அமேசான் மாமன்றம், அசிசி நகர் புனித பிரான்சிசிற்கு அர்ப்பணிப்பு
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகளைத் தெளிந்து தெரிவுசெய்வதில்,
அசிசி நகர் புனித பிரான்சிசின் வாழ்வும், பணியும் முக்கிய வழிகாட்டிகள்

pope 05
 அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் பாதுகாவலில் அர்ப்பணிப்போம் என்று, அக்டோபர் 4, இவ்வெள்ளியன்று, படைப்பின் காலம் என்ற நிறைவு நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலியின் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் விழாவாகிய அக்டோபர் 4, இவ்வெள்ளி பகல் 12.30 மணியளவில், வத்திக்கான் தோட்டத்தில், படைப்பின் காலம் என்ற நிகழ்வை நிறைவுறச் செய்த நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

அமேசான் பகுதியின் புவியியல் அமைப்பும், அங்கு விளிம்புநிலையில் வாழ்பவர்களும் முன்வைக்கும் கடும் சவால்களை எதிர்கொண்டு அவற்றிற்குத் தீர்வுகள் காண்பதற்கு, நம்மில், சூழலியல் மற்றும், மேய்ப்புப்பணி மனமாற்றம் ஏற்படுவதற்கென, இம்மாமன்றத்தை அப்புனிதரிடம் அர்ப்பணித்து, அவரின் பரிந்துரையைக் கேட்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.

திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகளைத் தெளிந்து தெரிவுசெய்வதில், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்வும், பணியும் நமக்கு முக்கிய வழிகாட்டிகளாக அமைந்துள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் விழாவாகிய இந்நாளில் உங்கள் அனைவரோடும் இருப்பதில் மகிழ்கிறேன், வியத்தகு இறைவனின் படைப்பைப் பார்க்கையில், என் ஆண்டவரே, உம்மைப் புகழ்கிறேன் என்றே பாடத் தோன்றுகிறது, சகோதரர் காற்று, சகோதரி தண்ணீர், சகோதரர் நெருப்பு, காற்று, சகோதரி அன்னை பூமி ஆகியவற்றின் அழகைக் கண்டபோது, இப்புனிதரும் இவ்வாறே இறைவனைப் புகழ்ந்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.

இந்தப் பிரபஞ்சம் முழுவதன் அடையாளமாகவுள்ள இந்த நான்கையும், ஒரு மாபெரும் குடும்பமாக, ஒரு பெரிய உலகளாவிய உடன்பிறந்தநிலையாக படைப்பின் பாடல் சித்தரிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, அக்டோபர் 4, இவ்வெள்ளி, படைப்பின் காலம் என்ற நிகழ்வை நிறைவு செய்கின்றது, அதேநேரம், அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை, அடையாளப்பூர்வமாக இன்று ஆரம்பிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.