Get Adobe Flash player

முதல் வாசகம்: எசாயா 49:14-15

அந்நாட்களில் சீயோனோ, "ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்து விட்டார்" என்கிறாள். பால்குடிக்கும் என் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.

இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 4:1-5

சகோதர சகோதரிகளே! நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.

நற்செய்தி: மத்தேயு 6:24-34

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்."

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org