ஆயர் அந்தோணி டிவோட்டவுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி 
- கே. எம். செல்வராஜ்
, திருஅவை செய்தி -
Mgr Devotta 01

அன்னை ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆலயத்தினுள் இடப்பட்டிருந்த இருக்கைகள் எல்லாமே பொதுமக்களாலும், இருபால் துறவறத்தாராலும், சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களால் நிரம்பியிருந்தது. திருப்பலி நிறைவேற்றப்படும் மேடையில் இருபுறமும் நாற்காலிகளில் அருள்பணியாளர்கள் அமர்ந்திருந்தனர். அங்கே இடமில்லாமல், கீழேயும் நாற்காலிகளில், முன்வரிசை பெஞ்சுகளில் பங்கேற்க வந்த குருக்கள் இடம்பிடித்து அமர்ந்திருந்தனர். எங்குபார்த்தாலும் எல்லா இடங்களிலும் ஒரு சோகம் தோய்ந்த முகத்துடன் ஆயர் நம்மிடையே இல்லை இனி என்றைக்கும் அவரை சந்த்திக்க தங்களால் முடியாது என்று உணர்ந்தவர்களாய் ஏக்கப் பெருமூச்சோடு அவர்கள் இருந்த இருக்கை ஆயர்மீது அவர்கள் கொண்டிருந்த மரியாதையை, அன்பை வெளிப்படுத்தியது.
 
தமிழக ஆயர் பேரவையின் தலைவர் மற்றும் மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் தலைமையேற்க, திருச்சி மறைமாவட்ட பொறுப்பு ஆயர், தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ் உடன்வர தமிழகம் மற்றும் கேரள எல்லையோர மாவட்டங்களிலிருந்து திரளாய் ஆயர்பெருமக்களும், குருக்களும், பவனியாக இறுதி அஞ்சலி திருப்பலியை நன்றி திருப்பலியாக நிறைவேற்ற மக்கள் வெள்ளத்தினூடே வந்தனர்.
 
திருப்பலியில் துவக்கத்தில் மறைந்த முன்னாள் ஆயர் அந்தோணி டிவோட்டா ஆண்டகையின் சுருக்கமான வாழ்க்கை குறிப்பு வாசிக்கப்பட்டது. கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கிய ஆயர் அவர்களின் பணிக்காலத்தில் 14 புதிய பங்குத்தளங்கள் உருவாக்கப்பட்டன, 313 குருக்களை ஆயரவர்கள் திருநிலைப்படுத்தியுள்ளார், ஒரு C B S E ஆங்கிலப்பள்ளியினை துவங்கியுள்ளார்,  தமிழக மற்றும் இந்திய ஆயர்பேரவைகளில் பல்வேறு நிலைகளில் திருச்சபைக்கு பணியாற்றி நிறைவு கண்டுள்ளார். 
மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி தனது முன்னுரையில், "ஆயர் டிவோட்டா அவர்களது மறைவு சற்றும் எதிர்பாராதது, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆயரவர்கள் சொல்லுவதை செயல்படுத்தி, உயிர்த்துடிப்புள்ள நல்ல மேய்ப்பராய் விளங்கினார். அவரது பிரிவால் வாடும் திருச்சி மறைமாவட்ட குருக்கள், துறவறத்தார் , பொதுநிலையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை  தமிழக ஆயர் பேரவை சார்பாகவும், மதுரை உயர்மறைமாவட்டம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.
 
நற்செய்தி வாசகத்திற்குப் பிறகு, மறைஉரையாகவும் இரங்கல் உரையாகவும் பேசிய திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தனது உரையில்,  "உரோமையில் ஆயர் அந்தோணி டிவோட்டா கலந்துகொண்ட ஒரு முக்கியமான கருத்தரங்கில் திருஅவையின் சொத்து கட்டிடங்களோ, நிலங்களோ, நிறுவனங்களோ அல்ல, மாறாக பொதுநிலையினர் - இறைமக்கள் தான் திருச்சபையின் நிரந்தர சொத்து என்று பேசியிருக்கிறார். அந்தப் பேச்சைக் கேட்ட கூடியிருந்த ஆயர்பெருமக்கள் கைதட்டி ஆமோதித்து அவ்வாறு அவர் பேசியதை வரவேற்று உள்ளனர். ஆயர் அவர்களின் தலைமையின் கீழ் 8 ஆண்டுகள் நான் மறை மாவட்ட முதன்மை குருவாக பணியாற்றும் பேறுபெற்றேன். எப்போதும் பொதுநிலையினர் பயிற்சி அவர்தம் உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உற்சாகப் படுத்துவார்.  பெண்கள் - இளைஞர்கள் - பொதுநிலையினர் என பணிக்குழுக்கள் ஏற்படுத்தி அனைத்து தரப்பினரும் திருஅவைக்காக உழைத்திட உளமாரப் பாதை வகுத்தவர் நம் பாசமிகு ஆயர் டிவோட்டா அவர்கள்.  திருமணத் தயாரிப்பு வகுப்புக்களை ஆயரவர்களே விரும்பி முன்னின்று நடத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார்" " என்றார்.
 
மேலும் அவர் தனது உரையில், "மறைக்கல்வி போதிப்பதை தனது விருப்பமாக கொண்டிருந்தார், ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகள் எல்லா பங்குத்தளங்களிலும் தவறாமல் நடைபெற வலியுறுத்தி குருக்களைத் தூண்டுவார்.  அதேபோன்று அன்பியங்கள் தான் நமது திருஅவையின் அச்சாரமானவை  அவை வாரம்தோறும் சிறப்பாக நடந்திட வேண்டும் என்று ஆர்வத்தோடு வழிகாட்டி நெறிப் படுத்துவார். எதிர்கால குருக்கள் உருவாக்கத்தில் அக்கறையோடு இருந்த அவர் ஒவ்வொரு குருமட மாணவனையும் அறிந்து, அவர்தம்  தேவைகளை உணர்ந்து, தந்தைக்குரிய பாசத்தோடு, அருகாமையில் இருந்து, ஆற்றுப்படுத்துவார்" என்றார். 
 
"இரத்த தானம் உடல் உறுப்புக்கள் தானம் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் இளைஞர்களை ஊக்குவிப்பார் , புனித வெள்ளியன்று இரத்த தானம் செய்வது திருச்சி புனித மரியன்னை  பேராலயத்தில் வாடிக்கையாகிப் போன ஒரு விஷயமாகி விட்டது. இயேசுசபையின் அருள்பணியாளர் ஜெரி அவர்களை அழைத்துவந்து குருக்களிடம் இரத்த தான - உடல் உறுப்புக்கள் தானம் மேன்மை பற்றி எடுத்துரைத்தார். ஆயரவர்கள் ஒரு தலைசிறந்த நிர்வாகி. சிறந்த திட்டமிடல் அதனை செயல்படுத்துதல் என தலைமையேற்று திருச்சி பேராலயக் கட்டிடம் கட்டி முடித்தார் அவர்செய்த நற்பணிகளை நினைவில் கொண்டு இறைவனுக்கு நன்றி கூறுவோம்" என்று உரையை நிறைவு செய்தார்.
 
திருச்சி மறைமாவட்ட பொறுப்பு ஆயர் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தனது உரையில்," நம்மை மீளாத் துயரில் விட்டுச்சென்றிருக்கும் அன்பு ஆயர் அந்தோணி டிவோட்டா ஆண்டகையவர்கள் என்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது எல்லாம் கடந்து போகும் உயிர்த்த ஆண்டவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன் அவர் எல்லாவற்றையும் மாற்றுவார் . தொடர்ந்து அவரில் நம்பிக்கையுடன் ஜெபிப்போம்.  தமிழகத்திலேயே தனது கண்களையும் உடலையும் தானமாக கொடுத்த முதல் ஆயர் நமது அந்தோணி டிவோட்டா ஆண்டகை " என்றார். அவ்வாறு அவர் சொன்னபோது பலத்த கரவொலி எழுந்தது.
 
 
சென்னை உயர்மறைமாவட்டத்தின் சார்பாக முதன்மைகுரு மரிய அமல்ராஜ் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் இரங்கல் உரையை வாசித்து, அதன்பின்னர் சென்னை குருக்கள் திரளாக சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தனது இரங்கல் உரையில்,  "மாதா தொலைக்காட்சி உருவாக்கத்தில் ஆயர் டிவோட்டா அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது, போற்றுதலுக்குரியது. அவர் வகுத்துச் சென்ற பாதையில் இன்றும் - என்றும் மாதா தொலைக்காட்சி நடைபயிலும். ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்களது மறைவு எமக்கு பேரிழப்பு" என்றார்.
 
திருச்சி துறவற சபைகளின் அமைப்பின் சார்பாக அருள்சகோதரி இருதய தெரேசா ம. ஊ. ச. இரங்கல் தெரிவித்து உறுப்பினர்கள் ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
 
பொதுநிலையினர் சார்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு. வேளாங்கண்ணி தனது உரையில், ஆயர் அவர்கள் பொதுநிலையினர் உருவாக்கத்திலும் அவர்களை அதிகாரம் மிக்கவர்களாலாக பயிற்சி  கொடுப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.  திருச்சி மறைமாவட்ட அனைத்துப் பங்குகளிலும் பங்குப்பேரவை அமைக்கவும்,  பங்கு நிதிக்குழுக்கள் அமைக்கவும், வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.  மறைமாவட்ட நிதிக்குழுவில் பொதுநிலையினர் அங்கம் வகிக்கச்செய்தார். பொதுநிலையினர் அரசியலில் பங்குபெற்று பொதுவாழ்வில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தி அரசியலமைப்பை உருவாக்கினார். கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவித்து பிற கிறிஸ்தவ சபையாரோடு ஐக்கிய குருத்தோலை ஞாயிறு கொண்டாடியவர். அவரது ஆன்மா இறைவனில் சாந்தியடைய  இறைவேண்டல்களை சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
 
திருச்சி புனித அன்னாள் சபையின் தலைவி அருள்சகோதரி ரெஜினாள் தனது உரையில் ஆயர் அவர்கள் சபை வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் எனவும் , சகோதரிகளின் பயிற்சியில் ஆர்வத்தோடு பல ஆலோசனைகளை வழங்கியவர் டிவோட்டா ஆண்டகை எனவும் குறிப்பிட்ட அவர் நெகிழ்ச்சியான தருணங்களைப்பற்றி பகிர்ந்து கொண்டார். அறங்காவலர் பொறுப்பில் இருந்து எமது சபையை வழிநடத்திய எம் போற்றுதலுக்குரிய ஆயரவர்களின் பிரிவு எம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சபை நிறுவனர் அன்னை அன்னாள் அவர்களது தூய வீரத்துவ வாழ்வு உரோமையில் அங்கீகாரம் பெற எமது சபையை நெறிப்படுத்தி, சிபாரிசு செய்து, பல நல்ஆலோசனைகளை வழங்கி சிறப்பு செய்தவர் ஆண்டகையவர்கள் என்று உள்ளார்ந்த நன்றியுணர்வுடன் தனது அஞ்சலியை செலுத்தினார். ஆயரவர்கள் என்றென்றும் எங்கள் மனங்களில் வாழ்வார் என்றார். 
 
ஆயர் அவர்களது இளைய சகோதரர் கிளமெண்ட் டிவோட்டா, சேவா மிஷனரி அருள்சகோதரி ஆலிஸ் பீட்டர், தென்னிந்திய திருச்சபையின் பாஸ்டர் ராசையா உள்ளிட்ட பலர் இரங்கல்  செய்திகள் வாசித்தனர்.  ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்களது உயிலில் விரும்பியபடி கண்கள் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கும் உடல் பெங்களூரு புனித ஜான் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
 
 
 
 
 
Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser." data-hovercard-id="Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser." class="ajn bofPge">