Get Adobe Flash player

JESUS 21

முதல்வாசகம்
"நீ எங்கே இருக்கின்றாய்?"
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3:9-15

"ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார். " உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன்.

" நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார். அப்பொழுது அவன் "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்: நானும் உண்டேன்"என்றான்."ஆண்டவராகிய கடவுள், "நீ ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், "பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்" என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்." "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார். - இது ஆண்டவர் வழங்கும் அ

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

இரண்டாம் வாசகம்
"நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்: ஆகவே பேசினேன் "
திருத்தூதர் பவுல் கொருந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வாசகம்: 4:13-5:1

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 3:20-35

அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், "இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது " என்றும் "பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் " என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது: அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்: அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது " என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார். அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. "அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் " என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "என்தாயும் என் சகோதரர்களும் யார்? "என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் " என்றார்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
-கிறிஸ்துவே உமக்கு புகழ்



AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org