அறிவியல் மேதையின் மறைவு
தகவல் வத்திக்கான் வானொலி
அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களைச் சந்திக்கச் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் - AP
உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதையும், வத்திக்கான் பாப்பிறை அறிவியல் கழகத்தின் உறுப்பினருமான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) அவர்கள், மார்ச் 14, இப்புதனன்று, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில், தம் இல்லத்தில் உயிர் நீத்தார். ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், அறிவியலுக்கு ஆற்றியுள்ள ஒப்பற்ற சேவைக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம்.
பாப்பிறை அறிவியல் கழகம், ஈடு செய்ய இயலாத அவருடைய இழப்பைக் குறித்து வருத்தம் கொள்கிறது என்று, இங்கிலாந்து-வேல்ஸ் ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், வத்திக்கானுக்கு வருகை தந்து, நான்கு திருத்தந்தையரைச் சந்தித்துள்ளார். 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், பாப்பிறை அறிவியல் கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த வேளையில், அவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார். காலநிலை மாற்றத்தைக் குறித்து தன் ஆழ்ந்த கவலைகளை வெளியிட்டுள்ள ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், பாரிஸ் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறிய வேளையில், தன் ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் வெளியிட்டார். அறிவியல் மேதையான கலிலேயா அவர்கள் இறந்த 300ம் ஆண்டு நினைவு நாளான, 1942ம் ஆண்டு சனவரி 8ம் தேதி பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், தன் 21வது வயதில், உடலைச் செயலிழக்கச் செய்யும் motor neurone நோயால் பாதிக்கப்பட்டார். இரண்டே ஆண்டுகள் அவர் வாழக்கூடும் என்று மருத்துவர்கள் கருதிய நிலையில், அவர் தொடர்ந்து, 55 ஆண்டுகள் வாழ்ந்து, அறிவியல் மேதையான ஐன்ஸ்டைன் அவர்கள் பிறந்த நாளான, மார்ச் 14ம் தேதி, தன் 76வது வயதில் காலமானார்.