2013ம் ஆண்டின் மனிதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை Time இதழ் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது - கர்தினால் Timothy Dolan


டிச.12,2013. இறையன்பையும், மக்கள் மீது கனிவையும் வெளிப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 2013ம் ஆண்டின் மனிதராக Time இதழ் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது என்று நியூயார்க் பேராயர் கர்தினால் Timothy Dolan அவர்கள் கூறினார்.
அன்பும் கனிவும் திருஅவையில் எக்காலமும் அழியாத செய்தி என்றும், அந்த நற்செய்தியின் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக வாழும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டின் மனிதர் என்ற இடத்தைப் பெறுவது அனைவரும் எதிர்பார்த்த ஒரு தெரிவே என்றும் கர்தினால் Dolan தெரிவித்தார்.
திருஅவையின் மீது மக்களுக்கு மீண்டும் ஓர் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் உருவாக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையை விட்டு விலகி இருந்த பலரை மீண்டும் அதில் இணைத்ததை காணமுடிகிறது என்று Time இதழின் பொறுப்பாசிரியரான Nancy Gibbs அவர்கள் CNA செய்தியிடம் கூறினார்.
பாரம்பரியத்தைக் காப்பவர்களும், புதுமையை விரும்புகிறவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மைகளை பேசும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் மனசாட்சியின் குரலாக இருந்து செயல்படுகிறார் என்று பொறுப்பாசிரியர் Nancy Gibbs எடுத்துரைத்தார்.
பல்வேறு காரணங்களால் பிளவுபட்டுக் கிடந்த கத்தோலிக்கத் திருஅவையை ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாக வாழ்வது பெருமைக்குரியது என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் விதைத்துள்ளார் என்று அமெரிக்க இயேசு சபை மாநிலங்களின் தலைவர் அருள்பணி Thomas Smolich அவர்கள் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Time இதழின் 'ஆண்டின் மனிதர்' என்ற நிலையைப் பெறும் மூன்றாவது திருத்தந்தை என்பதும், இவருக்கு முன்னர், 1962ம் ஆண்டு திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், 1994ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களும் இதே நிலையைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், Time இதழின் இப்பெருமைக்குரியவர்களாக கருதப்பட்ட முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களும், இரண்டாம் ஜான்பால் அவர்களும் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனித நிலைக்கு உயர்த்தப்பட உள்ளனர் என்பதும் மற்றொரு சிறப்பு.

ஆதாரம் : CNA/EWTN

 

 நல்ல சமாரியர்களாக அனைவரும் செயல்பட திருத்தந்தை அழைப்பு


டிச.07,2013. கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றுள்ள திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் திருவருள்சாதனங்களால் துன்புறும் அனைவருக்கும் நல்ல சமாரியர்களாக வாழுமாறு அழைப்புப் பெற்றுள்ளனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2014ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி சிறப்பிக்கப்படும் 22வது உலக கத்தோலிக்க நோயாளர் தினத்திற்கென இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருஅவை, கிறிஸ்துவின் பிரசன்னத்தை நோயாளிகளில் சிறப்பாகப் பார்க்கின்றது என்றும், நம் ஒவ்வொரு துன்பத்தையும் அவரோடு ஒன்றித்து அவரில் எதிர்கொள்வதற்குத் தேவையான துணிச்சலை கடவுள் தருகிறார் எனவும் இச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்து முக்கிய கருத்துக்களை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், பிறரன்பில் ஈடுபடுவது, குறிப்பாக, துன்புறுவோர், ஓரங்கட்டப்பட்டோர் போன்றோருக்குப் பிறரன்புப் பணிகளைச் செய்வது, கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்துக்கு வைக்கப்படும் உண்மையான பரிசோதனை எனவும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
நமது அக்கறை தேவைப்படும் மக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"நாமும் நமது சகோதரர்களுக்காக நம் வாழ்வை வழங்க வேண்டும்" என்பது 22வது உலக கத்தோலிக்க நோயாளர் தினத்தின் மையக்கருத்தாகும்.

கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென தயார் செய்யும் இந்நாட்களில், இறைவனுக்குச் செவிமடுக்க அமைதியாக இருப்பது பயன்தரும் 


டிச.12,2013. கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென நம்மையே தயார் செய்யும் இந்நாட்களில், ஒரு தாயைப்போல, தந்தையைப்போல நம்மிடம் அன்புடன் உரையாடும் இறைவனுக்குச் செவிமடுக்க நாம் அமைதியாக இருப்பது பயன்தரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 12, இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை, இறைவாக்கினர் எசாயா அவர்களின் வார்த்தைகளை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
கனவு கண்டு, பயந்து கண்விழித்து அழும் குழந்தையிடம் 'நான் இருக்கிறேன், அஞ்சாதே' என்று தேற்றும் தாயாக, தந்தையாக இறைவன் நம்மைத் தேடி வருகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இறைவன் நம்மிடம் என்ன பேசுகிறார் என்பதைவிட, அவர் நம்மிடம் எவ்விதம் பேசுகிறார் என்பதில் கவனம் செலுத்துவது பயனளிக்கும் என்பதை தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.
குழந்தைகளிடம் பேசும் பெற்றோர், பயன்படுத்தும் வார்த்தைகளை, மேலோட்டமாக, வெளிப்புறத்திலிருந்து காண்போர், அர்த்தமற்ற பிதற்றல் என்று கூறலாம், ஆனால், அந்த வார்த்தைகள் குழந்தைகளுக்கு ஆறுதலும், உறுதியும் தருகின்றன என்று கூறிய திருத்தந்தை, இதே நிலையில் இறைவாக்கினர் எசாயாவிடம் இறைவன் பேசுவதைக் காணலாம் என்று விளக்கினார்.
இறைவன் இவ்விதம் பேசுவதை ஆழமாகப் புரிந்துகொள்ள நம் மனதை ஒரு நிலைப்படுத்தும் அமைதி பெரிதும் உதவும் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

 மகிழ்வற்ற கிறிஸ்தவர்களே இறையுண்மையைப் போதிப்பவர்களைக் குறைகூறுபவர்கள்

டிச.13,2013. மகிழ்வற்ற கிறிஸ்தவர்கள் இறையுண்மையைப் போதிப்பவர்களைக் குறைகூறுகின்றனர், ஏனெனில் தூய ஆவிக்குத் தங்கள் மனக்கதவுகளைத் திறப்பதற்கு இவர்கள் அஞ்சுகின்றனர் என்று, இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவெளிப்பாட்டின் உண்மையை ஏற்கிறேன், ஆனால் போதிப்பவரையோ போதனையையோ ஏற்க முடியாது என்று சொல்லும் “மகிழ்வற்ற”, தங்களுக்குள்ளே “முடங்கிக்கிடக்கும்” கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்போம் என, இம்மறையுரையில் மேலும் கூறினார் திருத்தந்தை.
எப்பொழுதும் மகிழ்வற்று இருந்த, மகிழ்வோடு விளையாடத் தெரியாத, பிறரின் அழைப்பை எப்பொழுதும் மறுத்த பிள்ளைகளுக்குத் தனது காலத்துத் தலைமுறைகளை ஒப்பிட்டுப் பேசிய இயேசுவின் அருள்பொழிவை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், மகிழ்வற்ற கிறிஸ்தவர்கள் பற்றி விளக்கினார்.
இந்த மக்கள், இறைவார்த்தைக்குத் திறந்தமனதாய் இல்லாதவர்கள், அவர்கள், அனுப்பப்பட்டவரைப் புறக்கணித்தவர்கள், பரிசேயர்கள், அரசியல் தளத்தில் உள்ளவர்கள், சதுசேயர்கள் போன்று இவர்கள் ஓர் அமைப்புமுறையில் அடைக்கலம் தேடியவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
இவர்கள், தங்களின் கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும் அடைப்பட்ட வாழ்வு வாழ விரும்புகின்றவர்கள் என்றுரைத்த திருத்தந்தை, இந்த மகிழ்வற்ற கிறிஸ்தவர்கள் தூய ஆவியில் நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்களை எச்சரிக்கும் போதனைகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரத்தை நம்பாதவர்கள் என்றும் கூறினார்.

கிறிஸ்மஸ் மரம் இறை ஒளியின் அடையாளம்

டிச.13,2013. கிறிஸ்மஸ் மரம், இறைவனின் சுடர்விடும் ஒளியின் அடையாளமாகவும், அவ்வொளியை நமக்கு நினைவுபடுத்துவதாகவும் இருக்கின்றது எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடிலுக்கு அருகில் வைக்கப்படுவதற்கென பெரிய கிறிஸ்மஸ் மரத்தையும், வத்திக்கானில் பல இடங்களில் வைப்பதற்கென பல அளவிலான கிறிஸ்துமஸ் மரங்களையும் நன்கொடையாக வழங்கிய ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் Waldmünchen நகரத் தந்தை, அதிகாரிகள், குடிமக்கள் என, ஏறக்குறைய 350 பேரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இவர்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனின் சுடர்விடும் ஒளியின் மகிழ்வை மனித சமுதாயத்துக்கு வழங்குவதற்கென, இன்றும்கூட இயேசு, தவறுகள் மற்றும் பாவத்தின் இருளைத் தொடர்ந்து அகற்றி வருகிறார் எனவும் கூறினார்.
இந்த நன்கொடைகள், திருப்பீடத்துக்கும், ஜெர்மனிக்கும், சிறப்பாக, பவேரியாவுக்கும் இடையே நிலவும் ஆன்மீக மற்றும் நட்பின் பிணைப்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தப் பெரிய கிறிஸ்மஸ் மரம், ஜெர்மனி மற்றும் செக் குடியரசு நாடுகளின் எல்லையில் இருந்ததால், இம்மரம் அனைத்து நாட்டு மரமாகவும் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இக்கிறிஸ்மஸ் மரத்தை ஒளியூட்டும் நிகழ்ச்சி இவ்வெள்ளி மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புரவு திருவருள்சாதனத்துக்குச் செல்ல அஞ்ச வேண்டாம்


டிச.13,2013. ஒப்புரவு திருவருள்சாதனத்துக்குச் செல்ல அஞ்ச வேண்டாம், அத்திருவருள்சாதனத்தில் உங்களை மன்னிக்கும் இயேசுவைச் சந்திக்கிறீர்கள் என, இவ்வெள்ளிக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு சபையில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டதன் 44ம் ஆண்டை(1969, டிசம்பர் 13) டிசம்பர் 13, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ஒப்புரவு திருவருள்சாதனத்தின் பலனை தனது டுவிட்டரில் ஒன்பது மொழிகளில் எழுதியுள்ளார்.
இன்னும், மலேசியாவின் கோலாலம்பூர் பேராயர் மர்ஃபி நிக்கோலாஸ் சேவியர் பாக்யம் அவர்களின் பணி ஓய்வை இவ்வெள்ளியன்று ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1938ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிறந்த பேராயர் மர்ஃபி பாக்யம், 2003ம் ஆண்டு மே 24ம் தேதி, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கோலாலம்பூர் பேராயராக நியமனம் செய்யப்பட்டார்.
இசுலாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் பொதுச் செயலர் Ekmeleddin Ihsanoglu அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி