சலையும், மனத்திடத்தையும் தருகின்றது.

5. இறந்தவர்களுக்காகச் செபிப்பது நம் வாழ்வை மறுஆய்வு செய்ய நம்மைத் தூண்டுகிறது. நாம் யாருக்காகச் செபிக்கின்றோமோ அவர் கண்ட கனவை நனவாக்க வேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் நமக்கு இருக்கின்றது. அதே வேளையில் இறப்பு என்ற அழையா விருந்தாளி எந்நேரமும் நம் நடுவீட்டிற்கும் வந்து போகலாம் என்பதால் நம் வாழ்வையும் நல்வாழ்வாக அமைத்துக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது. 'பிறந்தோம். பிறந்ததால் வாழ்வோம்' என்று வாழ்வை இழுத்துக்கொண்டிராமலும், 'நாளை என்பது நிஜமல்ல. இன்றை எப்படியும் வாழ்வோம்' என்று ஏனோ-தானோவென இல்லாமலும், 'இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!' என்ற நிலையில் வாழ நம்மையறியாமலேயே நாம் இன்று வாக்குறுதி எடுக்கிறோம்.

'அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது!' (திருவெளிப்பாடு 21:4) என நமக்கு வாக்குறுதி தந்தாலும், இன்று நம் கண்களில் கண்ணீரும், கண்ணெதிரே இறப்பும், அது தரும் இழப்பும், துன்பமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதே எதார்த்தம். வாழ்வின் எதார்த்தங்களே நமக்குப் பல நேரங்களில் புதிராக இருக்கும்போது, இறப்பின் எதார்த்தங்கள் எப்படி இருக்கும்?

அக்காடியக் கதை ஒன்றில் அழியா வாழ்வைத் தேடி அலைந்த கில்கமேசுக்கு வயதான மூதாட்டி ஒருத்தி இப்படி அறிவுரை கூறுகின்றாள்: 'நன்றாகக் குளி! நல்ல ஆடை அணி! நீ அன்பு செய்பவர்களின் கண்ணில் கண்ணீர் வரவைக்காதே! உன்னை அன்பு செய்பவளின் மார்பில் சாய்ந்துகொள்! இதுவே அழியா வாழ்வு!'

'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு!' (குறள் 339)
 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org