Get Adobe Flash player

27ஆம் வாரம் ஞாயிறு - 07 10 2018 ஞாயிறு வாசகங்கள்
Family

முதல் வாசகம்

 இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24

அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், ``மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்'' என்றார்.

ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.

ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.

அப்பொழுது மனிதன், ``இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்'' என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா, உமக்கு நன்றி !.

 

இரண்டாம்ம் வாசகம்

தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-11

சகோதரர் சகோதரிகளே, நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது. கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.

தூய்மை யாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

இறைவா, உமக்கு நன்றி !.!

நற்செய்தி வாசகம்

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, ``கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?'' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' என்று கேட்டார்.

அவர்கள், ``மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்'' என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.

படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார்.

பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.

இயேசு அவர்களை நோக்கி, ``தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்'' என்றார்.

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.

இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கிறித்துவே,  உமக்குப் புகழ்!

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org