திருத்தந்தை பிரான்சிஸ்: அறிவு ஒரு கொடை, கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு ஏற்றவிதத்தில் சிந்திக்கின்றனர்

நவ.29,2013. கிறிஸ்துவைப் பின்செல்லுகிறவர், அறிவைமட்டும் பயன்படுத்தாமல், தனது இதயத்தையும், தனக்குள் இருக்கும் ஆவியையும் பயன்படுத்திச் சிந்திக்கின்றனர், இவ்வாறு சிந்திக்காவிடில், வரலாற்றில் கடவுளின் பாதையை அவரால் புரிந்துகொள்ள இயலாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய சிறிய மறையுரையில் கிறிஸ்தவராகச் சிந்திப்பதை மையப்படுத்தி சிந்தனைகளை வழங்கினார்.
கிறிஸ்தவர்கள், இந்த உலகு விரும்பும் வலுவற்ற, ஒரே மாதிரியான எண்ணங்களைப் பின்பற்றாமல், கடவுளின் மக்கள் என்ற முறையில் சுதந்திரமான எண்ணங்களைக் கொண்டவர்களாய் இருக்கின்றனர், கடவுளுக்கு ஏற்றவிதத்தில் அவர்கள் சிந்திக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுள் இத்தகையவராய் இருக்கவேண்டுமென்பதைப் புரிந்துகொள்ளாமல் இருந்த எம்மாவுஸ் சீடர்களோடு பேசியபோது, இயேசு அவர்களை, அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே என்று அழைத்தார் என்றும், தாம் கூறியவைகளைச் சீடர்கள் புரிந்துகொள்ளாமல் இருந்தபோது இயேசு அவர்கள்மீது கோபப்படவில்லை, ஆனால், அவ்வாறு இருப்பதாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
நமது வாழ்வில், நமது இதயத்தில், உலகில், வரலாற்றில், இந்த நொடிப்பொழுதில் என்ன நடக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்று இயேசு விரும்புகிறார், இவையெல்லாம் காலத்தின் அறிகுறிகள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நடப்பது என்ன என்பதை புரிந்துகொள்வதற்கு நாம் சுதந்திரமாகச் சிந்திப்பவர்களாக இருக்குமாறு இயேசு அழைக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இதற்கு நம் ஆண்டவரின் உதவி நமக்குத் தேவை என்பதால் அவரிடம் அருள் வேண்டுவோம் எனவும், காலத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அறிவென்னும் கொடையை தூய ஆவி தருகிறார் என்றும் இத்திருப்பலியில் மறையுரையில் கூறினார்.

 

 

திருத்தந்தை பிரான்சிஸ்: செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளுடன் கிறிஸ்து பிறப்பு விழாவுக்காகத் தயாரிப்போம்


டிச.02,2013. 'கிறிஸ்து பிறப்பு விழா என்பது நாம் நினைப்பதைவிட மேலானது, ஏனெனில், இது கிறிஸ்துவை நோக்கிய பாதை; அவரைச் சந்திக்கச்செல்லும் பாதை,' என இத்திங்கள் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் முழு இதயத்தோடும், வாழ்வோடும், விசுவாசத்தோடும் இக்காலங்களில் இறைவனைச் சந்திப்போம் என எடுத்துரைத்த திருத்தந்தை, இத்திங்களின் திருப்பலி வாசகத்தில், நூற்றுவர் படைத்தலைவன் இயேசுவைச் சந்தித்து தன் விசுவாசத்தை வெளிப்படுத்திய நிகழ்வைச் சுட்டிக்காட்டி, இத்தகைய விசுவாசத்துடன் நாமும் இறைவனைச் சந்திக்கும்போது முழுமையான மகிழ்வு நமக்குக் கிட்டுகிறது என்றார்.
இறைவன் வரவுள்ளார் என திருவருகைக் காலத்தில் கூறுவது, அவர் நம் இதயத்தில், ஆன்மாவில், வாழ்வில், நம்பிக்கையில், பயணத்தில் மீண்டும் நுழைய வருகிறார் என்பதையே குறிப்பிடுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்து, நம்மை உற்றுநோக்குகிறார் என்பதை உணர்ந்து, அவர் நம்மை அன்புகூர்வதுபோல் நாமும் நம் இதயத்தை அவருக்கென திறந்து அன்புகூரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக, செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகள் மூலம் நம்மைத் தயாரிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தை : போர் ஆயுதங்களைக் கைவிட்டு, அவைகளை உழைப்பின் கருவிகளாக மாற்றுவோம்
டிச.02,2013. போர் ஆயுதங்களைக் கைவிட்டு, அவைகளை உழைப்பின் கருவிகளாக மாற்றும் காலத்திற்காக இறைவனை நோக்கி வேண்டுவோம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாள்கள் கலப்பைக்கொழுக்களாகவும், ஈட்டிகள் அரிவாள்களாகவும் மாற்றப்படும், இனிப் போரோ போர்ப்பயிற்சியோ இருக்காது என்ற எசாயா இறைவாக்கினரின் வரிகளை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ், இத்தகைய ஒருநாள் என்று இடம்பெறும் என்ற கேள்வியையும், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களிடையே முன்வைத்தார்.
நம்பிக்கையின் விடியலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாம், நல்மேய்ப்பராம் இயேசுவோடு இணைந்து இறையரசின் நிறைவை நோக்கி வரலாற்றில் பயணம்செய்வோம் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வார்த்தை மனுவானார், அவரே நம் இறுதிக் குறிக்கோள், அவரின் ஒளியிலேயே அனைத்து நாடுகளும் நீதி மற்றும் அமைதியின் அரசை நோக்கி நடைபோடுகின்றன என மேலும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இப்பாதையில் அன்னைமரி நம் எடுத்துக்காட்டாக உள்ளார் எனவும் கூறினார்.


திருத்தந்தை பிரான்சிஸ்: கிறிஸ்துவில் வேரூன்றியிருந்தால் எத்தகைய தாக்குதலையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்


டிச.05,2013. நாம் கிறிஸ்துவில் வேரூன்றியிருந்தால் எத்தகைய தாக்குதலையும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என இவ்வியாழன் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன் நற்செய்தி வாசகம் தந்த, பாறையின்மீது கட்டப்பட்ட வீடு குறித்த உவமை பற்றித் தனது மறையுரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்துவில் தன் ஆதாரத்தைக் கொண்டிராத கிறிஸ்தவ வார்த்தை ஏமாற்றத்தைத் தருவதோடு, காயப்படுத்தவும் செய்யும் மற்றும் பிரிவினைக்கும் காரணமாகும் என உரைத்தார்.
நல்வார்த்தைகள் வாழ்வில் செயல்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் அவை காயப்படுத்திவிடும் என்ற திருத்தந்தை, கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவ வார்த்தைகள் அறிவற்ற பாதைக்கு இட்டுச்செல்பவை என்றும் கூறினார்.
கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் கிறிஸ்தவ வார்த்தை பகட்டுத்தன்மைக்கு இட்டுச்செல்வதோடு அத்தகையோரை கடவுள் கீழிறக்குவார், இதையே தொடர்ந்து மீட்பு வரலாற்றில் காண்கிறோம் எனவும் தெரிவித்த திருத்தந்தை, இயேசு இல்லாத, அவருடன் உறவு இல்லாத, அவரோடு இணைந்த செபம் இல்லாத, இயேசுவுக்கான சேவை இல்லாத கிறிஸ்தவ வார்த்தை பயனற்றது எனவும் இத்திருப்பலியில் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி