இந்திய ஆயர்களின் 33வது பொதுக்கூட்டம், ஆரம்ப நிகழ்வுகள்

ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி


bishops 02

பிப்.03,2018.

இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழா, ஆண்டவரோடு சந்திப்பு நடத்த அழைப்பு விடுக்கின்றது, இச்சந்திப்பு, மக்களோடு சந்திப்பு நடத்த நம்மை இட்டுச் செல்கின்றது என்று, இந்திய திருப்பீடத் தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்கள், இந்திய ஆயர்களிடம் கூறினார்.

 

இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவான பிப்ரவரி 02, இவ்வெள்ளியன்று, இந்திய ஆயர் பேரவையின் 33வது பொதுக்கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றி மறையுரையாற்றிய பேராயர் திகுவாத்ரோ அவர்கள், ஆயர்கள் மக்களைச் சந்திப்பது பற்றிக் கூறினார்.

மேலும், இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்ற, மியான்மாரின் யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் நிகழ்த்திய துவக்க உரையில், மியான்மாரில், திருஅவை, பன்மையில் ஒருமையில் எவ்வாறு வாழ்கின்றது என்பதை விளக்கினார்.

மியான்மாரில் கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் அரசுடைமையாக்கப்பட்டது உட்பட தலத்திருஅவை எதிர்கொண்ட பெரும் சவால்கள், விசுவாசம் மற்றும் துணிச்சலுடன் எவ்வாறு சமாளிக்கப்பட்டன என்பதையும் விளக்கினார், கர்தினால் போ. இந்தியத் திருஅவையில் நூற்றுக்கும் மேற்பட்ட கலாச்சாரக் குழுக்கள் உள்ளன என்றும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், மும்பை முதல் மிசோராம் வரையிலும், இந்திய திருஅவை, பணியே அதிகாரம் என்பதை நிரூபித்துள்ளது என்றும், இம்முறையில், இந்தியத் திருஅவை, உண்மையிலேயே கத்தோலிக்கப் பண்பைக் கொண்டுள்ளது என்றும், கர்தினால் போ அவர்கள் பாராட்டினார்.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய, இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால், பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், நாட்டைக் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருஅவை ஆற்றியுள்ள பணிகளை விளக்கினார். இந்திய ஆயர் பேரவையின் செயலரான, ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வு மற்றும் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை, இக்கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர், கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அனுப்பியிருந்த வாழ்த்துக்களும், செய்திகளும் இந்த தொடக்க நிகழ்வில் வாசிக்கப்பட்டன. 

பெங்களூரு புனித ஜான் மருத்துவ கல்லூரியில், பிப்ரவரி 2, இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இந்திய ஆயர்களின் 33வது கூட்டம், பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும்.