நவம்பர் 26, துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும் நாள்
தகவல் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி
Crosses

நவ.23,2017. தங்கள் கடவுள் நம்பிக்கைக்காக, உலகின் பல நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று ஒருங்கிணைந்து செபிக்க, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கர்களுக்கு, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டி'னார்டோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

நவம்பர் 26, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழா, உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

"துன்பத்தில் ஒருங்கிணைய" என்ற தலைப்பில், நவம்பர் 26ம் தேதி துவங்கி, டிசம்பர் 3ம் தேதி நிறைவு பெறும் விழிப்புணர்வு வாரம், மதத்தின் காரணமாக துன்புறும் அனைவரையும் நினைவுகூரும் வாரமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Aid to the Church in Need அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு வாரத்தில், சிறப்பு திருப்பலிகள், செப வழிபாடுகள், மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.