Get Adobe Flash player

மறை உரை : பாவிகளை வரவேற்கும் இயேசு

அருள்பணி மரிய அந்தோணிராஜ்

பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறு -  I விடுதலைப் பயணம் 32: 7-11 / II. 1 திமொத்தேயு 1: 12-17 / III - லூக்கா 15: 1-32 - 
 


நிகழ்வு - இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் தான் பணிசெய்து வந்த இடத்தில் தன்னோடு பணிசெய்து வந்த ஓர் இளம்பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தான்; அவளையே திருமணம் செய்துகொள்வதென முடிவுசெய்தான். இது குறித்து அவன் தன்னுடைய தந்தையிடம் பேசியபோது அவர், “சொந்த பந்தத்தில் இருக்கின்ற ஒரு பெண்ணைப் பார், கட்டிவைக்கிறேன்... அதை விடுத்து யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறாய் என்றால், என்னால் அவளை வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மறுத்துவிட்டார்.


அவன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். அப்படியும் அவர் இறங்கிவராததால், அவன் தான் உயிருக்கு உயிராக அன்புசெய்த அந்தப்பெண்ணை மணந்துகொண்டு பெருநகரில் ஒன்றில்  குடியேறினான்.  அவன் தந்தையை விட்டுப் பிரிந்துவந்தாலும், ஒவ்வொரு வாரமும் அவர்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தான். அந்தக் கடிதத்தில் அவன் அவருடைய நலத்தை விசாரித்தும் அவருடைய சொல்பேச்சுக் கேட்டு நடக்காத தற்கு மன்னிப்புக் கேட்டும் எழுதினான். ஆனால், அவனுடைய தந்தையிடமிருந்து மட்டும் எந்தவொரு பதில் கடிதமும் வரவில்லை. அப்படியிருந்தும் அவன் தன் தந்தைக்குக் கடிதம் எழுதுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. பத்து ஆண்டுகட்கும் மேல் எழுதிக் கொண்டே வந்தான். ஒருநாள் அவனுடைய முகவரிக்கு கனமான ஒரு பொட்டலம் (Parcel) வந்தது. அனுப்புநர் முகவரியை அவன் பார்த்தபோது, அதில் அவனுடைய தந்தையிடம் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அவனால் நம்ப முடியவில்லை. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பதற்றம். ‘இந்தப் பொட்டலத்திற்குள் என்ன இருக்குமோ?’ என்ற கலவையான எண்ணங்களோடு அவன் அதைப் பிரித்துப் பார்த்தன். அதில் அவன் பத்தாண்டுகட்கும் மேல் தன் தந்தைக்கு எழுதி அனுப்பிய கடிதங்களெல்லாம் இருந்தன, அதுவும் எந்தக் கடிதமும் பிரிக்கப் படாமலேயே இருந்தன. அப்பொழுது அவன், “இத்தனை ஆண்டுகளும் நான் எழுதி அனுப்பிய ஒரு கடிதத்தையாவது என் தந்தை பிரித்தப் பார்த்திருந்தால்கூட அவர் என்னை தன் மகனாக ஏற்றுக்கொண்டிருப்பாரே! இப்படி எதையுமே பிரித்துப் பார்க்காமல், நான் செய்த தவறையும் மன்னிக்காமல் வைராக்கியத்தோடு இருக்கிறாரே’ என்று மிகவும் வேதனைப்பட்டான்.   இந்த நிகழ்வில் வருகின்ற தந்தையைப் போன்றுதான் பலர், தவறுசெய்தவர்களை (சில சமயங்களில் அது தவறில்லாமல் கூட இருக்கலாம்) மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனதில்லாமல் இருக்கின்றார்கள். ஆனால், இவர்கட்கெல்லாம் முற்றிலும் மாறாக, தவறு செய்தபின் மனம் திருந்தியவர் களை, பாவிகளை உள்ளன்போடு ஏற்றுக்கொள்ளக்கூடியவராக விண்ணகத் தந்தை இருக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.


பாவிகளை வரவேற்ற/ தேடிச்சென்ற இயேசு -  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவிகளைத் தேடி மீட்டதையும் (லூக் 19: 10) பாவிகளோடு இருந்ததையும் (மத் 9: 10) பார்த்த பரிசேயக்கூட்டம், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று அவருக்கு எதிராக முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது இயேசு, தான் ஏன் பாவிகளைத் தேடி மீட்கிறேன், எதற்காக அவர்களோடு தன்னை ஒன்றித்துக் கொள்கிறேன் என்பதை விளக்க, காணாமல் போன ஆடு உவமை, காணாமல் போன திராக்மா உவமை, காணாமல் போன மகன் உவமை என்ற மூன்று உவமைகளைச் சொல்கின்றார். இம்மூன்று உவமைகளிலும் அடிநாதமாக இருப்பவை, காணாமல் போதல், கண்டுகொள்ளுதல், மகிழ்ச்சி உண்டாகுதல் என்ற மூன்று கருத்துகள்தான். இம்மூன்று கருத்துகளையும் தனித்தனியாக சிந்தித்துப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலம் இயேசு ஏன் பாவிகளை வரவேற்றார் என்று தெரிந்துகொள்வோம்.

1. காணாமல் போதல் - லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற மூன்று உவமைகளிலும் வெளிப்படக்கூடிய முதலாவது உண்மை, காணாமல் போதல் ஆகும். காணாமல் போன ஆடு உவமையில் வரும் அந்த ஆடானது, தன்னுடைய மதியினத்தால் அல்லது அறிவுகெட்டத்தனத்தால் காணாமல் போகிறது. ஆடு என்றால், ஆயனின் குரல் கேட்டு நடக்கவேண்டும். ஆனால், காணாமல் போன ஆடோ ஆயனின் குரல் கேட்கமால், தன்னுடைய மதியினத்தால் தொலைந்து போகின்றது. காணாமல் போன திராக்மா உவமையில் வரும் அந்த திராக்மா, அதை வைத்திருந்த பெண்ணின் கவனக்குறைவால் காணாமல் போகின்றது. இதை ஒருசில வீடுகளில் பெற்றோர்களின் நெறிகெட்ட வாழ்க்கையால் பிள்ளைகளும் கேட்டுப் போகிறார்களே, அதற்கு ஒப்பிடலாம். எப்படியிருந்தாலும் காணாமல் போனது அல்லது பாவத்தில் விழுந்தது பாவத்தில் விழுந்ததுதான். காணாமல் போன மகன் உவமையில் வரும் இளைய மகன் தெரிந்த காணாமல் போகிறான் அல்லது தெரிந்தே பாவத்தில் விழுகின்றான். காணாமல் போவதும் பாவத்தில் விழுவதும் இறப்பதற்குச் சமம் (15: 24) என்று இதே அதே அதிகாரம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இப்படிக் காணாமல் போன அல்லது இறந்துபோன(வை)(வர்)கள் எப்படிக் கண்டுகொல்லப்பட்டார்கள் என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

 
2. கண்டுகொள்ளுதல் - மூன்று உவமைகளிலும் வெளிப்படும் இரண்டாவது முக்கியமான உண்மை, கண்டுகொள்ளுதல். காணாமல் ஆடு உவமையிலும் காணாமல் போன திராக்மா உவமைவிலும் உரிமையாளர்களே அவற்றைத் தேடிக் கண்டுகொள்கின்றார்கள். இதனை ஆண்டவர் இயேசு பாவிகளைத் தேடிவந்து மீட்டதற்கு ஒப்பிடலாம் (லூக் 19: 10). ஆனால், காணாமல் போன மகன் உவமையில் அப்படியில்லை. அதில் காணாமல் போன மகனே, தந்தையின் பேரன்பையும் இரக்கத்தையும் உணர்ந்து, தன்னுடைய பாவத்தைக் கண்டுகொண்டு தந்தையிடம் திரும்பி வருகின்றான். இவ்வுவமை தந்தைக் கடவுள் பேரன்புடையவராக இருந்தாலும், மனிதர்களாகிய நாம், நம்முடைய இயலாமையை, பாவத்தை உணர்ந்து, அவரிடம் சேரவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருகின்றது.
 
3. மகிழ்ச்சி உண்டாகுதல் - மூன்று உவமைகளும் எடுத்துரைக்கும் மூன்றாவது, மிக முக்கியமான உண்மை. மகிழ்ச்சி உண்டாகுதல் என்பதாகும். காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் ஆயர் நண்பர்களோடும் அண்டை வீட்டாரோடும் சேர்ந்து மகிழ்கின்றார்; காணாமல் போன திராமாவைக் கண்டுபிடித்தவரோ தன் தோழிய ரோடும் அண்டைவீட்டாரோடும் மகிழ்சிகின்றார்; காணாமல் போன மகனைக் கண்டுகொண்ட தந்தை தன் பணியாளர்கள் எல்லாரோடும் விருந்து கொண்டாடுகின்றார். இன்னும் சொல்லவேண்டும் என்றால், ஒரு பாவி மனம் மாறுகின்றபோது அது அவரைச் சார்ந்தவர்கட்கும் மட்டுமல்லாது, விண்ணுலகிலும் கடவுளின் தூதர்கட்கும் மகிழ்ச்சி யைத் தரக்கூடிய ஒரு செயலாக இருக்கின்றது. 

 
இப்படி ஒரு பாவியின் மனமாற்றத்தினால் எல்லாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்பதால்தான் இயேசு அவர்களைத் தேடிச் செல்கின்றார்; தவறை உணர்ந்து திருந்தியவர்களை அன்போடு வரவேர்கின்றார். இந்த உண்மையை உணராமலும் தாங்களும் பாவிகள்தான் என்பதை அறியாமலும் இருந்ததால்தான் காணாமல் போன மகன் உவமையில் வருகின்ற மூத்த சகோதரனைப் போன்று பரிசேயக் கூட்டம், இயேசு பாவிகளை வரவேற்றதற்கு முணுமுணுக்கிறார்கள். பலநேரங்களில் நாமும்கூட, தவறுகளை உணர்ந்து, திருந்தி வருகின்றவர்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றோம். இத்தகைய போக்கினை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு இயேசுவைப் போன்று பாவிகளை அன்போடு ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வோம். 

சிந்தனை -  ‘யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்மென இறைவன் விரும்புகிறார்’ (1 பேது 3:9) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் மனம்மாறி  அவரிடம் திரும்பி வரவேண்டும் என்று விரும்பும் அன்பு இறைவனிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org