Get Adobe Flash player
கிறிஸ்தவம் இடையில் வந்த வந்தேறிகளின் மார்க்கமா?
-ஜான்சன் நீதிமாணிக்கம் -
 

கிறிஸ்தவம் வந்தேறிகளின் மார்க்கம். இந்து மதமே தொன்மையான மதம் என்று சரித்திரம் தெரியாத சிலர், அல்லது திட்டமிட்டு உண்மையை திரித்து, மறைக்க விரும்புகிறவர்கள் வாதிடுகின்றனர். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று நம் பெரியவர்கள் கூறியிருப்பதுபோல, இக்கட்டுரையைப் படிக்கிற யாவரும் சரித்திர உண்மைகளை திறந்த மனதோடு சீர்த்தூக்கிப் பார்க்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாடு பிடிக்க வந்த பிரிட்டிஷ், போர்த்துக்கீசிய வியாபாரிகளால் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டதல்ல கிறிஸ்தவ மார்க்கம். வணிகர்கள் ஒருபோதும் மததூதுவர்களாக இருக்க முடியாது.
அந்நியநாட்டு அரசாங்கங்களால் அனுப்பப்பட்ட வெளிநாட்டு மிஷனரிகள் உயர்ந்த உத்தியோகங்கள், அந்தஸ்துக்களைக் காட்டி இந்தியர்களை மயக்கி கிறிஸ்தவர்களாய் மாற்றிவிட்டார்கள் என்று சரித்திரம் அறியாத ஒருசிலரால் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் ஏறெடுக்கப்பட்டு வருகிறது. (பதவிக்காகவோ அல்லது பட்டத்துக்காகவோ அல்ல. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் கன்னியாகுமரி, திருநெல்வேலியில் பெருமளவில் கிறிஸ்தவர்களாய் மாறக் காரணம் என்ன என்பதை வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்).
*கிறிஸ்தவ மதநம்பிக்கை ஈராயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது. குருயேசுநாதரின் அருட்சீஷர்கள் 12 பேரில் ஒருவரான தோமாவால் கிபி. 48ல் அது இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டது.*
அநாகரீக ஐரோப்பியர்கள் கிறிஸ்தவர்களாகும் முன்னர், *“டுருயிட்”* என்ற தெய்வங்களுக்கு நரபலி செலுத்திக் கொண்டிருந்த நாட்களிலேயே பத்து இலட்சம் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் வாழ்ந்தனர்.
அமெரிக்காவுக்கு கிறிஸ்தவம் செல்வதற்கு 1700 வருடங்களுக்கு முன்பே கிறிஸ்தவம் இந்தியாவுக்குள் வந்துவிட்டது. இன்று இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அதிகம்.
தோமா அப்போஸ்தலர் -இயேசுவின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவரான தோமா, கி.பி. 48ல் அலெக்சாந்திரியா பட்டணத்திலிருந்து புறப்பட்டு குந்தபோரஸ் அரசனின் நாட்களில் தற்போது பஞ்சாப் என அழைக்கப்படும் தக்சலாவுக்கு வந்து சேர்ந்தார். கிபி 50ல் சீனாவிலிருந்து வந்த இந்தோ-ஸ்கைதிய குஷான்களால் தக்சலா பிடிக்கப்பட்டபோது, தோமா கி.பி. 51ல் மலபார் கடற்கரையிலுள்ள முசிரி சென்றடைந்தார்.
பாலூர், முசிரி, பாரூர், கோமங்களம், சாயல், நிராணம், கொல்லம் ஆகிய இடங்களில் பல கிறிஸ்தவ சபைகளை அப்போஸ்தலர் தோமா நிறுவினார். பின்னர் அவர் மைலாப்பூர் சென்றார். அவர் அங்கு போகும் முன்பே அவர் செய்த அற்புதங்களைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த மைலாப்பூரை ஆண்ட ராஜாவும் அவருடைய பிரஜைகளில் சிலரும் குருயேசுநாதரை ஏற்றுக்கொண்டு தீட்சை (Baptism) பெற்றுக்கொண்டனர்.
இது அங்குள்ள பிராமணர்களுக்கு வெறுப்பையும் பொறாமையையும் உண்டாக்கியதால், தோமாவை ஈட்டியால் குத்திக் கொன்றனர் என்று டி.என். கோபால் அவர்கள் விவேகானந்த பிரகாஷன் என்ற பத்திரிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளார்.3  (இந்து மதம் சகிப்புத்தன்மை கொண்டது என்று சிலர் பிதற்றிக்கொண்டு திரிகின்றனர். நூற்றக்கணக்கான சமண மதத் துறவிகளை அவர்கள் கழுவேற்றிக் கொன்ற கொடுரக் கதையை பின்பு நான் கூறுகிறேன்).
அப்போஸ்தலர் தோமாவை அடுத்து, குருயேசுநாதரின் அருட்சீடர் பர்தொலொமேயு கி.பி. 55ல் மேற்குக் கடற்கரையிலுள்ள கல்யாண் என்னும் இடத்தில் ஏழு ஆண்டுகள் கடவுள் தொண்டாற்றினார். அதன்பின் கி.பி. 189ல் பாண்டேனஸ் என்ற கிறிஸ்தவ சந்நியாசி மேற்குக் கடற்கரையோரம் சமயப் பணியாற்றியுள்ளார்.
கி.பி. 295ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிஷப்பாகிய பர்சா நகரைச் சார்ந்த டேவிட் அவர்களும், கி.பி. 341ல் சேருமன் பெருமாள் என்ற அரசனின் ஆட்சிக்காலத்தில், நைதாமஸ் என்ற சிரியாக் கிறிஸ்தவர் சுமார் 400 சிரியாக் கிறிஸ்தவர்களோடு இந்தியா வந்தார்.
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, கி.பி. 825ல் தாணு இரவி என்ற அரசன் காலத்தில், மார் சப்போர் என்ற பிஷப் தலைமையில் கிறிஸ்தவர்கள் கொல்லம் என்ற பட்டணத்தைக் கட்டினார்கள்.
தமிழ்நாட்டு, நாகர்கோவிலுக்கு அருகாமையில் உள்ள புனித மேரி ஆலயத்தின் கல்கட்டுமாக் கலை, பிந்திய சீரியரின் கட்டிடக்கலைக்கு முற்பட்டது என்பது, அப்போஸ்தலர் தோமாவின் சமயப்பணியை உறுதி செய்கிறது.
கி.பி. 1498ல் கள்ளிக்கோட்டை வந்த வாஸ்கோடகாமா, கேரளாவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இருந்ததாக எழுதி வைத்திருக்கிறார். வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இந்தியாவில் இருந்தனர்.
இந்திய இலக்கியங்களில் (திருவள்ளுவரின் திருக்குறள், அகத்தியரின் அகத்தியர் ஞானம், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ராமத்தேவர் என்ற யாக்கோபின் சித்தர் பாடல்களில்) கிறிஸ்தவ சிந்தனைகள் இழையோடிக் கிடப்பதை ஆதாரங்களோடு அடுத்தக் கட்டுரையில் காண்போம்.எனவே:
• கிறிஸ்தவம் சமீபத்தில் வெள்ளையர்களால் இடையில் கொண்டு வரப்பட்ட ஒரு மதமல்ல. பல நூற்றாண்டுகளாய் இந்தியாவில் வேரூன்றியுள்ள ஒரு மார்க்கம்.
• கிறிஸ்தவம் ஒரு வந்தேறிகளின் மதமென்றால், கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் கொண்டு வந்த மதம் எப்படிப்பட்டது?
• நம் நாட்டில் தோன்றிய புத்தம், சமணத்தை பிறநாடுகள் ஏற்றுக்கொண்டிருக்கும்போது, கிறிஸ்தவத்தை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
• ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு அரசியல் கட்சியையோ, அல்லது கொள்கைகளையோ பின்பற்ற உரிமை உள்ளபோது, கிறிஸ்தவக் கொள்கைகளை விரும்பிப் பின்பற்ற இந்தியர்களுக்கு உரிமையில்லையா?
• இந்தியாவிலிருந்து ஆரியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, மற்றவர்களை தங்கள் மார்க்கத்திற்கு மாற்றவும், வழிபாட்டுத் தலங்களையும் கட்டவும் உரிமை உள்ளபோது, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கைகளை பரப்பவும், தங்களுக்கென்று வழிபாட்டுத்தலங்களைக் கட்டவும் உரிமையில்லையா?

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org