Get Adobe Flash player

மறை உரை : ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போ

அருள்பணி மரிய அந்தோணிராஜ் - நன்றி :அருள்வாக்கு

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு -  (எசாயா 6:1-8; 1கொரி 15:1-11; லூக்கா 5:1-11)


நிகழ்வு - கான்சாஸ் நகரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அற்புதமாக கேலிச் சித்திரங்களை வரையக்கூடியவன்.  ஒருநாள் அவன் தான் வரைந்து வைத்திருந்த கேலிச் சித்திரங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கேட்டுப்போனான். அந்த நிறுவனத்தில் இருந்தவர்களோ இளைஞன் கொண்டுவந்திருந்த கேலிச் சித்திரங்களைப் பார்த்துவிட்டு, “இந்த மாதிரிக் கேலிச் சித்திரங்களை எல்லாம் மக்கள் இரசித்துப் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டனர்.

இளைஞன் அதை நினைத்து வருத்தமடையாமல், மறுநாள் வேறு ஒரு நிறுவனத்திற்குச் சென்றான். அங்கேயும் அவன் வேறொரு ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே அனுப்பி வைக்கப்பட்டான். இப்படி அவன் பல நிறுவனங்களின் வாசலை ஏறியபோதும், அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதற்காக அவன் சிறிதும் மனதளராமல், ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கினான்.  ஒருநாள் அவன் ஓர் அருட்தந்தையைச் சந்தித்து, வேலை கேட்டு நின்றான். அருட்தந்தையோ, “உனக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு இங்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை... வேண்டுமானால், இங்கேயே தங்கிக்கொண்டு ஆலயத்திற்கு விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக்கொடு” என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அருட்தந்தை கொடுத்த ஒரு சிறிய அறையில் தங்கிக்கொண்டு, ஆலயத்திற்கு வேண்டிய விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக் கொடுத்துக் கொண்டும் தன்னுடைய திறமைகளை யும் வளர்த்துக் கொண்டும் வந்தான். அந்த இளைஞன் தங்கியிருந்த அறை கொஞ்சம் பாழடைந்திருந்தது. அதனால் அவ்வப்போது அந்த அறைக்குள் எலிகள் வந்துபோயின. நாளடைவில் எலிகளுக்கும் அவனுக்கும் இணக்கம் ஏற்பட, அவன் எலிகளை சற்று வித்தியாசமாக வரைந்து, மக்களுடைய பார்வைக்கு வைத்தான். ஒருகட்டத்தில் அவன் வரைந்த எலிகளைப் பற்றிய கேலிச் சித்திரங்கள் பிரபலமடையவே, அவன் பெரும் பணக்காரன் ஆனான். ஆம்- அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்டினி, அவன் வரைந்த கேலிச்சித்திரத்தின் பெயர் மிக்கி மவுஸ். இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையங்களாக இருக்கக்கூடிய டிஸ்டினி லாண்டும் டிஸ்டினி வோல்ட்டும் இவருக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத் தக்கது. தான் வரைந்த கேலிச் சித்திரங்கள் தொடக்கத்தில் பலராலும் புறக்கணிக்கப்பட்டபோது அதை நினைத்து மனந்தளரா மல், தன்னுடைய திறமையின்மீது நம்பிக்கை வைத்து விடாமுயற்சியோடு போராடி, வாழ்க்கையில் வெற்றிகண்டார் வால்ட் டிஸ்டினி. நம்முடைய வாழ்க்கையில் வரும் சிறு சிறு தோல்விகளைக் கண்டு மனந்தளராமால், விடாமுயற்சியோடு, அதே நேரத்தில் நாம் எடுத்த காரியத்தில் மேம்போக்காக இல்லாமல், ஆழமாக சென்றால், வெற்றிகள் கைகூடுவது உறுதி. 

பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நாம், இன்றைய இன்றைய நாளில் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தை அடிப்படை யாகக் கொண்டு, ‘ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போ’ என்ற தலைப்பில் சிந்திக்க இருக்கின்றோம். எனவே, அதைக் குறித்து இப்போது பார்ப்போம்.

1. தோல்வியைச் சந்தித்த சீமோன்  - நற்செய்தியில், இயேசு கெனசரேத்து ஏரிக்கரைக்கு வந்தபோது, அங்கு முந்தின நாள் இரவு, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று, மீன்பாடு கிடைக்காமல் கரைக்குத் திரும்பி வந்து, வலைகளை அலசிக்கொண்டிருந்த சீமோனையும் அவருடைய கூட்டாளி களையும் கண்டார். சீமோன் ஒரு மீனவர், அவருக்கு மீன்பிடிப்பதில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் தெரியும். அப்படியிருந்தும் அவருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் இரவு முழுவதும் பாடுபட்டும்  மீன் ஒன்றும் கிடைக்காமல் இருப்பது வியப்பாக இருக்கின்றது. சில சமயங்களில், நமக்கு எல்லாம் அத்துப்பிடி என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற துறைகளில்கூட தோல்விகள் ஏற்படலாம். அத்தகைய தருணங்களில் நாம் மனமுடைந்து போகாமல், அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் நல்லது. முந்தின நாள் இரவு மீன்பிடிக்கச் சென்ற சீமோன், மீன் ஒன்றும் கிடைக்காத தற்காக மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, மாறாக, அவர் வலைகளை அலசிக்கொண்டிருக்கின்றார். வலைகளை அலசுதல் என்பது, மீண்டுமாக மீன்பிடிக்கச் செல்வதற்கு தன்னையே தயார்செய்வதாக இருக்கின்றது.

 
2. ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய் வலைவீசிய சீமோன் -   படகில் அமர்ந்தவாறே மக்களுக்குப் போதித்த இயேசு பின்னர் சீமோனிடம், “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்கிறார்.  இவ்வாறு சொன்ன இயேசுவிடம் பேதுரு விசனப்பட்டிருக்கலாம், ‘இவர் தச்சரின் மகன்தானே, இவருக்கு எப்படி மீன்பிடிப்புப் பகுதி தெரியும், அதுவும் இந்தப் பகல்வேளையில்  இப்படி ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கச் வலைகளைப் போடச் சொல்கிறாரே’ என்று. ஆனால் அவர் அப்படியெல்லாம் விசனப்படாமல், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்று  படகை ஆழத்திற்கு இழுத்துக் கொண்டுபோய் வலைகளை வீசுகிறார். அதனால் வலையே கிழிந்து போகின்ற அளவுக்கு பெருவாரியான மீன்கள் கிடைக்கின்றன.  இங்கு பேதுரு, இயேசுவின் வார்த்தைகளின்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையையும் இயேசுவின் வார்த்தை களுக்கு அவர் கீழ்ப்படிந்து நடந்ததையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். வேறு யாராக இருந்தாலும் ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போகச் சொன்ன இயேசுவிடம், ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்றுதான் சொல்லியிருப்பார்கள். ஆனால், பேதுருவோ அப்படிச் சொல்லாமல், இயேசு வின் வார்த்தைகளை நம்பி, அதன்படி நடக்கின்றார். அதனால் அதிசயத்தைக் கண்டுகொள்கிறார்.
 
3. மனிதர்களைப் பிடிப்பவராக மாறிய சீமோன்-  சீமோன் (பேதுரு), இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு நடந்ததனால், நடந்த அதிசயத்தைக் கண்டு திகைத்துப் போய், “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்கின்றார். ஆனால் இயேசுவோ அவரிடம், “அஞ்சாதே! இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவர் ஆவாய்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள், ‘என் வாய் திக்கும்’ (விப 4:10), ‘நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்டவன்’ (எசா 6:5) , ‘நான் சிறுபிள்ளைதானே’ (எரே 1:6) என்று சொன்ன, மோசே, இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா போன்றோரிடம் ஆண்டவர் சொன்ன திடப்படுத்தும் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கின்றன.  மீன்பிடித் தொழிலைச் செய்து இயல்பாகவே பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான மன உறுதியையும் பொறுமையையும் இணைந்து உழைப்பதற்கான ஆற்றலையும் பெற்றிருந்த சீமோனால், திரு அவைக்குத் தலைமை தாங்கி வழிநடத்த முடியும் என்பதை அறிந்த இயேசு, அவரை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குகின்றார். பேதுருவும் ஆண்டவரிடத்தில் தன்னை முழுவதும் ஒப்படைத்துவிட்டு அவர் பணி செய்யப் புறப்படுகின்றார். 

சிந்தனை -  ஒரு சாதாரண மீனவராக இருந்த சீமோன் பேதுரு, மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறி, பின்னர் திரு அவைக்கே தலைவராக மாறினார் என்றால், அது அவர் இயேசுவை முழுமையாக நம்பி, அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்ததனாலேயே சாத்தியமானது. நம்முடைய வாழ்விலும் அது போன்ற அதிசயங்கள் நடக்கவேண்டும் என்றால், நாம் இறைவனை முழுமையாக நம்பி, அவருடைய வார்த்தைகளுக்குப் கீழ்படிந்து நடக்க வேண்டும்.  ஆகவே, நாம் இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். https://www.arulvakku.com/components/calendar/single.php?id=5788
 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org