Get Adobe Flash player
4 நவம்பர் 2018: ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு  வாசகங்களின் விளக்கங்கள்
 
I. இணைச்சட்ட நூல் 6:2-6  II. எபிரேயர் 7:23-28  III. மாற்கு 12:28-34
 
அன்பின் வழியது உயிர்நிலை
 
1971ஆம் ஆண்டு வெளிவந்த 'ஃபிட்லர் ஆன் தெ ரூஃப்' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.
 
கதாநாயகனும் கதாநாயகியும் தங்களின் திருமணத்தின் 25ஆம் ஆண்டு (வெள்ளி விழா) விழாவைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். விருந்திற்கு நிறைய விருந்தினர்களும், நண்பர்களும் வந்து கொண்டிருப்பார்கள். கதாநாயகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் கதாநாயகன் கதாநாயகியிடம், 'டார்லிங், டு யு லவ் மீ?' என்று கேட்பார். 'விளையாடாதீங்க. விளையாட இது நேரமா?' எனக் கேட்டுவிட்டு கதாநாயகி அங்கிருந்து ஓடிவிடுவார்.
சில நிமிடங்கள் கழித்து அவரை மீண்டும் சந்திக்கும் கதாநாயகன், 'டு யு லவ் மீ?' என்று கேட்பார்.
அப்போது கதாநாயகி அவரின் கைகளைக் பிடித்துக்கொண்டு, '25 ஆண்டுகள் உனக்கு உணவு சமைத்தேன். உனக்கு துணிகள் துவைத்தேன். உன் இன்ப துன்பங்களில் பங்கேற்றேன். உன்னோடு அழுதேன். உன்னோடு சிரித்தேன். உன்னோடு குழந்தைகள் பெற்றுக்கொண்டேன். உன்னோடு அவர்களை வளர்த்தேன். உன்னோடு வேலை செய்தேன். இது எல்லாம் அன்பென்றால், அந்த அன்பைத்தான் நான் உனக்குச் செய்தேன். அன்பே, ஐ லவ் யூ' என்பார்.
 
இன்றைய இறைவாக்கு வழிபாடு முழுவதும் (இரண்டாம் வாசகம் தவிர) 'அன்பு' என்ற ஒற்றைச் சொல்லால் கட்டப்பட்டிருக்கிறது. நாம் அதிகமாகப் பயன்படுத்தியதால் பயனை இழந்த சில சொற்களில் 'அன்பு' என்ற சொல்லும் ஒன்று. அன்பிற்கு நிறைய பரிமாணங்கள் உண்டு. கடவுள் மனிதனிடம் காட்டும் அன்பு கருணை. மனிதன் கடவுளிடம் காட்டும் அன்பு பக்தி. கணவன் மனைவியிடையே உள்ள அன்பு காதல். நண்பர்களிடையே உள்ள அன்பு நட்பு. பெற்றோர் பிள்ளைகளிடையே உள்ள அன்பு பாசம். இருப்பவர் இல்லாதவருக்குக் காட்டும் அன்பு இரக்கம். இல்லாதவர் இருக்கிறவருக்குக் காட்டும் அன்பு நன்றி. மேலிருப்பவர் கீழிருப்பவருக்குக் காட்டும் அன்பு வரவேற்பு. கீழிருப்பவர் மேலிருப்பவருக்குக் காட்டும் அன்பு மரியாதை. ஆக, இன்று நாம் எந்த அன்பைப் பற்றிப் பேசுவது என்பது முதல் கேள்வியாக இருக்கிறது. மேலும், இன்று 'அன்பு' என்ற வார்த்தையின் ஆங்கிலப் பதம் உணர்வையும் தாண்டி விருப்பு வெறுப்புக்களைக் குறிக்கவும் பயன்படுகிறது: 'ஐ லவ் பீட்சா,' 'ஐ லவ் மை பைக்,' 'ஐ லவ் மை மாம்' என பீட்சா, பைக், அம்மா என அனைத்தையும் ஒரே தளத்தில் நிறுத்திவிடுகிறது ஆங்கில 'அன்பு.'
 
இன்று நாம் பதிலுரைப்பாடலில் வாசிக்கும் திருப்பாடல் 18 மிக முக்கியமான திருப்பாடல். ஏனெனில், இங்கே ஒரு இடத்தில் தான் (18:1), பழைய ஏற்பாட்டில், மனிதர்கள் கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யு ஆண்டவரே' என்று சொல்கிறார்கள்:
 
'என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்!'
 
இந்தப் பாடலின் சூழலை நாம் 2 சாமு 21-22ல் வாசிக்கிறோம். தாவீது எதிரிகளின் கையினின்று, குறிப்பாக சவுலின் கையினின்று, ஆண்டவர் தம்மை விடுவித்தபோது இந்தப் பாடலைப் பாடுகின்றார்.
 
இந்தப் பாடலில் வரும் சில உருவகங்களைப் புரிந்துகொண்டால் அன்பின் ஆற்றல் நமக்குப் புரியும்:
 
'ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்.
என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.
உம் துணையுடன் நான்
எப்படையையும் நசுக்குவேன்.
என் கடவுளின் துணையால்
எம்மதிலையும் தாண்டுவேன்' (திபா 18:28-29)
 
மேற்காணும் உருவகங்கள் அன்பின் மூன்று இயல்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன:
 
அ. அன்பு இருள் இருக்கும் இடத்தில் ஒளி ஏற்றும்
ஆ. அன்பு எதிரியை எதிர்கொள்ளும் துணிவைத் தரும்
இ. அன்பு நாம் உயரே பறக்க இறக்கைகள் அளிக்கும்
 
இந்த மூன்று இயல்புகளையும் நாம் கருணை, பக்தி, காதல், நட்பு, பாசம், இரக்கம், நன்றி, வரவேற்பு, மரியாதை என்னும் அன்பின் பரிமாணங்களில் பார்க்கலாம்.
 
அன்பின் திசைகளை வைத்து அன்பை இறையன்பு, பிறரன்பு என்று நாம் பிரிக்கிறோம். மனிதர்கள் தங்களுக்கு மேல் நோக்கி காட்டும் இறையன்பு. மனிதர்கள் தங்களுக்கு நேர்கோட்டில் காட்டும் அன்பு பிறரன்பு. மேலும், இறையன்பு என்று சொல்லும்போது அது இறைவன் செய்யும் அன்பு அல்ல. மாறாக, இறைவனிடம் நாம் காட்டும் அன்பு. அதுபோல, பிறரன்பு என்பது நாம் பிறர் செய்யும் அன்பு அல்ல. மாறாக, பிறரிடம் நாம் கொள்ளும் அன்பு.
 
பரிசேயர், சதுசேயர் ஆகியோரைத் தொடர்ந்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 12:28-34) மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் கேள்வி கேட்கின்றார்: 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'
 
கேட்கின்ற அவருக்கே விடையும் தெரியும். ஏனெனில், ஒவ்வொரு யூதரும் இணைச்சட்ட நூல் 6:4,5 மற்றும் லேவியர் நூல் 19:18 ஆகிய இரண்டு கட்டளைகளையும் இரண்டு கண்களாகக் கொண்டிருந்தனர். ஒருவேளை, இந்த இரண்டில் முதன்மையானது என்பது பற்றி அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். ஒருவேளை இயேசு, 'இறையன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவரை 'பிறரன்பு' மற்றும் சமூகநீதிக்கு எதிரானவர் என்று குற்றம் சுமத்தலாம். அல்லது, 'பிறரன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவர் இறைவனைப் பழிக்கிறார் என்றும், அவர் இறைமகன் அல்லர் என்றும் குற்றம் சுமத்தலாம். ஆனால், இயேசு மிகத் தெளிவாக முதல்-இரண்டு என கட்டளைகளைக் கொடுத்து, அவற்றை ஒரே தளத்தில் நிறுத்துகின்றார். இயேசுவின் பதிலை கேள்வி கேட்டவரும் ஏற்றுக்கொள்கின்றார். அப்படி ஏற்றுக்கொண்டவரை, 'நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை' எனப் பாராட்டுகிறார் இயேசு.
 
அ. முதன்மையான கட்டளை
 
'இஸ்ரயேலே கேள். உன் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே' என்ற பகுதியை மட்டும் இயேசு, 'நம் ஆண்டவராகிய கடவுள்' என மாற்றுகின்றார். இவ்வாறாக, தன்னையும் மானிடரோடு ஒருங்கிணைத்துக்கொள்கின்றார். இத்தகையை ஒருங்கிணைத்தலையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 7:23-28) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் தலைமைக்குரு என்னும் உருவகம் வழியாக முன்வைக்கின்றார்.
 
'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' என நான்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு (மாற்கு). ஆனால், இணைச்சட்ட நூலில் (6:4), 'முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும்' என்ற மூன்று வார்த்தைகளாகப் பார்க்கிறோம்.
 
'இதயம்' என்பது ஒருவரின் சிந்தனையையும், 'உள்ளம்' என்பது ஒருவரின் தெரிவையும், 'மனம்' என்பது ஒருவரின் உயிரையும், 'ஆற்றல்' என்பது ஒருவரின் உடல் வலிமையையும் குறிக்கிறது. இவ்வாறாக, ஒருவரின் முழு ஆளுமை முழுவதும் இறைவனை நோக்கி இருக்க வேண்டும்.
 
ஆக, இறைவனை அன்பு செய்வது என்பது வெறும் வழிபாட்டு முறைமைகள் அல்லது சட்ட முறைமைகள் பற்றியது அன்று.
 
ஆ. இரண்டாவது கட்டளை
 
'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக.' பழைய ஏற்பாட்டில், 'அடுத்தவர்' என்ற வார்த்தை சக யூதர் அல்லது சக குலத்தவரைக் குறித்தது. ஆனால், இதை நாம் 'எல்லாரும்' என விரித்தும் பொருள் கொள்ளலாம்.
 
இந்த அன்பு ஒற்றைச் சொல் நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?
 
1. இறையன்பு - பிறரன்பு
 
'இறையன்பு' எப்படி இருக்க வேண்டும்?
 
'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் இருக்க வேண்டும்.'
 
'பிறரன்பு' எப்படி இருக்க வேண்டும்?
 
'என்னை அன்பு செய்வதுபோல பிறரை நான் அன்பு செய்ய வேண்டும்.'
 
ஒருவேளை இந்த முறைமைகளை மாற்றி அமைத்தால் என்ன ஆகும்?
 
ஒருவேளை, நான் பிறரை 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' அன்பு செய்தால் என்ன ஆகும்? எனக்கு விரக்திதான் மிஞ்சும். ஏனெனில், குறைவான நான் குறைவான மற்றவரை முழுமையாக அன்பு செய்ய முடியாது.
 
ஒருவேளை, நான் இறைவனை 'என்னை அன்பு செய்வது போல அன்பு செய்தால்' என்ன ஆகும்? என் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ற கடவுளையும் ஆட்டுவிக்கத் தொடங்குவேன்.
 
ஆக, முறைமைகள் மாறாமல் அன்பு செய்தல் வேண்டும்.
 
'இறைவன்' என்பவர் யார்? நான் கண்களை மூடி இறைவன் என்று சொல்லும்போது என் உள்ளத்தில் எழும் உருவம் என்ன? அல்லது யார்? இந்த உருவத்தை நோக்கி என்னால் என் முழு இதயத்தை, உள்ளத்தை, மனத்தை, ஆற்றலை திருப்ப முடியுமா?
 
'பிறர்' என்பவர் யார்? என் நண்பரா? உறவினரா? எனக்குப் பிடிக்காதவரா? அல்லது எல்லாருமா? என்னை அன்பு செய்வதுபோல, என்னால் அடுத்தவரை அன்பு செய்ய முடியுமா? முதலில் என்னை அன்பு செய்வது என்றால் என்ன? என்னை நான் ஏற்றுக்கொள்கிறேனா? என்னையே நான் மதிக்கிறேனா?
 
2. அறிவுத்திறன்
 
மறைநூல் அறிஞர் 'அறிவுத்திறனோடு' பதில் தந்ததைக் கண்டு இயேசு அவரைப் பாராட்டுகின்றார். 'காதலுக்கு கண்ணில்லை' என்பார்கள். அல்லது 'கண்மூடித்தனமான அன்பு' என்று சொல்வார்கள். ஆனால், அன்பில் தான் அறிவுக்கு நிறைய வேலை உண்டு. அறிவுத்திறன் இல்லாத ஒருவரால் அன்பு செய்ய முடியாது. அன்பில் ஒருவர் தன் முழு அறிவுத்திறனையும் பயன்படுத்த வேண்டும். இங்கே அறிவு என்பது வெறும் மூளை சார்ந்த, பிரித்துப் பார்க்கும் அறிவு அல்ல. மாறாக, மனம் சார்ந்த, ஒருங்கிணைக்கும் அறிவு.
 
3. கேள்
 
நம் மேல் இருக்கும் இறைவனும், நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் நாம் கேட்கும் குரல்களாக நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். ஆக, இக்குரல்களைக் கேட்டால்தான் இவர்களை அன்பு செய்ய முடியும். 'இஸ்ரயேலே, பார்' என்று சொல்லாமல், 'கேள்' என்று கட்டளையிடுகிறார் இறைவன். நாம் பார்க்கும் கண்கள் தாங்களாகவே மூடிக்கொள்ளும் இயல்புடையவை. ஆனால், காதுகள் அப்படி அல்ல. நாமே மூடினாலே ஒழிய அவைகள் திறந்தே இருக்கும். மற்றவர்களின் குரல் அதில் விழுந்துகொண்டேதான் இருக்கும். இக்குரல்களைக் கேட்கும் ஒருவர்தான் அன்பிற்கு இதயத்தைத் திறக்க முடியும்.
 
இறுதியாக,
 
'அன்பின் வழியது உயிர்நிலை' என்கிறார் திருவள்ளுவர் (குறள் 80). 'இறையன்பு' என்ற வேரையும், 'பிறரன்பு' என்ற கிளையையும் முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. உயிர்நிலை இறைவனில் புறப்பட்டு நம் வழியாக ஒருவர் மற்றவரிடம் செல்கிறது. ஆக, இறைவனை நான் என்னில் அனுபவித்து, அதே இறைவனை நான் பிறரில் அனுபவிக்கிறேன். ஆக, இறைவன் மற்ற இறைவனோடு செயலாற்ற என் உடல், உள்ளம், இதயம், மனம் வாய்க்காலாக இருக்கின்றது.
 
துரமாக இருப்பவர்களை, இருப்பவற்றை அன்பு செய்வது எளிது. 'நான் அமெரிக்கர்களை அன்பு செய்கிறேன்' என்று என்னால் எளிதாகச் சொல்ல முடியும். ஆனால், 'என் அடுத்த அறையில் இருப்பவரை நான் அன்பு செய்கிறேன்' என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல.
 
அன்பை ஒரு ரொமான்டிக் அனுபவமாக பார்க்காமல், அதை அன்றாட வாழ்வியல், செயல்முறை எதார்த்தமாகப் பார்த்தால், அடுத்தவருக்கும் எனக்கும் உள்ள உள்ளத்தின் தூரமும் குறையும்.
 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org