Get Adobe Flash player

www.tamilcatholicdaily.com/sundaySermon/MerinaSr/55.html
வழங்குவது :Sr.Merina O.S.M Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
நன்றி :தமிழ் ஆன்மீகப் பணியகம் செருமனி

ஓடு கால்களால் அல்ல இதயத்தால்.....

திருத்தூதர் பணி 10:34,37-43
பதிலுரைப்பாடல் திபா: 118: 1-2,16 – 17, 22-23
கொலோசையர் 3:1-4
யோவான் 20: 1-9

விதையொன்றினை, மடிந்தது என்றெண்ணி மறக்க நினைக்கும் தருணத்திலே,
வீழ்ந்ததும் நானல்ல வீரியமிழந்ததும் நானுமல்ல,
என்று வீறு கொண்டெழுந்து நம்மை மகிழ்விப்பது போல், மகிழ்வென்னும் பூச்சூடி மணம் வீசும் அனைவருக்கும் இனிய உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துகள்.


உயிர்த்த இறையேசுவில் அன்பான உள்ளங்களே, குருத்தோலை ஏந்தி ஆர்ப்பரித்து ஆண்டவர் இயேசுவை கள்வர்கள் கரம் ஒப்புவித்து, அவரோடு பாடுகள் அனுபவித்த நம்மை இன்றைய உயிர்ப்பு பெருவிழா அவரது மகிழ்வில் பங்கு கொள்ள அழைப்புவிடுக்கின்றது. புனித வியாழன் அன்று அவரது திரு உடலை உண்ணும் பாக்கியம் பெற்றோம். நற்கருணை பவனியிலே அவரோடு உடனிருந்து அவரது துன்பத்தில் பங்கேற்றோம். அவரது பாடுகளைக் கண்டோம் கேட்டோம். திருச்சிலுவை முத்தம் செய்து அவரது திருக்காயங்களின் நறுமணம் நுகர்ந்தோம். இவ்வாறாக அவரது பாடுகளில் முழுமையாக பங்கேற்று உடனிருந்த நம்மை அவரது உயிர்ப்பின் மகிழ்விலும் பங்கு கொள்ள அழைக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில், இடம்பெறும் அனைத்து கதை மாந்தர்களும் இடங்களும் பொருட்களும் நமக்கு ஒவ்வொரு செய்தியை விடுக்கின்றன.
மகதலா மரியாள் , பேதுரு, அன்புச்சீடர், மற்ற சீடர்கள் என அனைவருமே அவரவர் செயல்கள் மூலம் நமக்கும் உயிர்ப்புச்செய்தியைத் தருகின்றனர். எல்லோருமே உயிர்த்த இறைவனைக் காண ஓடுகின்றனர். ஓட்டம் நமது வாழ்வின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. எல்லோரும் ஏதோ ஒன்றிற்காக தான் ஓடுகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை ஓட்டம் தான். கல்வி, மருத்துவம், பணம், சொத்து என அனைத்திற்குமே ஓட்டம் தான் எடுக்கிறோம். ஓடுகின்ற ஓட்டம் எல்லாம் கடைசி காலத்தில் ஓய்வெடுக்க என்று எண்ணி தான் ஓடுகின்றோம். ஆனால் பலர் ஓய்வெடுக்க முடியாமல் ஓட்டத்திலே ஓய்ந்துவிடுகின்றனர். இப்படியிருக்க இன்றைய நற்செய்தியில் வரும் நபர்கள் நமக்கு , எதற்காக ஓட வேண்டும் என்பதனை தங்கள் செயல் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
மகதலா மரியாள் ;
இரவைக் கடக்க கூட முடியாமல், ஆவலோடு இறந்த இயேசுவைக் காண இருள் நீங்கும் முன்னே கல்லறை நோக்கி ஓடுகின்றார். தூக்கம் மறந்து துயில் எழுந்த பேதைப் பெண்ணிற்கு இறைவன், உயிர்ப்பின் பரிசாக, உயிர்ப்பின் செய்தியை முதலில் பறைசாற்றியவர் என்ற பெருமையைத் தருகின்றார். அதிகாலையில் இறைவனிடம் வேண்டுதல் செய்த இயேசுவை போல தானும் அதிகாலையிலே இறைவனின் ஆசீர் பெறுகின்றார்.
நாமும் பல நேரங்களில் அதிகாலை துயில் எழுந்து அற்புத செயல்கள் செய்ய நினைக்கின்றோம். ஆனால் முடிவதில்லை . காலையில் எழும்போது நாம் தாமதம் செய்யும் நிமிடங்களே அன்றைய நமது நாளினைத் தீர்மானிக்கின்றன என்பர் பெரியோர். அதிகாலையில் ஆண்டவரைத் தேடி ஓடிய மகதலா மரியாள் போல ஆர்வமுடன் செயல்பட ஆருள் வேண்டுவோம்
பேதுரு:
இனி என்ன ஆகுமோ நம் நிலை என்ற கவலையோடு நிறைந்திருந்தவர். பெண்கள் கல்லறை நோக்கி செல்ல, இவரோ இல்லத்திலிருந்தே அனைத்தையும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார். ஆண்டவரைக் காணவில்லை என்று சொன்னதும் பதற்றத்தோடு கல்லறையை நோக்கி ஓட்டம் எடுத்தவர். தாயன்போடு பிள்ளையைத் தேடும் மனதோடு கல்லறையை சென்றடைகின்றார். தனக்கு பின்னால் ஓடிவந்தவர்கள் தன்னை விட வேகமாக ஓடி விட்டார்களே என்ற கவலை இல்லை . அவர் மனதில் எல்லாம், இயேசுவை இறந்த பின்னும் என்ன செய்தார்களோ என்ற கவலை தான். கவலையோடு ஓடி வந்தவர்க்கு கருணாமூர்த்தியின் கல்லறை ஓராயிரம் கதை சொல்கின்றது. பின்னால் வந்தவர் கல்லறைக்குள் சென்று முதலில் பார்க்கும் வாய்ப்பு பெறுகின்றார். பெற்ற இறையனுபவத்தை பிறருக்கு துணிவாக எடுத்துரைக்கும் பேறு பெறுகின்றார். நாமும் வாழ்க்கையில் பல தேவைகளுக்காக ஓடுகின்றோம். ஆனால் நம்மை முந்திச்செல்லும் பலரை கருத்தில் கொண்டு நமது ஓட்டத்தை பாதியிலே நிறுத்தி விடுகின்றோம். சிலர் சென்றடைய வேண்டிய இடம் சொல்லுகின்ற பாடத்தைப் புரிந்து கொள்ள முயலுவதில்லை. பேதுருவைப் போல தொடர்ந்து ஓடுவோம். உயிர்ப்பு அனுபவம் பெறுவோம்.
அன்புச்சீடரும் ஏனைய சீடர்களும் ஓடினர் உண்மையைக் காண ஓடினர். எல்லோரோடும் சேர்ந்து ஓடினர். முதலில் ஓடினாலும் முதன்மைக்கு வழிவிடுகின்றனர். அனுபவத்திற்கு அதிக இடம் கொடுக்கின்றனர். இயேசுவின் மீது கொண்ட உரிமையில் ஓடுகின்றனர். இதுவரை யூதர்களுக்கும் உரோமையர்களுக்கும் பயந்து ஒளிந்தவர்கள். துணிவோடு வெளியேறுகின்றனர். உண்மைக்காகவும் உரிமைக்காகவும் துணிவுடன் முன்னேறிச்செல்லும் மனம் வேண்டுவோம்.

இவர்கள் மட்டுமல்லாது இன்றைய நற்செய்தியில் இடம் பெறும் காலைக் கதிரவன், பாறைக்கல், வெற்றுக்கல்லறை, துணி என அனைத்தும் ஒவ்வொரு பாடம் சொல்கின்றது.
காலைக் கதிரவன் :
உன் கடந்த கால வாழ்விலிருந்து விழித்தெழு என்பதை வெளிப்படுத்துகின்றது. இரவு என்னும் துன்பத்தை நினைத்து வருந்தாதே அதைஅடுத்து பகல் என்னும் கதிரவன் இருக்கிறான் வருந்தாதே என்கின்றது. ஆண்டவனின் அன்பென்னும் கரம் கதிரவனின் கதிரால் உன்னை அரவணைக்கும் கலங்காதே என்று வலியுறுத்துகிறது.

பாறைக்கல்:
மிகவும் கடினமான பாறைக்கல் புரண்டிருப்பதைக் காண்கின்றனர் சீடர்களும் மகதலா மரியாளும். பாறை மிகவும் உறுதியானது. அதிக எடை உள்ளது. அத்தகைய உறுதியுள்ள எடையுள்ள பாறையை இறைவன் தன் செயலால் புரட்டிப் போட்டு இருப்பது அவரது வல்லமையை காட்டுகின்றது. நமது வாழ்விலும் பாறை போன்ற கடினமான துன்பங்கள் நமது இன்பத்தை மறைத்திருக்கின்றன. இறைவனின் அருளால் கடினமான பாறை போன்ற துன்பமும் நம்மை விட்டு மறைந்து போகும். இறைவனால் எல்லாம் முடியும் நாம் அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டால்.

வெற்றுக் கல்லறை:
வெறுமையான கல்லறை தான் வெற்றியின் சின்னமாகிறது. ஒன்றும் இல்லாமையிலிருந்து இந்த உலகை உண்டாக்கிய இறைவன் இன்று இந்த வெறுமையான கல்லறையிலிருந்து கிறிஸ்தவம் என்னும் ஒரு திருச்சபைக்கான விதையை விழுதை உண்டாக்கியிருக்கின்றார். எல்லாம் முடிந்து போயிற்று என்று எண்ணி கவலை கொள்ளாதே . நம்பிக்கை கொள் இறைவன் உன் வெறுமையிலிருந்தும் வெற்றியை தோன்றச்செய்வார் நாம் நம் மனதை வெறுமையாக்கினால்.

துணி:
இயேசுவின் உடலைச்சுற்றி இருந்த துணி. நான் உன்னோடே உடன் இருக்கின்றேன் என்பதன் அடையாளம். உலகமுடிவு வரை எந்நாளும் நான் உங்களோடே இருப்பேன் என்று கூறிய அன்பு இறைவனின் வார்த்தை இங்கு வாழ்வாகின்றது. அவரது துணி நமக்கு அடையாளமாகின்றது. நம் உடலைச்சுற்றி இருக்கும் துணி போல் உயிர்த்த இயேசுவின் உடனிருப்பு நம்மோடு என்றும் இருக்கும்.

இப்படியாக அவரது உயிர்ப்பினை முதலில் கண்ட நபர்கள் முதல் அவரது உயிர்ப்பு நிகழ்வில் பங்கேற்ற பொருட்கள் வரை அனைத்தும் நமக்கு உயிர்த்த இயேசு என்றும் நம்மோடு என்னும் செய்தியை விடுக்கின்றன. அவரது உயிர்ப்பின் மகிழ்வில் பங்கு கொள்ளும் நாமும் அவரைக் காண விரைந்து செல்ல வேண்டும் ஓட வேண்டும் . வெறும் கால்களால் அல்ல இதயத்தால். நமது கால்கள் ஓடினால் வெற்றியையும் உடன் , முன் , பின் ஓடுபவர்களை மட்டுமே எண்ணும் . மாறாக நம் இதயத்துடிப்போடும் நினைவுகளோடும் ஓடினால், உயிர்த்த இயேசுவை காண வேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே நம் கண் முன் நிற்கும்.
தினமும் ஏன் இந்த ஓட்டம் என்ற சலிப்புடன் கடிகாரம் பார்க்கும் நாம் அதன் வாழ்க்கையை நினைத்து பார்போபோம். அது ஓடாவிட்டால் என்ன செய்வோம். இயங்கு விசை மின்கலத்தை { பாட்டரி } மாற்றி பார்ப்போம் அப்படியும் ஓடாவிட்டால் தூக்கி எறிந்துவிட்டு புதிதாக ஒன்றினை வாங்கிக்கொள்வோம். நாமும் அப்படிதான் ஓடாவிட்டால் நாமும் ஒரு நாள் தூக்கி எறியப்படுவோம் மனிதர்களால், நிகழ்வுகளால். நாம் சரியான பாதையிலேயே தான் இருக்கிறோம் என்றாலும் கூட ஓட முன்னேற முயற்சி செய்வோம். நகராமல் அப்படியே இருந்தால் உயிரற்றவர்கள் என்று எண்ணி நமக்கு சமாதி எழுப்பிவிடும் உலகம் இது. நாமும் உயிரோடு இருக்கிறோம் என்பதை நம் இயக்கத்தின் மூலம் காட்டுவோம். இதய செயல்கள் மூலம் காட்டுவோம். ஓடுவோம். ஓட முயற்சிப்போம் . முடியாவிட்டால் நகரவாவது முயற்சிப்போம். உயிர்த்த இயேசுவின் அன்பும் அமைதியும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org