Get Adobe Flash player

ஜீசஸ் வந்திருக்கார்  -  சிறு தொடர்கதை - பகுதி 1
டாக்டர் ஜான் பெனோ , சென்னை
(

கதை ஆசிரிய ர் டாக்டர் ஜான் பெனோவைப்  பற்றி :
சென்னை இராயபுரத்தில் உள்ள புகழ் பெற்ற  எம் வி நீரிழிவு மருத்துவ மனையில் தலைமைக் கண் மருத்துவராகப் பல்லாண்டு பணியாற்றியவர். பின்னர் பெரம்பூர் அருகே இருக்கும் கொளத்தூரில்,  'அன்னை கிளினிக்' என்ற பெயரில் கண் மருத்துவ மனை நடத்தி வருகிறார்.பரம்பரைக் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த இவர் ஏழை எளியவர்களுக்கு மிக்க குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவச்  சேவை செய்பவர் ; கத்தோலிக்கக் கன்னியர், குருக்கள், ஆயர்கள், பேராயர்களிடம்  பணம் வாங்குவது இல்லை என்பது இவர் வைத்திருக்கும் கொள்கை. சிறந்த நகைச்சுவை உணர்வும், எழுத்தாற்றலும் பேச்சாற்றலும்  கொண்டவர்.
 

“கம் லார்ட் ஜீசஸ்!” சோம்பல் முறித்தவாறு எழுந்திருக்கும்போதே, பிள்ளைகள் சத்தம் காதைக் கிழித்தது. “அப்பா! ஜீசஸ் வந்திருக்கார்! ஜீசஸ் வந்திருக்கார்!” என்று என் குட்டிப்பெண்ணும் பையனும் கையைப் பிடித்து இழுத்து ஹாலுக்குக் கூட்டி வந்தார்கள்.நாளைக்கு கிறிஸ்துமஸ்! ‘இந்த முறை கிறிஸ்துமஸ் கலெக்ஷனுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு பதிலாக ஜீசஸ் கெட்-அப்பில் ஆள் அனுப்பியிருக்கிறார்களா?’ என்று நினைத்தவாறே வந்திருந்தவரைப் பார்த்தேன். வெள்ளை அங்கி, நடு வகிடு எடுத்த நீண்ட முடி, தாடி, வசீகரமான கண்கள் என ஜீசஸ் மாதிரியே இருந்தார். “கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு பதிலாக என்னை அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைத்தாயா சாம்?” என்று என்னைப் பார்த்து அவர் கேட்க, பக்கென்றது எனக்கு. சத்தியமாக இவர் ஜீசஸ்தான்!

“என்னங்க! சீக்கிரம் கிளம்பி, ஜீசஸுக்கு நம்ம ஊர் கிறிஸ்துமஸ் தயாரிப்பெல்லாம் எப்படியிருக்குன்னு காண்பிச்சுட்டு வாங்க!” என்று கூறியவாறே என்னை பாத்ரூமுக்குத் தள்ளிக்கொண்டு போனாள் என் மனைவி.

“நீ வரலையா?”

“அய்யோ! கிறிஸ்மஸ் வேலை தலைக்கு மேல இருக்கு. நான் வர முடியுமா?”

“சரி! பசங்களையாவது கூட்டிட்டுப் போறேன்”.

“விளையாடுறீங்களா? சர்ச்ல ‘ஒன் டே வித் ஜீசஸ்’ ப்ரோக்ராம் இருக்கில்ல! போவாட்டி அந்த பெரிய சிஸ்டர் பசங்களைத் தொலச்சு எடுத்துடும்!”

“சரி! நான் மட்டும் போய்ட்டு வரேன்” என்று பாத்ரூமுக்குள் நுழையும் முன், ரகசியமாக என் காதருகில், “என்னங்க! எனக்கொரு ஐடியா! ஜீசஸ் அஞ்சு அப்பத்தை ஐயாயிரம் பேருக்கு குடுத்தாரில்ல! நான் ஒரு கேக் தான் செஞ்சிருக்கேன். அந்த கேக்கை அவர்கிட்ட குடுத்து ஆசிர்வாதம் பண்ண சொல்லி அம்பது கேக் ஆக்கிட்டோம்னா செலவு மிச்சம் ஆகும்ல!” என்றாள்.

நான் அவளை ஒரு முறை முறைத்து, “ லூஸு! அவர் என்ன ஜெராக்ஸ் மெஷினா? இப்படியெல்லாம் அல்பமா அவர் கிட்ட கேட்டா, நம்மள பத்தி அவர் என்ன நெனப்பார்?” என்று தைரியமாக (எல்லாம் ஜீசஸ் பக்கத்தில் இருக்கிறார் என்ற தைரியம்தான்) கூறிவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தேன்.

என்னுடைய புது ஐ-20ல் ஜீசஸைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு கிளம்பினேன். “ஜீசஸ்! சாந்தோம் சர்ச் போய்ட்டு, அப்படியே பெசன்ட் நகர், பரங்கிமலை பார்த்துட்டு வருவோமா?”
லேசாகப் புன்னகைத்தார்.

“புரசைவாக்கத்தில் ஒரு சின்ன வேலை இருக்கு. பிள்ளைகளுக்கு எடுத்த துணியை வாங்கணும். அதை முடிச்சுட்டு சாந்தோம் போலாமா?”

இதற்கும் புன்னகையே பதில்.

நேராக புரசை ஸ்ரீராம் டெக்ஸ்டைல்ஸ் சென்றோம். வேறு கடவுள்களின் படங்களைப் பார்த்து ஜீசஸ் கோபித்துக் கொள்வாரோ என்று பயந்துகொண்டே உள்ளே நுழைந்தேன். ஜீசஸ் எல்லோரையும், எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்தவாறே உட்கார்ந்திருந்தார்.

எக்ஸ்சேஞ்ச் செய்த துணிகளையும், மேலும் ஒரு செட் ஜீன்ஸ் டீ-ஷர்ட், ஒரு காக்ரா சோலியையும் வாங்கிக்கொண்டு பில் போட சென்றேன்; ஜீசஸும் கூடவே.

“4,000 ரூபா எக்ஸ்ட்ரா கட்டணும் சார்.”

“ஓகே!”

“கேஷ் ஆர் கார்ட் ஸார்?”

“கார்ட்!”

“12% ஜிஎஸ்டி வரும்! ஓகேவா சார்?”

நாலாயிரம் ரூபாய்க்கு 12% எவ்வளவு என்று என் மனக்கணக்கியைக் கேட்டேன்; “நானூத்தென்பது!” என்று பதிலளித்தது. மற்ற நேரமாயிருந்தால், “ஜிஎஸ்டியாவது….. ஹை கோர்ட்டாவது..” என்று எட்டு ஐநூறு ரூபாய்களைத் தூக்கிக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டியிருப்பேன். போயும் போயும் பிசாத்து நானூத்தென்பது ரூபாய்க்காக ஜீசஸிடம் ‘வரி ஏமாற்றுபவன்’ பட்டத்தை வாங்குவதா? எனவே ‘ஓகே’யினேன்.

பின் நம்பர் போட பில் வாங்கினால் தூக்கிவாரிப் போட்டது. (தொடரும்)

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org