Get Adobe Flash player

மறை உரை : மற்றொரு துணையாளர்  

-அருள்பணி மரிய அந்தோணிராஜ்  -   (அருள்வாக்கு இணையதளம் )
(திருத்தூதர் பணிகள் 2: 1-11; உரோமையர் 8: 8-17; யோவான் 14: 15-16, 23-26)

அமெரிக்கர்களால் ‘மக்கள் கவிஞர்’ என அன்போடு அழைக்கப்படுபவர் ‘எட்கர் கெஸ்ட் (Edgar Guest 1881 - 1959). இவர் பிறந்தது என்னவோ இங்கிலாந்தாக இருந்தாலும், வளர்ந்ததெல்லாம் அமெரிக்காதான். தன்னுடைய பத்தாவது வயதில் இங்கிலாந்திலிருந்து வந்த இவர், கடைசிவரைக்கும் அமெரிக்காவிலேயே இருந்தார்.  எட்கர்க்கு ஒரு மகன் இருந்தான். அவன்மீது அவர் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்.


பதிலுக்கு அவனும் அவர்மீது அன்பு வைத்திருந்தான். ஒருநாள் அவருடைய மகன் திடீரென இறந்துபோனான். அவரால் தன்னுடைய மகனின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர் மனம்போன போக்கில் நடந்துபோனார். அவ்வாறு அவர் நடந்துபோகும்போது யாரோ ஒருவர் அவரைப் பெயர் சொல்லி அழைக்க, அவர் திரும்பிப் பார்த்தார். அங்கு அவருடைய பக்கத்து வீட்டில் வசித்துவந்த பெரியவர் ஒருவர் தன்னுடைய கடையில் அமர்ந்திருந்தார்.  அந்தப் பெரியவர் எட்கரைத் தன்னிடம் கூப்பிட்டார். எட்கரும் அவருடைய கடைக்குள் சென்றார். அப்பொழுது அந்தப் பெரியவர் எட்கரின் தோளை வாஞ்சையோடு பிடித்ததுக்கொண்டு, “தம்பி! உங்களுடைய மகன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். கவலைப்படதே! உனக்கு என்ன வேண்டுமா னாலும் என்னிடத்தில் கேள். நான் தருகிறேன். என்னுடையதெல்லாம் உன்னுடையதுதான்” என்றார். இவ்வார்த்தை எட்கரின் உள்ளத்திற்கு ஆறுதலைத் தந்தது. இதுகுறித்து எட்கர் பின்னாளில் குறிப்பிடும்போது, “பாலைவனத்தில் தனித்துவிடப்பட்டவனைப் போன்று உணர்ந்த எனக்கு பெரியவரின் வார்த்தைகள் மிகப்பெரியத் துணையாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.   மகனை இழந்து நின்ற எட்கர் கெஸ்ட் என்ற அந்த மக்கள் கவிஞர்க்கு, பெரியவரின் வார்த்தைகள் எப்படி மிகப்பெரிய துணையாக இருந்தோ, அதுபோன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்தையிடமிருந்து அனுப்பப்போகிற தூய ஆவியார் இருப்பார். 


 

இன்று நாம் தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இத்தூய ஆவியாரின் விழா நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது? தூய ஆவியாரின் வருகையினால் நாம் என்ன நன்மையைப் பெறப் போகிறோம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

துணைவரும் தூய ஆவியார் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை விட்டுப் போவதற்கு முன்னம் அவர்களிடம், “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை அனுப்புமாறு தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்குக் அருள்வார்” என்கின்றார். அவர் சொன்னதுபோன்றே பெந்தகோஸ்தே நாளில், தூய ஆவியார் சீடர்கட்க்கு அருளப்படுகின்றார். இந்தத் தூய ஆவியார் எப்படிப்பட்டவர் எனத் தெரிந்துகொண்டால், அவருடைய ஆசியை நாம் எப்படிப் பெறலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.  தூய ஆவியாரைக் குறித்து இயேசு சொல்லக்கூடிய முதன்மையான செய்தி, அவர் மற்றொரு துணையாளர் அல்லது துணையாளர் என்பதாகும். இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்துபோது தன்னுடைய சீடர்கட்க்கு மிகப்பெரிய துணையாக இருந்த இயேசு, தான் போனபிறகு அவர்கள் திக்கற்றவர்களாகப் போய்விடக்கூடாது என்பதற்காக மற்றொரு துணையாளராம் தூய ஆவியாரை அனுப்புகின்றார். இதன்மூலம் இயேசு, தான் தந்த துணையை, உடனிருப்பை தூய ஆவியார் தருவார் என்று வாக்குறுதி அளிக்கின்றார். இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அதுதான் நடக்கின்றது. மேலும் இயேசு தூய ஆவியாரைக் குறித்துச் சொல்கின்ற ‘துணையாளர் (Comforter) என்பதை ஆறுதல் அளிப்பவர், வலுவற்ற நிலையில் இருக்கின்ற சீடர்கட்க்கு வலுவூட்டுகிறவர் (உரோ 8:26) என்ற விதத்திலும் புரிந்துகொள்ளலாம்.  

கற்றுத்தரும் தூய ஆவியார்தூய ஆவியாரைக் குறித்து இயேசு உணர்த்தும் இரண்டாவது உண்மை, அவர் அனைத்தையும் கற்றுத்தருவார் (யோவா 14: 26) என்பதாகும். 
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகமானது பொய்யும் புரட்டும் போலித்தனமும் நிரம்பி வழியும் உலகமாக இருக்கின்றது. இதனால் உண்மை எது, பொய் எது, நன்மை எது தீமை எது எனப் பிரித்துப் பார்க்க முடியாமல் இருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில்தான் தூய ஆவியார் பாவம், நீதி, தீர்ப்பு போன்றவற்றைக் குறித்த கருத்துகள் தவறானவை என்று கற்றுத்தந்து (யோவா 16:8) உண்மையை வெளிப்படுத்துபவராக இருக்கின்றார். ஏனெனில், அவர் உண்மையை வெளிப்படும் தூய ஆவியார் (யோவா 16:13)   இங்கு நாம் இன்னொரு உண்மையையும் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், தூய ஆவியார் நம்முடைய வாழ்க்கையில் உண்மையை வெளிப்படுத்துவராக, கற்றுத்தருபவராக, நம்மிடம் வந்து குடிகொள்பவராக இருக்க, நாம் மிகவும் முக்கியமான ஒரு காரியத்தைச் செய்யவேண்டும். அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம். 

தூய ஆவியார் நம்மிடம் வந்து குடிகொள்ள நாம் என்ன செய்யவேண்டும்? தூய ஆவியார் துணையாளர், அவர் நமக்கு அனைத்தையும் கற்றுத்தருபவர் என்று இதற்கு முன்னதாக சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது இத்தகைய தூய ஆவியார் நம்மிடம் வந்து குடிகொள்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம். 
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வார்; “என்மீது அன்புகொள்பவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து குடிகொள்வோம்,” இங்கு ‘நாங்கள்’ என்று இயேசு சொல்வதை, தந்தைக் கடவுள், மகனாகிய இயேசு, தூய ஆவியார் என்று எடுத்துக்கொள்ளலாம். எப்போது நாம் இயேசுவிடம் அன்பு கொள்கின்றோமோ, அப்போது தந்தை, மகன் உட்பட தூய ஆவியார் நம்மிடம் வந்து குடிகொள்வார் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.   பழைய ஏற்பாட்டில், ‘நம்பிக்கையின் தந்தை’ என அழைக்கப்படும் ஆபிரகாம் ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடித்து வந்தார். அதனால் ஆண்டவர் அவரோடு இருந்தார்; அவரோடு குடிகொண்டார் (தொநூ 18). இதற்கு மாறாக ஆபிரகாமின் சகோதர் லோத்து ஆண்டவர்க்கு உகந்த வாழ்க்கை வாழவில்லை. அதனால் கடவுள் அவரிடம் குடிகொள்ளவில்லை (தொநூ 19) பழைய ஏற்பாட்டில் வருகின்ற இன்னோர் எடுத்துக்காட்டு. இஸ்ரயேலின் அரசர்களான சவுல் மற்றும் தாவீதிடமிருந்து தூய ஆவியார் எடுக்கப்பட்டது (1 சாமு 16: 14, 18:12). இவர்கள் இருவரும் ஆண்டவரின் கட்டளைகளை மீறினார்கள். அதனால்தான் அவர்களிடமிருந்து தூய ஆவியார் எடுத்துக்கொள்ளப்பட்டார். ஆனால், நற்செய்தியிலோ இயேசு தம் சீடர்களிடம், “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்” என்கின்றார். தூய ஆவியார் நம்மோடு என்றும் இருக்கவேண்டும் என்றால், அதற்கு நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும். 

சிந்தனை -  ‘தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்’ (உரோ 8:26) என்பார் பவுல். ஆகவே, நமக்குத் துணையாக இருப்பவரும் கற்றுத் தருபவருமான தூய ஆவியார் நம்மிடம் வந்து குடிகொள்ள, நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org