சமய சுதந்திரம் மறுக்கப்படும் நிலை 

நன்றி : வத்திக்கான் வானொலி

சிலுவை அடையாளம் வரைவது, திருவிவிலியம் வாசிப்பது, ஞாயிறுகளில் திருப்பலிக்குச் செல்வது, இயேசு பற்றி பேசுவது, செபமாலை செபிப்பது போன்றவை, முழுவதும் சாதாரணமானதாக, ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளாகத் தெரியலாம், ஆனால், உலகின் பல பகுதிகளில், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் வாழ்வே அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது, அவர்கள், கொல்லப்படுவது அல்லது கல்லால் எறியப்படுவது அல்லது வதைமுகாம்களில் கட்டாயமாக வைக்கப்படுவது போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.


2019ம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோலோ பேராலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பேர் இறப்பில் தொடங்கியது, கடந்த ஆண்டில் உலகில் நாற்பது மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டனர், இவர்களில் 35 பேர் அருள்பணியாளர்கள். இவர்களில் இருவர், மத்திய ஆப்ரிக்க குடியரசைச் சார்ந்தவர்கள். இவர்கள், Alindao புலம்பெயர்ந்தோர் முகாமில், எண்பது விசுவாசிகளுடன் கடந்த நவம்பரில் கொல்லப்பட்டவர்கள். மேலும், ஊடகங்களால் அதிகம் பேசப்படாத சில விவகாரங்களும் உள்ளன. பாகிஸ்தானில் தெய்வநிந்தனை குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட, தாயாகிய ஆசியா பீபி அவர்கள், ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர், விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015ம் ஆண்டில், 21 எகிப்தியர்கள் தலைவெட்டப்பட்டு இறந்தனர். 2014ம் ஆண்டு டிசம்பரில் பேஷ்வாரில் 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகில் 38 நாடுகளில் அடிப்படை மனித உரிமைகள் கடுமையாய் அச்சுறுத்தப்பட்டுள்ளன மற்றும் இவற்றில் 21 நாடுகளில் சித்ரவதைகள் இடம்பெற்றன என, Aid to the Church in Need திருப்பீட அமைப்பின், சமய சுதந்திரம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.