Get Adobe Flash player
01 ஜனவரி 2019 புத்தாண்டு நாள் - அன்னை மரியாள் இறைவனின் தாய்
 தாய்மையோடு புத்தாண்டில்
வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி
 
கிரகோரியன் காலண்டரின் படி இன்று ஆண்டின் முதல் நாள். கிரேக்க கடவுள் JJanus போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக  இன்றைய நாளில் நிற்கின்றோம். ஆக, (1) இன்று புத்தாண்டுப் பெருநாள். (2) இந்த ஆண்டின் தலைநாளான இன்று திருஅவை மரியாளை இறைவனின் தாயாக (2) கொண்டாடுகிறது. மேலும், (3) இந்த நாள் தான் 'இயேசுவுக்கு' பெயர் சூட்டப்பட்ட நாள். (4) இந்த நாள் தான் கிறிஸ்துபிறப்பின் எட்டாம் திருநாள். ஆக, இது கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா. இவ்வாறாக, நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறும் இந்நாளில், 'தாய்மையோடு புத்தாண்டில்' என்ற தலைப்பில் உங்களோடு சிந்திக்க விழைகின்றேன்.
 
 
ஐசக் நியூட்டனின் 'அப்சலூட் தியரி' மறைந்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் 'ரெலடிவிட்டி தியரி' மேலோங்கி நிற்கும் காலத்தில், எல்லாமே சார்பு அல்லது ரெலடிவ் என்ற நிலைதான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இன்று 'தாய்மையைக் கொண்டாடுவோம்' என்று நான் சொன்னால், அது சார்பு நிலையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. ஏனெனில், நான் இப்படிச் சொல்லும்போது, தாய்மையை உடல் அளவில் அடைய முடியாத ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினர், தாய்மையை தாங்களாகவே துறந்த பெண் துறவியர், தாய்மையை அடைய முடியாத நிலையில் உள்ள பெண்கள், வன்புணர்வால் தாய்மை புகுத்தப்பட்டுத் துன்புறும் பெண்கள், குழந்தைகள், மற்றும் வாடகைத் தாய்மார்கள் என பலரை நான் சிந்தனையிலிருந்து அகற்றிவிடுவேன். ஆக, 'தாய்மை' என்ற வார்த்தையை நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன். அதே போல, 'புத்தாண்டு' என்ற வார்த்தையும் தனிநபர் சார்ந்ததே. கிரகோரியன் காலண்டர் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே இன்று புத்தாண்டு நாள். தமிழ், தெலுங்கு, சீன, ஆப்பிரிக்க, யூத போன்ற பிற காலண்டர்களைப் பின்பற்றுபவர்களுக்கு இதே ஆண்டின் இன்னொரு நாளே தவிர புத்தாண்டு நாள். ஆக, 'புத்தாண்டு' என்ற வார்த்தையையும் நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன்.
 
'தாய்மையோடு புத்தாண்டில்' நுழைவது எப்படி?
 
இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக் கொண்டாடுகிறோம். 'இறைவனின் தாய்' என்றால், அவர் 'இறைவனையே பெற்றெடுத்தார்' என்ற பொருளில் அல்ல. ஏனெனில், 'படைக்கப்பட்டவர்' 'படைத்தவரை' பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை 'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, அவரை வாழ்த்தி வரவேற்கும் எலிசபெத்து, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' (லூக் 1:43) என்று கேட்கின்றார். 'ஆண்டவரின் தாய்' என்ற இந்தச் சொல்லாடல்தான் 'இறைவனின் தாய்' என்று வந்தது என்றும் நாம் சொல்ல முடியாது. ஆனால், எலிசபெத்து மரியாளை 'ஆண்டவரின் தாய்' என்று அழைக்கின்றார். மற்றபடி மரியாளை இறைவனின் தாய் என அழைக்க வேறு குறிப்புக்கள் விவிலியத்தில் இல்லை.
 
தாய்மை என்றால் என்ன?
 
தாய்மைக்கான மிகச் சிறந்த வரையறை விவிலியத்தின் முதல் பக்கங்களில் உள்ளது. தொடக்கப் பெற்றோர் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டபோதுதான் அந்த இனிய நிகழ்வு நடக்கிறது. விவிலிய ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கிறார்: 'மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான். ஏனெனில், உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்' (தொநூ 3:20). கொஞ்சப் பகுதிக்கு முன்னால் - அதாவது, பாவம் செய்வதற்கு முன், 'ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால் இவள் 'பெண்' (ஈஷா) என அழைக்கப்படுவாள்' (தொநூ 2:23) என்று வேறு ஒரு பெயர் கொடுக்கப்படுகிறது. ஆக, தாய் என்ற பெயர் ஒரு ரொமான்டிக் பெயர் அல்ல. மாறாக, மனுக்குலத்தின் முதல் தாய் ஏவாள் தாய்மை என்ற பேற்றை அடைவது பிள்ளைப் பேற்றினால் அல்ல. மாறாக, தான் செய்த தவற்றினால்.
 
இதைக் கொஞ்சம் புரிந்துகொள்வோம். ஏவாளிடம் எனக்குப் பிடித்தவை மூன்று: (அ) பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல், (ஆ) கணவனுடன் பகிர்தல், மற்றும் (இ) பொறுப்புணர்வு. முதலில், மனுக்குலத்தின் எதிரியாகிய பாம்போடு நேருக்கு நேர் நின்று உரையாடிவள் ஆண் அல்ல. மாறாக, பெண். விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் உரையாடலும் இதுவே. மேலும், அவளின் உரையாடல் வெறும் பழத்தைப் பற்றியது அல்ல. மாறாக, உண்மை, நன்மை, தீமை போன்ற பெரிய கருத்தியல்கள் பற்றியது. பாம்பு பெண்ணிடம், 'நீங்கள் சாகவே மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்' என்றது (தொநூ 3:4-5). பாம்பின் இந்த வார்த்தைகளை நம்பி பெண் பழத்தை உண்ணவில்லை. பின் எதற்காக உண்டாள்? 'அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்கு களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாவும் இருந்ததைக் கண்டு பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள்' (தொநூ 3:6). ஆக, பாம்பு சொல்லவில்லையென்றாலும் ஏவாள் அந்தப் பழத்தை உண்டிருப்பார். ஆக, தானே விரும்பி தன் முடிவை எடுக்கின்றார் ஏவாள். மேலும், தீமையை நேருக்கு நேர் எதிர்கொள்கின்றார். இரண்டாவதாக, 'அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்' (தொநூ 3:6) என்கிறது விவிலியம். தான் செய்த செயலைத் தன் கணவனோடு பகிர்கிறாள். மூன்றாவதாக, தான் உண்டதற்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள். 'பாம்பு என்னை ஏமாற்றியது. நானும் உண்டேன்' (தொநூ 3:13) என தன் செயலுக்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள்.
 
இந்த மூன்று குணங்களும்தான் அவரைத் தாய்மை நிலை அடைய வைக்கிறது. ஆக, தாய்மை என்பது, (அ) தீமையை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல், (ஆ) தன்னிடம் உள்ளதைப் பகிர்தல், (இ) பொறுப்புணர்வோடு இருத்தல். இந்த மூன்றிலும் ஒன்று புலப்படுகிறது. அது என்ன? தாய்மை என்பது ஒரு தயார்நிலை. தாய்மை ஒரு இலக்கு அல்ல. மாறாக, இனி வருபவற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலை என்னும் வழிமுறை. மரியாளின் தாய்மையும் ஒரு தயார்நிலையே. அத்தயார்நிலையில் (அ) அவர் தீமையை நேருக்கு நேர் எதிர்கொண்டு வெற்றி பெறும் மீட்பரைப் பெற்றெடுத்தார், (ஆ) 'உம் சொற்படியே ஆகட்டும்' என்று தன்னிடம் உள்ளதைக் கடவுளோடு பகிர்ந்தார், (இ) பெத்லகேம் முதல் நாசரேத்துக்கு, நாசரேத்து முதல் எருசலேமுக்கு, நாசரேத்து முதல் கானாவுக்கு, கானா முதல் கல்வாரிக்கு எனத் தன் மகனைப் பொறுப்புணர்வோடு வழிநடத்தினார். இன்று புத்தாண்டில் நுழையும் நமக்கு மரியாள் வைக்கின்ற பாடம் இதுவே: 'தாய்மை என்னும் தயார்நிலை.' மேலும், இத்தாய்மை (அ) பொறுப்புணர்வு (interactive responsibility), (ஆ) அர்ப்பணம் (commitment), (இ) தோல்வி தாங்கும் உள்ளம் (resilience) என மூன்று மதிப்பீடுகளாக வெளிப்பட வேண்டும்.
 
தாய்மை என்பது எப்படி தயார்நிலையோ, அதுபோல புத்தாண்டு என்பதும் தயார்நிலையே. புத்தாண்டு என்பது நம் இலக்கு அல்ல. மாறாக, நம் இலக்கை அடைவதற்கான வழியே புத்தாண்டு. புத்தாண்டை நாம் கொண்டாடக் காரணம் நாம் காலத்திற்கு உட்பட்டிருப்பதால்தான். காலத்திற்கு உட்படாத கடவுளுக்கும், வானதூதர்களுக்கும், இறந்த நம் முன்னோர்களுக்கும் புத்தாண்டு இல்லை. ஆக, நம் வரையறையை நினைவுகூறும், கொண்டாடும் நாள்தான் இந்நாள்.
 
காலத்தின் வரையறைக்குள் கடவுளும் வந்ததால், காலம் புனிதமாக மாறியது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா 4:4-7), புனித பவுல், 'காலம் நிறைவேறியபோது, திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகளாக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்' என மொழிகிறார். காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேருமும் இடமும் தேவை. இந்த நேரத்தையே, பவுல், 'காலம் நிறைவுற்றபோது' என்றும், இந்த இடத்தையே, 'பெண்ணிடம்' என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார். 'கடவுளின் மகன்' என்று இயேசுவைச் சொல்வதன் வழியாக, மறைமுகமாக மரியாளை 'கடவுளின் தாய்' எனச் சொல்கின்றார் பவுல். மேலும், காலத்திற்கு உட்பட்ட கடவுள், 'இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்' என்று கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமைப்பேற்றைக் கொடுக்கின்றார்.
 
கடவுளே நுழைந்த காலத்தின் நீரோட்டத்தின் ஒரு பகுதியே 2019ஆம் ஆண்டு. இந்த ஆண்டிற்குள் நுழையும் நமக்கு கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண்.எண் 6:22-27). 'யோம் கிப்பூர்' நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே இது. இந்த ஆசீரின் இரண்டு முக்கிய கூறுகள் அருளும், அமைதியும். இந்த ஆசீரை இறைவனே மோசே வழியாக ஆரோனுக்கு கற்றுத் தருகின்றார். எபிரேயத்தில் 'ஆசீர்' என்றால் 'செல்வம்' அல்லது 'வளமை' என்பது பொருள். ஆக, ஒருவர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் இறைவனின் ஆசீர் பெற்றவர் என்று நாம் சொல்லலாம். அதற்காக செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் ஆசீர் இல்லாதவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
 
தமிழ் மொழிபெயர்ப்பில் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது, 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!' என்பது 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' என்று இருக்க வேண்டும். ஒருவேளை எபிரேயத்தின் மொழிநடை எல்லாவற்றையும் பிரித்து எழுதுகிறதோ என்னவோ. மேலும், எபிரேய வாக்கிய அமைப்பில் முதல் ஆசியில் மூன்று வார்த்தைகளும், இரண்டாம் ஆசியில் ஐந்து வார்த்தைகளும், மூன்றாம் ஆசியில் ஏழு வார்த்தைகளும் இருக்கின்றன. மூன்று - ஐந்து - ஏழு என ஆசீர் வளர்கிறது. ஆக, இது சும்மா 'நல்லா இரு!' என்று சொல்லப்பட்ட ஆசீர் அல்ல. மாறாக, யோசித்து, நிறுத்தி, நிதானமாக எழுதப்பட்டுள்ளது.
 
மூன்று ஆசிகள். ஒவ்வொரு ஆசியிலும் இரண்டு கூறுகள்: (1) 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. ஆக, ஆண்டவரின் பிரசன்னத்தில் கூட்டம் போடுவதற்கே இடமில்லை. ஒவ்வொருவரும் அவரின் பார்வையில் விலைமதிப்பு உடையவர். 'பராகா' என்பது இறைவன் மனிதர்களுக்கு ஆசீர்வதிப்பதையும் குறிக்கிறது. 'காத்தல்' என்பதை 'கண்களைப் பதித்தல்.' ஒரு ஆயன் தன் மந்தையைக் காக்கிறான் என்றால், அவன் தன் மந்தையின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கிறான். (2) 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள் படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. (3) 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார்.
 
இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது? எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று எதார்த்த நிலைகள் உள்ளன. இறைவனின் ஆசிமொழி எனக்கு வெளியே தொடங்கி, என்மேல் ஒளிர்ந்து, எனக்குள் பாய்கின்றது. ஆக, இறைவனின் ஆசி முழுமையான ஆசியாக இருக்கிறது. புத்தாண்டு தரும் தயார்நிலையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கின்றார்.
 
இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக் 2:16-21) பின்புலம் இதுதான்: இயேசு பெத்லகேமில் பிறந்துவிட்டார். இந்த பிறப்பு செய்தி வானதூதர் ஒருவரால் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. பின் வானதூதர் அணி வானில் பாடல் பாடுகின்றது. இந்த பாடல் முடிந்தவுடன், இடையர்கள் என்ன செய்தார்கள் என்பதும், இடையர்களின் வருகை மரியாவில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதுமே இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தி வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இடையர்களின் வருகை, (ஆ) இடையர்களின் வியப்பு, (இ) மரியாளின் பதிலுணர்வு, (ஈ) இடையர்களின் செல்கை, மற்றும் (உ) இயேசுவின் விருத்தசேதனம். இவற்றில் மையமாக இருப்பது மரியாளின் பதிலுணர்வு.மரியாளின் பதிலுணர்வு மௌனமும், தியானமும். எல்லா யூதர்களையும்போல மரியாளுக்கும் மெசியா பற்றிய காத்திருத்தல் இருந்திருக்கும். இந்தக் காத்திருத்தல் நிறைவு பெற்றதை தன் உள்ளத்தில் உணர்ந்தவராய் அப்படியே உறைந்து போகின்றார்.இங்கே 'சும்பல்லூசா' என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு 'தியானித்தில்' அல்லது 'உள்ளத்தில் இருத்துதல்' அல்லது 'மனனம் செய்தல்' என்பது பொருள் அல்ல. மாறாக, 'ஒன்றுகூட்டுதல்' என்பதே பொருள். அதாவது, ரெவன்ஸ்பர்கர் ஆட்டத்தில், சிதறிக்கிடக்கும் படத் துண்டுகளை ஒவ்வொன்றாக அதனதன் அடத்தில் சேர்த்து பெரிய படத்தை உருவாக்குவதுபோல, மரியாள் இப்போது தன் கையில் கிடைக்கப்பட்டுள்ள புதிய துண்டை ஆச்சர்யமாக பார்க்கிறாள்.
 
ஆக, இன்று நாம் கொண்டாடும் மரியாளின் தாய்மை, புத்தாண்டில் நுழையும் நமக்கு, தாய்மை என்ற தயார்நிலையைத் தருகின்றது. ஏவாளின் தாய்மையும், மரியாளின் தாய்மையும் 'ஸ்மைல்' (smile) மற்றும் 'ஸைலன்ஸ்' (silence) என்ற இரண்டு 'எஸ்' ('s') களில் அடங்கியுள்ளன. பாம்பைப் பார்த்துச் சிரித்தார் ஏவாள். வானதூதரைப் பார்த்துச் சிரித்தார் மரியாள். தான் சபிக்கப்பட்டவுடன் மௌனம் காக்கிறார் ஏவாள். இடையர்கள் வாழ்த்தியபோது மௌனம் காக்கிறார் மரியாள்.
 
தாய்மையும், புத்தாண்டும் இலக்குகள் அல்ல. மாறாக, என் வாழ்வின் நிறைவை நான் அடைய திறக்கப்படும் வழிகள். இவ்வழிகளில் 'ஸ்மைல்' - அது இல்லாதபோது 'ஸைலன்ஸ்' என இரண்டு கால்களால் நடந்தால் பயணம் இனிதாகும். 2019 என்னும் இரயில் நம் வாழ்க்கை என்னும் நடைமேடைக்கு வர சில மணித்துளிகளே உள்ளன.
 
'உங்கள் கவலைகள் எல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்துபோவனவாக' என்பது இத்தாலியப் பழமொழி. மரங்கள், மனிதர்கள், கவலைகள், வாக்குறுதிகள் மறைய இரயில் வேகமாக ஓடும். ஓட்டத்தின் இறுதியில் இலக்கை அடையும்.
 
உங்கள் பயணம் சிறக்க இனிய வாழ்த்துக்கள்!
 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org