Get Adobe Flash player
jesus-praying1
La retraite prévue pour le samedi 20 mars 2010 s'est bien déroulée
en l'eglise St Jean Porte Latine,
1 Square de l'Atlantique
92160 ANTONY

தவக்காலத்  தியானம்

நேரடி வருணனை

மார்ஸ் 20 ஆம் தேதி பொழுது  புலராத அதிகாலை.   நீர் கொண்ட கரு கரு மேகங்கள் சூல் கொண்ட பெண்ணைப் போல் அலைந்துகொண்டிருந்தன. அந்தோணி நகரில் உள்ள புனித யோவான் போர்த் இலத்தீன் ஆலயம் மவுன சாட்சியாய் நின்றுகொண்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராய் மக்கள் வரத்தொடங்கினர். காலை 10 .30 மணி அளவில்  ஞானகத் தந்தை ஜெர்மானுஸ் வரவேற்றார் .அருட்தந்தை சவரியப்பன் நமக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரை அழைத்துத்  தியானத்தைத் தொடங்கிவைத்தார்.   குளித்தாலும் அழுக்கு மறுபடி சேரத்தானே போகிறது என்று யாரும் குளிக்காமல் இருப்பதில்லை. அது போலப் பாவச் சங்கீர்த்தனம் செய்தாலும் மறுபடி பாவத்தில் விழத்தானே போகிறோம் அதனால் பாவ சங்கீர்த்தனம் எதற்கு என்று இருப்பது தவறு  என உணர்த்திய ஞானகத் தந்தை  பாவ சங்கீர்த்தனத்தின்  மேன்மையை விளக்கினார்.  ஆவியானவர் பாடலால் மக்கள் ஆன்மீகச் சூடேற்றிக்கொண்டிருந்தார்கள். 'காலம் கனிந்துவிட்டது ; மனம் மாறுங்கள்”  என்ற திருமுழுக்கு யோவானின் கூற்றை விளக்கிய அருட்தந்தை சவரியப்பன் மனமாற்றத்துக்கு உரிய காலம் தவக் காலமே என்பதைச் சிறப்பாக எடுத்துரைத்தார். அடுத்து மைக்கைப் பிடித்தவர் அருட்தந்தை சூசை. தமக்கே உள்ள அமைதியான குரலில் திருமறை நூலில் இடம் பெறும் எண்களைப் பற்றிச் சிறப்பாக 40 என்ற எண்ணின் மகத்துவத்தை விளக்கினார்.  40  நாள்கள் நோன்பு இருந்த பின் களைத்து இருந்த   இயேசுவைச் சாத்தான் பசி, வீண் பெருமை, ஆணவ அதிகார ஆசை காட்டிச் சோதித்ததைச சொன்னார்.

சாத்தானின் சோதனைகளை இயேசு எப்படி வென்றார்  என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாகக் கூறினார். பின்னர் மக்கள் பலவகை வினாக்களை  விடுத்தனர். தக்க  பதில்களைத்  தக்க முறையில் அவர் கூறியதை மக்கள் ரசித்தனர். இன்னும் பல குருக்கள் வருவதாகவும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம் என்றும் ஞானகத் தந்தை அவ்வப்போது அறிவித்துகொண்டிருந்தார். வெளியே மழையும் ஓய்ந்தது ; உள்ளே கேள்வி மழையும் முடிந்தது.

அடுத்துப் பீடம் ஏறினார் நம் முன்னாள் ஞானகத் தந்தை மரிய பாஸ்கால். தம் தவக்கால உரையைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார். 40 நாள்கள் பிரளயத்துக்குப் பின்பும்  40 ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த பிறகும் 40 நாள்கள் நோன்பு முடிந்த பிறகும் புதிய வாழ்வு பிறந்ததை நன்கு விளக்கினார். 'நாமும் 40 நாள் நோன்பு இருக்கிறோம். அதன் பின் மனம் மாற வேண்டும் ; புது வாழ்வு பெற வேண்டும் ” அவர் உரையை மக்கள் நன்கு கவனித்துக் கேட்டனர். அடுத்து அவர் சொன்ன கருத்து அனைவரையும் கவர்ந்தது . 'இறைவனை நாம் அன்பு செய்யவேண்டும்” என்றுதான் சொல்லிவந்திருக்கிறார்கள். இறைவன் நம்மை அன்பு செய்கிறார், எந்த நிலையில் நாம் இருந்த போதிலும் அவர் நம்மை அன்பு செய்கிறார்  என்பதை ஏனோ மறந்துவிடுகிறோம். ” என்ற கருத்தை வலியுறுத்தினார்.    திருப்பலியும் திவ்விய   நற்கருணையும் இறைவன் நமக்கு அளிக்கும் அரிய அருட்கொடைகள் என்பதை அழகாகச சொன்னார். திருப்பலியில் இரு வகை விருந்துகள் உண்டாம். ஒன்று, இறை வார்த்தை விருந்து ; மற்றது நற்கருணை விருந்து. இந்த  இரு விருந்திலும் பங்கு கொள்ளவேண்டும் என்று கூறினார்;. மேலும் கிறிஸ்துவை நாம் உள்வாங்கவேண்டும். அதற்காக இடம் காலம் ஒதுக்கவேண்டும். செபிப்பதற்கும் செபிக்கிறோம் என்பதைச் சொல்வதற்கும் கூச்சப் படத்தேவை இல்லை... போன்ற கருத்துகளும் அவர் உரையில் வெளிப்பட்டன.

ஒரு மணி அளவில்  உணவு இடை வேளை. கொண்டுவந்த உணவை அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு உண்டனர். ஞானகப் பொறுப்பாளர்கள் ஞானகத் தந்தையுடன் ஞானக விழா பற்றிப் பேசச் சென்றனர். தியானம் மறுபடி தொடர்ந்தது. அருட்தந்தை பிலிப் சேவியர் பாவ சங்கீர்த்தனம்  பற்றிய தியானம் கொடுத்தார். ஊதாரி மகன் உவமையை விரிவாக விளக்கிய அவர் தந்தையாம் இறைவன் நம்மை மன்னித்து ஏற்கிறார் என்பதைச் சிறப்பாக விளக்கினார். பலவகை பாவசங்கீர்த்தனம் பற்றி அவர் விளக்கிய போது மக்கள் மிகவும் ரசித்தனர். தொடர்ந்து திவ்விய நற்கருணை ஸ்தாபகம். கூடவே அருட்தந்தை செபாஸ்தியான் மல்லிகை பூத்தொடுப்பது  போலச்  சிறு சிறு வாக்கியங்களில் தியானச் செய்திகளைத்  தந்துவர மக்கள் ஆங்காங்கே அமர்ந்து இருந்த குருக்களிடம் சென்று பாவசங்கீர்த்தனம்  செய்யத் தொடங்கினர். இடை இடையே 'யாரிடம் செல்வோம் இறைவா” என்ற பொருத்தமான பாடலைக்  குரு பாட  அப்பாடலிலும் மக்கள் பங்கு கொண்டனர். நல்ல பாவசங்கீர்த்தனம்  செய்த திருப்தி மக்கள் மனத்தில் நிறைந்தது. மக்களை நல்ல பாவசங்கீர்த்தனம்  செய்ய வைத்த திருப்தி குருக்கள் முகங்களிலும் படர்ந்தது. பின் திவ்விய நற்கருணை ஆசீர்வாதம்.

அதன் பின் ஏழு  குருக்களும் சேர்ந்து  கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்கள். திருமறை உரையாற்றிய அருட்தந்தை செபஸ்தியான், நகையும் சுவையுமாக 'மனம் மாறுங்கள், இனிப் பாவம் செய்யாதிருங்கள்” என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.   அன்றைய வாசகத்தில் இடம் பெற்ற விபச்சாரப் பெண் நிகழ்ச்சியைச் சிறப்பாக விளக்கினார்.   'இனிப் பாவம் செய்யாதே!” என்று இயேசு   அவளுக்குச் சொன்ன அதே அறிவுரை இன்று நமக்கும்தான் பொருந்துகிறது. எனவே 'மனம் மாறுங்கள் ; இனிப் பாவம் செய்யாதீர்கள்” என்று அவர் முடித்த போது மக்கள் இந்த ஒருநாள் தியானத்தின் பயனை நன்கு உணர்ந்தார்கள்.

ஞானகப் பொதுச் செயலர் செவாலியே யூபர்ட் சிமோன் அனைவருக்கும் நன்றி கூறினார். சில பல அறிவிப்புக்களை அறிவிக்க வந்த பெஞ்சமின் லெபோ, ' வரும் போது இருளோடும் மழையோடும் வந்தோம். தியானம் நடக்க நடக்க வெளியிலும் இருள்  மறைந்து  ஓளி  பிறந்தது! அது போல நம் மன இருளும் தியானத்தால் அகன்றது உள்ளே ஓளி பிறந்தது. மழை நின்றபின் வானில் வானவில் தோன்றும். அந்த வான வில்லின் ஏழு வண்ணங்களைப் போலவே ஏழு குருக்கள் நமக்குத் தியானம் கொடுத்தார்கள். அவர்களைப் பாராட்டுவோம்” என்று சொன்னதும் மக்கள் கை தட்டி ஆரவாரித்து நன்றி கூறினார். இறுதியாகப் பேசிய ஞானகத் தந்தை தம் மனத் திருப்தியைத் தெரிவித்து மகிழ்ந்தார். அந்தோணி நகரத்து ஞானகப் பொறுப்பாளர்கள் திரு ழான்வியே ரொசாரியோ, அவருக்கு உதவிய அன்பா;கள்... தியானம் தரவந்திருந்த  குருக்கள் சவரியப்பன், சு+சை, பிரிட்டோ, மரிய பாஸ்கல், செபாஸ்தியன், பிலிப் சேவியர், கலந்துகொண்ட மக்கள்...என அனைவருக்கும் தம் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். திருப்பலிக்குரிய பாடல்களைக் கிரிஞி பாடற்குழவினர் பாடித் திருப்பலிக்குச் சிறப்பு சேர்த்தனர்.

பின், இறைவனுக்கு நன்றி கூற  மாதா பாடலுடன் தியானம்  நிறைவு பெற்றது.   மறுபடி கூடிய  மேகம் 'சோ” என்று பெய்து தன் மகிழ்ச்சியைக் காட்டிகொண்டது. விளைவாக, பாவசங்கீர்த்தனம்  செய்த மக்களின் மனம்  போல மேகமும் வெளுப்பானது      

-புதுவை எழில்
தியானத்தின் போது எடுத்த படங்களை
போட்டோ கேலரியில் காண்க

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org