Get Adobe Flash player
8 செப்டம்பர் 2019 ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு
 
I. சாலமோனின் ஞானம் 9:13-18  II. பிலமோன் 9-10,12-17  III. லூக்கா 14:25-33
 
மீட்பு அளிக்கும் ஞானம்!
 அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி

காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட நாம் எப்போதும் நாம் நம்முடைய காலத்தையும் இடத்தையும் நீடித்துக்கொள்ளவே விரும்புகிறோம். நிறைய ஆண்டுகள் வாழ விரும்புகிறோம், நிறைய இட வசதியோடு வீடு கட்டிக்கொள்ள விரும்புகிறோம், நிறைய இட வசதி கொண்ட வாகனம் வாங்க விரும்புகிறோம், நீடித்த பேட்டரி, நீடித்த கறுப்பு நிற முடி, நீடித்த சிவப்பழகு, நீடித்த டிவி, நீடித்த முதலீடுகள், நீடித்த வட்டி விகிதம் என எல்லாவற்றிலும் நீட்சியை விரும்புகிறோம். இவை எல்லாமே நம்முடைய நீடித்த மகிழ்விற்கான தேடலின் வெளிப்பாடுகள். நமக்குக் கிடைக்கும் சின்னஞ்சிறு மகிழ்ச்சி தருணங்கள், அனுபவங்கள் நீடிக்காதா என ஏங்குகிறோம்.
 
நீடித்த மகிழ்ச்சியே மீட்பு என்றும், அந்த மீட்பை ஞானத்தால் அடையலாம் என்றும் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. மீட்பு என்றவுடன் நாம் பல நேரங்களில் பாவத்திலிருந்து மீட்பு என்று நினைத்து மீட்பை பாவத்தோடு இணைத்துவிடுகிறோம். 'மீட்பு' என்பது மறுவாழ்வு அல்லது நிலைவாழ்வு சார்ந்த வார்த்தை மட்டும் அன்று. மாறாக, முதலில் அதன் பொருள் 'நலம்' என்பது. ஒரு மருத்துவர் மற்றவருக்கு நலம் தரும் செயல் கிரேக்க மொழியில் 'மீட்பு' என்றே சொல்லப்பட்டது. நலம் தரும் மருத்துவர் என்ன செய்கிறார்? நோயை நம்மிடமிருந்து நீக்கி நம்முடைய நலத்தை அல்லது மகிழ்ச்சியை நீட்டிக்கிறார். இயேசு செய்வதும் இதுதான். பாவத்தால் வந்த இறப்பிலிருந்து நம்மை 'மீட்டு' நம்முடைய வாழ்வை, மகிழ்ச்சியை நீட்டிக்கிறார்.
 
நீடித்த மகிழ்ச்சியை ஞானம் எப்படி அருள்கிறது?
 
இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 9:13-18), சாலமோனின் ஞானநூல் ஆசிரியர் மனிதர்களின் இயலாமை அல்லது வரையறை அனுபவம் பற்றி அழகாக எழுதுகின்றார். அதை நான்கு வாக்கியங்களில் பதிவு செய்கின்றார்: (அ) 'நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவவை,' (ஆ) நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை, (இ) 'அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது,' மற்றும் (ஈ) 'இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.' இங்கே மூன்று விடயங்கள் அடிக்கோடிடப்படுகின்றன: (அ) நாம் நிலையற்றவர்கள், நம்முடைய உடல் அழியக்கூடியது. இருந்தாலும் அங்கே அழியாத ஆன்மா ஒன்று உள்ளது. (ஆ) அழிவுக்குரிய உடலோ, அதிலிருக்கும் மூளையோ தங்களிலேயே வரையறைக்குட்பட்டவை. ஆகவே அழிவுக்குரிய திட்டங்களைத்தான் அவைகளால் எடுக்க முடியும். (இ) நம்முடை மனத்தில் இயல்பாகவே கவலை இருக்கின்றது. அந்தக் கவலை நம்முடைய உடலால் இன்னும் அழுத்தப்படுகிறது. இதை வாசித்தவுடன், 'ஐயோ! என்ன ஒரு இரங்கத்தக்க நிலை! இதிலிருந்து விடுபட வழியே இல்லையா? என் எண்ணங்கள் பயனற்றவையா? என் திட்டங்கள் நிறைவேறாதா? என் கவலை மாறாதா? என் மண் கூடாரம் எனக்குச் சுகமாக இருக்காதா?' என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன.
 
இந்தக் கேள்விகளிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆறுதலான செய்தியையும் ஆசிரியர் தருகின்றார்: (அ) கடவுளின் ஞானத்தாலும் தூய ஆவியாலும் நாம் இறைவனின் திட்டத்தையும், நம் வாழ்வின் திட்டங்களையும் அறிந்துகொள்ள முடியும். (ஆ) அந்த ஞானம் நமக்கு மீட்பு, நலம், மகிழ்ச்சி தரும்.
 
ஆக, நம்முடைய உடல், எண்ணம், மனத்தின் கவலை ஆகியவற்றால் நாம் நலமற்று இருந்தாலும், நமக்கு நிலையான நீடித்த மகிழ்ச்சியை, மீட்பாக வழங்குகிறது கடவுளுடைய ஞானம். நாம் கடவுளுடைய ஞானத்தையும், அவருடைய ஆவியையும் பெற்றுக்கொள்ளும்போது நம்முடைய வாழ்வு செம்மைப்படுத்தப்பட்டு, நாம் அவருக்கு உகந்தவற்றையே செய்வோம். செம்மையான வாழ்வும், அவருக்கு உகந்தவற்றைச் செய்வதும்தானே நீடித்த மகிழ்ச்சி!
 
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். பில 9-10,12-17) பவுலுடைய திருமுகங்களில் மிகச்சிறிய திருமுகம் அல்லது பரிந்துரைக் கடிதம் என அழைக்கப்படும் பிலமோன் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மகிச்சிறிய நூலாக இருந்தாலும் மிகப்பெரிய புரட்டிப் போடுதலை இது செய்கின்றது. அது என்ன புரட்டிப் போடுதல்? கொலோசை நகரின் முக்கியமான செல்வந்தர் பிலமோன். இவருடைய அடிமையின் பெயர் ஒனேசிமு. அடிமை என்றவுடன் இன்று அது வெறும் வார்த்தையாகத் தெரிகிறது. இன்று நாம் காலையிலிருந்து எழுந்தவுடன் ஸ்விட்ச் போட்டவுடன் லைட் எரிகிறது. குழாய் திறந்தவுடன் தண்ணீர் வருகிறது. ஒரு பக்கம் சுடுதண்ணீர் மறுபக்கம் குளிர்ந்த நீர். அங்கே அருகில் தொங்கும் புதிய டவல். அருகிலேயே கழிப்பறை. அருகில் சென்றாலே தானாகவே தண்ணீர் இட்டுக்கொள்ளும். குளித்து முடித்து வெளியே வந்தவுடன் முடி உலர்த்தி, மின்விசிறி, அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட ஆடைகள், மேலே ஒரு கையில் துணிகளை உயர்த்தி மறு கையால் துணியை உருவி பட்டன் மாட்டிக்கொண்டே ஊபர் ஈட்ஸ் துலாவி காலை உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அப்படியே அடுத்த வேலை பார்க்க கிளம்பிவிடலாம். ஆனால், அன்று இவை எல்லாவற்றையும் செய்ய பிலமோனுக்கு ஒனேசிமு தேவைப்பட்டார். எழுப்பி விட, தீப்பந்தம் ஏற்ற, தண்ணீர் கொண்டுவர, கழிவிற்கு மண்பானை கொண்டுவர, தண்ணீர் சுட வைக்க, விறகு பொறுக்க, அடுப்பு ஏற்ற, வெதுவெதுப்பாய் வாளியில் நிரப்ப, குளிக்க வைக்க, துண்டால் துவட்டி விட, ஆடையை மற்றும் உணவு தயாரிக்க என அடிமை இல்லாமல் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாத நிலை. ஒருநாள் காலை பிலமோன் துயில் எழும் நேரம் ஒனேசிமு இல்லை. அவர் தப்பிவிட்டார். அடிமை தப்பினால் அவருக்கு மரண தண்டனை கொடுக்கலாம் என்று கிரேக்க மற்றும் உரோமைச் சட்டங்கள் நிர்ணயித்தன. அப்படித் தப்பி வந்த ஒனேசிமு பவுலிடம் அடைக்கலம் அடைகிறார். பிலமோன் வீட்டிற்குப் பவுல் அடிக்கடி வந்து சென்றதால் பவுலை ஒனேசிமுவுக்குத் தெரிந்திருக்கலாம். இப்படித் தன்னிடம் வந்த ஒனேசிமுவை மீண்டும் பிலமோனிடம் அனுப்புகின்றார். பிலமோன் கோபத்தால் ஒனேசிமுவைத் தண்டித்துவிடலாம் என்று நினைத்த பவுல் ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதுகின்றார். அக்கடிதத்தின் ஒரு பகுதியே இரண்டாம் வாசகம்.
 
'என் இதயத்தையே அனுப்புகிறேன்' என்று பவுல் சொல்கின்றார். மேலும், 'நீர் அவனை ஓர் அடிமையாக அல்லாமல் கிறிஸ்தவ நம்பிக்கையில் ஒரு சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்' என்று பிலமோனுக்கு எழுதுகின்றார். அக்காலத்தில் அடிமை என்பவர்கள் விலங்குகள் அல்லது பொருள்களாகக் கருதப்பட்டனர். அஃறினையாகக் கருதப்பட்ட ஒருவரை உயர்திணையாகக் கருத பிலமோன் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும். அவருடைய உளப்பாங்கு மாற்றம் பெற வேண்டும். இறுதியாக, 'என்னை ஏற்றுக்கொள்வது போல அவனை ஏற்றுக்கொள்ளும்' என்று அடிமையோடு தன்னையே இணைத்துக்கொள்கின்றார் பவுல்.
 
இதில் என்ன ஞானம் இருக்கிறது? நான் எனக்கு அடுத்திருப்பவரை என்னைப் போல நினைக்கவும் நடத்தவும் தொடங்கினால் நான் நலம் பெறுவேன், என் உள்ளம் மகிழ்ச்சி பெறும். உயர்ந்தவர்-தாழ்ந்தவர், பெரியவர்-சிறியவர், வேண்டியவர்-வேண்டாதவர் என்ற பேதமே நம்முடைய மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால், பேதங்களற்ற நிலையில் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளாக, ஒருவர் மற்றவரை இருப்பது போல ஏற்றுக்கொண்டு, மன்னித்து, அன்பு செய்து வாழ்ந்தால் இந்த உலகமே நாம் மீட்பு அடையும் இடமாகிவிடும்.
 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 14:25-33) தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்களைப் பார்த்து இயேசு சீடத்துவத்தின் போதனைகளை வழங்குகின்றார். மூன்று பேர் தன்னுடைய சீடர்களாக இருக்க முடியாது என முதலில் வரையறுக்கிறார் இயேசு: (அ) 'தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரை, ஏன், உயிரை இயேசுவை விட மேலாகக் கருதுபவர்கள்' - இங்கே இயேசு இவர்களை வெறுக்க வேண்டும் அல்லது துறக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, முதன்மைப்படுத்துதலில் தெளிவு வேண்டும் என வலியுறுத்துகின்றார். (ஆ) 'தம் சிலுவையைச் சுமக்காமல் அவர் பின் செல்பவர்கள்' - சிலுவை என்பது இயேசுவின் இலக்காக இருந்தது. நாம் அனுபவிக்கும் எல்லாவித நெருடல், இடறல், கீறல்தாம் சிலுவைகள். (இ) 'தம் உடைமைகளையெல்லாம் விட்டுவிடாதவர்கள்' - லூக்காவைப் பொறுத்தவரையில் செல்வம் மற்றும் பற்று எப்போதும் இயேசுவைப் பின்தொடர்தலுக்கு இடையூறானது. ஏனெனில், அது கவனச் சிதறல்களை உருவாக்கிவிடும். இயேசுவை முதன்மையாகக் கொண்டு, அன்றாட இடறல்களையும், இடையூறுகளையும், பிறழ்வுகளையும் தூக்கிக்கொண்டு, கவனச் சிதறல்களைத் தவிர்த்து இயேசுவோடு வழிநடப்பவரே அவருடைய சீடராக இருக்க முடியும்.
 
மூன்று எதிர்மறையாக வாக்கியங்களில் சீடத்துவத்தை வரையறுத்த இயேசு இரு உருவகங்கள் வழியாக தன்னுடைய போதனையை இரத்தினச் சுருக்கமாக்க அணியம் செய்கிறார்: (அ) கோபுரம் கட்ட விரும்பும் ஒருவர், (ஆ) வேறு ஓர் அரசரோடு போரிடும் அரசர். கோபுரம் கட்டுதல் மிகவும் சிரமமான வேலை. சமதளத்தில் எளிதாக நாம் கட்டிவிட முடியும். ஆனால், மேல் நோக்கிச் செல்லும் கட்டிடம் மற்றும் கோபுரம் நிறைய வேலைகளை எடுக்கும். ஒரு அறை கட்டுகிறோம் என வைத்துக்கொள்வோம். அதற்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு அறைகள் கட்ட வேண்டுமெனில் நாம் எளிதில் வானம் தோண்டிக் கட்டிவிடலாம். ஆனால், அவ்வறைகளை மாடியில் கட்ட வேண்டும் என்றால் சிரமம். ஏனெனில் ஏற்கனவே உள்ள அடித்தளம் எவ்வளவு தாங்குமோ அந்த அளவிற்குத்தான் கட்ட முடியும். அடித்தளத்தை மீண்டும் தோண்டி இடவும் முடியாது. ஆக, உயரமாக செல்வதற்கு நிறையத் திட்டமிடல் அவசியம். போரிலும் அதே நிலைதான். பாதிப் போர் முடிந்து, 'நான் நிறுத்திக் கொள்கிறேன்' என்று எந்த அரசனும் சொல்ல முடியாது. போர் தொடங்கிவிட்டால் வாழ்வு அல்லது சாவு தான். பாதி வாழ்வு, பாதி சாவு என்பது போரில் கிடையாது. சீடத்துவம் என்பதும் இயேசுவைப் பொறுத்தவரையில் திரும்ப திருத்த இயலாத ஒன்று. ஒரு முறை முடிவு எடுத்து, 'ஆம்' என்று சொல்லிவிட்டால், தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும். பாதி அர்ப்பணம் மிகவும் ஆபத்தானது. போரில் பாதி வீரம் போல. கோபுரத்தில் பாதிக் கோபுரம் போல.
 
ஆக, இயேசுவைப் பின்பற்றுதல் நம்முடைய நீடித்த மகிழ்ச்சியாக மீட்பாக இருக்கிறது. அதை அடைவதற்கு திட்டமிடலும், விட்டுவிடலும் அவசியமாகின்றன.
 
நீடித்த மகிழ்ச்சி என்னும் மீட்பை ஞானத்தின் வழியாக நாம் எப்படி பெறுவது?
 
நாம் பல நேரங்களில், 'எனக்கு மகிழ்ச்சி வேண்டும்' என்று வெளியே தேடுகிறோம். அது தவறு. மகிழ்ச்சி இயல்பாகவே நம்முள் இருக்கிறது. அது சில நேரங்களில் கவலை, ஏக்கம், எதிர்பார்ப்பு என்னும் மேகங்களால் மங்கலாகத் தெரிகிறது. அவ்வளவுதான்! மேகங்கள் களைய மகிழ்ச்சி கண்களுக்குப் புலப்படும்.
 
1. மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை என்று தெளியும் ஞானம்
 
நாம கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்தால் நிறைய எண்ணங்கள் தோன்றி மறைகின்றன நம் மூளையில். எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது. எண்ணங்கள் இயல்பாகவே எழுகின்றன. ஆனால், சிந்தனை என்பது நான் சிந்திப்பது. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுணர வேண்டும். 'என் நண்பர் என்னைவிட்டுப் போய்விடுவார்,' 'என்னுடைய கணிணியைச் சரி செய்ய முடியாது,' 'தங்கம் விலை கூடுகிறது,' 'பெட்ரோல் விலை கூடுவதால் இன்று கார் எடுக்க வேண்டாம்,' 'இந்தச் சட்டை எனக்கு டைட்டாக இருக்கிறது' - இவை எல்லாம் என் மனதில் எழும் சில எண்ணங்கள் என வைத்துக்கொள்வோம். இவை கொய கொய என்று குப்பை மாதிரி நிறைந்துகொண்டும், காற்றில் பறந்துகொண்டும் இருக்கும். ஆனால், 'நான் இதை முதலில் எழுதுவேன்,' 'இந்தக் கருத்து நல்லது' என்று நான் சிந்திப்பது மற்றொரு பக்கம் வரிசையாக நடக்கும். எண்ணங்களை நான் நெறிப்படுத்த வேண்டும் என்றால் என் ஆசைகளை நெறிப்படுத்த வேண்டும். ஆசைகள் குறைய எண்ணங்கள் குறையும். என் வாழ்வில் எழும் எண்ணங்கள் என் மகிழ்ச்சியை, என் நலத்தை, என் நம்பிக்கையை குலைத்துவிடக் கூடியவை. ஆகையால்தான், அவற்றை பயனற்றவை என்கிறார் ஞானநூல் ஆசிரியர். நீடித்த மகிழ்ச்சியைப் பெறும் ஞானத்தின் முதற்படி இதுதான். என்னுடைய ஆசைகளை நெறிப்படுத்தி என்னுடைய எண்ணங்களை நெறிப்படுத்துவது. பயனற்ற எண்ணங்களை விடுத்து இறைவனின் ஆவியின் துணையால் செம்மையானவற்றைச் சிந்திப்பது.
 
2. எனக்கு அடுத்திருப்பவரை என்னைப் போல ஏற்றுக்கொள்ளும் ஞானம்
 
முதல் வாசகத்தில் 'மண்கூடாரம்' என்ற வார்த்தையை உருவகமாகக் கையாளுகிறார் ஆசிரியர். நாம் இன்று எவ்வளவு பொருள்கள், பதவிகள், படிப்பு, உறவுகள் வைத்திருந்தாலும் என் வாழ்வு ஒரு மண்கூடாரம். அது எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம். செங்கல்கள் சரிந்தால் நேராகச் சரியும். மண் அப்படியில்ல. எங்கே எந்தப் பக்கம் இழுத்துக்கொண்டு போகும் எனத் தெரியாது. இப்படிபட்ட மண்கூடாரமாக இருக்கும் நான், வலுவற்று நொறுங்குநிலையில் இருக்கும் நான், எனக்கு அடுத்திருப்பவரின் நொறுங்குநிலையை உணர வேண்டும். பிலமோன் இன்று தலைவராக, ஒனேசிமு இன்று அடிமையாக இருந்தாலும் இருவரும் மண்கூடாரங்களே. பிலமோனின் பணமும், பொருளும், சமூக நிலையும் அவரை ஒரு போதும் காங்க்ரீட் கட்டிடமாக மாற்ற முடியாது. ஆக, என்னையும் அடுத்தவரையும் இணைக்கும் ஒன்றைப் பார்த்து நான் பழக வேண்டுமே தவிர, அவரையும் என்னையும் பிரித்துப் பார்க்கும் எதையும் நான் பெரிதாக்கிப் பார்த்து மற்றவரை இகழக் கூடாது. என்னை மண்கூடராமாக ஏற்றுக்கொள்ளுதல் எனக்கு அடுத்திருப்பவரோடு என்னை இணைக்கும்.
 
3. விட்டுவிடுதல், திட்டமிடுதல் என்னும் ஞானம்
 
இன்று மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றை நான் முதலில் விட்டுவிட வேண்டும். குதிரையை லாயத்தில் கட்டிக்கொண்டு அதில் நான் பயணம் செய்ய முயற்சிக்கக் கூடாது. குதிரை பயணம் செய்ய வேண்டுமெனில் லாயத்தின் கயிறு அகற்றப்பட வேண்டும். குதிரைக்கு லாயத்தில் இருப்பது பாதுகாப்புதான். ஆனால், குதிரை அதற்காக வாங்கப்படவில்லை. அது தன்னுடைய சிலுவையை, துன்பத்தை அன்றாடம் சுமக்க வேண்டும். ஆக, இன்று நான் இயேசுவை முதன்மைப்படுத்தி மற்றவற்றை விட்டுவிடவும், என்னுடைய இயலாமையை நான் சிலுவையாகச் சுமக்கவும், என்னுடைய கவனச்சிதறல்களைக் களையவும் வேண்டும். தொடர்ந்து, கோபுரம் கட்டுபவர், போருக்குச் செல்பவர் போல நேரம் எடுத்து, அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, யோசித்து, திட்டமிடல் வேண்டும். ஒருபோதும் என்னுடைய செயலில் பின்வாங்கவே கூடாது.
 
இவ்வாறாக, இறைவனின் ஆவியால், ஒருவரை மற்றவரை ஏற்றுக்கொள்ளுதலால், இயேசுவின் சீடராதலால் நாம் நம்முடைய மீட்பைப் பெற்றுக்கொள்ள முடியும். இறைவனின் ஆவியைப் பெறுவதும், ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்வதும், இயேசுவின் சீடராவதுமே ஞானம்.
 
இறுதியாக, இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 90) ஆசிரியர் இவ்வாறு செபிக்கிறார்: 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்!' இதுவே நம் செபமாகட்டும்.
 
இன்றைய நாள் முடிந்தால் நம் வாழ்நாளில் ஒரு நாள் மறைகிறது. நாள்கள் கூடக்கூட வாழ்நாள் குறைகிறது. இந்தக் கூட்டல்-குறைத்தல் தெளிவானால் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தால் இந்த நொடியே நமக்கு மீட்பு நிகழும்!

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org