புதன் மறைக்கல்வியுரையின்போது - AFP

 நன்றி : வத்திக்கான் வானொலி
pope 03

தவக்காலத்தின் முதல் நாளான இந்த சாம்பல் புதனன்று, திருப்பயணிகளை புனித பேதுரு பேராலய வளாகத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கிறிஸ்தவ நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு என்ற தலைப்பில், வழங்கிவரும், தன் தொடர் மறைக்கல்வி உரையில், 'நம்பிக்கையில் வழிநடப்பதே தவக்காலம்' என்பதை மையமாக வைத்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.


அன்புச் சகோதர சகோதரிகளே! சாம்பல் புதனாகிய இன்று, நாம், உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய தவக்காலப் பயணத்தைத் துவக்குகின்றோம். தவக்காலம் என்பது, அடிப்படையில், ஒரு நம்பிக்கையின் திருப்பயணம். இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பில் நாம் முழுமையான விதத்தில் பங்குகொள்ள நம்மைத் தயாரிக்க உதவும் ஆன்மீகப் புதுப்பித்தல் மற்றும் ஒறுத்தலின் காலம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள், இறைவனால் வாக்களிக் கப்பட்ட பூமியை நோக்கி மேற்கொண்ட பயணத்தை நாம் மீண்டும் வாழும் காலமிது. இப்பயணத்தின்போது அம்மக்கள், தங்கள் ஆன்மீக வழிமுறை களின் வழியாகவும், சட்டத்தின் கொடை வழியாகவும், கடவுள் மீதும், அயலார் மீதும் கொண்டிருக்க வேண்டிய அன்பு குறித்து கற்றுக்கொண்டனர். உயிர்ப்புப் பெருவிழாவை, இயேசு மேற்கொண்ட ஒரு பயணம் என்று கூறலாம். ஏனெனில், அவர் சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து சென்றார்.  இயேசுவின் இந்தப் பயணத்தில் நாமும், திருமுழுக்கில் கொள்ளும் மறுபிறப்பு வழியாக பங்குபெறுகிறோம். இயேசுவின் சிலுவைப்பாதையில் நாம் அவரோடு இணைந்து நடந்து செல்லும்போது,  பாவம் மற்றும் மரணத்தின்மீது அவர் கொண்ட வெற்றியில் நாமும் பங்குகொள்கிறோம். திருஅவை யுடன் ஒன்றிப்பில், தூய ஆவியார் நம்மீது பொழியும் புதிய வாழ்வை நாம் வாழ்வதன் வழியாக, நாம், அருளடையாளங்கள், செபம் மற்றும் வழிபாட்டில், மேலும் முழுமையான விதத்தில் நமதாண்டவரோடு இணைக்கப்படுகிறோம். இயேசுவின் வாக்குறுதிகளில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், இன்னும் நெருக்கமான விதத்தில் நாம் அவரைப் பின்பற்றிச் செல்வதற்கான அர்ப்பணத்தையும் இந்த தவக்காலக் கொண்டாட் டங்கள் புதுப்பிப்பதாக. அதன் வழியாக, உயிர்ப்புப் பெருவிழாவில் அன்னை மரியாவோடு இணைந்து, நாம் முடிவற்ற வாழ்வெனும் கொடை குறித்தும், இறைவனின் மீட்பளிக்கும் அன்பின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சி ஆரவாரம் கொள்வோமாக. இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.