Get Adobe Flash player

அந்திகுவா பேராலயத்தில் திருத்தந்தையின் மறையுரை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
jmj 13

இயேசு அடைந்த களைப்பிலிருந்து, வேறுபட்ட ஒரு களைப்பை, நாம் வாழும் இன்றையச் சூழலில் அனுபவிக்கிறோம். அதை, நம்பிக்கையில் களைப்புறுவது என்று கூறமுடியும்

அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்... சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார். (யோவான் 4:6-8)

இயேசு களைப்புற்றார்

இயேசு களைப்புற்றார் என்பதைக் காட்ட, இந்த நற்செய்திப் பகுதி தயங்கவில்லை. வெயிலின் கொடுமையால் களைப்புற்ற இயேசு, தாகத்தைத் தணித்தபின், தன் பயணத்தை, பணியைத் தொடர விழைந்தார்.

பணியாற்றும் சக்தி பெற்றவராக, இயேசுவை தியானிப்பது, நமக்கு எளிதாக உள்ளது. ஆனால், அவர் களைப்புற்றிருப்பதைத் தியானிப்பது அவ்வளவு எளிதல்ல. களைப்பு என்றால் என்ன என்பதை, ஆண்டவர் உணர்ந்திருந்தார். அவரது களைப்பில், சுமை சுமந்து சோர்ந்திருக்கும் மக்களின் போராட்டங்களும் இடம் பெறுகின்றன (மத். 11:28).

அருள்பணியாளராக, துறவியராக, பொதுநிலை இயக்கத்தினராக, நாம் மேற்கொள்ளும் பயணத்தில் களைப்புறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உண்ணவோ, ஓய்வெடுக்கவோ நேரமின்றி தொடர்ந்து உழைப்பது, கடினமான பணியிடம், உறவு ஆகியவற்றுடன் போராடுவது ஆகியவை, நம்மை ஏமாற்றத்திற்கும், களைப்பிற்கும் தள்ளிவிடுகின்றன.

நம்பிக்கையில் களைப்புறுவது

ஆண்டவர் அடைந்த களைப்பிலிருந்து, வேறுபட்ட ஒரு களைப்பை, நாம் வாழும் இன்றையச் சூழலில் அனுபவிக்கிறோம். அதை, நம்பிக்கையில் களைப்புறுவது என்று கூறமுடியும். நாம் செல்லும் பாதையில் எதிர்பார்த்தவை கிடைக்காமல், நண்பகலின் சூரியன் தீவிரமாகத் தாக்கும்போது, நம்பிக்கை இழந்து களைப்புறுகிறோம்.

பாவத்தால் காயமுற்ற திருஅவையைக் காணும்போது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மத். 27:46) என்று கதறுவோரின் குரலைக் கேட்காமல் செல்லும் திருஅவையைக் காணும்போது, நம்பிக்கையில் நாம் களைப்புறுகிறோம்.

"குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்"

இவ்வேளையில், நம் ஆண்டவரைப்போல், "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்கும் துணிவு நமக்குத் தேவை. "பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" (யோவான் 4:14) தண்ணீரைப்பற்றி அறியாமல் இருந்த அந்த சமாரியப் பெண்ணைப் போல நாமும், தாகத்தை தணிக்க இயலாமல் தவிக்கிறோம். அல்லது, தவறான கொள்கைகளையும், உண்மைகளையும் கொண்டு நம் தாகத்தைத் தணித்துக்கொள்ள முயல்கிறோம்.

"குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கூறிய இயேசு, அதே சொற்களை அவரை நோக்கிக் கூறுமாறு நம்மை அழைக்கிறார். நம் தனிப்பட்ட வாழ்வில் இயேசுவை நாம் சந்தித்த முதல் நிகழ்வின் வழியே நம் தாகம் தணிக்கப்பட்டதை எண்ணிப்பார்க்க அழைக்கிறார். நம் துறவு சபைகள் நிறுவப்பட்ட வேளையில் இருந்த தனி வரங்களால் நம் தாகம் தணிக்கப்பட்டதை நினைவுகூர இயேசு அழைக்கிறார்.

நம்பிக்கையில் களைப்புறும் நேரங்களில், நம் துவக்க கால அனுபவங்களை மீண்டும் பருகி தாகத்தைத் தணிப்பதையே இயேசு விரும்புகிறார்.

நீண்டகால புதுப்பித்தலுக்குப் பின், இந்தப் பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது முக்கியமான ஒரு நிகழ்வு. எந்த ஒரு புதுப்பித்தலும் பழமையைப் பாதுகாத்து, புதியவற்றைப் புகுத்துவதில் கவனம் செலுத்துகின்றது. ஒரு இஸ்பானிய, இந்திய, ஆப்ரிக்க-அமெரிக்க பேராலயம், தற்போது, ஒரு பானமானிய பேராலயமாக மாறியுள்ளது. இது கடந்த காலத்திற்கு மட்டுமல்ல, இன்றைய காலத்தின் அழகையும் உள்ளடக்கியது.

நேற்றைய அழகை, இன்றைய, மற்றும் நாளைய அழகாக மாற்றுவது, இறைவனின் செயல்பாடு.

நம் முன்னோரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட அழகை யாரும் நம்மிடமிருந்து பறித்துச் செல்லாமல் பாதுகாப்போமாக. நம் முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரியம், இந்நாட்டின் மீட்பு வரலாற்றை தொடர்ந்து வாழச் செய்வதாக!

26 January 2019, 14:27

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org