மார்த்தா இல்லப் பணியாளர்கள், தெருவில் வாழும் மூன்று ஏழைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பிறந்த நாள்

டிச.17,2013. கடவுள் ஒருபோதும் நம்மைத் தனியே விடுவதில்லை, அவர் எப்போதும் நம்முடனே நடக்கிறார், நம்மோடு பயணிக்கிறார் என்று, இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்த நாளான இச்செவ்வாயன்று, அவர் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, திருப்பீடச் செயலர், அவ்வில்லத்தில் வாழ்வோர் மற்றும் வீடற்று தெருவில் வாழும் மூன்று ஏழைகளுடன் சேர்ந்து திருப்பலி நிகழ்த்தியபோது, கடவுள் நமது வாழ்வில் எப்போதும் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.


இயேசுவின் தலைமுறை பட்டியல் பற்றிச் சொல்லும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த நற்செய்திப் பகுதி, தொலைபேசி எண்கள் பதிந்த நூல்போல இருக்கின்றது என, ஒருசமயம் ஒருவர் சொன்னதைக் கேட்டிருக்கிறேன், ஆனால் இந்நற்செய்திப் பகுதி தூய்மையான வரலாறு, இது முக்கியமான தலைப்பைக் கொண்டுள்ளது எனக் கூறினார்.
முதல் பெற்றோர் பாவம் செய்தபின்னர் கடவுள் நம்முடனே பயணம் செய்வதற்குத் திருவுளம் கொண்டார் என்றும் கூறிய திருத்தந்தை, கடவுள் ஆபிரகாமைக் கூப்பிட்டு தம்மோடு நடக்க அழைத்தார், இவ்வாறு கடவுளின் பயணம் வரலாறு முழுவதும் தொடருகிறது, அவர் நம்மோடு வரலாற்றை அமைக்க விரும்பினார், இந்த வரலாற்றில் புனிதர்களும் பாவிகளும் உள்ளனர் என்றுரைத்தார்.
தாம் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என்று சொன்னதன்மூலம், கடவுள் நம் ஒவ்வொருவரின் பெயரையும் தமது குடும்பப் பெயராக எடுத்துக்கொண்டார், நமது பெயரை தமது குடும்பப் பெயராக எடுத்துக்கொண்டதன்மூலம் அவர் நம்மோடு வரலாற்றை அமைத்தார், நாம் வரலாற்றை எழுதவும் அனுமதித்தார் எனவும் கூறினார் திருத்தந்தை.
இச்செவ்வாயன்று தனது 77வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இத்திருப்பலியின் இறுதியில் திருப்பீடச் செயலர் பேராயர் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனைவர் பெயராலும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர் அனைவருடன் சேர்ந்து காலை சிற்றுண்டி அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கடவுளின் அன்பு ஓர் இனத்துக்குரியது அல்ல, அவர் ஒவ்வொரு மனிதரையும் அன்புடன் நோக்கி, பெயர் சொல்லி அழைக்கிறார் என, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் செய்தியில் ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்த நாளுக்கு, இந்தியத் திருஅவை நல்வாழ்த்துக்கள்

டிச.17,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இந்தியத் திருஅவையின் செபமும் அன்பும் கலந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை இச்செவ்வாயன்று தெரிவித்துள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
தனது 77வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இந்தியத் திருஅவையும், அதன் ஒரு கோடியே 80 இலட்சம் கத்தோலிக்கரும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையைத் தொடர்ந்து நடத்தவும், அனைவருக்கும் உள்தூண்டுதலாக இருக்கவும் இறைவன் அவருக்கு மெய்ஞானத்தையும், அருளையும் பொழியவேண்டுமென்று செபிப்பதாகவும் கூறியுள்ளார் மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ்.
மும்பையில் அன்னை தெரேசா சபையினர் நடத்தும் கருணை இல்லத்தில் இச்செவ்வாய் மாலையில் திருப்பலி நிகழ்த்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபித்தார் கர்தினால் கிரேசியஸ்.
விண்ணகத்திலுள்ள முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசாவும் இந்தியத் திருஅவையுடன் சேர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைச் சொல்வதில் மகிழ்வார் என்று தான் நம்புவதாகவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

ஆதாரம் : AsiaNews

ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்

டிச.19,2013. டிசம்பர் 11, கடந்த புதனன்று Times வார இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 2013ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என்று அறிவித்து, அவரது உருவத்தை தன் முன்பக்க அட்டையில் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில், 'The New Yorker', 'The Advocate' ஆகிய இதழ்களும் தங்கள் அட்டைப்படத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவத்தைப் பதித்து, அவரைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகில் உள்ள யாரையும் வெறுத்து ஒதுக்காமல், அவர்களுடன் உரையாடலை மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை அவர்கள் அடிக்கடி வலியுறுத்திவருவதனால், அவர் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் ஊடகத் தொடர்பாளர் அருள் சகோதரி Mary Ann Walsh அவர்கள் கூறியுள்ளார்.
திருஅவையிலும், இவ்வுலகிலும் மாற்றங்கள் உருவாக வேண்டுமெனில், முதலில் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் மனமாற்றம் ஏற்படவேண்டும் என்று திருத்தந்தை அவர்கள் கூறிவருவதும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது அருள் சகோதரி Walsh அவர்களின் கணிப்பு.

ஆதாரம் : RNS / UCAN

 

இறைவாக்கு உரைக்கும் பண்பு திருஅவையில் குறையும்போது, சடங்குகள் ஆற்றும் குருத்துவம் வளர்ந்துவிடும் ஆபத்து உள்ளது 

டிச.16,2013. இறைவாக்கு உரைக்கும் பண்பு திருஅவையில் குறையும்போது, சடங்குகள் ஆற்றும் குருத்துவம் வளர்ந்துவிடும் ஆபத்து உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 16, இத்திங்களன்று புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர்கள் பணியை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கடந்த காலத்தின் வாக்குறுதிகள், நிகழ்காலத்தின் நடைமுறைகள், எதிர்காலத்தின் துணிவு என்ற மூன்று குணங்களை ஒருங்கிணைப்பவர் இறைவாக்கினர் என்பதை திருத்தந்தை விளக்கிக் கூறினார்.
வரலாறு முழுவதிலும் இறைவாக்கினர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவுக்கும் இதே நிலை உருவானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இறைவாக்கினர்களின் பண்புகளை அறியாமல், தாங்களே கோவிலைப் பாதுகாப்பவர்கள் என்று எண்ணியதால், 'எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர்?' என்று இயேசுவிடம் கோவில் குருக்கள் கேள்விகள் எழுப்பினர் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இறை வாக்கு உரைக்கும் பண்பு திருஅவையிலிருந்து குறையும்போது, கோவில் குருத்துவம் அதிக சக்திபெறும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே, கிறிஸ்துவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதியை நாம் எண்ணிப் பார்க்க இயலாது, ஒவ்வொரு நாளும் அமைதிக்காக வேண்டுவோம் என்ற Twitter செய்தியை, டிசம்பர் 16, இத்திங்களன்று 9 மொழிகளில் வெளியிட்டார் திருத்தந்தை.
மேலும், டிசம்பர் 17, இச்செவ்வாயன்று, தன் 77வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நம் மனம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சோகமாக இருக்கும் மக்களின் சரணாலயம் கத்தோலிக்கத் திருஅவை அல்ல

டிச.16,2013. கத்தோலிக்கத் திருஅவை, சோகமாக இருக்கும் மக்களின் சரணாலயம் அல்ல என்றும், கடவுள் நம்மை விரும்பித் தேடிவந்து அன்பு செய்கிறார் என்பதில் அடங்கியுள்ள மகிழ்வே நற்செய்தி சொல்லும் மகிழ்வு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருவருகைக் காலத்தில், 'மகிழும் ஞாயிறு' என்று அழைக்கப்படும் மூன்றாம் ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, கிறிஸ்தவ மகிழ்வை தன் சிறு உரையின் மையமாக்கினார்.
தங்கள் இல்லங்களில் அலங்கரிக்கப்படும் கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்படவிருக்கும் குழந்தை இயேசு திரு உருவத்தை, மகிழும் ஞாயிறன்று, குழந்தைகள் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்குக் கொணர்ந்து, திருத்தந்தையின் ஆசீரைப் பெறுவது வழக்கம்.
இந்த வழக்கத்தையொட்டி, வளாகத்தில் கூடிவந்திருந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளையும், அவர்கள் கொணர்ந்திருந்த குழந்தை இயேசுவின் திரு உருவையும் அசீர்வதித்தத் திருத்தந்தை, தான் அவர்களை, குழந்தை இயேசுவிடம் நினைவுகூர்வதுபோல், அவர்களும் தன்னை நினைவுகூர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாம் எவ்வளவுதான் வலுவற்றவர்களாக இருந்தாலும், இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உயர்ந்த எண்ணம் நம்மை வாழ்வில் உந்தித் தள்ளவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது தோல்விகளைக் கண்டு மனம் தளர்ந்து போகும்போது, இறைவனை விட்டு நாம் விலகிச் செல்கிறோம் என்றும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பெய்த மழையிலும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையைக் கேட்க வந்திருந்த பக்தர்களின் நல்ல மனதைப் புகழ்ந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கிவரும் வேளையில், தாழ்ச்சி நிறைந்த மனதிற்காக வேண்டுவோம்  டிச.19,2013. தாழ்ச்சியே வளம்நிறைந்த வாழ்வுக்கு அவசியம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லத்தில் ஆற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரையின் மையக் கருத்தாகப் பகிர்ந்தார்.
பிள்ளைப்பேறு அற்ற இரு பெண்களைக் குறித்து இவ்வியாழன் வழங்கப்பட்ட திருப்பலி வாசங்களை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, வாழ்வற்றச் சூழல்களிலும் இறைவன் வாழ்வு வழங்கும் வலிமை பெற்றவர் என்பதை வலியுறுத்தினார்.
இறைவன், பாலை நிலத்தையும் சோலையாக்குவார் என்று இறைவாக்கினர்கள் உறுதியாகக் கூறியதற்கு இறைவனின் வல்லமையே காரணம் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இறைவனின் வல்லமையை உணர்வதற்கு நாம் தாழ்ச்சி உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, தான் என்ற அகந்தை கொண்டோர் வாழ்வில் இறைவன் வளமையை உருவாக்க இயலாது என்று கூறினார்.
கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கிவரும் இவ்வேளையில், தன்னால் ஆவது ஒன்றுமில்லை, ஆனால், இறைவனால் எல்லாம் ஆகும் என்று நம்பும் தாழ்ச்சி நிறைந்த மனதிற்காக வேண்டுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.
மேலும், "பசியால் இறப்போர் ஒருவருமில்லை என்ற அளவு உயர்ந்திருக்கும் ஓர் உலகைக் காண்பதற்கு இறைவன் நமக்கு வரமருளவேண்டும் என்று மன்றாடுவோம்" என்ற செய்தியை தன் Twitter பக்கத்தில் இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி