Get Adobe Flash player

பத்துக் கன்னியர் உவமை - ஒரு மறுவாசிப்பு
virgins

12 நவம்பர் 2017 ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு
வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி  இயேசு கருணாநிதி

 I. சாலமோனின் ஞானம் 6:12-16

II. 1 தெசலோனிக்கர் 4:13-18

III. மத்தேயு 25:1-13

'குச்சி உங்கிட்ட இருக்கு என்பதற்காக எல்லாரையும் நீ குரங்கா நினைக்கக் கூடாது!' 

 - கீழிருப்பவர் ஒருவர் தனக்கு மேலிருப்பவரைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் சொல்லிக்கொள்ளும் வாக்கியம் இது என சில வாரங்களுக்கு முன் ஒருவர் டுவிட்டி இருந்தார்.

 சரி இப்போ இது எதுக்கு இங்க?

 நீ மணமகன் என்பதற்காக லேட்டா வந்துட்டு இருக்கிற எல்லாரையும் வெளிய அனுப்புவியா?'

 ஆண்டின் பொதுக்காலம் நிறைவு பெற்று திருவருகைக்காலம் பிறக்க சில நாள்களே இருக்க, நற்செய்தி வாசகங்கள் மானிட மகன் என்னும் மணமகனின் வருகை பற்றி பேச ஆரம்பித்துவிட்டன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'பத்துக் கன்னியர் உவமை'யை வாசிக்கின்றோம். ஏற்கனவே நாம் கேட்ட, வாசித்த இந்த உவமையை கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம்:

 என் பெயர் வெரோணிக்கா!

 

நீங்கள் இன்றைய நற்செய்தியில் (காண். மத்தேயு 25:1-13) வாசிக்கும்

 

பத்துக்கன்னியர் உவமையில் வரும் ஒரு கன்னி நான்!

 

நேற்று காலை என்னுடன் தையல் படிக்கும் சாரா என்னைத் தேடி ஓடி வந்தாள்!

 

'ஏய்! வெரோ! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?'

 

'என்ன?'

 

'நாளைக்கு ஒரு திருமண நிகழ்வு. மணமகன் தோழியராய் பத்து பேர் வேண்டுமாம். ஒன்பது பேர் ஏற்பாடு செய்தாயிற்று. இன்னும் ஒரு ஆள் வேணும்! நீயும் வாடி...ப்ளீஸ்...!'

 

'நீ வந்தா நானும் வர்றேன்!'

 

'ஆமாம்! நானுந்தான்!'

 

மாலையில் திருமணம் என்பதால், 'கையில் விளக்கு எடுத்துக்கொண்டு போ!' என்று சொன்னாள் என் அம்மா.

 

விளக்கை அவசர அவசரமாக துடைத்தேன்.

 

திறந்து பார்த்தேன். எண்ணெய் ஆழத்தில் சொட்டு சொட்டாய்த் தெரிந்தது.

 

கல்லைப் போட்டு அதை மேலே கொண்டு வர நான் என்ன காக்காவா?

 

என் வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரி அணையாமல் மெல்ல சாய்த்து

 

அதில் உள்ள கொஞ்ச எண்ணெயை என் விளக்கில் ஊற்றிக்கொண்டேன்.

 

சாராவுடன் சேர்ந்து திருமண மண்டபத்திற்குச் சென்றேன்.

 

'என்னடி சாரா? விளக்குடன் சேர்த்து ஏதோ கையில் டப்பா?' என்றேன்.

 

'எக்ஸ்ட்ரா எண்ணெய் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்! எதுக்கும் பயன்படும்ல!'

 

'இருக்கப்பட்டவள் நீ எடுத்துக்கொண்டாய்! இல்லாதவள் நான் என்ன செய்ய?' என் மனதுக்குள்ளேயே நான் சொல்லிக் கொண்டேன்.

 

காத்திருந்தோம். காத்திருந்தோம். மணமகன் வந்தபாடில்லை.

 

என் கண்களில் தூக்கக் கலக்கம். எப்பொழுது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை.

 

'மணமகன் வருகிறார்!' 'மணமகன் வருகிறார்!' என்ற சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்தோம்.

 

விளக்குகளைப் பார்த்தால் விளக்குகள் இப்போவா, பிறகா என்று கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

 

'இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினால்தான் நன்றாக எரியும். ஆனால் இந்த எண்ணெய்க்கே நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்!'

 

சாராவைப்போலவே டப்பாவில் எண்ணெய் கொண்டுவந்த இருக்கப்பெற்றவர்கள் தங்கள் விளக்குகளுக்கு உயிர் கொடுத்தார்கள்!

 

'சாரா! எனக்கும் கொஞ்சம் எண்ணெய் கொடு!' என்றேன்.

 

'ஐயயோ! அப்போ எனக்கு இல்லாம போச்சுனா! நீ போய் கடையில் வாங்கிக்கோ!'

 

'கடையில் வாங்கிக்கவா? காசிருந்தால்தானடி கடைக்குப் போவேன்!'

 

என்னைப்போலவே கையில் எண்ணெய் இல்லாத - ஆனால் கையில் காசு இருந்த - மற்ற நான்கு பேர் கடைக்கு வேகமாக ஓடினர்.

 

மணமகன் வந்துவிட்டார்! இதோ என் கண்முன் அவர்!

 

விளக்குகள் ஏந்திக்கொண்டிருந்த ஐந்து பேரைக் கண்டுகொள்ளாமல் வேகமாக என்னிடம் வந்தார்.

 

'ஐயோ! என்னை வசைபாடப் போகிறார்!' என நினைத்துக்கொண்டு சாராவின் முதுகிற்குப் பின் ஒதுங்கினேன்.

 

என் தோளைத் தொட்டார். 

 

'என் அருகில் வா!' என்றார். 

 

'நீயே என் மணவாட்டி!' என்றாள். 

 

என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

 

'இது கனவா? இல்லை! கிள்ளினால் வலிக்கிறதே!'

 

திருமண மண்டபத்திற்கு தோழியாய்ச் சென்றவளுக்கு மணவாட்டி பாக்கியம் கிடைத்தது.

 

நிற்க...

 

இயேசுவின் பத்துக் கன்னியர் உவமையில் முன்மதியில்லாத ஐந்து கன்னியர் வெளியே அனுப்பப்பட்டதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.

 

ஏன்?

 

ஏனெனில் தவறு கன்னியர்மேல் அல்லர்! பின் யார்மேல்?

 

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்த ஐந்துபேர் மேலும்!

 

மணமகன் மேலும்!

 

எதற்காக?

 

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்தவர்கள் இன்றைய முதல் உலக நாடுகள் போல. முன்மதி என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு உரியதையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வர். ஒவ்வொரு செப்டம்பர் 13ஆம் தேதியை பூமியின் 'இலக்க கடந்த நாள்' என்று கொண்டாடுகிறோம். அதாவது, ஒரு வருடம் நாம் செலவழிக்க வேண்டியதை நான்கு மாதங்களுக்கு முன்னே சுரண்டி செலவழித்துவிட்டோம் என்பதை நமக்கு நாமே உணர்த்திக்கொள்ளத்தான் இந்த நாள்.

 

'பின் தேவைப்படும்!' என்று நான் சேகரித்து வைப்பதும் எதுவும் முன்மதி அல்ல. சுயநலமே! 

 

இந்த சுயநலம்தான் அந்த ஐந்துபேர் தங்கள் எண்ணெயைப் பகிர்ந்து கொள்ள தடுக்கிறது.

 

இரண்டாவதாக, மணமகனின் காலதாமதம். வழக்கமாக திருமண இல்லங்களில் மணமகள் வருகைதான் தாமதமாக இருக்கும். ஆனால், இங்கு நேரந்தவறுகிறார் மணமகன். இந்த மணமகனால் பாவம் ஐந்து பேர் பாதிக்கப்படுகின்றனர்.

 

இந்த நேரத்தில் நான் புனித அகுஸ்தினாரை நினைத்துப்பார்க்கிறேன். வெளியனுப்பப்பட்ட ஐந்து பேரில்தான் ஒருவர்தான் இவர் என நினைக்கிறேன்.

 

ஏனெனில், 'பின்பு பயன்படும்!' என அகுஸ்தினார் தனக்கென எந்த புண்ணியங்களையும் சேர்த்து வைக்கவில்லை.

 

மேலும் கடவுளை, 'தாமதமாக நான் உன்னை அன்பு செய்தேன்!' என்கிறார். ஆக, இவரின் வாழ்விற்குள் மணமகனின் வருகையும் தாமதமாகவே இருந்தது.

 

மணமகன் வந்தபோது அணைந்து போன திரியோடும், காய்ந்து போன விளக்கோடும்தான் நின்றுகொண்டிருந்தார் அகுஸ்தினார்.

 

அவரைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார் இந்த மணமகன்.

 

இன்று நம் வாழ்விலும் திரிகள் அணைந்தால், விளக்கு காய்ந்து போனால், நான் ஒரு புண்ணியமும் செய்யவில்லையே என வருத்தம் மேவினால் தளர்ந்து போக வேண்டாம். ஏனெனில் நாம் இருப்பதுபோல் நம்மை ஏற்றுக்கொள்வார் அந்த மணமகன்!

 

நானும் என் நண்பன் ஃபாத்தியும் இறையியல் படித்தபோது அருள்பணி வாழ்விற்கும், பங்குப் பணிக்கும் நிறைய பயன்படும் என்ற நிறைய புத்தகங்களையும், குறுந்தகடுகளையும், கோப்புகளையும், செய்தித்தாள் மற்றும் பத்திரிகை துணுக்குகளையும் சேகரித்தோம். புதிதாய் ஸ்கேனர் வாங்கினோம். லேப்டாப் வாங்கினோம். இரவும், பகலும் ஸ்கேன் செய்தோம். மெமரி போதாததால் புதிய ஹார்ட் டிஸ்க் வாங்கினோம். சேர்த்துக்கொண்டே போனோம். இதற்கிடையில் எங்கள் பாடங்களைப் படிக்க மறந்தோம். தேர்வு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டோம். செபம், திருப்பலி, பொழுதுபோக்கு, பயணம் என அனைத்தையும் மறந்து 'நாளைய பணி நன்றாக இருக்க வேண்டும்' என சேகரித்துக்கொண்டே இருந்தோம். இறுதிநாளில் சேகரித்ததை ஆளுக்கு ஒரு பிரதி எடுத்துக்கொண்டு அவரவர் மறைமாவட்டத்திற்குச் சென்றோம்.

 

உண்மையாகச் சொல்கிறேன். நான் சேகரித்ததை இன்றுவரை இன்னும் திறந்துபார்க்கவே இல்லை. நிறைய நாள்கள் திறக்காததால் ஹார்ட் டிஸ்க் மெமரி லாக் ஆகிவிட்டது. சேகரித்து வைத்தவற்றில் ஒரு பெட்டி இடம் மாற்றத்தில் காணாமல் போய்விட்டது.

 

நான் அன்று சேகரித்தது தவறு என்று நான் சொல்லவில்லை. மாறாக, 'நாளைய பொழுதை நான் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நானும் என் நண்பனும் எங்களது இன்றைய பொழுதுகளைத் தொலைத்தோம்' என்பதுதான் கவலையாக இருக்கிறது.

 

இன்றைக்கு நம்ம வாழ்வில் நாம் செய்யும் பெரிய தவறு இதுதான்:

 

'நாம் வாழ்வதற்காக நம்மையே தயாரிக்கின்றோமே தவிர ஒரு நொடியும் முழுமையாக வாழ்வதில்லை!'

 

இன்னொரு நாள் அணிந்துகொள்ளலாம் என ஒதுக்கி வைக்கும் ஆடைகள்,

 

ரொம்ப நாளாக திறக்காமலேயே வைத்திருக்கும் நறுமணப்பொருள்கள்,

 

கண்டிப்பாக இன்னொரு நாள் வாசிக்க வேண்டும் என நாம் பத்திரப்படுத்தும் புத்தகங்கள்,

 

அடுத்த முறை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நாம் காத்திருக்கும் நபர்கள்

 

- இப்படி 'நாளைக்காக' நாம் எண்ணெயைச் சேகரித்து வைத்துக்கொண்டே இருக்கின்றோம்.

 

மேற்காணும் ஐந்து கன்னியர்களை அறிவிலிகள் என்று நாம் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியுமா?

 

இருக்கப்பட்டவர்கள் எக்ஸ்ட்ரா எடுத்து வந்தார்கள்.

 

இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 6:12-16) 'ஞானம்' என்பது 'விழிப்பு நிலை' என்று சொல்லப்படுகிறது. 'விழிப்பு நிலை' என்பது 'இன்றைய பொழுதை மட்டும் மனதில் இருத்தி வாழ்வது.' இப்படி இருப்போர் 'கவலையிலிருந்து விடுதலை பெறுவர்' என்கிறது ஞானநூல்.

 

எப்போது கவலை வரும்? நாம் இறந்த காலத்தை நினைத்துக்கொண்டிருக்கும்போதும், எதிர்காலத்திற்காக தயாரிக்கும்போதும். கவலை இல்லாத நிலை வர வேண்டுமென்றால் நிகழ்காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.

 

கையில் எக்ஸ்ட்ரா எண்ணெய் கொண்டுவந்தவர்கள் தூங்கியிருப்பார்கள் என நினைக்கிறீர்களா? தங்கள் எண்ணெய் திருடுபோய்விடக்கூடாது என்று தங்கள் தூக்கத்தையும் இழந்திருப்பார்கள். 

 

ஆக, இன்றைய நாளில் நாம் மூன்று வாழ்க்கைப்பாடங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்:

 

அ. 'எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல நீங்களும் துயருறக்கூடாது!'

 

இப்படித்தான் தெசலோனிக்க திருச்சபையை எச்சரிக்கின்றார் பவுல். அதாவது, இறந்தவர்கள் உயிர்த்தெழுவர் என்பது சிலருக்கு நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது - அன்றும், இன்றும். இப்படி நம்ப மறுக்கிறவர்களைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'எதிர்நோக்கு இல்லாம என்னங்க வாழ்க்கை!' என்கிறார். பவுல் சொல்வது முற்றிலும் உண்மை. எதிர்நோக்கு அல்லது காத்திருத்தல் நம் வாழ்வில் மிக அவசியம். நாளை நம் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்நோக்கு இருப்பதால்தான் இன்று உழைக்கிறோம். நாளை காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால்தான் இரவில் அலார்ம் வைத்துவிட்டு படுக்கிறோம். எதிர்நோக்கு மனிதர்கள் பெற்றிருக்கின்ற பெரிய வரம், பெரிய சாபம். பெரிய வரம், ஏனெனில் எதிர்நோக்குதான் நம்மைக் கனவுகள் காணவும், இலக்குகள் நிர்ணயிக்கவும், அவற்றை நோக்கிப் பயணிக்கவும் தூண்டுகிறது. இதுவே ஒரு பெரிய சாபம், ஏனெனில் எதிர்நோக்குதான் நம் ஏமாற்றங்களுக்கும், கவலைகளுக்கும் காரணமாகிவிடுகிறது. ஆனால், எதிர்நோக்கு இல்லாமல் துயரப்படுவதைவிட எதிர்நோக்கி துயரப்படுவது மேல்.

 

ஆ. தயார்நிலை

 

போர் மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ள தனி ஒருவருக்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தயார்நிலை அவசியமே. ஆனால் தயார்நிலையே நம் முக்கிய தேடலாக இருக்கக் கூடாது. தயாரித்துக்கொண்டே இருந்தால் எப்போது வாழ்வை அனுபவிப்பது. ஆக, சரியான நேரத்தில், சரியான இடத்தில் நம் தயார்நிலையை நிறுத்திக்கொள்வது நலம்.

 

இ. எண்ணெய் இல்லாதவர்கள்

 

நம் உடன் வாழ்வோர் வாழ்வில் சில நேரங்களில் எண்ணெய் போதுமான அளவு இல்லாமல் இருக்கலாம். அல்லது எண்ணையே இல்லாமல் போகலாம். இந்த நேரங்களில் நமக்குத் தேவையானது எல்லாம் கொஞ்சம் இரக்கம். இரக்கம் காட்டவில்லை என்றாலும், இல்லாதவர்களும் மனிதர்கள்தாம் என்ற பரந்த மனம். 'ஐயா, ஐயா எங்களுக்குக் கதவை திறந்துவிடும்!' என்று அவர்கள் கத்தும்போது, 'ஆமாம் ஐயா, நாங்க எல்லாம் சேர்ந்துதான் வந்தோம். அவங்க எங்க தோழிகள்தாம். ப்ளீஸ்' என்று கொஞ்சம் ரெக்கமண்ட் செய்யலாம் கடவுளிடம்.

 

இறுதியாக,

 

இன்று நம் வாழ்வில் நாம் முன்மதியில்லாமல் இருக்கலாம். 

நம் எண்ணெய்க் குவளை காய்ந்து போயிருக்கலாம்.

நாம் தூங்கியிருக்கலாம்.

திடீரென்று அவரின் ஓசை கேட்கிறா?

எழுந்திருப்போம்.

காய்ந்து போன, எரிந்து ஓய்ந்துபோன நம் திரியை அவரிடம் காட்டுவோம்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்

நல்ல கள்வன்

ஊதாரி மகன்

அகுஸ்தினார்

என அவர் ஒளிர்வித்த திரிகள் ஏராளம்.இருளை ஒளிர்விக்கச் செய்யும் அவர் நம் திரிகளையும் ஒளிர்விப்பார்.

அவரோடு நம்மை அணைத்துக்கொள்வார் - இன்றும் என்றும்!

 

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org