Get Adobe Flash player

பொதுக்காலம் 4-ஆம் வாரம் (03.02.2019) ஞாயிறு வாசகங்கள்
jesus 02

முதல்வாசகம்
உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார் ஆண்டவர்
எரேமியா நூலிலிருந்து வாசகம் 1:4-5, 17-19

4 எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:5 தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்: நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்: மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.17 நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல்.

அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.18 இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.19 அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார் ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

இரண்டாம் வாசகம்
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து வாசகம் 12:31 - 13:13

எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.1 நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.2 இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.3 என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.4 அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது.5 அன்பு இழிவானதைச் செய்யாது: தன்னலம் நாடாது: எரிச்சலுக்கு இடம் கொடாது: தீங்கு நினையாது.6 அன்பு தீவினையில் மகிழ்வுறாது: மாறாக உண்மையில் அது மகிழும்.7 அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.8 இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்: பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்: அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.9 ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது: நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம்.10 நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.11 நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்: குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்: குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.12 ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்: ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்: அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.13 ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:21-30

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். 22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். 23 அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், "மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்" என்னும் பழமொழியைச் சொல்லி, "கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்" எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். 24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். 26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெணண்ணிடமே அனுப்பப்பட்டார். 27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது" என்றார். 28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; 29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வ+ரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
-கிறிஸ்துவே உமக்கு புகழ்

 

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org