நோயாளிகளும், மாற்றுத்திறனாளிகளும் திருஅவையின் வளங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.09,2013. நோயாளிச் சகோதர சகோதரிகள் தாங்கள், பிறரன்பும் தோழமையுணர்வும் மட்டுமே பெறவேண்டியவர்கள் என்று கருதாமல், தாங்கள் திருஅவையின் வாழ்விலும் பணியிலும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளவர்கள் என்று உணருமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 


லூர்து நகருக்கும், பல்வேறு பன்னாட்டுத் திருத்தலங்களுக்கும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் UNITALSI என்ற இத்தாலிய பிறரன்பு அமைப்பு தொடங்கப்பட்டதன் 110வது ஆண்டு நிறைவையொட்டி, அவ்வமைப்பினர் மற்றும் நோயாளிகள் என ஏறக்குறைய ஏழாயிரம் பேர் இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தவேளை அவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
UNITALSI அமைப்பின் உறுப்பினர்கள் கிறிஸ்துவின் மீதான அன்பினால் இந்தப் பணியைச் செய்கின்றனர் எனப் பாராட்டி ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ், நோயாளிகள் மத்தியில் செய்யும் இப்பிறரன்புப் பணியில் எதிர்நோக்கும் இன்னல்களைக் கண்டு சோர்வடைய வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.
நோயாளிகள், UNITALSI உறுப்பினர்களின் முகங்களில் இயேசுவின் திருமுகத்தைக் காண வேண்டும், அதேநேரம், UNITALSI உறுப்பினர்கள், துன்புறும் மனிதரில் கிறிஸ்துவின் திருமுகத்தைக் கண்டுணர வேண்டுமெனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பங்குத் தளங்கள் மற்றும் கத்தோலிக்கக் கழகங்களின் பணிகளில் நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்துமாறும், அதன்மூலம் அவர்கள் கிறிஸ்தவ சமூகத்தில் தங்களின் இருப்பை ஆழமாக உணருவார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
UNITALSI அமைப்பினர், நோயாளிகள் பல்வேறு மரியா திருத்தலங்களுக்கு, சிறப்பாக லூர்து திருத்தலத்துக்கு அழைத்துச் செல்வது குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், அன்னை மரியின் தாய்மையைப் பின்பற்றுமாறும், துன்ப நேரங்களில் அன்னை மரியின் உதவியை நாடுமாறும் பரிந்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

தொகுப்பு : லூசியா லெபோ