Get Adobe Flash player

இலங்கை மக்கள் தோழமையுடன் வாழ பிரார்த்திக்கிறேன்:

Pope in Madhu 04

 

Thursday, 15 January 2015 03:58 நன்றி : TamilMedia http://www.4tamilmedia.com/newses/srilanka

இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள மொழி பேசும் மக்கள் ஒப்புரவுடனும், தோழமையுடனும் வாழ்வதற்காக பிரார்த்திப்பதாக புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான விஜயமொன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை மேற்கொண்டு வந்த புனித பாப்பரசர், நேற்று புதன்கிழமை பிற்பகல் மன்னார் மடுத் திருத்தலத்திற்கு விஜயம் செய்து இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ், சிங்கள மொழிகளைப் பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள் இழந்துவிட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற கடின முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யுத்த மோதல்கள் இடம்பெற்றதையடுத்து, மடுத்திருப்பதியில் இருந்து மடு மாதாவின் திருவுருவச் சிலை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மீண்டும் அங்கு கொண்டு வரப்பட்டதையும் புனித பாப்பரசர் நினைவு கூர்ந்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர், அன்னை மரியாளின் திருவுருவம் மடுத்திருத்தலத்திற்குத் திரும்பி வந்தது போன்று, அனைத்து இலங்கை மக்களும் ஒப்புரவுடனும், தோழமையுடனும், புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன் ஒன்றுபடுவதற்குப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பில் இருந்து விசேட ஹெலிகாப்டர் மூலமாக நேற்று பிற்பகல் 03.00 மணியளவில் மடுமாதா தேவாலயத்தை வந்தடைந்த புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களை மங்கள வாத்தியம் முழங்க, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டனை உள்ளிட்ட கத்தோலிக்க மதத் தலைவர்களும் வரவேற்றனர்.

திருத்தந்தையைத் தரிசித்து ஆசி பெறுவதற்காக அங்கு கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் கொடிகளை அசைத்தும், ஆரவாரம் செய்தும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள நானூறு வருடங்கள் பழைமை வாய்ந்த கத்தோலிக்கத் திருத்தலமாகிய மடுத்திருப்பதிக்கு முதற் தடவையாக இப்போதுதான் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையொருவர் (புனித பாப்பரசர்) விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pope in Madhu 05

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org