புனித ஜான் போஸ்கோ திருநாள் - டுவிட்டர் செய்தி
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இவ்வுலக எதார்த்தத்தை, மனித கண்களோடும், இறைவனின் கண்களோடும் காண, தொன் போஸ்கோ துணிவு பெற்றிருந்தார். மனித கண்களோடும், இறைவனின் கண்களோடும் இவ்வுலக எதார்த்தத்தைக் காண்பதற்கு, ஒவ்வொரு அருள்பணியாளரும் இவரைப் பின்பற்றுவாராக" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், சனவரி 30 இப்புதன் காலையில், தன் புதன் பொது மறைக்கல்வி உரைக்கு முன்னதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணியாளர் Paolo Dall’Oglio அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து உரையாடினார் என்று, திருப்பீட செய்தித் துறையின் இடைக்காலத் தலைவர், அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் கூறினார்.
தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த இச்சந்திப்பில், அருள்பணியாளர் Dall’Oglio அவர்களின் தாயையும், அவரது நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரையும் திருத்தந்தை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார் என்று ஜிசோத்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிரியாவில் பணியாற்றி வந்த இயேசு சபை அருள் பணியாளர் Paolo Dall’Oglio அவர்களை, ISIS இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள், 2013ம் ஆண்டு ஜூலை மாதம் கடத்திச் சென்றனர் என்பதும், அவரைக் குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.