Get Adobe Flash player

உம்மை நோக்கியே உள்ளம்
02 டிசம்பர் 2018: திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 
வாசகங்களின் விளக்கங்கள்.

அருளுபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, தூய பவுல் குருத்துவக் கல்லூரி திருச்சி -1,

I. எரேமியா 33:14-16  II. 1 தெசலோனிக்கர் 3:12-4:2  III. லூக்கா 21:25-28,34-36

கார்த்திகை மாதம் பாதி கடக்குமுன்னே மார்கழிக் குளிர் நம் உடலைத் தழுவ ஆரம்பித்துவிட்டது. குளிர்காலத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இலைகளை உதிர்த்து குளிரை எதிர்கொள்ள வேண்டிய மரங்கள், இலைகளை உதிர்க்கவா, தளிர்களைத் துளிர்க்கவா என்று குழம்பிக் கொண்டிருக்கின்றன.
காலநிலைகள் மாற்றங்கள் நம் ஊரில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களில் இவை தெளிவாகத் தெரியும். இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் நேரம் இது. மரங்கள் வெறும் குச்சிகளாக நின்று குளிரை, 'வந்து பார்' என எதிர்நோக்கியிருக்கும் இக்காலத்தை நம் தாய்த்திருச்சபை, 'மாரநாதா, என் ஆண்டவரே வாரும்' என்று கிறிஸ்துவின் வருகைக்கு எதிர்நோக்கியிருக்கும் திருவருகைக்காலமாகக் கொண்டாடுகிறது.
ஒளி அல்லது வெப்பம் என்றால் உயிருக்கு வளர்ச்சி. இருள் அல்லது குளிர் என்றால் உயிருக்குத் தளர்ச்சி. தளர்ச்சி, சோர்வு, மதமதப்பு, நீண்ட இரவு, நடுக்கும் குளிர், உடல்நலத்தில் தேக்கம் அல்லது பின்னடைவு என்று மனித உடலும், உயிரும் கலங்கும் குளிர்காலத்தில் திருவருகைக்காலம் ஏனோ?
குளிர் என்பது குறுகிய இறப்பு. குளிரில் இக்குறுகிய இறப்பை அனுபவிக்கும் உயிர்களுக்குள் இறக்காமல் இறப்பது நம்பிக்கையே - வசந்தம் வரும் என்ற நம்பிக்கையே. இந்த நம்பிக்கைக்கான காத்திருத்தல் எதிர்நோக்காக மாறி, இந்த எதிர்நோக்கு நம்மை அன்பில் உந்தித் தள்ளுகிறது. நம் கண்களுக்குத் தெரியும் எல்லா மரங்களிலும் மூன்று கூறுகள் உள்ளன: வேர், தண்டு, கிளைகள். இந்த மூன்றில் ஒன்று இல்லை என்றாலும் மரம் இறந்ததாகவே கருதப்படும். நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் மரத்திற்கு ஒப்பிட்டால், நம்மில் வேராக நம்பிக்கையும், தண்டாக எதிர்நோக்கும், கிளைகளாக அன்பும் இருக்கின்றன. இம்மூன்றும் இருந்தாலும், சில நேரங்களில் நாமும் குளிர் தாங்கும் குச்சி மரமாக நிற்கத்தான் செய்கின்றோம். இப்படி நிற்கும் நமக்கு ஊட்டம் தருவதே திருவருகைக்காலம்.
இன்றைய பதிலுரைப்பாடலோடு (திபா 25) நம் சிந்தனையைத் தொடங்குவோம்: 'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்' என்று பாடுகிறார் தாவீது. குளிரில் தவிக்கும் தாவரங்களும், உயிர்களும் கதிரவனின் வருகையை நோக்கிக் கண்களை உயர்த்துவதுபோல, துன்பத்தில் இருக்கும் தாவீது ஆண்டவரை நோக்கித் தன் உள்ளத்தை உயர்த்துகின்றார்.
திருவருகைக்காலத்தில் ஆண்டவரை நோக்கி நம் உள்ளம் மூன்று நிலைகளில் உயர்ந்து நிற்கின்றது:
ஒன்று, அவரது முதல் வருகையின் நினைவுகூர்தலை நோக்கி நெஞ்சம் நிறை நன்றியோடும், மகிழ்ச்சியோடும்,
இரண்டு, அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கண்கள் நிறை விழிப்போடும், கவனமோடும்,
மூன்று, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும், நபர்களிலும் வரும் அவரின் உடனிருப்பு நோக்கி எண்ணம் நிறை பரிவோடும், பகிர்வோடும். திருவருகைக்காலத்தின் ஒற்றைச் செய்தியும் இதுதான்: 'அவரை நோக்கி நம் உள்ளம்' அவரை நோக்கி நம் உள்ளம் இருக்க வேண்டும் என்றால், முதலில் இப்போது நம் உள்ளம் எதை நோக்கி இருக்கிறது என்று காணுதல் அவசியம். நாம் எதை நோக்கி இருக்கிறோமோ நாம் அதன் பிரதிபலிப்பாக மாறுகிறோம். இல்லையா?
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 33:14-16) இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல் மக்களுக்கான ஆறுதல் செய்தியைத் தருகின்றார். எரேமியா இறைவாக்கினர் நூலில் மட்டும்தான் நாம் அழிவு மற்றும் ஆறுதல் என்ற இரண்டு செய்திகளையும் பார்க்கிறோம். பாபிலோனிய அடிமைத்தனத்தால் யூதா அழியும் என்று இறைவாக்குரைக்கும் அவரே, இன்று, 'தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்' என்று ஆறதலும் தருகின்றார். அந்நாளில் எருசலேம் புதிய பெயரைப் பெறும். 'யாவே சித்கேனூ' என்பதே அப்பெயர். 'யாவே சித்கேனூ' என்றால் 'ஆண்டவரே நமது நீதி' என்று பொருள். 'தளிர்' என்பது இறைவாக்கினர் நூல்களில் மெசியாவின் வருகையைக் குறிக்கும் (காண். செக் 3:8). இஸ்ரயேல் மக்களை வழிநடத்த வரும் மெசியாவின் முதல் பண்பு 'நீதி' என முன்வைக்கிறது இன்றைய முதல் வாசகம்.
'ஆண்டவரே நமது நீதி' - எதற்காக இந்தப் புதிய பெயர்? வேப்பமரத்திலிருந்து புதிய தளிர் வந்தால் அதை நாம் புளிய மரம் என்று வேறு பெயர் சூட்டுவதில்லையே. அப்படி இருக்க, ஏன் இங்கே புதிய பெயரைக் கொடுக்கின்றார் இறைவாக்கினர்?
யூதாவை செதேக்கியா மன்னன் ஆண்டபோதுதான் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். 'செதேக்கியா' என்றால் 'யாவே நீதியானவர்' என்பது பொருள். அதே பெயரின் மூலத்தை எடுத்து, 'யாவே நமது நீதி' எனப் பெயர் மாற்றுகின்றார் இறைவன். ஏன்? ஆண்டவரின் முதல் நீதி தண்டனையாக இஸ்ரயேல் மக்களுக்கு வெளிப்பட்டது. அவரின் இரண்டாம் நீதி இரக்கமாக பொழியப்படுகிறது. ஆக, முதல் தண்டிலிருந்து புதிய தளிர் வந்தாலும், அது புதிய பெயரைப் பெற்றுக்கொள்கிறது.
இரக்கத்தில் கனியும் நீதி - இதுதான் வரவிருக்கும் மெசியாவின் பண்பு. இதையே தாவீதும், 'ஆண்டவரே, உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினைந்தருளும்' (திபா 25:6) என்று உரைக்கின்றார்.
'இரக்கத்தில் கனியும் நீதி' என்ற மெசியாவின் பண்பு இயேசுவுக்கு வடிவாகப் பொருந்துவதை நாம் நற்செய்தி நூல்களில் பார்க்கிறோம். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண், சக்கேயு, பாவியான பெண், தொழுநோயாளர், பேய்பிடித்தோர் போன் றோரை இயேசு எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் நீதி என்பது இரக்கத்தில் கனிகிறது. 'தவறு செய்தவர்கள் தண்டிக் கப்பட வேண்டும்' என்பது நீதியாக இருந்தாலும், 'அவர்களை இரக்கத்தால் மன்னிப்பதும் நீதியே' என்கிறது இயேசுவின் செயல்பாடு.
மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி உள்ள இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும், யோசேப்பும் இத்தகைய நீதியைக் கொண்ட நேர்மையாளராகவே காட்டப்படுகின்றார். சட்டத்தை மதிக்கும் நேர்மையைவிட இறைத்திருவுளம் நிறைவேற்றும் நேர்மையைத் தழுவி, நீதிக்குப் புதிய பரிமாணம் கொடுக்கிறார் யோசேப்பு. 'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற முதல் கொடையும் இதுவே: 'இரக்கத்தில் கனியும் நீதி.'
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 3:12-4:2) புனித பவுல் தெசலோனிக்கியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு நூல்களில் முதன்மையாக எழுதப்பட்ட நூல் இந்நூலே. தெசலோனிக்கா நகரில் பவுல் மூன்றே முறைதான் (மூன்று ஓய்வுநாள்கள்) நற்செய்தி அறிவிக்கிறார் (காண். திப 17:1). ஆனால், அந்த மூன்று நாள்களி லேயே நிறையப்பேரைக் கிறிஸ்துவை நோக்கித் திருப்புகின்றார். அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாவண்ணம் அவர்களை மீண்டும் சந்திக்கவும், அவர்களுக்கு கடிதங்கள் (இரண்டு) எழுதவும் செய்கின்றார். இக்கடிதங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துரு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. பவுலும், அன்றைய திருச்சபையாரும் கிறிஸ்துவின் வருகை மிக அருகில் இருப்பதாகவும், அது தங்கள் காலத்திலேயே நடந்தேறும் என்று நம்பினர். இந்தப் பின்புலத்தில்தான், அவரின் வருகைக்கான தயாரிப்பை அறிவுரையாகத் தருகின்றார் பவுல்: '... நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர்கள் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!'
இவ்வாறாக, 'அவரை நோக்கி இருக்கும் உள்ளம்' தூய்மையில் உறுதியாக இருக்கும் என்கிறார் பவுல். இத்தூய்மை எதில் ஊற்றெடுக்கும்? 'ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பு ஆண்டவரால் வளர்க்கப்படும்போது.' இங்கே அன்பிற்கான புதிய பொருளை பவுல் தருகின்றார்: 'அன்பை ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!'
மனிதர்களிடமிருந்து மனிதர்களை நோக்கிப் புறப்படும் அன்பு நாளாக நாளாக வேகமும், ஆழமும் குறைந்துவிடும். ஏனெனில், ஒரு குறைகுடத்தால் இன்னொரு குறைகுடத்தை நிரப்பவே முடியாது. ஆண்டவரால் வளர்க்கப்படும் அன்பு நிறைவிலிருந்து புறப்படுவதால் அது எங்கு சென்றாலும் எல்லாரையும் நிறைத்துக்கொண்டே செல்லும். இந்த அன்பு யாரையும் பயன்படுத்தாது, யாரையும் பயமுறுத்தாது, எதையும் எதிர்பார்க்காது, எதையும் பொறுத்துக்கொள்ளும், எல்லாவற்றையும் நேர்முகமாகப் பார்க்கும். 'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற இரண்டாவது கொடை இதுவே: 'ஆண்டவர் வளர்த்தெடுக்கும் அன்பு.'
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். 21:25-28, 34-36) நாம் மூன்று நாள்களுக்கு முன் கேட்ட நற்செய்தி வாசகமும், அதன் நீட்சியுமே. மானிட மகனின் வருகையின்போது கதிரவனிலும், நிலவிலும், விண்மீன்களிலும், வான்வெளிக் கோள்களிலும் நிகழும் மாற்றங்களைப் பட்டியலிடும் இயேசு (லூக்கா), 'உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது' என்ற அவசரமான ஆறுதலை யும், ஆறுதலான அவசரத்தையும் தந்து, 'உங்கள் உள்ளங்கள் குடிவெடி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினால் மந்தம் அடையாதவாறு காத்துக்கொள்ள' அறிவுறுத்துகின்றார்.
நம் உள்ளம் 'குடிவெறி, களியாட்டம், கவலை' ஆகியவற்றை நோக்கி இருக்கும்போது மந்தம் அடைகிறது. எப்படி? 'மந்த நிலை' என்பதை நாம் தேக்கநிலை என்று அறிகிறோம். தட்பவெப்பநிலை மந்தமாக இருக்கக் காரணம் கதிரவனின் ஒளி தேக்கநிலை அடைவதுதான். பங்குச்சந்தை மந்தமாக இருக்கக் காரணம் நிறுவனங்களின் விற்பனை தேக்கநிலை அடைவதுதான்.
ஆக, நகர்ந்து கொண்டிருக்கும் நம்மைத் தேங்க வைப்பவை மேற்காணும் மூன்றே: 'குடிவெறி, களியாட்டம், கவலை.' நாம் குடிவெறியில் இருக்கும்போது அல்லது நிறைய மது அருந்தும்போது நம் மூளை இருப்பை அப்படியே தக்க வைக்க நினைக் கிறது. முன்னும், பின்னும் நகராமல் தடுக்கப் பார்க்கிறது. ஆனால், அப்படி ஒரு நிலை சாத்தியமே அல்ல. ஏனெனில், குடி போதை இறங்கியவடன் நாம் மீண்டும் எதார்த்தத்தiயும் அதன் மாற்றத்தையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். 'களியாட்டம்' என்பது எல்லாவகை நுகர்வு இன்பங்களையும் இங்கே குறிக்கிறது. நுகர்வு இன்பங்கள் நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் எதிர்காலத்திற்குக் கூட்டிச்சென்றுவிடுகின்றன. எடுத்தக்காட்டாக, ஒரு திரைப்படம் பார்க்கும்போது இருக்கும் இன்பம், அத்திரைப்படம் காட்டும் நல்உலகம் இன்றே வந்துவிட்டதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கி நம்மை இரண்டு மணி நேரங்கள் எதிர்காலத்தில் வாழச் செய்கிறது. 'கவலை' இதற்கு நேர்மாறானது. இது நம்மை நம் கடந்தகாலத்தோடு கட்டி விடுகிறது.
இவ்வாறாக, 'குடிவெறி' நம்மை நிகழ்காலத்திலும், 'களியாட்டம்' நம்மை எதிர்காலத்திலும், 'கவலை' நம்மை இறந்தகாலத் திலும் நம்மைக் கட்டிவிடுவதால் நாம் அப்படியே தேங்கி விடுகிறோம். இதுதான் நம் வாழ்வின் மந்தநிலை. இந்த மந்த நிலையின் எதிர்ப்பதம்தான் 'விழிப்பாயிருந்து மன்றாடுதல்.' மற்ற நற்செய்தியாளர்கள் எல்லாம், 'விழிப்பாயிருங்கள்' என்று பதிவு செய்ய, லூக்கா மட்டும், 'விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்' என்று இறைவேண்டலையும் உடன் நிறுத்துகின்றார். போதை மறுவாழ்வ மையங்களில் சொல்லப்படும் முதல் பாடமே, 'இறைவனின் துணையை நாடுங்கள்' என்பதுதான். எதற்காக? சில நேரங்களில் நம் மனம் உறுதியில்லாமல் இருக்கிறது. தடுமாறும் மனத்திற்கு உறுதியைத் தருவது இறைவனே. ஆக, 'குடிவெறி, களியாட்டம், கவலை' ஆகியவற்றை எதிர்கொள்ள ஒரே வழி விழிப்பாயிருத்தல். அவ்விழிப்பு கண் அசரும்போது அவரை நோக்கிய நம் மன்றாட்டு.
'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற மூன்றாவது கொடை இதுவே: 'விழித்திருத்தல்.'
ஆக, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு வழியாக புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் நுழையும் நம் எண்ணம் இது ஒன்றாக இருக்கட்டும்: 'அவரை நோக்கி என் உள்ளம்.'புதிய வீட்டிற்குள் நுழையும்போது நாம் எப்போதும் கண்களை கதவுநிலைகளை நோக்கி உயர்த்தியே நுழைகிறோம். அப்படியே இப்புதிய ஆண்டிற்குள் நுழைதலும் இருக்கட்டும்.
திருப்பாடல் ஆசிரியர்போல, 'உம்மை நோக்கியே என் உள்ளம் ஆண்டவரே' என்று அவரைப் பார்க்க, அவர் நமக்கு, 'இரக்கத்தில் கனியும் நீதி,' 'அவர் வளர்க்கும் அன்பு,' 'விழிப்பு' என மூன்று கொடைகளால் நம்மை அணி செய்வார். தளர்ச்சியில், குளிர்ச்சியில் நிற்கும் நம் வேர், தண்டு, கிளை இம்மூன்று கொடைகளால் தளிர்க்கட்டும். 'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்.' (திபா 25:1)
தொடர்புக்கு : அருள்பணி இயேசு கருணாநிதி, தூய பவுல் குருத்துவக் கல்லூரி திருச்சி -1,

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org