Get Adobe Flash player

தலித் மக்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய கர்தினால் கிரேசியஸ்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் (AsiaNews)

இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் குடியேறியுள்ள தலித் மக்களுடன் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடினார்.
 Cardinal Gracious

 

மும்பைப் பேராயரும், இந்திய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள், தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் குடியேறியுள்ள தலித் மக்களுடன் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடினார் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் உள்ள திராம்பே (Trombay) சேரிப் பகுதியில் வாழ்ந்து வரும் 21 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேருடன், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கிறிஸ்மஸ் நாள் காலை வேளையைச் செலவிட்டார்.

பழங்குடியினர், சாலைகளில் உள்ள குப்பைகளில் பொருள்களைச் சேகரிப்போர், மற்றும், தீ விபத்துக்களில் வீடுகளை இழந்தோர் என்ற பல்வேறு குழுக்களுடன் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கடந்த ஆண்டுகளில், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடியுள்ளார் என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில், இந்திய ஆயர் பேரவை, ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 2ம் ஞாயிறை, தலித் விடுதலை ஞாயிறென சிறப்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org