புதுடெல்லி-திருத்தந்தையின் தலைமைப் பணியின் 2ம் ஆண்டு நிறைவு

Delhi

மார்ச்,14,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் 266வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை இவ்வெள்ளியன்று புதுடெல்லியில் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பெனாக்கியோ அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

புதுடெல்லி திருப்பீடத் தூதரகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் Kiren Rijiju அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் அரசியல் தூதர்களும், தொழிலதிபர்களும், கலாச்சாரத் துறையினரும், இந்தியத் தலத்திருஅவையின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

2013ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தலைமைப்பணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் ஐரெஸ் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் ஹோர்ஹே பெர்கோலியோ அவர்கள், அதே ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழ்மைக்கும் எளிமைக்கும் பெயர்போன பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்ற கர்தினால் பெர்கோலியோ அவர்கள், முதல் இயேசு சபை திருத்தந்தை மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் திருத்தந்தை என்ற பெருமையையும் பெற்றார்.

ஆதாரம் : Ansa /வத்திக்கான் வானொலி