பானமா நாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்திய இளையோர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
India 01

பானமா நாட்டில் நடைபெறும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து, 56 திருப்பயணிகள் பானமா நகரை அடைந்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

கோட்டயம் துணை ஆயர், மார் ஜோசப் பண்டரசேரில், இந்திய ஆயர் பேரவை இளையோர் பணிக்குழுவின் செயலர், அருள்பணி தீபக் தாமஸ், மற்றும் ஒன்பது அருள்பணியார்கள், மற்றும், ஓர் அருள் சகோதரி ஆகியோர், இந்திய இளையோர் குழுவுடன் பானமா நாட்டிற்குச் சென்றுள்ளனர்.
சனவரி 15ம் தேதி பானமா சென்றடைந்த இக்குழுவினர், சந்தியாகு மறைமாவட்டத்தின் அத்தலாயா பங்கில் தங்கி, அங்கு நடைபெற்ற பல்வேறு ஆன்மீக,  மற்றும், கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்றனர் என்று அருள்பணி தீபக் தாமஸ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் எதிரொலியாக, இந்த மறைமாவட்டம், மரங்கள் நடும் முயற்சியில் ஈடுபட்ட வேளையில், இந்திய இளையோர் அனைவரும் இந்த முயற்சியில் கலந்துகொண்டனர்.
சனவரி 22ம் தேதி முதல், பானமா நகரில் நடைபெறும் அனைத்து இளையோர் நாள் நிகழ்வுகளிலும், இந்திய இளையோர் கலந்துகொள்ள விருப்பதாக அருள்பணி தீபக் தாமஸ் அவர்கள் கூறினார். (AsiaNews)