சனவரி, பிப்ரவரி மாதங்களில் திருத்தந்தையின் நிகழ்வுகள்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
pope 01

சன.10,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி, மற்றும் பிப்ரவரி மாதங்களில் தலைமையேற்று நிகழ்த்தும் திருவழிபாட்டு நிகழ்வுகள், மற்றும் பங்கேற்கும் ஏனைய நிகழ்வுகளின் விவரங்களை, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.

சனவரி 15 முதல் 22ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே மற்றும் பெரு நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதையடுத்து, அந்நாள்களில், காலைத் திருப்பலிகளும், சனவரி 17, புதன் மறைக்கல்வி உரையும், இடம்பெறாது.

 

சனவரி 25ம் தேதி, திருத்தூதர் புனித பவுல் மனமாற்றத் திருவிழாவையும், கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு நாளையும் முன்னிட்டு, உரோம் நகர் மதிலுக்கு வெளியே அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்காவில், மாலை திருப்புகழ் வழிபாட்டை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்துவார்.

Salus Populi Romani, அதாவது, உரோம் மக்களுக்கு குணம் வழங்கும் அன்னை மரியாவின் உருவப்படம், புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நிறுவப்பட்ட திருநாளைச் சிறப்பிக்கும் வண்ணம், சனவரி 28, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தப் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார்.

Salus Populi Romani அன்னை மரியாவின் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனிப்பட்ட பக்தி கொண்டிருப்பதால், தன் திருத்தூதுப் பயணங்களின் முன்னும், பின்னும், அந்த அன்னையை சந்திப்பதை அவர் பழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயேசுவை கோவிலில் காணிக்கையாக அர்ப்பணமாக்கும் திருநாளையும், அர்ப்பணமாக்கப்பட்ட வாழ்வின் 22வது உலக நாளையும் கொண்டாடும் வகையில், பிப்ரவரி 2ம் தேதி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியை தலைமையேற்று நடத்துவார்.

பிப்ரவரி 14ம் தேதி, திருநீற்றுப் புதனன்று மாலை, புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து புறப்படும் திருப்பவனியில் கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  புனித சபீனா பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார்.

பிப்ரவரி 18ம் தேதி ஞாயிறு முதல், பிப்ரவரி 23 வெள்ளி முடிய, திருத்தந்தையும், வத்திக்கான் உயர் அதிகாரிகளும் அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள தெய்வீகப் போதகர் இல்லத்தில் தவக்காலத் தியானத்தில் ஈடுபட்டிருப்பர்.